வெற்றி வாசல் 2009

சாதிப்பது பெருமையல்ல நம் கடமை!!

எட்டினால் பிடித்திடலாம்

“மண் பயனுற வேண்டி, அதற்காக மட்டும் பாடுபடும் நம் தமிழின மக்களுக்கு வணக்கம்.

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து”

என்ற குறளுக்கு ஏற்ப இன்று தமிழகத்தின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் தோளோடு தோள் நின்று உரிமையோடு உறவு கொண்டாடக்கூடியவர்

திரு. முத்தையா. ஆனால் அவர் எவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரைப் போலவே அவருடைய அலுவலகத்தில் அவரோடு துணை நிற்கும் குழுவும் எளிமையாகவே இருக்கிறார்கள். அந்த எளிமை, பணிவுதான் மனிதரை உயர்த்துகிறது. ஒரு சில பேர் நான்கு ஆண்டுகளில் செய்ய வேண்டியதை நாற்பது ஆண்டுகளானாலும் செய்து முடிக்க மாட்டார்கள். ஆனால் சிலரோ நாற்பது ஆண்டுகளில் செய்ய வேண்டியதை நான்கே ஆண்டுகளில் செய்து விடுகிறார்கள். வெற்றி வாசல் அதுபோல்தான் நாற்பது ஆண்டுகளில் செய்ய வேண்டியதை நான்கே ஆண்டுகளில் செய்து விட்டது.

உலகில் புரட்சி ஏற்படுகிற பொழுதுதான் ஊடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நல்லவர்கள் அமைதியாக இருந்தால் கெட்டவர்கள் தலை தூக்க ஆரம்பிக்கிறார்கள். கெட்டவைகளை அழிக்க நாம் அவர்களை அழிக்க வேண்டியதில்லை. நல்லவர்களை வளர்த்தால் மட்டும் போதும். நம் தமிழ் மூதாட்டி சொன்னார்,

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது”

நிலக்கரியில் அருமையானது வைரம். கனிமப் பொருட்களுள் அருமையானது தங்கம். இதைத் தான் Rarest of the Rare என்பார்கள்.

அதுபோல் உயிரினங்களில் மிக அருமையானது மானிட இனம். அப்படியென்ன அருமை இருக்கிறது? யானையிடம் இருக்கும் பலம் நம்மிடம் இருக்கிறதா, இல்லை. ஆனால் யானையை அடக்கும் திறன் நம்மிடம் உண்டு. உழைப்பது, சிந்திப்பது, பகுத்தறிதல், சாதனைகள் படைத்தல் என மனித பிறவிக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. அனைத்திலும் மேலாய் தன் நிலையை தானே உயர்த்திக் கொள்வதும் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கக் கூடிய திறமை மனித இனத்திற்கு மட்டும் தான் உண்டு.

இராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்ற குழந்தை பிறந்தது. கட்டுமரத்தோடு கட்டு மரமாக நடுக்கடலில் மீன் பிடிக்கும் மீனவ குடும்பத்தில் பிறந்து சமுத்திரத்தை ஆராய்வதை விட்டு விண்வெளியை ஆராய்ந்து இன்று இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார் என்றால் தன் இனத்தை தானே உயர்த்திக் கொள்ளும் தன்மை மனித இனத்திற்கு மட்டும் தான் உள்ளது. நியூஸ்பேப்பர் போட்டு படித்தவர் நியூஸ்மேக்கர் ஆகிவிட்டார்.

30 வருடங்களுக்கு முன்பு சென்னை புற நகரில் இருக்கும் மடிப்பாக்கம் மிகச் சின்ன ஊர். அந்த ஊரில் பிறந்தவர் சரத்பாபு. இவர் பிறந்த குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். சரத்பாபுவின் அம்மா மதிய உணவு திட்டத்தில் வேலை செய்தவர். வெறும் முப்பது ரூபாய் சம்பளம். அவர்கள் வீட்டில் 6 வயிறுகளும் இந்த 30 ரூபாய் சம்பளத்தை நம்பியே வாழ்ந்தனர். சரத்பாபுவின் அம்மா இட்லி சுட்டு கொடுப்பார்கள். அதை எடுத்துச் சென்று இந்த குழந்தைகள் விற்றுவிட்டு வரும். இதற்கிடையில் சரத்பாபு “Foodking Catering Service” என்ற பெயரில் உணவு கான்ட்ராக்ட் எடுத்து நடத்த துவங்கியிருந்தார். அதில் மீதம் ஆகும் உணவுகளை வீட்டில் இருப்பவருக்கு கொண்டு வந்து கொடுப்பார். இன்று இந்நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான “உணவு கான்ட்ராக்ட்” எடுத்து நடத்தி வருகிறது. தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இட்லி விற்றவருக்கு இன்று Italy-யில் ரெஸ்டாரெண்ட். தன் நிலையை உயர்த்திக் கொள்ளும் திறமை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

இன்று நாம் அனைவரும் ஒரு முடிவு எடுப்போம். நம் வாழ்க்கையை வேறொரு பாதையில் செலுத்தும் சக்தி நம்மிடம் உண்டு. இதை நாம் ஒப்புக்கொண்டு நம் கையில் வைத்திருக்கும் சுதந்திரத்தை நாம் கை விடவேண்டும். அது என்ன சுதந்திரம்? மற்றவர்களை காரணம் காட்டி பழி சொல்வது. உதாரணமாக, ஒருவரிடம் நீங்க ஏன் MBA படிக்கலை என்று கேட்டால். இதோ இவர்னாலதான் படிக்கலை, கடவுள் கண்ணே திறக்கல என மற்றவர்களை பழி சொல்வார்கள். இந்தச் செயலை முதலில் கைவிட வேண்டும்.

மனித இனத்தை ஒரு பிரமிட் (Pyramid) போல கற்பனை செய்து பார்த்தால். கீழே கூட்டமாக மக்கள் இருப்பார்கள். வெற்றியாளர்கள்தான் உச்சத்தில் இருப்பார்கள். அதிகப்படியான மக்கள் வாழ்க்கையை தோற்பது கூட்டத்தில்தான். கூட்டத்தில் தோற்பது தவறல்ல. அந்தக் கூட்டத்திலேயே இருந்துவிடுவதுதான் தவறு. இக்கூட்டத்தில் இருந்து விடுபட்டு வளர்ந்து உயர்ந்து ஒரு சாதனையாளராக வரவேண்டும்.

கூட்டமாக கீழே இருப்பவர்கள் நிலச் சுமையாக இருப்பவர்கள். மேலே உச்சியில் இருக்கிற சாதனையாளர்கள் மாநிலம் பயனுற பிறந்தவர்கள். வெற்றி பெறுகிற சக்தியை ஆண்டவன் அனைவருக்கும் கொடுத்துள்ளான். எந்த இடத்தை பிடிப்பதற்கும் ஒரு தெளிவு வேண்டும். என்னவாக வர வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் வெற்றி பெற முடியாது. சாதனையாளர்கள் எல்லாம் சாதாரணமாக இந்த இடத்தை பிடித்துவிடவில்லை.

“எட்டினால் பிடித்திடலாம்” என்கிறோம். எதை பிடிப்பது என்பதில்தான் தெளிவு வேண்டும். சேம்பியன் (Champion) ஆவது எப்படி. நான்கே நான்கு வழிகள்தான். இதை எட்டினால் வெற்றியை பிடித்திடலாம்.

1. அடங்காத ஆசை

சாதிக்க வேண்டும் என்கிற ஆசை வேண்டும். கனவில்லாத மனிதன் பிணம்தான். ஆசை என்பது அவ்வப்போது வந்து செல்கிற ஆசையாக இல்லாமல் அடங்காத ஆசையாக இருக்க வேண்டும். ஆசை என்பது ஓர் ஆக்க சக்தி. ஆசையில்லாத மனிதனின் வாழ்க்கையில் வளர்ச்சியை பார்க்க முடியாது.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

நீங்கள் நடந்து சென்றால் 10 பேர், எழுந்து நின்று மரியாதை செலுத்துகிற வாழ்க்கையை வாழ வேண்டும். உங்களைப் பார்த்து ஐயோ! பாவம்! என்கிற பரிதாபமான வாழ்க்கையை வாழக்கூடாது.

ஆசையால் வரும் லாபங்கள்,

? நமக்குள் இருக்கும் ஆற்றலை செயல்பாடாக மாற்றுவது. எல்லோரிடமும் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வது ஆசைதான்.

? ‘இல்லை’ என்ற நிலையிலிருந்து ‘இருக்கிறது’ என்ற நிலைக்குக் கொண்டு வருவது ஆசை (Everything from nothing or nothing to everything).

? வாழ்க்கையில் ஒரு பிடிப்பை கொடுப்பது ஆசை.

அடுத்த வெற்றிவாசல் நிகழ்ச்சியில் நான் இன்னார் என்ற நிலையுடன் வரவேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் வரவேண்டும். இதுதான் ஆசையின் மிகப்பெரிய லாபம்..

இந்த உலகத்தை பொறுத்தவரை நீங்கள் எதைத் தீவிரமாக விளைகிறீர்களோ, அது நிச்சயம் உங்களுக்கு நிகழும். உங்கள் ஆசையின் மீதான தீவிரத்தன்மை உங்கள் நிலையையே மாற்றும். மார்கழி மாதம் பாவை நோன்பு மிகவும் பிரபலமாகக் காரணம் ஆண்டாள். கண்ணனை மணம் முடிக்க நோன்பு இருந்தார். ஆண்டாளின் தந்தையோ, அவரை எப்படி நீ திருமணம் செய்ய முடியும். அவர் கடவுள் என்றார். ஆனால் ஆண்டாள் தீவிரமாக ஆசைப்பட்டதால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக கண்ணனை மணந்தாள். வாழ்க்கையில் தீவிரமாக ஆசைப் பட்டால் நிச்சயம் நடக்கும்.

2. அசையாத நம்பிக்கை:

ஆசை எவ்வாறு உள்ளதோ, அதற்கு ஏற்றவாறு நம்பிக்கை வேலை செய்ய வேண்டும். சிலர் கூறுவார்கள்:

“ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பற்றி படிக்க நல்லா இருக்கு. ஆனா, அதெல்லாம் வேலைக் காகாது” என்று சொல்லும் முட்டாள்தனமான நம்பிக்கையை கைவிட வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய நல்ல நம்பிக்கைகள் வேலை செய்யும். இன்னும் சிலர், “ஏதோ அவுங்க கிட்ட விஷேச சக்தி இருந்திருக்கும்” என்பார்கள். உண்மை அதுவல்ல. உண்மை என்ன தெரியுமா?

உங்களைப் போன்ற கைகளை கொண்டவர்கள்தான் தாஜ்மஹாலை கட்டியுள்ளார்கள். ஒருவரால் முடியும் என்றால், பலரால் முடியும். பலரால் முடியும் என்றால் எல்லோராலும் முடியும். நம்மால் முடியும் என்பதற்கு பல சாட்சிகள் உள்ளன. 1500 கோடி மூளை அணுக்கள் மனிதனுக்குள் உள்ளது. இது 1000 நகரங்களை கேபிள் (Cable) போட்டு இணைப்பதற்கு சமம். அவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கிறான். அண்ட சராசரங்களை எல்லாம் உள்ளடக்கக் கூடிய மனம், மனித மனம். இதைவிட சாதிக்க வேறு என்ன வேண்டும்.

நம்மை ஓர் அதிசயமாகவே ஆண்டவன் படைத்துள்ளான். எத்தனை நரம்புகள், தசைகள், ரசாயனம் சுரக்கும் சுரப்பிகள், எலும்புகள் இத்தனையும் வைத்துக்கொண்டு நம்மால் செய்ய முடியாது என்று சொல்வது வேதனை. அதற்கு வள்ளுவர் சொல்வார்.
“எண்ணியார் எண்ணியாங்கு எய்துவர், எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”.

3. உழைப்பு – அயராத உழைப்பு:

உழைப்பால் எதையும் சாதிக்க முடியும். திருக்குறளின் முதல் குறள். “அகர முதல எழுத்தெல்லாம்” என்று துவங்கும். தெய்வம்தான் எல்லாவற்றிற்கும் முதன்மையானவர், என்று சொல்கிறார். ஆனால் அவரே பின் அடுத்த குறளில்,

“தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார்.

உழைப்பு எல்லாவற்றையும் தரும் என்பதற்கு என்ன ஆதாரம். விதி போன்ற விஷயங்கள் இருக்கே என்று கேட்பவர்களுக்கும் வள்ளுவர் பதில் வைத்திருக்கிறார்.

“விதியை உழைப்பால் வெல்லலாம் என்பதே பதில்”.

பீத்தோவன் இதற்கு சிறந்த உதாரணம். 6 வயதில் பியானோ கற்றுக்கொண்டு 12 வயதில் இசை அமைத்தார். ஆனால் அவருக்கு 16 வயதில் காது கேளாமல் போனது. விதி விளையாடியது. பீத்தோவன் நடத்திய இசை நிகழ்ச்சியில் அவருக்குக் கிடைத்த கைதட்டல் சப்தத்தைகூட கேட்க முடியாதவர். இன்று அழகான பல இசைகளுக்கு சொந்தக்காரர். விதியை உழைப்பால் வெல்லலாம்.

4. உயிரினும் ஓம்பப்படும் என்கிற ஒழுக்கம் வேண்டும்:

ஒழுக்கம் என்பது எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்வதும் எதை செய்யக் கூடாதோ, அதைச் செய்யாமல் இருப்பதும்தான். இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிற விசேஷமான சக்தி நம்மை நாமே வழி நடத்திச் செல்லும் சக்தி. நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு பூனை தன் பக்கம் எலி வந்தால் உடனே பிடித்துவிடுகிறது. ஆனால் மனிதர்களுக்கு பிடித்தமானதாக இருந்தாலும்கூட வேண்டாம் என்று நினைத்தால் தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடிகிறது. ஒழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் வளரமுடியும். அதிகாலை எழுவது மிகச்சிறந்த ஒழுக்கம். சூரியனுக்கு முன்பாக நாம் எழுந்தால் சூரியனை விட உயரமுடியும், நம்மால். நம் வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டில் வைக்கப் பழக வேண்டும். அந்த கட்டுப்பாட்டுக்குள் புதிய சிந்தனைகள் பிறக்க வாய்ப்புண்டு.

நமது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 19 மணி நேரம் வேலை செய்கிறார். 5 மணி நேரம்தான் உறங்குகிறார். அவர் 18 டாக்டர் பட்டம் பெற்றவர். 9 பட்டங்கள் இந்தியாவில் கொடுக்கப்பட்டது. 9 வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டது. என்னை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். உங்கள் அனுமதியில்லாமல் உங்களுக்குள் ஆண்டவன் கூட நுழையமுடியாது. உண்மையைச் சொன்னால், ஆண்டவன் நமக்கு சோம்பேறித்தனம் போன்ற குணநலன்களைத் தரவில்லை. குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கின்றன. சோம்பேறித்தனம் என்பது நாமாக உருவாக்கிக் கொண்டது. இந்த தீய குணங்களை எல்லாம் நாம் விட்டுவிட வேண்டும். இதை பாரதி ஒரு பாட்டில் அழகாய் சொல்லுவார்.

“என்ன வரங்கள் பெருமைகள்
வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ
தன்னை வென்றால் அவையாவும்
சாத்தியமாகும் அன்றோ”

சாதனையாளர்கள் ஆவது பெருமையான விஷயம் அல்ல. அது நம் கடமை. நாம் மறைந்த பின்னும் நம் பெருமைகள் பேசப்படவேண்டும். இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும். நாளை நாம் அனைவரும் ஆண்டவனை சந்திக்கிறபோது கடவுள் கேட்பார். நான் உனக்கு உடம்பு, கை, கால், தாய், தந்தை என எவ்வளவு கொடுத்திருக்கிறேன். உலகத்திற்கு நீ என்ன செய்துள்ளாய் என்று? அப்பொழுது நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம். இந்தக் கையை தலைக்கு வைத்து உறங்கினேன் என்று சொல்வீர்களா. உழைத்து முன்னேறினேன் என்று சொல்வீர்களா?

ஆண்டவனே, இந்த ஆயுளில், பயனுற பல செயல்கள் செய்து வாழ்ந்தேன் என்று சொன்னால், கடவுள் நம்மை கட்டி அணைத்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார். நாம் இங்கு பலருக்கு கடன்பட்டிருக்கிறோம். தாய், தந்தை, தாய்நாடு என அனைவருக்கும் கடன் பட்டிருக்கிறோம். அத்தனை கடன்களையும் அடைப்பதற்கு உயரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *