மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா

பக்கத்து வீடுகளில் வசித்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு கொள்கை மட்டும் பொதுவாயிருந்தது. “பொம்மைகள் உடைப்பதற்கே” என்பதுதான் அது. பெரும் பாலான குழந்தைகள், அதே கொள்கையில்தான் இருக்கின்றன.

இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும், பேசி வைத்துக்கொண்டு., உடையவே உடையாத பொம்மையை தங்கள் குழந்தைகளுக்குப் பரிசளித்தார்கள்.

மறுநாள் காலை, இரண்டு குழந்தைகளும் சந்தித்துக் கொண்டன. முதல் குழந்தை சொன்னது, “புது பொம்மை ரொம்ப உறுதியா இருக்கு. உடைக்கவே முடியலை”. இரண்டாவது குழந்தை சொன்னது, ” உறுதியாதான் இருக்கு. இப்போ அந்த பொம்மையாலே அடிச்சு அடிச்சுதான் மத்த பொம்மைகளை எல்லாம் உடைக்கிறேன்”.

ஒரே கொள்கை. ஒரே கருவி. பயன்படுத்தும் முறைகளில்தான் பெரும் வித்தியாசம்.

எத்தனையோ சாதனையாளர்களால் மனத்தடை என்ற மலையைத்தான் நகர்த்தவே முடியவில்லை. ஒன்று முடியாது என்ற எண்ணம் விழுந்துவிட்டால் அப்புறம் அந்த மனத்தடையைக் கையாளாமல் எதையும் உங்களால் மாற்ற முடியாது.

என் அமெரிக்கப் பயணத்தில், பாஸ்டன் நகரில் மேற்கொண்ட “டக் டூர்’ என்னால் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. நகரம் முழுவதையும் சுற்றிக் காட்டும் பயணம் டக் டூர் (ஈன்ஸ்ரீந் பர்ன்ழ்). அந்த வாகனமே வாத்து போன்ற வடிவமைப்பில் இருக்கும். அந்த வாகனமும், வாத்து மாதிரியே தரையிலும் போகும். தண்ணீரிலும் போகும். அமெரிக்காவில் பல நகரங்களில் இத்தகைய சுற்றுலாக்கள் உண்டு.

அந்த சுற்றுலாவில் வழிகாட்டியும் வாகன ஓட்டுனரும் ஒருவரேதான். நான் பயணம் செய்த வாகனத்தை இயக்கியவர் ஒரு பெண். உற்சாகமும் துள்ளலும் அவருக்கு உடன்பிறந்த சகோதரிகள். “இது டக் டூர். எல்லோரும் வாத்து போல் குரல் கொடுத்தால் வண்டி புறப்படும்” என்றார். எல்லோரும் “க்வாக் க்வாக்” என்று குரல் கொடுத்ததும் வண்டியைக் கிளப்பினார். பயணத்தில், பல இடங்களில் “க்வாக் க்வாக்’ என்று குரல் கொடுக்கச் செய்தார் அவர்.

குறிப்பிட்ட இடம் வந்ததும், “இது நோ -க்வாக் ஸோன். யாரும் ‘க்வாக்’ என்று குரல் கொடுக்கக்கூடாது” என்றார். உடனே பயணிகள் சத்தமாக “க்வாக் க்வாக்” என்றதும், குரலை உயர்த்தி ஈஞசப என்றார். பயணிகள் மீண்டும் குரல் கொடுத்தும், நபஞட என்றார். நிஜமாகவே சொல்கிறாரோ என்று பயணிகள் குழம்பிய சில விநாடிகளுக்குள், மலர்ந்த சிரிப்புடன் ஈஞசப நபஞட என்றாரே பார்க்கலாம்!!

தனித்தனியாக இந்த வார்த்தைகளைப் பாருங்கள். ஈஞசப – வேண்டாம். நபஞட – நிறுத்துங்கள். இரண்டையும் சேர்க்கிறபோது, ஈஞசப நபஞட – நிறுத்த வேண்டாம்!!

மனத்தடைகள் இப்படித்தான். ஈஞசப என்று நம்மைத் தடுக்கும் தொடர்ந்து செயல் படும்போது நபஞட என்று நிறுத்தப்பார்க்கும். தடைகளைக் கண்டு தயங்காமல் தொடர்ந்து கொண்டேயிருந்தால் ஈஞசப நபஞட என்று நம் மனமே நம்மை ஊக்குவிக்கத் தொடங்கும்.

பரிணாமக் கொள்கையைக் கண்டறிந்தவர் டார்வின். இவர் அடிப்படையில் மிகவும் சோம்பேறி. இந்தக் கண்டறிதல் நோக்கிய முயற்சிகளை, இருபது ஆண்டுகள் தொடுவதும் விடுவதுமாகவே இருந்தார். அவரது ஆராய்ச்சிகள் எல்லாமே அரைகுறையாகத்தான் இருந்தன. அதே நேரம் பிலிப்பைன்ஸில் வாலஸ் ரஸ்ஸல் என்றொருவர் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு டார்வினை நன்றாகத் தெரியும். ஆனால் அவரும் இதே ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்பது தெரியாது. ஒருநாள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை அவர் ஒழுங்கு செய்துகொண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது சில பொது நண்பர்கள் ஒன்றுகூடி, இதே ஆராய்ச்சியை இருபது ஆண்டுகளாக டார்வின் செய்து கொண்டிருப்பதை அவருக்கு விளக்கினார்கள்.

முன்னமேயே இந்தக் கண்டறிதலை நோக்கிய பயணத்தை டார்வின் தொடங்கியதால், இந்த பெருமை அவருக்குத்தான் போகவேண்டும் என்பதை வாலஸ் ரஸ்ஸல் மனப்பூர்வமாக உணர்ந்தார். டார்வினுக்காக விட்டுக் கொடுத்தார். அவர் நினைத்திருந்தால் போராடி அந்தப் பெருமையைப் பெற்றிருக்க முடியும்.

டார்வினிடம் திறமை இருந்தது. ஆராய்ச்சி செய்யும் அறிவு இருந்தது. எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்கிற துரித உணர்வு மட்டும் அவரிடம் இல்லை.

இன்னோர் உதாரணம்…..

பனிக்காலத்தில் மலையில் சறுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஓர் இளைஞர் பெயர் கொடுத்திருந்தார். அது அவருக்கு முதல் அனுபவம். அந்தக் காட்சியை வீடியோவில் பதிவு செய்ய அவர் மனைவி ஆவலாகக் காத்திருந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னர் தான் வீடியோ கேமராவில் பாட்டரி தீர்ந்திருந்தது தெரிய வந்தது. அங்குமிங்கும் ஓடினார். தூரத்தில், பனிமலையைப் படமெடுத்து முடித்து ஒருவர் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரிடம் கேமராவை இரவல் கேட்டார் இந்தப் பெண். அவர் தர மறுத்தார். தன் கணவரின் முதல் பனிச்சறுக்கல் அனுபவம் பற்றி அந்தப் பெண் விளக்கியதும், அரை மனதுடன், தானே அதை பதிவு செய்வதாகச் சொன்னார் அவர். கேமராவை பெண்ணின் கையில் தர அவருக்கு அவ்வளவு தயக்கம். அவர் முகவரியை இந்தப் பெண் வாங்கிக் கொண்டார். மறுநாள் காலை தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கெண்டிருந்த அந்தப் பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் அதிர்ச்சி. “முதல் முதலாய் பனிச்சறுக்கலில் ஓர் இளைஞர்” என்ற தலைப்பில் அந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் மகிழ்ச்சி, மிரட்சி, ஆச்சரியம், அலறல், உற்சாகம், எல்லாமே அந்தக் காட்சியில் அத்தனை அழகாய்ப் பதிவாகியிருந்தது.

தான் யாரிடம் கேமரா இரவல் கேட்டோமோ அவர்தான் அந்த முன்னணி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

தன்னுடைய கேமராவில் பேட்டரி தீர்ந்து விட்டது என்பதற்காக கொஞ்சம் புலம்பி விட்டு அத்துடன் அவர் விட்டிருந்தால், அவருடைய கணவர் ஒரே நாளில் பிரபலமாகி யிருக்க முடியாது.

அடுத்த கட்டம் நோக்கி நகர முடியாது என்கிற மனப்பான்மையை உடைத் தெறிந்துவிட்டு முடிந்தவரை முயற்சி செய்வதால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஒரு முயற்சியில் நீங்கள் தீவிரமாக இயங்குகிற போது, உங்கள் தயக்கம், “நிறுத்து” என்றும் “வேண்டாம்” என்றும் தடுத்தால்….. நிறுத்த வேண்டாம்!!

Leave a Reply

Your email address will not be published.