வல்லமை தாராயோ…

வல்லமை தாராயோ… நிகழ்ச்சியில் -‘சொற்சுவை நம்பி’ ஆத்தூர் சுந்தரம்

எட்டிப் பிடிக்கவே கனவுகள்

நம்பிக்கை என்கிற ஒரு தளத்தின் மீதுதான் எதுவுமே அமைய முடியும். தொடர்ந்து முயற்சி செய்யாமல் நம்பிக்கையற்றுப் போய் தற்கொலை செய்கிற அளவிற்கு வாழ்க்கையில் பல பேர் சஞ்சரிக்கிறார்கள்.

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஒருவன் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து போய், எதிலே கால் வைத்தாலும் வழுக்கி விழுந்தவனாக தொடர்ந்து வாழ்வதில் எந்த அர்த்தமுமில்லை என்ற முடிவுக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளப் போனான்.

மரத்திலே கயிற்றைப் போட்டு கழுத்திலே மாட்டுகிற போது அதைப் பார்த்து விட்டு ஒருவர் வந்தார். “தம்பி! நில்லு ஏன் தற்கொலை பண்ணிக்கப் போற” என்று கேட்கிறார். அதற்கு அந்த மனிதன் அழுகிறான். தன் வேதனைகளை யெல்லாம் வெளிப்படுத்துகிறான். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு கேட்கிறார். “தம்பி நான் இதைக் கேக்கிறேன்னு தவறா நினைச்சுக்காதே! தற்கொலை பண்ணனும்னு முடிவெடுத்தே! சரி. ஏன் தூக்கு போடறத தேர்ந்தெடுத்த? அதுக்கு ஏதாவது பிரத்யேக காரணம் இருக்கா? அதற்கு அவன் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. தூக்கு போட்டுக்கலாம்ணு தோணுச்சு. அவ்வளவுதான். சரி. வேற வழிகள் இருக்கா தற்கொலை பண்ணிக்கறதுக்கு? அந்த இளைஞன் வரிசையாக முப்பது வழிகளை சொன்னான். பெரியவர் கேட்டார். சாவதற்கே இந்த வழிகள் இருக்கும் போது வாழ்வதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறதா? சிந்திக்க வேண்டாமா? அவனுடைய சிந்தனை மீண்டும் தூண்டப்படுகிறது. மறு சிந்தனை அவனது மண்டைக்குள் நுழைகிறது. அவன் தற்கொலையிலிருந்து தப்பித்துக் கொண்டான் என்கிறது செய்தி.

வாழ்வதற்குக்கென்று வாழ்க்கை நம் முன்னால் விரித்து வைத்திருக்கின்ற ஏராளமான அந்த வாய்ப்புகளை வசப்படுத்திக் கொண்டவர் களெல்லாம் சாதனையாளராக மாறுகிறார்கள். தன் கண்முன்னே தன் கைகெட்டும் தூரத்திலேயே இருக்கிற வாய்ப்புகளை கண்டுகொள்ளாமல் எத்தனையோ பேர் வாழ்க்கையிலே தோற்றுப் போகிறார்கள். இதுதான் அடிப்படை.

மனிதன்தான் மதிப்பிற்குரியவன். பெர்னாட்ஷா அவர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது கதவை பூட்டி வைத்துக் கொள்வார். மறுநாள் காலையில் வெளியே வருகிறபோது அகல திறந்து வைத்துக் கொண்டு வெளியே போய் விடுவார். கதவைப் பூட்ட மாட்டார். அவரை ஒருவர் கேட்டார். யாராவது திருடர்கள் நுழைய மாட்டார்களா? இந்த வீட்டிலேயே மதிப்பிற்குரியது நான் ஒருவன் மட்டும்தான். நானே வெளியே சென்றபின் திருடன் வந்து எதை தூக்கப் போகிறான் என்று பெர்னாட்ஷா பதிலளித்தார். மனிதனை விட மதிப்பிற்குரியவராக எதுவும் இந்த மண்ணில் இருந்தது கிடையாது.

நம்மை விட எத்தனையோ பலம் பொருந்திய உயிரினங்கள் நமக்கு முன்னும் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்கு முன்னாலேயே படைக்கப்பட்டும்கூட தோன்றல் வரிசையில் பின்னால் வந்த மனிதன் பலம் பொருந்திய உயிரினங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு தனக்கு கீழே அடிமையாக ஆக்கிவிட்டு இவன் மட்டும் மேலே வந்திருக்கிறான் என்று சொன்னால் மனிதன் என்பவன் மதிப்பிற்குரிய படைப்பு. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ பிறந்தோம். எதோ தாய் தந்தையால் படைக்கப்பட்டோம். ஏதோ இருக்கிறோம். நாம் போவோம் என்றில்லாமல் முதலில் நம்முடைய பிறப்பின் மீது நாம் வாழ்ந்து வருகிற வாழ்க்கையின் மீது இந்த மனிதம் என்கின்ற மகத்துவம் மிக்க படைப்பின் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தோம் என்றால் நாம் ஏதோ செய்யப் போகிறோம். எதையோ இலக்காக வைத்து செய்யப் போவதற்குத்தான் இயற்கை நம்மை இங்கே படைத்திருக்கிறது என்கிற நம்பிக்கை முளைவிட ஆரம்பிக்கும்.

முதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டும். ஒருவனை ஒரு கேள்வி கேட்டார்கள். வாழ்ந்து முடித்த மனிதனோடு சேர்த்துப் புதைக்கப்படுபவை எவை? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நெற்றியிலே வைத்திருக்கிற ஒற்றை ரூபாயைக் கூட வெட்டியான் எடுத்துவிட்டுதான் புதைக்கிறான். ஒரு வேட்டி அல்லது உறவுமுறைக்காரர்கள் போர்த்திய ஒரு கோடி இதைத்தவிர இடுப்பில் கட்டியிருக்கிற கயிற்றைக் கூட அறுத்துவிட்டு தான் புதைக்கிறோம். நிறைய பேர் இந்தக் கேள்விக்கு விடைகளைச் சொன்னார்கள். அது சரியான விடை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. பரிசுக்குரியதாக அந்த விடை அங்கீகரிக்கப் பட்டது. கொஞ்சம் முயற்சித்திருந்தால் முடிந்திருக்கக் கூடிய அவனுடைய முடியாத கனவுகள் மட்டுமே அந்த மனிதனோடு சேர்த்து புதைக்கப்படுகிறது. நிரம்ப இல்லை. கொஞ்சம் முயன்றிருந்தால் கூட சிலவற்றை அடைந்திருக்க முடியும். சில எல்லைகளைத் தொட்டிருக்க முடியும். உச்சி சிகரத்திற்கு அவனால் ஊர்ந்து சென்றிருக்க முடியாவிட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சில சாதனைகளை செய்திருக்க முடியும்.

ஒவ்வொருவருக்கும் என்னென்ன கனவு. கனவுகள் நிறைவேறிய மனிதர்கள் அந்தக் கனவுகளை எப்படி எட்டிப்பிடித்தார்கள். நாம் ஏன் பின்னால் இருக்கிறோம். ஒன்றுமில்லை. சின்ன விஷயம்தான். கனவு என்கின்ற ஒன்றை இலக்காக நிர்ணயம் செய்து இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான சில படிநிலைகள் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ஏதோவொரு வெற்று முயற்சியை நானும் விடாமல் முயன்று பார்த்தேன் என்று ஒரு வசனம் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரையும் சந்திக்கும்போது நானும் தலைகீழாக நின்று பார்த்தேன். எப்படியாவது அந்த மனையை வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தேன். எப்படியாவது ஒரு தொழிற் சாலையை அமைத்து விட வேண்டுமென்று பார்த்தேன். முடியவில்லை. சொந்த வீடு கட்ட வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை.

கனவுகள் தோற்றுப் போகிற மனிதன்தான் வாழ்க்கையில் தோற்றவனாக கருதப்படுகிறான். கனவுகள் இல்லாத மனிதன் கிடையாது. ஆனால் இந்தக் கனவை நனவாக்குகிற விஷயத்தில் இவன்

எங்கே கோட்டை விட்டான். எல்லோருக்கும் கனவிருக்கிறது. ஆனால் போகிற போது நிறைய கனவுகளை சுமந்து கொண்டு போனவர்கள்தான் அதிகம். கனவுகளை விட்டுவிட்டு போனவர்கள் நிரம்ப குறைச்சலான பேர்கள்தான். அவன் கண்ட கனவுகள் முடியாத கனவுகளா? இல்லை. முயலாத கனவுகள். இந்த நாட்டில் சாதிக்கப்படவேண்டிய காரியங்கள் சாதிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம், முடியாததால் அல்ல. முயலாததால்.

அடிக்கடி விரக்தியின் விளிம்பிலே நின்று நாம் வெளிப்படுத்துகிற உரைகள்தான் நம்மையும் கெடுத்து கேட்பவனையும் கெடுக்கின்றன. இது தெரிந்த விஷயம்தான். ஆனாலும் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிலவற்றை அடைந்து கொண்டிருக்கிறோம். ஆபத்து என்பது எல்லாவற்றிலும்தான் இருக்கிறது. எளிதாக ஒன்றை பெற்று விடலாம் என்று உலகத்தில் எதுவும் இல்லை. எதைச் செய்ய புகுந்தாலும், எதை அடைய முயன்றாலும் சில தடைகளை தாண்டித் தான் செல்ல வேண்டும். சில ஆபத்துக்கள் வந்து தான் தீரும். ஆபத்து நிறைந்தது என்பதற்காக சிலவற்றைசெய்யாமல் இருக்கிறனா மனிதன்.

மீனவனைப் பார்த்து ஒருவர் கேட்டார். ‘கடலுக்குப் போய் மீன் பிடிக்கிறாயே, அதில் இறந்து போவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது அல்லவா?’ ‘ஆமாம்’. ‘அப்புறம் ஏன் மீன் பிடிக்கப் போகிறாய்?’ ‘அது என் தொழில்’ என்றார். ‘தொழில் சரி, அந்த ஆபத்தான வழிகளில் போய் தான் நீ சம்பாதிக்க வேண்டுமா? வேறு வழி இல்லையா? அதை ஏன் தொடர்ந்து செய்கிறாய்? சரி. உன் தாத்தா எப்படி இறந்தார்’. ‘என் தாத்தா ஒருமுறைமீன் பிடிக்க கடலுக்குப் போனபோது அலை வந்து படகை சாய்த்து விட்டதால் மூழ்கிப் போய் இறந்து விட்டார்’. ‘அப்பா எப்படி?’ ‘அப்பாவும் ஒருமுறை மீன்பிடிக்க போனபோது புயல் வீசியதால் என் அப்பா இறந்து போனார்’. பரம்பரை மறைவுகள் எல்லாமே கடலுக்குள்ளே தான் நிகழ்ந்திருக்கிறது. இத்தனை நடந்த பின்னாலும் நீ ஏன் கடலுக்கு மீன் பிடிக்கப் போகிறாய். உடனே மீனவன் ‘சரி. நான் உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் தாத்தா எப்படி இறந்து போனார்?’ ‘எங்கள் தாத்தா இப்படியொன்றும் ஆபத்தான செயலில் ஈடுபடவில்லை. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இறந்து போனார்’. ‘உங்கள் அப்பா?’ ‘அவரும் தாத்தாவைப் போலவே நோய்வாய்ப்பட்டுதான் இறந்து போனார். அவர்கள் முன்னோர்கள் அனைவருமே நோய்வாய்ப்பட்டுதான் இறந்தார்கள்’. ‘உங்கள் முன்னோர்கள் எல்லாம் படுக்கையில்தான் இறந்து போனார்கள் என்று தெரிந்தும் தினமும் நீ படுக்கையில் படுக்க போகிறாயே அது எப்படி’ என்று மீனவன் கேட்டான்.

வாழ்க்கையே இப்படித்தான். முன்னர் தென்படுகின்ற எத்தனையோ தடைகள் எத்தனையோ பேராபத்துகள் இருந்தாலும் கூட வாழ்வது என்பதற்கு நாம் ஒரு வழிமுறை வைத்திருக்கிறோம். அது பரம்பரையாகவோ புதிதாய் உருவாக்கியோ அந்த வழியில் பயணித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அந்தப் பாதையிலேயே சற்று முயன்று சற்று திட்டமிட்டு சில வழிமுறைகளை மாற்றிக் கொண்டு கொஞ்சம் முயன்றிருந்தால் நம் கனவுகள் நனவாகி போயிருக்கும். முடியவில்லை. என்ன காரணம் என்றால் அடிப்படையில் இலக்குகளைத் தீர்மானிக்கிற போது நாம் கோட்டைவிட்டு விடுகிறோம்.

எதை அடைய வேண்டுமென்று சொன்னாலும் அதற்கு அடிப்படை நம்பிக்கை. எதை அடைவதற்கும் இந்த நம்பிக்கை வந்து விடுமென்று என்னால் சொல்ல முடியவில்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் செய்து விடலாம் என்று சொல்வதில் கூட கொஞ்சம் நடுக்கம் இருக்கிறது எனக்கு. ஏனென்றால் இலக்குகளை சரியாக தீர்மானிக்கத் தெரியாத மனிதனுக்கு நம்பிக்கை குறைந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

எது விடாமுயற்சி தெரியுமா? தொடர்ந்து ஒன்றைச் செய்து கொண்டிருப்பது விடாமுயற்சி அல்ல. கலாநிதிமாறன் அவர்களை பத்திரிகையாளர் கோபிநாத் பேட்டி கண்டார். விடாமுயற்சி என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன விடை தொடர்ந்து முயன்று கொண்டிருப்பதை நான் விடாமுயற்சி என்று சொல்ல மாட்டேன். இதைப் பெற முடியாது என்று உன் சிந்தை சொல்கிறபோது அதை விட்டுவிட்டு சரியான இன்னொன்றை நோக்கி எவன் முயற்சிக்கிறானோ அதுதான் விடாமுயற்சி என்கிறார். இது அனுபவப் பூர்வமான உண்மை. இலக்கைத் தவறாக தேர்ந்தெடுத்து விட்டு நான் தொடர்ந்து முயன்றேன் முடியவில்லை என்று கையை விரிப்பது விடாமுயற்சியின் கீழ் வராது. அது விடாமுயற்சி அல்ல. தவறான முயற்சி. நம்மிடம் தரப்பட்டிருக்கிற ஆற்றல் மட்டும் வல்லமையல்ல. இந்த மாநிலம் பயன்படும்படி நான் நடக்கிறேன் அல்லவா. அதற்குப் பெயர்தான் வல்லமை. நல்ல விஷயங்களை நோக்கி நடக்கிறபோது நம்முடைய நடையிலேயே ஒரு கம்பீரம், ஒரு தெளிவு வரும். தளர்ச்சி வராது. ஏனென்றால் நான் செல்வது நல்ல பாதை. நான் அடைய விரும்புவது அடுத்தவருக்கும் பயன்தரக் கூடிய ஒரு இலக்கு என்கிற போது நம்பிக்கை தானாக பிறக்கும். நம்பிக்கை பிறப்பதற்கு நல்ல களம் எதுவென்று கேட்டால் தனக்கு மட்டும் ஒன்று பயன்படாமல் தன்னைக் கடந்து பக்கத்திலிருப்பவருக்கும், இந்த ஊருக்கு இந்த மண்ணுக்கு, இந்த உலகிற்கு என்று உங்கள் எண்ணப் பரப்பிற்கு ஏற்றவகையில் அதை பெருக்கிக் கொண்டே போகலாம்.

பயன்தர தக்க இலக்கை முதலில் தீர்மானித்து விட்டால் நம்பிக்கை தானாக பிறக்கும். அதுதான் வல்லமை. அடுத்த படி என்ன? தொடர்ந்து அதைப் பற்றிய கனவு. எண்ணிக் கொண்டே இருப்பது. அப்துல்கலாம் சொல்கிறார். இளைஞர்களே கனவு காணுங்கள் என்று. குறும்பாக ஒரு இளைஞன் எழுதுகிறான் “கனவு காணச் சொன்னீர்கள். சுகமாக தூங்குவதற்கு வழி செய்யுங்கள்” என்று. முரணாய் பார்த்தால் அது ஒரு அழகு. அப்துல்கலாம் சொல்கிறார் நான் சொன்ன கனவு தூங்கிக் காண்பதல்ல. விழித்துக் காண்பது. உன்னை தூங்க வைத்து உன்னுடைய நனவு பரப்பில் உனக்கும் தெரியாமல் தெரிகிறகாட்சிகள் அல்ல கனவு.

திட்டமிட்ட இலக்கை நோக்கி அடுத்த பயணம். அதைப் பற்றி தொடர்ந்து எண்ணுவது இடைவிடாமல் சிந்திப்பது. ஒன்றைத் தொடர்ந்து பார்க்கிற பார்க்கிற பார்வை கூர்த்த பார்வை. ஆழமாக அழுத்தி ஒன்றை மனதிற்கு சொல்லி விட்டீர்களென்றால் அது தொடர்பான விஷயம் எங்கோ ஓர் கூட்டத்திற்கு நடுவில் நடந்தால் கூட அதைப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

கூர்த்த பார்வை என்பது இலக்கை நிர்ணயித்து ஆழப்படுத்தி விட்டால் தானாய் வந்துவிடும். தேடிப் போக வேண்டியதில்லை. இருக்கிற இடத்திலேயே மிகப் பரந்த கூட்டத்திற்கு நடுவிலே கூட உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் உங்கள் கண் பார்க்கும். அதையே காதும் கேட்கும்.

கனவில்லாமல் எந்த மனிதனும் இல்லை. வாங்கப்பட்ட காரை என்னால் இயக்க முடியுமா ஏதாவது நடந்து விட்டால் நம்மை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே என்று வருகிற பதட்டத்தின் காரணமாக ஓட்டுநர் இருக்கையில் நான் அமரவில்லையென்றால் இன்றல்ல எத்தனை வருடங்கள் ஆனாலும் கார் ஓட்ட முடியாது.

துணிந்து நாம் எடுக்கிற முடிவு அந்தப் பாதையில் நாம் வைக்கிற முதல் அடி. அதுதான் முக்கியம். மனிதன் பெரிய பாறாங்கற்களால் இடறி விடுவதில்லை. பெரிய பாறையால் தடுக்கி விழுந்துவிட்டான் என்ற செய்தி உண்டா? கிடையாது. சிறு சிறு கற்கள்தான் நம்மை இடறச் செய்கின்றன. சிறுசிறு தடைகள்தான் நம்மை கவிழ்த்து விடுகின்றன. அந்த சிறு தடைகளால் வருகிற பயம்தான் பெரிய தடையை கடக்கிறவரை நாம் பயணிப்பதே கிடையாது. முதலடி எடுத்து வைக்கிற துணிவு அந்த முதல் நம்பிக்கை வந்து விட்டதென்று சொன்னால் எதையுமே சாதிக்கலாம்.

துணிந்த தொடக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த இடத்தில்தான் மனிதர்கள் தோற்றுப் போகிறார்கள். அவநம்பிக்கை அடைந்து விடுகிறார்கள். எங்கள் ஊரில் வேடிக்கையாகச் சொல்வார்கள். சுடுகாட்டை விலைக்கு வாங்கலாம்னு பார்க்கிறேன். வாங்குன பின்னால எந்தப் பயலும் சாகாம போயிட்டான்னா என்ன பண்றது என்று. யாராவது சாகாம இருப்பார்களா? சுடுகாட்டுக்கு வேலை வராத வேளையும் உலகில் வருமா?

தூக்கிய காலை முதற்படியில் வைப்பதற்கு தடையாக அச்சம் வந்துவிடும். அந்த அச்சத்தை சுற்றியிருக்கிற உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தூக்கிய காலை வைக்க முடியாமல் செய்கிற சூழ்நிலை உங்களைச் சுற்றிப் பரந்து கிடக்கிறது. இதையெல்லாம் கழித்து முதலடி வைத்தவன் அடுத்த அடி வைக்கப் போய்விடுவான். கற்பனைக்கு இருக்கிற பயம் நிஜத்திற்கு இல்லை. எத்தனையோ இரவுகள் காரோட்டி எங்கேயோ மோதி கவிழ்ந்து கிடப்பதாக கனவு கண்டிருக்கிறேன். ஆனால் நிஜத்தில் காரோட்டுகிற போது வருகிற துணிச்சல் வித்தியாசமாக இருக்கிறது.

கற்பனை தருகிற பயம் நிஜத்தில் இல்லையென்பதை ஆழமாக புரிந்து கொண்டவர்கள் பயணத்தை துவங்கி விடுவார்கள்.

நடந்து போகிற பாதையில் நீங்கள் பாதியில் தவறி விழுந்தால் கூட தவறு கிடையாது. பெரிய விலங்குக்கு வைத்த குறி தப்பிப்போனாலும் பரவாயில்லை என்கிறான் திருவள்ளுவன். சிறுசிறு விலங்குகளை நோக்கி நீ அம்பெய்ய முற்படாதே. பெரிய விலங்குக்கு குறிவை. அதிலே தோற்றுப் போனாலும் கவலையில்லை. வெற்றி பெற்ற அர்த்தம் என்கிறான்.

கற்பனை வாழ்க்கையை விட்டு நிஜ வாழ்க்கையில் துணிந்து இலக்கு சரி, தேவையானவற்றை நாம் சேகரித்துவிட்டோம். இனி அச்சமில்லை. போகிற பாதை சரியானது என்று தீர்மானித்தபின், “பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம். அதில் பயணம் நடத்திவிடு. முடிந்திடும் பாவம்” இது நாம் கேட்காத வரியில்லை. ஏன் இந்த வரி இப்போது நினைவிற்கு வருகிறது. நான் பேசுவதற்குரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறபோது அது தொடர்பான ஒரு கவிதை வரி எங்கிருந்து வந்தது. நிச்சயமாக நான் அதை குறிப்பெடுக்கவில்லை.

எங்கோ என்றைக்கோ கேட்ட சிந்தனையில் தேக்கி வைய்திருக்கிற தொடர்பான செய்திகள் எப்படி ஒரு சொற்பொழிவாளனுக்கு கை கொடுக்கிறதோ அப்படித்தான் நீங்கள் இலக்கை நோக்கி பயணிக்கிறபோது மற்ற வேண்டாததெல்லாம் அகன்று போய் எது தேவையோ அது தொடர்ந்து வந்து ஊக்கப் படுத்தும். கற்பனையை விட நிஜம் நம்பிக்கை ஊட்டுவதாக அமையும் என்பதை மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும். துணிந்த தொடக்கம் அடுத்தது தொடர்ந்த முயற்சி. நினைத்துப் பாருங்கள்.

எத்தனை வேலைகளை தொடங்கிவிட்டு பிறகு தெரியாமல் இந்த வேலையைத் தொட்டுவிட்டேன் என்று விலகியவர்கள் எத்தனை பேர். தொடங்குவதற்கு வந்த துணிச்சல் தொடர்கிறபோது வராததற்கு என்னென்ன காரணங்கள்.

தொடரும் முயற்சி எப்படி வருமென்று கேட்டால் பெரிய விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டால் மனது அதையே பூதாகரமாக கற்பனை செய்து கொண்டிருக்கும். அடையும் இலக்கின் பரிமாணத்தை மனது எண்ணி யெண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் தளர்ச்சி வரும், தடை வரும், எதிர்ப்பு வரும், எதிர்மறை சிந்தனைகள் தலையெடுக்கும். அதை உதறி எறிந்துவிட்டு போக வேண்டு மென்றால் இலக்கின் பரிமாணத்தை சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கிற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

காந்தியடிகளுக்கு பகவத்கீதையை முழுமையாக மனப்பாடம் செய்ய வேண்டும் என்கிற ஆசை. இலக்கு. அவருக்கு இருக்கிற பணிகளுக்கு இடையில் நெருக்கடிகளுக்கு இடையில் மிகப்பெரிய இலக்கை நோக்கிய பயணத்திற்கிடையிலே அதற்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. பகவத் கீதை என்கிற மிகப்பெரிய நூலையே கற்பனை செய்து கொண்டிருந்த அவரது மனது முதலில் ஒவ்வொரு ஸ்லோகமாக சிறுகச் சிறுக நேர வாய்ப்பிற்கேற்ப அதை வகை பிரித்துக் கொள்வதென்று அவர் வகுத்த திட்டம்தான் பகவத் கீதையை அவரை படிக்க வைத்தது.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் ஒரு சுவராகவே புத்தக அலமாரிகள் இருக்கும். அதைப் பார்த்த ஒரு இளம் பத்திரிகையாளர் கேட்டார். உண்மையிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று. அதற்கு கலைஞர் அவர்கள் சிரித்துக் கொண்டே கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகங்களுக்கும் இந்தப் புத்தகங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அவை அடுத்தவர் படிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவையோ நான் படித்து முடித்த பின் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன என்று பதிலளித்தார். படித்த நூல்களை அடுக்கி வைப்பவன்தான் அறிஞனாகிறான். அங்கீகரிக்கப்படுகிறான். சாதனையாளனாக உலகம் அவனை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறது.

இலக்கை நோக்கிய பயணத்தை ஒரே மூச்சில் போகிற பயணமாக முடிவு செய்யக் கூடாது. அதை சிறுசிறு பகுதியாக இன்றைக்கு இதை செய்ய வேண்டும். நாளைக்கு அதை செய்ய வேண்டும் என்று அதை உடைத்து சிறியதாக மாற்றுகிற போது மனதிலிருக்கிற அச்சம் நம்மை விட்டுப் போகும். உங்கள் முன்னால் வைக்கப் படுகிற தடைகளை நீங்கள் துணிந்து கடப்பதற்குரிய நம்பிக்கையை அது உங்களுக்குத் தரும். இன்னும் சொல்லப்போனால் அது வெற்று விமர்சனங்களையும் வேண்டாதவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளையும் இந்தப் பயணத்தின் இந்த நேரத்தில்தான் வந்து சேரும். வேண்டாத விமர்சனங்கள் வரும். இவன் இதைச் சாதித்து விடுவானா என்ற குரல் நம் காதிலே கேட்கும். விமர்சனங்களால் விழுந்து போகாத இதயத்தை வசப்படுத்திக் கொள்கிறானோ எந்த மனிதனுக்கு அது வாய்க்கிறதோ அவன் சாதனையாளனாக முடியும். விமர்சனங்கள் வராத மனிதன் கிடையாது. வந்தே தீரும். தொடர்ந்த முயற்சியில் அந்தத் தடையை தாண்டிச் செல்கிறபோது மனது தளரும். பாதையில் தடை வருகிறபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடலிலிருந்து நீரை முகர்ந்து முகர்ந்து மீண்டும் மழை பொழிவதைப்போல மீண்டும் நம்பிக்கை எனும் நீரை முகர்ந்து முகர்ந்து இதயத்தில் பாய்ச்ச வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

வருகிற தடைகள் அவை தருகிற துன்பங்கள் நமக்கு வருகிற தளர்ச்சி அவை அத்தனையும் நீங்கிப் போகும். ஏனென்றால் இலக்கும் சரியாக இருந்து அதைப் பற்றிய எண்ணமும் சரியாக இருந்து போகிற அந்தப் பாதையில் கால் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டால் எதுவும் தடையாகத் தெரியாது. உங்கள் பயணம் தொடர்ந்து நடக்கும். இலக்கை தீர்மானித்துவிடலாம். ஆனால் இலக்கை நோக்கிப் பயணிக்கிற கால அளவை மட்டும் நம்மால் தீர்மானிக்கமுடியாது. வெற்றிக்கு நாம் தீர்மானம் செய்த காலம் கொஞ்சம் நீட்டிக்கலாம். இரண்டு வருடத்தில் முடிக்கலாம் என்று நினைத்தது மூன்று வருடமாகலாம். அல்லது முயற்சியின் காரணமாக முன்கூட்டியே கூட முடிவைத் தந்துவிடலாம். எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம். காலையிலிருந்து எத்தனை பேரிடம் வளவளவென்று பேசிமுடித்து அவர்களும் சலித்து போய் நாமும் சலித்து எழுந்து விடுகிறோம். அந்த நேரம் எதற்குரிய நேரம். எத்தனை பெரிய காரியங்களை ஆற்றுவதற்குரிய நேரத்தை எப்படி தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று திரும்பிப் பார்க்கிற சிந்தனையை வளர்த்துக் கொண்டோமேயானால் சாதனைகள் தொடர்ந்து வரும்.

நம்மால் முடியும் என்று நம்மை வலியவனாக எண்ணிப் பார்க்கிற கற்பனை வருகிறபோது அது வலிமையைத் தரும். இலக்கை நோக்கிய பயணத்தில் இலக்கை பற்றி அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலக்கின் பரிமாணத்தை எளிதாக கற்பனை செய்கிற இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உந்தும் சக்தியாக உங்கள் உள்மன உரையாடல்கள் உங்களை வலிமையுடையவர்களாக ஊக்கப் படுத்துகிற அதே வேளையில் நீங்கள் சென்று சந்திப்பதாக நீங்கள் அடைய விரும்பியதாக எதை நீங்கள் தீர்மானமாக இலக்காக வைத்திருக்கி றீர்களோ அந்த இலக்கின் பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் நீங்கள் பழகிக் கொண்டால் எளிதாக முடியும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர். இதை நான் எளிதாக நினைவில் வைப்பதற்காக எட்டு எட்டா நாலு எட்டு வச்சா எவரெஸ்ட் சிகரத்தையும் அடைய முடியும் என்று ஒரு வாசகத்தைச் சொன்னேன். இதுபோன்ற மாற்றிச் சிந்திக்கிற மனோபாவத்தை தொடர்ந்து வளர்த்துக் கொண்டோமேயானால் வெற்றி நிலைக்கு நம்மால் வளர முடியும்.

– அரங்கிலிருந்து அரூபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *