தருவதையே பெறுகிறீர்கள்

வெற்றி வாசல் நிகழ்ச்சியில் நகைச்சுவைத்தென்றல் முனைவர் கு. ஞானசம்பந்தன்

எங்கள் ஊர் சோழவந்தானில் பல மேடைப்பேச்சுகளை கேட்கும்போது நானும் ஒரு மேடைப் பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஒருநாள் இந்த மேடை என் வசப் பட வேண்டும் என எண்ணினேன். வசப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். எங்கள் ஊர் திரையரங்குகளில் மண்தரையில் அமர்ந்து படம் பார்ப்பேன். மண்ணை எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் குவித்து வைத்து அதன் மீது உட்கார்ந்து கொள்ளலாம். அந்த உயரத்தை குறைக்கும் வேலையை நமக்கு பின்னால் உட்கார்ந்திருப்பவர் பார்த்துக் கொள்வார்.

அன்று தரையில் உட்கார்ந்து படம் பார்த்த நான் ஒருநாள் திரையில் வர வேண்டுமென்று எண்ணினேன். ‘கல்கி’ பத்திரிகையில்கூட ”சினிமாவுக்கு போகலாம் வாங்க” என்ற தொடர் எழுதிக்கொண்டு வந்தேன். பெரிய நடிகர் என்ற நிலைக்குப் போகாவிடினும் எனது பெரிய விருப்பங்களில் ஒன்றாக அது இருந்தது. இதை நான் சொல்வதன் காரணம், தரையில் இருப்பவர்கள் தரையிலேயேதான் இருப்பார்கள் என்றோ, அவர்கள் பெரிய நிலைக்கு வரமாட்டார்கள் என்றோ நாம் எண்ணவே கூடாது. அதற்கு உதாரணமாக ஒரு சாதாரண மனிதனாக நான் என்னைக் கூறுகிறேன்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் ஓர் ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து, முள்ளிப்பள்ளம் என்ற ஊரில் ஒரு சிறு பள்ளிக்கூடத்தில் படித்தேன். எனது அறிவியல் வாத்தியார், தன் ஒரு விரலை சோதனைக்குழாய் என்றும் மறுகையால் அதில் அமிலத்தை ஊற்றுவதாகவும் சொல்வார். அப்படி செய்தால் என்ன ஆகும் என்பார். கை வெந்து போகும் என்பேன். இப்படி எந்த வசதியுமே இல்லாத பள்ளிக்கூடம்.

மழை வருவதற்கான அறிகுறிகள் தென் பட்டால் விடுமுறை என்பார்கள். ஏனென்றால், நாங்கள் ஆற்றைக் கடந்து வரவேண்டும். இன்று தொலைக்காட்சிகளில் பிள்ளைகள் யாரைப் பார்த்தால் சந்தோஷப்படுகிறார்கள்? வானிலை கூறும் ரமணனைப் பார்த்தால், ”ஐ! ரமணன் வந்துட்டாரு. மூன்று நாளைக்கு விடுமுறை”. அனேகமாக நேருவுக்குப்பின் அதிகமாக குழந்தைகள் விரும்புவது அவராகத்தான் இருக்கும்.

நம்மோடு இருப்பவர்களையும் உயர்த்தி விடும் மனப்பான்மை நமக்கு வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகமிது. நாம் எப்போது ஒருவரை உயர்த்த ஆசைப்படுவோம் தெரியுமா? அந்த ஒருவனால் நம் வேலைக்கும், வாழ்க்கைக்கும் எப்போது தொல்லை வராதோ, அப்போதுதான். ஆனால், அந்த மனப்பான்மை கூடாது. ஒரு அங்கீகாரம் என்பது அனைவருக்கும் தேவைப் படுகிறது. கடவுளுக்கே அங்கீகாரம் தேவைப் படுகிறது. பல்லாண்டு பாடுகிறார்களில்லையா? பாராட்டுதல் என்பது மிக முக்கியம்.

குழந்தைகளைப் பாராட்ட பாராட்ட அவர்கள் நல்ல விதமாக வளர்வார்கள். அதற்கு உதாரணம் கூறவேண்டுமென்றால் ஒரு செடியின் அருகே தினமும் சென்று இதை வெட்டிவிட வேண்டும். பிடுங்கி எறியவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அது சில நாட்களில் கருகிப் போகுமாம்.

அதற்குப்பதிலாக அந்தச் செடியிடம் நின்று, இது நன்றாக வளரும். அழகாய் பூப்பூக்கும் என்று கூறினால் நமது அதிர்வுகள் அதைத் தாக்கி அந்தச் செடி நன்றாக வளருமாம். ”பயிருக்கும் உயிருண்டு” என்று சொன்னார் ஜெகதீஷ் சந்திரபோஸ். ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். அவரது விஞ்ஞானத்தை மதிக்க வேண்டும். இவரது மனிதத் நேயத்தை போற்றவேண்டும்.

ஒருவர் கூறினார், ”என் மகன் நான் என்ன கூறினாலும் புரிந்துகொள்ள மறுக்கிறான். ஆனால், என் வீட்டு நாய் அதை நன்றாகப் புரிந்து காலையில் செய்தித்தாளை எடுத்துக் கொண்டு தருகிறது” என்று. இன்றைய தலைமுறை எதைப் பற்றியும் ஒரு கவலை இல்லாத தலைமுறையாக உள்ளது. ஓர் இளைஞரைப் பார்த்தேன். 1000 ரூபாய் கொடுத்து ஒரு படத்துக்கு வந்து, தின்பண்டங்களை 300 – 400 ரூபாய்க்கு வாங்கி விட்டு படம் ஆரம்பித்த 15ஆவது நிமிடம் திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டான். அவனது குறிக்கோள் என்ன என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது அவரைத் தவிர வேறு யாருக்கும் புரியப்போவதும் இல்லை.

இப்போது திரைவசனங்களும்கூட, ”என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” என்றுதான் எழுதுகிறார்கள். அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள் என்பதற்காக நாமும் அவ்வாறே நடக்க முடியுமா?

வீட்டில் உள்ள பெண்கள் நாடகங்களைப் பார்த்துவிட்டு அழுதுகொண்டே போவார்கள். பார்த்திருக்கிறீர்களா? இறைவன் அருளால் இப்போது பல நெடுந்தொடர்கள் முடிவுக்கு வந்துள்ளன. கடவுள் அருள் இல்லாது அது சாத்தியமே இல்லை. அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்ணீர் விடுகிறார்கள். நாம் பணத்தைக் கொடுத்து கண்ணீர் விடுகிறோம். கண்ணீர் விடுவதற்கு ஒரு காரணம் தேவை. ஒரு சிறுபிள்ளை திருக்குறள் போட்டியில் ஒரு எழுதுகோலை வென்று வந்து தன் தாயிடம் அம்மா, ”நான் வெற்றி பெற்றேன். எனது ஆசிரியர் என்னை பாராட்டினார்” என்று கூறும்போது அந்தக் குழந்தையைத் தூக்கி முத்தமிட வேண்டும்.
”மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி” அதுதான் முக்கியம். அதை விடுத்து அந்த எழுதுகோலை வாங்கிப் பார்த்து விட்டு 20,000 ரூபாய் கட்டியதற்கு இதுதான் மிச்சம் என்றால் அது முறையல்ல.

விஜயதசமி அன்று பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பார்கள். பின் அன்று படிக்கக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டுவருவார்கள். புத்தகங்களை பூஜையில் வைப்பதால் என்னமோ அதை விடுத்து 364 நாட்களும் படிப்பது போல். என் வீட்டில் என் மனைவி எல்லா புத்தகங்களையும் வைத்து வணங்கினார். மற்றும் ஒரு சிறு காகிதத்தையும் அதனுடன் வைத்திருந்தார். அது என்னவென்று கேட்டபோது என் பேரன் முதன் முதலில் கிறுக்கிய காகிதம். எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதில். எழுத்துக்கு மட்டும் மரியாதை கிடையாது. பேச்சுக்கு மட்டும் மரியாதை கிடையாது.

உணர்வுக்கும்கூட மரியாதை உண்டு என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். நீங்கள் என்ன மற்றவர்களுக்கு தருகிறீர்களோ, அதையே திரும்பப் பெறுகிறீர்கள்.
இயல்பான ஒன்று. விக்கிரமாதித்தன் கதையைப் படித்திருப்பீர்கள். ஆனால், அதே கதையை ஆங்கிலத்தில் ஹாரி பாட்டர் என எழுதிய ஒரு பெண், விக்டோரியா மகாராணிக்குச் சொந்தமான ஓர் அரண்மனையையே சொந்தமாக வாங்கி விட்டார். நமது ஊரில் நடக்குமா?

நமது ஊரில் ஓர் எழுத்தாளரை ராஜாஜி அவர்களிடம் ஒருவர் அறிமுகப்படுத்துகிறார். ஐயா! இவர் ஓர் எழுத்தாளர். அவன் உடனே கை கொடுத்துவிட்டு கேட்கிறார். ”உணவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே”. நமது நாட்டில் எது செய்தாலும் ஒரு வேலை செய்ய வேண்டும். ஒரு பிடிமானம் இருக்க வேண்டும்.

”பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பயனில்லை
அத மையில நனைச்சு பேப்பர்ல அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்ல” என்று கண்ணதாசன் மிக அழகாக ஒரு பாடல் எழுதி இருப்பார்.

பொய் சொன்னாலும் அச்சில் வந்தால்தான் அது நடக்குமாம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் மிக அருமையான பல விஷயங்கள். அதைப் படித்தால் நன்று. நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுகிறோம். அதற்கு ஒரு நல்ல உதாரணம். விக்கிரமாதித்தன் கதையில் பட்டி என்பவர் இருப்பார். அவர்களிருவரும் நாடு ஆறு மாசம் காடு ஆறு மாசம் இருப்பார்கள். விக்கிரமாதித்தன் மகாராசா சொன்னார். பட்டியிடம், ”அங்கே ஒரு பெண் வருகிறாள்.

அவளைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. பெண்ணுக்கான எந்த அடக்கமும் இல்லாமல் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு நடந்து வருகிறாள் பார்.” பட்டி உடனே நேராக அவளிடம் போய், ”விக்கிரமாதித்தன் மகாராஜா இறந்துவிட்டார்’ என்று கூறினான். உடனே அந்தப் பெண் சொல்கிறாள். ”எவன் என்ன ஆனால் எனக்கு என்ன? போனால் போகிறான்” என்றாள். உடனே விக்கிர மாதித்தனுக்கு கோபம் வந்தது. பட்டியை அழைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் போனார். அங்கே வழியில் ஒரு முதியவர் விறகுக் கட்டைகளை சுமக்க இயலாது சுமந்து வந்தார்.

விக்கிரமாதித்தன் அவரைப் பார்த்து பரிதாபப் பட்டார். உடனே பட்டி அந்த முதியவரிடம் சென்று, ”விக்கிரமாதித்த மகாராஜா இறந்து போனார்” என்றான். உடனே, அந்த முதியவர் தன் தலையில் இருந்த கட்டையை கீழே போட்டுவிட்டு அழுதார். விக்கிரமாதித்தன் மறைந்து விட்டாரா என்று மனம் வருந்தினார்.

சிறிது நேரம் கழித்து விக்கிரமாதித்தன் பட்டியிடம் கேட்டார். ”எதற்காக நீ இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறாய் என்ற உடனே பட்டி கூறினான். முதல் அந்தப் பெண்ணைப் பார்த்து உங்களது வெறுப்பு அலைகளை அனுப்பினீர்கள். அதற்கு உங்களுக்கு கிடைத்தது அதே வெறுப்பு அலைகள்தான். அதே போல் அந்த முதியவரைப் பார்த்து நீங்கள் அன்பு அலைகளை அனுப்பினீர்கள். அதன் மூலம் உங்களுக்குக் அவரது அன்பு அலைகள் கிடைத்தது. எனவே எதை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்களோ, அதுவே உங்களுக்கு திருப்பிக் கிட்டும்.

சிலர் கூறுவர், நான் எல்லோரிடத்திலும் அன்பாக நடக்கிறேன். ஆனால், என்னிடம் யாரும் அன்புடன் இருப்பதில்லை என்று. ஆனால், அதை எல்லாம் தாண்டித்தான் நாம் சாதிக்க வேண்டியுள்ளது. ஒரு குழந்தை மருந்து சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அதன் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளாது, அந்த குழந்தையை மருந்து குடிக்கச் செய்வது அந்த குழந்தை நலமாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான். ஒரு மருத்துவரிடம் நம் உடலில் உள்ள கட்டியை நீக்குவதற்காக போகிறோம். அவர் உடலை அறுத்து பல வேதனைகளை நமக்குக் கொடுத்து நமது உடல்நிலையை சரி செய்துவிட்டு பின் நம்மிடம் அதற்கு பணம் கேட்கிறார். நாமும் சந்தோஷமாகத் தருகிறோம். ஏன் நம்முடைய நன்மைக்காகத்தான், அவர் அவ்வாறு செய்தார் என்பதற்காக…

”வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல”

உடம்பை வருத்தி செய்தால்தான் பல வேலைகள் நலமாக நடக்கும்.
அறிவு எப்படி வந்தது. பழையதை நினைத்துப் பார்த்து புதியதை நோக்குவதால்.
அட! எனக்கு இது தெரியாமல் போனதே? என்று சொன்னால்தான் அது அறிவு. அட! எனக்கு இது எல்லாம் தெரியும்? என்று சொன்னால் அது அறிவாகாது.
கண்ணதாசன் ஒரு பாட்டில் அழகாக சொல்லிருப்பார்.

”தொட்டால் சுடுவது நெருப்பாகும்,
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்”

இன்றைய உலகம் மிக அவசரமாக இருக்கிறது. ஒரு நாள் அலைபேசிக்கும், தொலைக் காட்சிக்கும் விடுமுறை கொடுத்துப் பாருங்கள். உலக வாழ்க்கை நன்றாக இருக்கும். உலகம் நாம் இருப்பதற்கு முன்னால் இருந்து இருக்கிறது. நாம் இல்லையென்றாலும் இருக்கும். டால்ஸ்டாய் அவர்களைப் பற்றி சொல்லும்போது அவர் பல நேரங்களில் அவர் பண்ணை வீட்டில் இருந்து மாஸ்கோ வரை கூட நடந்து போவாராம்.

அவர் பெரிய பணக்காரர். அவர் நடந்து போக காரணம், அவர் நடந்து போகும்போது ஒரு கதை அவருடன் நடக்குமாம். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதா பாத்திரத்துடன் பேசுமாம். அதுதான் அவர் வரலாற்று சிறப்புமிக்க நாவல்களைப் படைக்கக் காரணம். அதுபோல நமக்கு யோசிக்க நேரமில்லை. சும்மா இருந்தால் சிலர் இப்போது போன் பேசுகிறார்கள். ஒன்றும் இல்லையென்றால் கூட ஒரு எர்ர்க் சண்ஞ்ட்ற். அவர்களிடம் கேட்டோமா.?

இந்த அவசரமான உலகத்தில் பாராட்டுகளும், சோகங்களும், துக்கங்களும் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் நாம் சந்தித்தேயாக வேண்டும். எதிரிகள் இல்லா விட்டால் அவர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நம்மை சரியாக எடை போடுபவர்கள் நம் எதிரிகள் மட்டுமே. நம்முடைய கருத்திற்கு மாற்றுக்கருத்துடையவர்கள் நம்மை சரியாக கணிப்பார்கள். நமக்கு ஒரு பதவி வரும்போதுதான் அதன் அருமை தெரியும். யாராலும் ஒரே நாளில் பெரிய ஆளாக முடியாது.

மும்பைக்கு வேலைக்குச் செல்கிறான் ஒரு சிறுவன். உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை அவனுக்கு. அந்த உணவகத்திற்கு எதிரே ஒரு திரையரங்கு உள்ளது. அங்கே சென்று அவன் படுத்துக் கொள்வான். ஒருநாள் அந்த திரையரங்கில் ஒரு விழா நடந்தது. அப்போது அங்கே வந்த இந்தி இசையமைப்பாளர் ஒருவர் அவனை தன்னுடன் வேலைக்கு கூட்டிச் செல்கிறார். அவன் மெதுவாக இசையை கற்றுக் கொண்டு ஓர் இசையமைப்பாளராக அதே திரையரங்கிற்கு ஒரு விழாவிற்கு வருகிறான். அப்போதும் அந்த உணவகம் அங்கு உள்ளது. அங்கேதான் முதலில் நான் இலையெடுத்து பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தேன் என்றானாம். பிறகு எனது ஆர்வம் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது. அந்த உணவகத்திற்கும் இந்த திரையரங்கிற்கும் ஒரு அடிதான் தூரம். ஆனால், அதைக் கடந்து வர எனக்கு 17 ஆண்டுகள் ஆனது என்றாராம். அந்த இசையமைப்பாளர் நவ்ஷாத் அலி.

வாழ்நாளெல்லாம் நல்லவராக இருப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் நல்லவனாவதற்கு ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது அல்லவா. அதுதான் பெரிய விஷயம்.

வாழ்நாள் எல்லாம் நல்லவர்களாக இருப்பது எப்படி? நான் வழக்கமாக சொல்லும் ஒரு கதை. அமெரிக்காவில் ஒரு தாய் ஒரு மகன் உள்ளனர். இருப்பதை எல்லாம் விற்றுவிட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை. கடைசியில் ஒரு பசுமாடு மட்டும் உள்ளது. ஆத்தா சொல்கிறாள். இந்த பசுமாட்டையும் விற்று விடுவோம். ஏன் நம்மோடு சேர்ந்து அதுவும் பட்டினி கிடைக்கிறது. மகனுக்கு 12 வயது. சந்தைக்கு 10 மைல் நடந்து சென்றான். வியாபாரம் செய்யத் தெரியாமல் மாலை வரை அலைந்தான். பின் மாலை ஒருவரிடம் தன் மாட்டை 30 டாலருக்கு விற்றான். விற்றவுடன் பசி தாங்காமல் 1 டாலருக்கு ரொட்டி வாங்கித் தின்றுகொண்டே வீட்டுக்கு போனான்.

அம்மாவுக்கும் கொடுத்தான். அம்மா மீதி பணத்தை கேட்டாள். அவன் மறதியாக பணத்தை ரொட்டி கடையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டான். அம்மா கவலையுடன் கண்கலங்கினாள். அன்று இரவு அவர் வீட்டு கதவை யாரோ ஓயாது தட்டினார்கள். ஒரு மனிதர் அந்தப் பையன் தவற விட்ட பையை எடுத்து வந்திருந்தார். அவர் அப்போது கூறினார். உங்கள் வீட்டில் இது கடைசி பணமாகக்கூட இருக்கலாம். இதை இழந்து நீங்கள் எந்த முடிவுக்கும் சென்று விடக் கூடாது என்பதற்காகத்தான் இரவோடு இரவாக வந்தேன் என்றார். அந்த பெண்மணி அவர் பெயரைக் கேட்டபோது, அவர், ஆப்ரகாம் லிங்கன் என்றார். அவர் அப்போது ஒரு சாதாரண மனிதர். ஜனாதிபதி இல்லை.

இனிமையான பழகுதல் என்பது வேண்டும். ஒருவர் ஒரு வங்கிக்கு போகிறார். அப்போது அவருக்குத் தெரிந்த ஒருவரைக் கேட்கிறார். இங்கே ஒருவர் இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்பாரே, அவர் இல்லையா? உடனே இன்னொருவர் வந்து, ஏன்? அவன் எனக்குப் பின்னால் வந்தவன். அவன் இல்லை யென்றால் என்ன? நான் இல்லை என்றால் இந்த அலுவலகமே இயங்காது. தெரியுமா? என்றார். உடனே வந்தவர், இதனால்தான் நான் உங்களிடம் வருவதே இல்லை என்றார்.

நண்பர்களை, உறவினர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மாமன் மச்சனாக பழகுவது போல். உறவும் நட்பாக மாறும். எப்போது? என் தந்தை என்னிடம் நட்பாக பழகுகிறார். அங்கே உறவு நட்பாக மாறுகிறது. இந்த சந்தர்ப்பங்களில் உறவும் நட்பும் இனிமையாக மாறுகிறது. கடவுளைக் கூட உறவாகத்தானே நாம் பார்க்கிறோம். அய்யன் அப்பன் என்று. ஆயகலைகள் 64. 65ஆவது ஒன்று உள்ளது. அது ”அவமானங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்” என்பார்கள்.

செடி சின்ன செடியாக உள்ளபோது காற்றடித்தால் ஆடும். ஆனால், அதுவே ஒரு மரமாக வளர்ந்தால் யானையை கட்டிப்போடும் அளவுக்கு வலிமையாக மாறும். நாமும் அதே போல் பொறுமையுடன் வாழ்ந்தால் வெற்றி பெறலாம். அதற்கு வழி திறக்கிற வாசல் வெற்றி வாசல்!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *