– மரபின்மைந்தன் ம.முத்தையா
ரிச்சர்ட் ப்ரான்ஸன்
ஒரு பொருளுக்கும் தயாரிப்புக்கும் உள்ள வித்தியாசம் பற்றி, தூத்துக்குடியில் நிகழ்ந்த ‘சிகரம் உங்கள் உயரம்’ கூட்டத்தில் திரு. சோம வள்ளியப்பன் நிகழ்த்திய உரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.
பொருள் டழ்ர்க்ன்ஸ்ரீற், தயாரிப்பு ஆழ்ஹய்க்ண்ய்ஞ். ஒரு தயாரிப்பை குழந்தை வளர்ப்பதுபோல் வளர்த்து, பெயரிட்டு ஆளாக்குவதற்கு பிராண்ட் பில்டிங் என்று பெயர்.
உலகம் முழுவதும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடக் கூடிய பிராண்ட் பில்டிங் நிபுணர், ரிச்சர்ட் ப்ரான்ஸன். வர்ஜின் என்ற பெயரில் பல நிறுவனங்கள் தொடங்கியவர். இசை வெளியீட்டு நிறுவனம், நைட் கிளப், தகவல் தொடர்பு நிறுவனம் என்று வளர்ந்து வர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் என்ற பெயரில் விமானப் போக்குவரத்து நிறுவனம், நிதி நிறுவனம், தனியார் ரயில்வே, குளிர் பானங்கள் என்று எல்லாத் துறைகளிலும் புகுந்து புறப்பட்டார் ரிச்சர்ட் பிரான்ஸன்.
நிறுவனங்களின் வளர்ச்சிகளை ஆராயும் நிபுணர்கள் வர்ஜின் குழு நிறுவனங்களின் தனித்தன்மைகளாக நான்கு அம்சங்களைக் கண்டறிந்துள்ளார்கள்.
– வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அடையாளம் காணுவது
– விரைந்து முன்னேறுவது
– அன்றாட நிர்வாகப் பொறுப்புகளை சிறிய குழுக்களிடம் பிரித்துத்தருவது
– கூட்டு ஒப்பந்த முறைகளில் புதிய திட்டங்களை மேற்கொள்வது.
அடிப்படையில் ரிச்சர்ட் பிரான்ஸன் மிகவும் குஷியான மனிதர். தொழில், நிர்வாகம் எல்லாமே சந்தோஷமாக நடக்க வேண்டியவை என்பது அவருடைய நம்பிக்கை. தன் அலுவலர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பியவர் அவர்.
தகுந்தவர்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்து, கேள்விகள் கேட்டுவிட்டு அவர்களை வேலைக்கு நியமிக்கும்போது ரிச்சர்ட் பிரான்ஸன் சொல்லும் மந்திர வாசகம்….. “வாருங்கள்! விளையாடலாம்!!”
சாதனைகளை விளையாட்டாகவும் விளையாட்டுகளே சாதனைகள் எனவும் கருதிய காரணத்தால், பிரான்ஸன், சில நேரங்களில் வகை தொகை தெரியாமல் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கியதும் உண்டு. விடுமுறையில் வெளியூர் போயிருந்த தன் மேலாளர் ஒருவரை, அவர் ஊர் திரும்பும் முதல்நாள் வரவேற்க ரிச்சர்ட் பிரான்ஸன் படுபயங்கரமாய் ஒரு திட்டம் போட்டார்.
அவருடைய வீட்டிற்குள் புகுந்து மொத்தமாக எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிடுவது என்பதுதான் அந்தத் திட்டம். ஆனால் அந்த மேலாளர் தன் பயணத்தின்போது, வீட்டுப்பாதுகாப்புக்காக உள்ளூர் காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்து விட்டுப் போயிருந்தது, பிரான்ஸனுக்குத் தெரியாது.
விளைவு, வீட்டுக்குள் பிரான்ஸன் புகுந்தபோது அபாயமணி ஒலித்து காவலர்கள் வந்தனர். பிரான்ஸன் கை செய்யப்பட்டார். மறுநாள் வர்ஜின் நிறுவன அலுவலர்களும் ஊழியர்களும் ஒட்டு மொத்தமாக காவல் நிலையம் சென்று அவரை மீட்டனர். பெயிலில் வெளிவந்த பிரான்ஸன், தன் ஊழியர்களின் பலத்த கரவொலியுடன் வரவேற்கப்பட்டார்.
பிரான்ஸன் காலத்திலேயே அவருக்கு இணையான தொழிலதிபராக விளங்கியவர் ஜேம்ஸ் கோல்ட் ஸ்மித். மெக்சிகோவில் உள்ள கோல்ட் ஸ்மித்தின் பண்ணை வீட்டில் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் பிரான்ஸன். கொண்டாட்டம் துவங்கியபோது கோல்ட் ஸ்மித்தை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார். விருந்து தொடங்கும் முன்பே விடைகொடுத்து அனுப்பப்பட்டார் பிரான்ஸன்.
தன் அலுவலர்களை நியமிப்பதில் அடிப்படைத் தகுதிகளாக பிரான்ஸன் கருதியது இரண்டே இரண்டுதான். அவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும். அடங்காத ஆர்வம் மிகுந்தவர்களாய் இருக்கவேண்டும்.
அலுவலர்களும் ஊழியர்களும் அவரை ‘ரிச்சர்ட்’ என்று அழைத்தார்கள். பாராட்டின் மூலம் மட்டுமே பணித்திறன் வளரும் என்பதை பிரான்ஸன் உறுதியாக நம்பினார். நம்மூரில் “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்றொரு பழமொழி உண்டு. பிள்ளைகளும் நிறுவனங்களும் பாராட்டால் மட்டுமே வளர முடியும் என்ற புதுமொழியை உருவாக்கினார் பிரான்ஸன்.
மிகச்சரியானவர்களைத் தேர்வு செய்வதும், அவர்களுக்கு வேண்டிய சுதந்திரம் தருவதுமே அவருடைய அடிப்படைச் சூத்திரம். ஒரு தயாரிப்பின் வெற்றிக்கென்று பிரான்ஸன் அடிக்கடி வலியுறுத்தும் வழிமுறைகள் சில உண்டு:
1. அது தரத்தில் தனிச்சிறப்பு மிக்கதாக இருக்க வேண்டும்.
2. புதுமையானதாக இருக்க வேண்டும்.
3. பணத்துக்கு சிறந்த மதிப்பு தருவதாக இருக்க வேண்டும்.
4. மற்ற போட்டி தயாரிப்புகளுக்கு பெரும் சவாலாய் இருக்கவேண்டும்.
5. புன்னகையை, பூரிப்பை வரவழைக்க வேண்டும்.
தனிமனிதராக இருந்தாலும் சரி, தயாரிப்பாக இருந்தாலும் சரி, 20-30 ஆண்டுகள் நல்ல பெயருடன் இருந்துவிட்டால் சமூகத்துக்கே உங்கள் மீது சகோதரபாசம் ஏற்படும் என்கிறார் அவர்.
புதுமையாக எதையும் செய்வதில் எந்த எல்லைக்கும் போவார் பிரான்ஸன். தன் புதிய விமானப் போக்குவரத்தின் துவக்க விழாவிற்கு ஏர்ஹோஸ்டஸ் உடையில் வந்தார் அவர். மணமகள் அலங்காரப் பொருட்களின் கடைகளை பல நகரங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியபோது மணமகள் உடையணிந்து வரவும் அவர் தயங்கவில்லை.
ஆனால் தனி வாழ்வில் மிக எளிய மனிதராக உலவுபவர் அவர். உணவு, வசிப்பிடம் எல்லாம் எளிமையோ எளிமை.
நிறுவனம் வளர்கிற போது உதவி மேலாளரையோ, உதவிப்பொறியாளரையோ அழைத்து அவர்களிடம் முழுப்பொறுப்பையும் கொடுத்துவிடுவது அவருடைய நிர்வாக முறை. எனவே இவர் குழுவில் உள்ள நிறுவனங்கள் ஒன்றையொன்று சாராமல் தன்னிச்சையாய் இயங்குகின்றன.
தன்னுடைய விமானங்களில் பறக்கிற போதெல்லாம் எகானமி வகுப்பில் மட்டுமே பயணம் செய்வார் அவர். இதன் அடிப்படை நோக்கம் பயணிகளிடம் பேசுவது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் போகும்போது, “அருகே அமரலாமா” என்ற பணிவான வேண்டுகோளுடன் வருவார். நீங்கள் அவரை அடையாளம் கண்டாலும் காணாவிட்டாலும், அனுமதி கிடைத்ததுமே உங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டுக்காட்டி அவர்களுடன் சிநேகமாவார். பிறகு தன் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு, தங்கள் விமான சேவை பற்றிய உங்கள் கருத்துக்களைக் கேட்டறிவார். நன்றி சொல்லி விடை பெறுவார்.
இவ்வளவு பெரிய வெற்றிகளுக்கு நடுவிலும் உங்கள் விளையாட்டுத்தனத்தால் கோமாளித் தனங்களைத் தொடர்ந்து ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டபோது பிரான்ஸன் சொன்னார், “அப்போதுதான் என் வெற்றிகள் என்னுடைய தலைக்குள் போகாது”!
நிறுவனங்களை வழிநடத்த நிர்வாக ஆலோசகர்களை அவர் அணுகியதில்லை. “என் தொழிலில் என்ன முன்னேற்றங்கள் வேண்டுமென்பதை மிகச்சரியாக உணர்ந்தவர்கள் என் வாடிக்கையாளர்கள்தான். எனவே அவர்களையே ஆலோசனை கேட்கிறேன்” என்றார் பிரான்ஸன்.
“பாடம் கற்கத் தயாராய் இருப்பவர்கள் ஏகப்பட்ட தவறுகள் செய்யலாம்” என்பதும், “வேகமாக செயல்பட வேண்டி வரும்போது துப்பாக்கியின் தோட்டாவுடன் போட்டா போட்டி போட்டுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதும் அவர் தன் ஊழியர்களுக்கு உணர்த்திய பாடங்கள்.
Leave a Reply