நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்

– ரமா

நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றவர் ஆர்பர்ட் எயின்ஸ்டின்!

தன் முதல் ஊடகத் துறை வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர் வால்ட் டிஸ்னி!!

பள்ளியில் கூடைப்பந்தாட்டக் குழுவிலிருந்து ஒதுக்கப்பட்டவர் மைக்கேல் ஜார்டன்!!!

எதற்காக இந்தப் பட்டியல் என்று யோசிக்கிறீர்களா? ஏமாற்றங்களை அனுமதித்தால் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் என்று உணர்த்திக் காட்டிய சாதனையாளர்களின் வெற்றிப் பட்டியல் இது. கடற்கரை மணலின் உறுத்தலை உள் வாங்குகிற “சிப்பி”கள்தான் விலைமதிக்க முடியாத முத்துக்களைத் தருகின்றன. அது போலவே கவலைகளின் உறுத்தல்களை அனுமதிக்கிற மனிதர்கள் அதை சாதகமாகக் கொண்டு சரித்திரம் படைக்கிறார்கள். மேலை நாட்டின் புகழ் பெற்ற நாளிதழ் எழுத்தாளர் “ஏன் லாண்டர்ஸ்” சொல்கிறார், “உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்பார்த்து காத்திருங்கள். ஏமாற்றங்களை சந்திக்கிற அந்தநொடி உங்கள் துயரங்கள் உயர்வதற்குள் உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொண்டு, ‘துயரமே..!!! உன்னைக் காட்டிலும் நான் பெரியவன். உன்னால் என்னை வீழ்த்த முடியாது’ என்று உரக்கச் சொல்லுவீர் களேயானால் நீங்கள்தான் வெற்றியாளர்” என்று.

அமெரிக்காவின் மனநல நிபுணர் திரு. ஜேம்ஸ் பென்னி பெக்கர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில், நம் மனதை அழுத்துகிற துயரங்களையும் நம் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படுகிற மனச்சுமையையும் சரியான முறைகளில் அணுகினால் அவையே நம் உத்வேகத்தை அதிகரித்து நம்மை மாபெரும் உயரத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்கிறார். ஓர் அழகான ஓவியத்தை நம் கண்களின் மிக நெருக்கமாக வைத்துப் பார்த்தால் அதில் மிஞ்சப்போவது வெறும் புள்ளிகளும் கோடுகளும் மட்டும்தான். சற்று தொலைவில் வைத்துப் பார்க்கிறபோது அது நம்மை அதிசயிக்க வைக்கிற வண்ணமயமான ஓவியமாகத் தெரியும். அதுபோலத்தான் வாழ்வின் பிரச்சனைகளை சற்று தொலைவில் வைத்துப் பார்க்கிறபோதுதான் வெற்றிகள் நம்மை நெருங்குகின்றன.

ஒவ்வோர் ஏமாற்றமும் ஏதோவொரு மாற்றத்திற்கான துவக்கமாகவே இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவதில் புகழ் பெற்ற ஓப்ரா, ” வாழ்வில் தோல்விகளை சந்திக்கிற போது, இது சரியான பாதை அல்ல என்று இறைவன் என்னை வழிநடத்துவதாகவே உணர்கிறேன். பல தவறான வழிகளில் பயணப்பட்ட அனுபவத்தில் இன்று சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன். இந்த கற்றலே என்னை எண்ணற்ற சாதனைகளைச் செய்ய வைத்தது” என்கிறார். ஓப்ராவுக்கு மட்டுமல்ல. நம் ஒவ்வொருவருக்குமே வெற்றியின் ரகசியமே ஒரு சதவீத திறமையும், 99 சதவீத கடின உழைப்பும்தான். உதாரணமாக, உலகிலேயே மிக சீக்கிரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று மூங்கில். ஆனால் அவை மண்ணில் விதைக்கப் பட்ட நாள் முதல் சோம்பலின் அடையாளமாகவே நம் கண்களுக்குத் தெரிகிறது. கிளைகள் இல்லாத மரங்களாகவே இவை வளர்கின்றன. ஆனால் மண்ணில் வேர் ஊன்றிய நாள் முதல், 24 மணி நேரத்திற்குள் 48 அடி நீளம் வளர்ந்து விடுகிறது. சிறிது தாமதமாக துவங்கினாலும் அடித்தளம் வலுவாக இருப்பதன் உறுதியில், உலகில் வேகமாக வளரும் மரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன் வெற்றியில் அம்மரத்திற்கு இருக்கிற தெளிவு மனிதர்களில் பலருக்கு இருப்பதில்லை. தான் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தத் துறையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டு நம் வெற்றி இலக்கை தெளிவுடன் நிச்சயித்து செயல்பட்டால் உலகில் மிக வேகமாக வளர்கிற சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரும் சீக்கிரம் இடம் பெறும்.

  1. RMURUGA

    vetri enbathu thoolivin mudivil aravambam this artricels very nice thank you for namadunambikkai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *