ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’

ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’ நிகழ்வில்
பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றிய
உரையிலிருந்து…

வல்லமை தாரோயா

” வல்லமை தாராயோ” என்கிற வார்த்தை மகாகவி சக்தியிடத்தில் இறைவேட்கையாக வைத்த வார்த்தை. இந்த பயிற்சிக்களத்தில் இந்த இயக்கத்தில் இந்த வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரைப் பார்த்து இந்த வார்த்தை இருக்கிறது.

பன்னெடும் காலமாக பயிற்சி பெற்றவர்கள் நீங்கள். பல எழுச்சி உரைகளை எழுச்சிக் கூட்டங்களக் கேட்டவர்கள் நீங்கள். இந்த “வல்லமை தாராயோ” என்கின்ற இந்த சொல் இறைவனிடத்தில் நீங்கள் வைக்கக் கூடிய இறைவேட்கையாகத்தான் இன்னும் இருக்கிறது. என்னைக்கேட்டால், இன்றைக்கு என் சிந்தைக்குப் புரிந்த விஷயமாக இந்த வார்த்தைக்குப் பொருளை நான் தருகிறேன். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய விழிப்புணர்வின் உச்சத்திற்கு என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்ளக்கூடிய வார்த்தையாகத் தான் இந்த வார்த்தையை நான் கருதி என் பேச்சைத் தொடங்குகிறேன்.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கக்கூடிய வல்லமையை தேடிக் கண்டு பிடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் போதுதான் அவன் பிறந்ததற்குப் பொருள் கிடைத்து போகிறது. உலகத்தில் இரண்டு நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் ஒன்று நம் பிறந்த நாள். அதில் நம்முடைய பங்களிப்பு எதுவும் கிடையாது. இன்னொரு நாள் இருக்கிறது நாம் பிறந்தோம் என்று இந்த உலகத்திற்கு அறிவிக்கக்கூடிய நாள். அந்நாள் நம் கையில் அகப்பட வேண்டுமானால் நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய மந்திரச்சொல்லாக அது மாறவேண்டும். பாரதியின் ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாடு உண்டு.

வையகம் ஒன்றுதான். அதற்கு நான் தலைமை ஏற்றுக்கொண்டால் அந்த சொல் உங்களுக்கு இல்லையா? அப்படி சொன்னால் இந்த வையத் தலைமை கொள் என்கிற சொல்லுக்கு என்ன பொருள். சில இலக்கியச் சொற்களுக்கு பொருள் அற்புதமாக இருக்கிறது. ஆனால் பொழிப்புரை தந்தவர்கள் தவறாக தந்து விடுகிறார்கள். ஒரு வார்த்தைக்கான பொருள் எப்போது நமக்கு புரிந்துபோகிறதோ வாழ்க்கைக்கான அர்த்தம் அப்போது புரிந்து போகிறது.

“வையத் தலைமை கொள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்று போலியாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு உண்மையான சிந்தனையாளனுக்குத் தரமாட்டார்கள். அப்படியென்றால் சிந்தனையாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாற மாட்டார்களா? சுகி சிவம் சொல்வார், “நான் கோடீஸ்வரன்தான், எப்போது தெரியுமா”? நான் சுகி சிவம் பேசுகிறேன் என்று சொன்னால் தமிழகத்தில் ஒரு கோடி காதுகள் எப்போது திறந்துகொள்கின்றனவோ அப்போது நான் கோடீஸ்வரன் ஆகிறேன்.” இப்போது எனக்கு “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகின்றது. நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நீங்கள் அந்தத் துறையில் வல்லமை பெற்றீர்களென்றால் “வையத் தலைமை” கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அந்தத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அந்த உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு. அதுதான் வல்லமை. அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு வார்த்தையை விதைக்கிறேன். நண்பர்களே! அந்த வார்த்தையை உங்கள் மன அறையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மந்திரமாக சொல்லிக் கொடுங்கள். “வியப்பது வீழ்ச்சி” யாரைப் பார்த்தும் நீங்கள் வியக்காதீர்கள்.

ஒருவரை பார்த்து வியந்து கொண்டிருந்தால் நீங்கள் உயர மாட்டீர்கள். நீங்கள் பார்த்து வியப்பவர்கள்தான் உயர்ந்துகொண்டு இருப்பார்கள். உங்கள் தனித்திறமையிலே உங்களுடைய ஆழங்கால்பட்டு உள்ளே இருக்கக்கூடிய அந்த திறனிலே முழுமையான ஈடுபாட்டை முழுமையான தியானத்தை தந்து பாருங்கள். அது உங்களை மேலே கொண்டுவந்து சேர்க்கும். சில நேரங்களில் வாழ்க்கையில் வெற்றிகளை சுவைக்க முடிவதில்லை. வாழ்க்கையில் வெற்றி மிகவும் அவசியமாகிறது. வெற்றியை சுவைத்தால்தான் மரணத்தைக்கூட எளிதாக கடக்க முடியும். வெற்றியை சுவைக்காத வர்களுக்கு மரணம்கூட கடினமாகத்தான் இருக்கும். வெற்றியை சுவைத்துப் பாருங்கள். ஆனால் ஒருபோதும் வெற்றியை மகிழ்ச்சிக் குரியதாக கொண்டாடிவிடாதீர்கள். வெற்றியை மனதிலே பொறுப்பாக கொள்வதற்கான பயிற்சியை நீங்கள் மேற்கொண்டால் நாம் அடைந்த வெற்றிகளில் சிலவற்றை நம் தலை முறைக்குத் தர முடியும். பார்வையை வித்தியாசப் படுத்த முடியும்.

பார்வையை வித்தியாசப்படுத்துவது என்பது ஒரு பயிற்சி. பறவை பறக்கிறது. சிறகை விரித்து பறவை பறக்கிறது. அது எதனுடைய அடையாளம். மகிழ்ச்சியின் அடையாளம். மனிதன் அதை எப்படி பார்த்தான். அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்கிறோம். விடுதலை, சுதந்திரம் போன்ற நல்ல ஒரு நாளாக இருந்தால் ஒரு புறாவை எடுத்து பறக்க விட்டுவிடுகிறோம். ஏன்? அது எப்படி சுதந்திரமாக பறக்கின்றதோ, அதே போல் நாம் நம் வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்க வேண்டும். இது காலம் காலமாக நமக்குத் தந்திருக்கூடிய ஒரு பார்வை. நான் ஒரு வித்தியாசமான பார்வையை வைக்கிறேன். பறவை பறக்கிறது. அது விடுதலையினுடைய அடையாளம். இது மனிதனுடைய பார்வை. ஆனால் பறவையிடம் கேட்டுப் பாருங்கள் கண்டெடுக்க வேண்டிய இரைக்கும் தன் வயிற்றில் நெருப்பாய் இருக்கக்கூடிய பசிக்கும் இடையே உள்ள தூரத்தை கடப்பதற்கு அது தன் வயிற்றிலே அடித்துக் கொள்ளும் அடித்தலுக்கு பெயர்தான் ‘பறத்தல்” என்று சொல்லும். பார்வை வித்தியாசப் பட்டால்தான் வாழ்க்கையில் சில விஷயங்கள் நமக்கு விளக்கமாகின்றன. யாரோ பார்த்த பார்வைக்கு பின்னால் போகாதீர்கள். பெரியார் சொன்னார், “நீ சிந்தித்துப் பார், உன் சிந்தனைக்குள் இருக்கின்ற சில விஷயங்கள் அதை எடுத்துப்பார்” என்று சொன்னார். அவரிடத்திலே சிலர் கேட்டார்கள். கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே. திடீரென்று உங்கள் முன்னால் கடவுள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, கையெடுத்து கும்பிடுவேன் என்றார். முன் முடிவுகளற்ற சிந்தனைதான் வாழ்க்கையை வளமாக்கும். பாத்திரம் நிரம்பி இருந்தால் அதில் எதுவும் போட முடியாது. பாத்திரத்தை காலியாக வைத்திருத்தல் என்பது ஒரு பயிற்சி. பாத்திரத்தை காலியாக வைத்திருக்கும் பயிற்சியில்தான் பல விஷயங்களை உள்ளே போட வாய்ப்பிருக்கிறது. ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் தோற்று தோற்று பின் ஜெயித்துள்ளார். அவரிடத்தில் கேட்டார்கள், இவ்வளவு தடவை தோற்றுப் போனீர்களே! எப்படி ஜெயித்தீர்கள்? அவர் சொன்னார், நான் தோற்கின்ற பொழுது என் தோல்விகளை என் மனதிற்கு நான் சொல்லவே இல்லை என்றார். அந்த பதில் நம்முடைய குறிப்பேட்டில் நாம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பதில். வாசியுங்கள். கற்றுக்கொள்ளுங்கள். கேட்பதும் வாசிப்பதும் கற்றுக்கொள்வதும்தான் வாழ்க்கை. எனக்கு எல்.ஐ.சி. நிறுவனத்தை மிகவும் பிடிக்கும். நாம் வாழ்வதற்கான ஒரு சூட்சுமத்தை நிறைய ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிறுவனம் சொல்லிக் கொடுத்துவிட்டது. தெரியாது என்பது ஒரு எதிர்மறையான விஷயம். அதைப் போலவே நாம் எப்போது சாகப்போகிறோம் என்பது தெரியாது. இங்கே தெரியாது என்பதுதான் எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதலீடு. இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ச்சியை கண்டபொழுது அதைத் தூக்கி நிறுத்தியது எல்.ஐ.சி.

வாழ்க்கையில் சில நேரங்களில் பாய்ச்சலோடு இருப்பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். பாய்ந்து சென்று பாருங்கள். சில பேர் உட்கார்ந்து வேலை செய்வார்கள். வாழ்க்கையில் சிந்தனைகளே இல்லாமல் வாழ்க்கையில் எத்தனை பேர் இருக்கிறோம். வாழ்க்கை நமக்கு வாய்ப்புகளை தரும்பொழுது அந்த வாய்ப்புகளுக்கு எழுந்து நிற்றல் என்பது முக்கியம். வார்த்தைகள் மந்திரங்கள். அந்த வார்த்தைகளை தெளிவாக பயன்படுத்தக்கூடிய மனிதர்களின் அலுவலகங்களும், வீடுகளும் மிகச் சிறந்த மனிதர்களை கொண்டிருக்கும். சிறப்பான வார்த்தைகளை பேசுதென்பது பயிற்சி. எங்களை போன்ற ஆசிரியர்களெல்லாம் பிறக்கும் போதே படித்தவர்களாகப் பிறந்தவர்களா? இல்லை. ஆனால் அவர்கள் செய்கிற பயிற்சி ஒன்றுதான் “Learning through teaching” . நீங்கள் மற்றவர்களுக்கு ஒன்றை சொல்லித்தருகிறீர்கள் என்றால் நீங்கள் அதைக் கற்கிறீர்கள். “கற்றல்” இல்லாவிட்டால் வாழ்க்கை இருட்டாகிவிடும். உங்களால் ஒரு விஷயத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாது.

அடுத்து,

“ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்கா
பேதையில் பேதையார் இல்”

ஒன்றைப் படித்து உணர்ந்து அடுத்தவர் களுக்குச் சொல்லித் தான் மட்டும் படித்தபடி நடக்காத மனிதர்கள் மூடர்கள். அதனால்தான் ஆசிரியர்கள் எதைப் படிக்கிறார்களோ, எதை மற்றவர்களுக்கு சொல்கிறார்களோ, அதே வழியில் தானும் நடப்பதால்தான் அவர்களுக்கு சிறப்புகள் அதிகம். வாழ்க்கையில் விஷயங்களை புரிந்து வைத்துக் கொள்ளுதல், பார்வைகளை மாற்றுதல் , விஷயங்களை வித்தியாசமான முறையில் அணுகுதல் என்பது மிக முக்கியம். வாணவராயர் அவர்கள் சொல்வார்கள், “இந்நாட்டில் தீமைகள் நடப்பதற்கு இரண்டே காரணம். ஒன்று படித்தவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். அடுத்து பாமரர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். இவர்கள் அலட்சியமும் அறியாமையும் மறைய வேண்டும்” என்பார். அறியாமையும் அலட்சியமும் எப்படி வல்லமை தரும். வல்லமை என்பது எது? நமக்குள் நாமே நேர்மையாகவும் சுயமரியாதையோடும் இருப்பதும்தான்.

வாழ்வில் ஜெயிப்பவர்கள் அனைவரும் புத்தியை சிறப்பாக செயல்படுத்தத் தெரிந்தவர்கள். குழந்தைகள் ஏன் எதற்கு என்ற கேள்விகளை கேட்க வேண்டும். எந்தக் குழந்தைகள் ஏன் என்று கேட்கிறார்களோ, அந்தக் குழந்தைகள் புத்திசாலியாக வளர்கிறார்கள். குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை. நாம் செய்வதை பார்த்து வளர்கிறார்கள். நம்முடைய வார்த்தைகளில் நாம் வெளிச்சத்தைக் கொண்டு வந்தால்தான் நம் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் வெளிச்சம் வரும். அந்த வெளிச்சத்தோடு வாழ்கிற போது எந்தத் துறையிலும் வெற்றிபெற்று விடலாம்.

இன்று யார் துடிப்புடனும், சுறு சுறுப்புடனும் இருப்பவர்கள் தெரியுமா? எனக்கு நேரமே இல்லை என்று சொல்பவர்கள் அல்ல. எண்ணற்ற வேலைகளுக்கும் யாரிடம் நேரம் இருக்கிறதோ அவர்கள் தான் சுறு சுறுப்பானவர்கள். வாழ்க்கை பயனுள்ளதாக மாற்ற சிறப்பான திட்டமிடுதலும் அந்த விழிப்புணர்வும் நமக்குத் தேவை. சில விளையாட்டுகளை பார்க்கிறோம். குறிப்பாக உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் ஓடுவதற்கு முன்பாக அந்த வீரன் தன் உடலை ஒரு நிதானத்திற்குக் கொண்டு வருவார். அது ஒரு வகை தியானம். அவனுடைய ஒவ்வொரு அசைவுகளும் துல்லியமாகவும் கவனக்குவிப்புடனும் இருக்கும். அதைப்போல நாமும் நம் செயலில் கவனக்குவிப்புடன் இருந்தால் நம் வெற்றியை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. எண் ஒன்றிற்கும் இரண்டிற்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறதோ, அந்த வித்தியாசம் தான் விழிப்புணர்வு.

இந்தத் தெளிவும் வல்லமையும் வேறு எங்கும் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது என்று விவேகானந்தர் சொல்கிறார்.

The Divine is within you, The power is within you.

நமக்குள் இருக்கிற அந்த சக்தியை தட்டி எழுப்பக் கூடிய ஆற்றல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. முட்டைக்குள் அடைபட்டிருக்கும் உயிர் தானாக தட்டி உடைத்து வெளியே வர வேண்டும். அதுதான் ஜனனம். வெளியே இருந்து தட்டி உடைத்தால் அது மரணம். உள்ளிருந்து வெளிவருவதற்கான அந்த வல்லமை நமக்கு வரவேண்டும்.

“இன்பம் என்பது வெளியிலிருந்து உட்செல்வது. ஆனந்தம் என்பது உள்ளிருந்து வெளிவருவது” என்று சற்குரு சொல்வார்.

உதாரணமாக, ஓவியப் போட்டி ஒன்று நடந்தது. தலைப்பு அமைதி. இரண்டு ஓவியங்கள் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. முதல் ஓவியம் மலை நீரோடை என அழகாக இருந்தது. மற்றொன்று சூறாவளிக் காற்று முற்றிலும் சிதைந்திருந்தது. அதில் ஒரு குருவி மட்டும் அதன் கூட்டில் அமைதியாக இருந்தது. இரண்டாம் ஓவியத்திற்குத்தான் முதல் பரிசு கிடைத்தது. அதற்கு கொடுத்த விளக்கம், “அமைதி என்பது வெளியில் சூழல் எப்படி இருந்தாலும் அந்தக் கூட்டில் அந்த குருவி அமைதியாக உட்கார்ந்திருத்ததே, அதுதான்”. நமக்குள் இருந்து எழுவதுதான் அமைதி. நமக்குள் இருந்து கிளம்புவதுதான் நம்பிக்கை. நமக்குள் எழுவதுதான் எழுச்சி.

வாழ்க்கையில் விசித்திரமான சில விஷயங்களை நாம் சந்திக்கும்போது அந்த விஷயத்தை நாம் எவ்வாறு உள் வாங்கிக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே நம் வெற்றி அமைகிறது. அதேபோலத்தான் நம் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரிவதில்லை. நிறைய சம்பாதிப்பவர்களும், பணக்காரர்கள் மட்டுமே மேன்மக்கள் அல்ல. எந்தக் குழந்தை தன் இருப்பின் மூலமாக இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்கிறதோ, அந்தக் குழந்தைதான் சிறந்தவர்கள் ஆகிறார்கள். அந்த விழிப்புணர்வை நம் குழந்தைகளுக்குத் தர வேண்டுமென்றால் எல்லைகள் கடந்து சிந்திக்கக் கூடிய Critical Thinking என்ற தன்மையை அவர்களிடத்தில் வளர்க்க வேண்டும். நம்முடைய விஷயங்களை மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் தன்மை நமக்கு வேண்டும். பொறாமை என்ற ஒரு விஷயம் உள்ளது. அது வல்லமை என்ற விஷயத்தை வளரவிடாது. போட்டி மனப்பான்மை என்பது தவறு கிடையாது. ஆனால் அடுத்தவர்களுடைய தோல்வியிலே மகிழ்தல்தான் தவறு.

தேர் இழுப்பதைப் பார்த்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான பேர் ஒன்றாக திரண்டு தேர் இழுப்பார்கள். உண்மையாக இழுப்பவர்கள் 10 நபர்கள்தான். மற்றவர்களெல்லாம் தேர் இழுப்பது போல் பொய்யாக நடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த பத்து பேரினுடைய வலிமைதான் நூற்றுக் கணக்கானவர்களின் வலிமையை நிரூபிக்கிறது.

நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மூன்று விஷயங்கள் வீணடிப்பது, செலவளிப்பது, முதலீடாக்குவது. இதில் எதைச் செலவளிக்கிறோம், எதை வீணாக்குகிறோம், எதை முதலீடு செய்கிறோம் என்பதில்தான் தெளிவு வேண்டும். அது பணமாகட்டும், உறவுகளாகட்டும், வாழ்க்கையாகட்டும். இந்த 3 நிலைகளில்தான் வாழ்க்கையின் வித்தியாசங்கள் நம் கைக்கு வந்து சேர்கின்றன.

நம்முடைய வாழ்க்கைக்காக போராடுகிற பொழுது நம்முடைய தோல்விகளைக் கண்டு நாம் துவண்டுவிடக்கூடாது. தோல்வியும் வெற்றியும் பிரயாணங்கள் மட்டுமே. அது இலக்கு அல்ல. நமக்குள் இருக்கும் சக்தியை தட்டி எழுப்பி உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு. கடவுள் எல்லோரையும் மிகச் சிறப்பாகத்தான் படைத்திருக்கிறார்.

சிலநேரங்களில் செலவழிப்பது தவிர்க்க முடியாது. வீணடிப்பதை தவிர்க்கலாம், முதலீட்டை தவிர்த்துக் கொள்ளக்கூடாது. பல நேரங்களில் தவிர்க்கிறோம். முடிவெடுக்கின்ற திறன் யாருக்கு சரியாக இருக்கிறதோ, அவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். ஒன்று சரி, தவறு என்று தெளிவாக முடிவெடுக்க வேண்டும். நம்மில் பல பேருக்கு என்ன வேண்டாம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் என்ன வேண்டும் என்பது தெரியவே தெரியாது. முடிவெடுக்கும் திறன் என்பது ஒரு மனிதனின் வல்லமையை மையமாய் வைத்து வெளிவரும் ஒரு வெளிப்பாடு. சிறுவயது முதலே நமது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றியாளர்கள் பலபேர் தங்கள் இலக்கை சரியாக தீர்மானித்தவர்கள் தான். ஒரே வேலையை நீங்கள் செய்கின்ற பொழுது அந்த வேலை உங்களுக்கு நிச்சயம் ஏற்றத்தைத் தரும்.

இதெல்லாம் வாழ்வின் சூட்சுமம். இங்கு பேசுவதன் மூலமாக நானும் படிக்கிறேன். நீங்களும் பயன் பெறுகிறீர்கள். அடுத்த விழா என்னுடைய வெற்றிகளையும் உங்கள் அனைவரின் வெற்றிகளையும் பகிர்ந்து கொள்ளும் வெற்றி விழாவாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *