வாக்வம் க்ளீனர் விற்ற ஷிவ்கெரா

தமிழ்நாட்டின் சிறிய நகரமொன்றில் வாக்வம் க்ளீனர் விற்கப் போன ஒருவரைப்பற்றி விவகாரமாய் ஒரு செய்தி.

அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம் தன் வாக்வம் க்ளீனரின மகத்துவத்தை விளக்கிய விற்பனையாளர் தோளிலிருந்து மூட்டையைப் பிரித்து அதிலிருந்த

மாட்டுச் சாணத்தை நடு ஹாலில் கொட்டினாராம். என்ன நடக்கிறதென்று அந்த வீட்டுத் தலைவி புரிந்துகொள்ளும் முன்பாக தையா தக்கா என்று மாட்டுச் சாணத்தின்மேல் குதித்தாராம்.

பதறிப்போன குடும்பத் தலைவியிடம், “கவலைப்படாதீர்கள்! இன்னும் ஐந்தே நிமிடங்களில் என் வாக்வம் க்ளீனர் இதைச் சுத்தம் செய்யும். அப்படி ஐந்தே நிமிடங்களில் சுத்தம் செய்யாவிட்டால் உங்கள் கண்முன்பே சாணம் எல்லாவற்றையும் சாப்பிட்டுக் காட்டுகிறேன்” என்றாராம்.

உடனே குடும்பத் தலைவி நிதானமாகக் கேட்டார், “அப்படியே சாப்பிடுவீர்களா? சட்னி சாம்பார் ஏதாவது வேண்டுமா?

“இல்லை மேடம்! எங்கள் வாக்வம் க்ளீனரைக் குறைவாக எடை போடுகிறீர்கள். ஐந்தே நிமிடங்களில் இது சுத்தம் செய்யும். இது என் சவால்”.

குடும்பத் தலைவி கூலாக சொன்னாராம், “தம்பி! எங்கள் பகுதியில் இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்காது. நீங்கள் தலைகீழாய் நின்றாலும் சுத்தப்படுத்த முடியாது” என்று!!

இதுதான் ஆர்வத்துக்கும் ஆர்வக் கோளாறுக்கும் இருக்கிற வித்தியாசம். சுயமுன்னேற்ற நிபுணரான ஷிவ்கெரா ஒரு காலத்தில் வாக்வம் க்ளினர் விற்பனையாளராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அமெரிக்காவிலுள்ள டொரன்டொவில், ஷிவ்கெரா இந்த வேலையில் இருந்தார். அவருடன் பணியாற்றிய ஒருவர் ஒரே நாளில் 24 வாக்வம் க்ளீனர் விற்றார்.

எப்படி எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, தன் வெற்றிக்கதையை அவர் பகிர்ந்து கொண்டார்.
டொரன்டொவில், பனிக்காலங்களில் குடும்பமே வீட்டில் இருக்கும். அப்போது கடுமையான பனி பொழிந்து கொண்டிருக்கும். தன் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ளவர்களின் வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டி, “நான் உங்கள் பக்கத்தில் குடியிருக்கிறேன். உள்ளே வரலாமா?” என்று கேட்பாராம் இந்த விற்பனையாளர்.

எல்லோரும் ஓய்வாக இருக்கும் நேரம், ஒன்றாக இருக்கும் நேரம். வீட்டுக்குத் தேவையான ஒரு பொருளை, பக்கத்திலிருப்பவர் அறிமுகம் செய்யும் போது மறுத்துச் சொல்ல வாய்ப்புகள் குறைவு. இந்த உத்தியைக் கையாண்டு அறிமுகமானவர்களிடம் கைவரிசையை ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக ஜெயித்திருக்கிறார், அந்த விற்பனையாளர்.

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் ஷிவ்கெரா, வெற்றிகரமான விற்பனையாளராகத் திகழ சில அடிப்படைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் சொல்கிறார்.

1. விற்பனைத் துறையில் உள்ள ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

2. உங்கள் தயாரிப்பின் மீதும் நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை வையுங்கள்.

3. நேர்மையான, திறமையான விற்பனை யாளராய் வளர உறுதி மேற்கொள்ளுங்கள்.

4. கடின உழைப்புக்கு மாற்று இல்லையென்று உண்மையை உணருங்கள்.

5. விடா முயற்சியைக் கைக்கொள்ளுங்கள்

6. வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மட்டுமே சிந்தியுங்கள். புதிய கதவுகள் திறக்குமென்று நம்புங்கள்.

7. உங்கள் தயாரிப்பின் தொழில் நுட்ப அம்சங்கள், தரக்கூடிய சேவையின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருங்கள் .

8. சிறப்புப் பயிற்சிகளில் பங்கெடுங்கள்.

9. உங்கள் செயல்பாட்டை தினமும், வாரம் ஒரு முறையும், மாதம் ஒரு முறையும் மதிப்பிடுங்கள்.

10. செயல்பாட்டில் உங்களிடம் உள்ள 3 நிலைகளையும் 3 முறைகளையும் கண்டறியுங்கள். குறைகளைக் களைந்து நிறைகள் மேம் படுத்துங்கள்.

11. புத்திசாலிகள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்பார்கள். அதிபுத்திசாலிகள், அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்பார்கள்.

12. உற்சாகமாக இருங்கள். அந்த உற்சாகம் உங்கள் மீதும் உங்கள் தயாரிப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்.

13. வாடிக்கையாளரின் மனநிலையை உணர்ந்து, அவருடைய கோணத்தில் இருந்து உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பையும் சேவையையும் அணுகுங்கள்.

14. புத்துணர்வு மிக்கவராகவும் சக்தி மிக்கவராகவும் திகழுங்கள். விரும்பியதை எட்டும் வேகத்தை உடையவராய் உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

15. சுயமரியாதை, நம்பிக்கை போன்ற வற்றைக் கொண்டிருப்பதோடு அவற்றை வெளிப்படுத்தவும் செய்யுங்கள்.

16. தள்ளிப்போடுதல், தப்பித்தல் மனோபாவம் ஆகியவற்றை முற்றாக நிராகரியுங்கள்.

17. எதைச் செய்தாலும் அதைப் பற்றிய வெகுமதி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

18. எதையும் அரைமனதோடு செய்யாதீர்கள். உங்கள் செயல்களே உங்கள் திறமைக்கு சாட்சியாகும்.

19. கொண்டிருக்கும் கொள்கைகளிலும் எடுத்திருக்கும் முடிவுகளிலும் தீர்மானமாக இருங்கள். நீங்கள் பெறுகிற நற்பெயரே நிறைந்த பலன்களைக் கொடுக்கும்.

20. எதையும், எப்போதும் சரியாகவே செய்யுங்கள்.

வெற்றிகரமான விற்பனையாளராகத் திகழ இப்படி எத்தனையோ வழிகளை சொல்லித் தருகிறார், ஷிவ்கெரா வஞம இஅச நஉகக என்கிற புத்தகத்தில் ..
ருபா & கோ வெளியீடு. விலை ரூ.195/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *