நேசமே சுவாசம்!


– ருக்மணி பன்னீர்செல்வம்

நீங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்?

இந்தக் கேள்வி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு பட்டியலைத் தருவீர்கள்.

உங்களுக்குப் பிடித்த பலரும் அதில் இருப்பார்கள். உங்களின் நெருங்கிய உறவில் தொடங்கி, நட்பில், இசையில், கவிதையில், எழுத்தில், நடனத்தில், நடிப்பில், தலைமைப் பண்பில், குணத்தில், அறிவில், அன்பில், அழகில் என்று இன்னும் எத்தனையோ விதங்களில் அவரவர் மன விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் மகிழ்வைத் தரக் கூடியவர்கள், அவரவர் ஆற்றலால் நல்ல பலனைத் தரக்கூடியவர்கள் என உங்களின் நேசிப்புக்கு உரியவர்களாய் இருப்பார்கள்.

அவர்கள் ஏன் நம்மால் நேசிக்கப் படுகிறார்கள்?

நம்மால் செய்ய இயலாத ஒன்றை செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள். அல்லது நம்மை விடவும் சிறப்பாய் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள். குறிப்பிட்ட துறையில் மற்ற எல்லோரிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு தனித்த சிறப்பைப் பெற்றவர்களாய் இருப்பார்கள். சரி. அந்தப் பட்டியலில் முக்கியமான ஒருவர் இல்லையே. கவனித்திருக்கிறீர்களா?

யார் அப்படி விடுபட்டுப் போனவர்?

வேறு யார்? நீங்கள்தான்!

உங்களின் நேசத்திற்குரியோரின் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பார்த்திருக்கிறீர்களா?

பலரையும் நேசிக்கத் தெரிந்த நாம் நம்மை நேசிக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தால் என்ன?

மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். எதிர் பார்க்கின்றோம். ஏக்கப்படுகின்றோம். பல நேரங்களில் ஏமாற்றமடைந்து துன்பமடைகிறோம்.

நம்மை பிறர் நேசிப்பதும், நம்முடைய முயற்சிகளுக்கு, வெற்றிகளுக்கு, சாதனைகளுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவதும் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நம்மிடமிருந்து நமக்கு பாராட்டுக்கள் கிடைக்கிறதா?

நாம் நம்மை நேசிப்பது உண்மையென்றால், சரியான மதிப்பீட்டோடு நம்மை பாராட்டும் முதல் நபர் நாமாய்த்தான் இருத்தல்வேண்டும்.

நம்மை நாம் நேசித்தோமென்றால், பிறரைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தன்னை நேசிப்பவர்களால் மட்டுமே தன் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்பதை உணர்ந்து அமைத்துக்கொள்ள இயலும்.

யாரெல்லாம் தன்னைத்தானே நேசிப்பவர்கள் என்று பார்ப்போம்.

தன்னுடைய சாதாரணமான மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் எல்லாம் தம்மைத் தாமே நேசிப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

“நான் விரும்புகின்ற உணவுகளைச் சாப்பிடுகிறேன், எனக்குப் பிடித்தமான உடைகளை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிகிறேன். எனக்குப் பிடித்தமான சூழ் நிலைகளில் என்னுடைய நேரங்களைச் செலவழிக்கிறேன். என்னை நேசிப்பதால்தானே இப்படியெல்லாம் செய்யமுடிகிறது” என்று சிலர் சொல்லலாம்.

பிடித்தமான தோற்றத்தில், நிலையில் தன்னை இருத்திக் கொள்வதோ, பிடித்தமான உடையணிவதோ, பிடித்தமான உணவைச் சாப்பிடுவதோ, பிடித்தமானவர்களோடு உறவாடுவதோ மட்டுமே தன்னை நேசித்தல் ஆகிவிடாது.

கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்து, தன் புற அழகால் மட்டுமே திருப்தியுற்று தன்னையே ரசிப்பவர்கள் என்று சிலர் இருப்பார்கள். தன்னை நேசிப்பதாய் இவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள். மூப்படைந்து புறத்தோற்றம் மாற்றமடைந்து வரும்போது தன் மீதே வெறுப்படைபவர்களாக இவர்கள் மாறி விடுவார்கள்.

தன்னை நேசிப்பவர்கள்,

சுய பரிதாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.

பிறர் தன்னை விரும்பவேண்டும் என்று வெறுமனே எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

பிறரின் விமர்சனங்களைக் கேட்டு கலங்கி விடமாட்டாது தன்னுடைய பணிகளிலேயே குறிக் கோளாய் இருப்பார்கள்.

பிறர் தன்னை நேசிக்கும் வண்ணம் தன் நிலையை மேன்மையுடையதாய் ஆக்கிக் கொள்வார்கள்.

தன்னை நேசிப்பவர் தவறுகளைச் செய்ய மாட்டார்.

ஒருவர் தன்னை முழுமையாய் நேசிக்கிறார் என்றால் முதலில் அவர் தன் உடல்நலத்தின் மீதுதான் முழுக்கவனம் செலுத்துவார்.

உதாரணமாய் ஒருவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதென வைத்துக்கொள்வோம். புகைப்பது நுரையீரலை பாதித்து புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். தவறுதலாய் அந்தப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருந் தாலும் தன்மீது அக்கறை கொண்டிருப்போர், தன்னை நேசிப்போர் அதிலிருந்து விடுபட்டு விடுவர். இது புகைக்கு மட்டுமல்ல, மற்ற தீய பழக்கங்கள் எல்லாவற்றிற்குமே பொருந்தும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

இன்னொரு கேள்வியைப் பார்ப்போம்.

நமக்குத் தெரிந்தவர். ஆனால் நாம் சந்திக்கப் பயப்படும் நபர். அவர் யார்?

வேறு யார்? அதுவும் நாம்தான்.

ஆம் நண்பர்களே! நம்மைப் பற்றி பிறர் சிறப்பாய் பேசவேண்டுமென்று நாம் விரும்புகின்றோம். மற்றவர் நம்மை நல்லவிதமாய் நம் எதிரிலோ அல்லது பிறரிடமோ பேசுவதைக் கேட்கும்போது மகிழ்கின்றோம்.

பிறர் நம்முடைய குறைபாடுகளைச் சுட்டும் போது அதே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோமா என்றால் இல்லை. குறைந்த பட்சம் சாதாரணமாகவாவது அவற்றை ஏற்று சரிசெய்ய முற்படுகின் றோமா என்றால் அது சொல்பவரைப் பொறுத்தும், சொல்லப்படும் விஷயத்தைப் பொறுத்தும் அமைகிறது.

ஆனால் மற்றவர்களின் கருத்துக்களுக்கு அளிக்கின்ற மதிப்பையாவது நமக்கு நாமே அளிக்கின்றோமா, நம்முடைய மனம் சுட்டிக் காட்டுகின்ற நம்முடைய பிழைகளை, தவறுகளை செவிமடுக்கின்றோமா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலோரின் பதிலாக இருக்கிறது.

நம்முடைய இலக்கினை வரையறுத்த நாம் அதற்கான பாதையில் பயணிக்கிறோமா, தேவையான வேகத்தில் செல்கிறோமா என்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளவே மறுத்து விடுகிறோம்.

திட்டமிட்டுப் பணியாற்றத் தொடங்குகின்ற நாம், அதிலிருந்து தவறுகின்றபோது அதற்கு வெளிப்படையாய் பல காரணங்களைச் சொல்லுகின்றோமே தவிர உண்மையான காரணங்களை அலசிப்பார்ப்பதில்லை.

ஏனென்றால் பிழை நம்மிடம்தான் உள்ளதென்பதை உள்ளப்பூர்வமாய் ஒப்புக் கொள்வதற்கு நமக்கு துணிச்சல் இல்லை என்பதுதான்.

ஆய்வுக் கண்ணோட்டத்தில் நம்மை அணுக நாம் மறுக்கிறோம். அதற்குக்காரணம் நம்முடைய குறைபாடுகளை மற்றவரிடமிருந்து நாம் மறைக்கலாம். நம்மிடமே மறைக்க முடியாதே.

நம்மிடமுள்ள குறைகளை, நம் செயல்பாடு களால் உண்டாகும் பிழைகளை கண்டறியும் முதல் நபராக நாம்தான் இருக்கவேண்டும்.

எந்தளவிற்கு நமக்கு சுய பாராட்டு தேவைப் படுகின்றதோ, அதேயளவிற்கு தவறுகளைச் சுட்டிக் காட்டி சரிப்படுத்திக் கொள்கிற தன்மையும் வலிமையாய் தேவைப்படுகிறது.

வறுமையால் பள்ளிக்குக்கூட போக முடியாத நிலையில் தன் 14 வயதில் நிலக்கரிச் சுரங்கத்திற்கு வேலைக்குச் சென்றார் ஜார்ஜ் ஸ்டீபன்சன். சுரங்கத்தில் இயந்திரம் ஒன்றை இயக்குகின்ற பணியில் அமர்த்தப்பட்ட ஸ்டீபன்சன் வேலை செய்கின்ற போதே இயந்திரத்தை கழற்றிப் போட்டு அதன் பாகங்களைப் பற்றித் தெரிந்துக் கொண்டு மீண்டும் அப்படியே பொருத்திவிட்டு பணியினைப் பார்த்து வந்தார். வேலைநேரம் போக மற்ற நேரத்தில் தனியே ஒரு ஆசிரியரிடத்தில் கல்விகற்று வந்தார்.

ஜேம்ஸ்வாட் அவர்கள் நீராவியைக் கொண்டு இயந்திரத்தினை இயக்கும் முறையை கண்டறிந்தார் என்பதை அறிந்த ஸ்டீபன்சன் தாமும் அந்த விஞ்ஞானியைப்போல் ஏதாவதொன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டார்.

அதிக பாரமுள்ள பொருள்களினை வெகு தூரம் இழுத்துச் செல்வதற்குரிய வழி ஒன்றினைத் தாம் எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்த ஸ்டீபன்சன் இறுதியில் புதிய நீராவி இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். எல்லோருடைய பாராட்டையும் பெற்ற கையோடு அந்த இயந்திரத்தினை செம்மைப்படுத்தி ரயில் பாதையை அமைத்து அதன்மீது ரயில்வண்டியை தாமே ஓட்டியும் சென்றார்.

ரயில்பாதையில் வண்டி ஓடுவதைக் காண ஊரில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் கூடி விட்டனர். தானாக எப்படி வண்டி ஓடும்? ஏதோ வித்தையிருக்கும்! இதில் ஏறினால் இந்த வண்டியானது கவிழ்ந்து விடும். அல்லது வெடித்து சிதறிவிடும். இதில் கிளம்புகின்ற புகையானது உயிருக்குத் தீங்கினை விளைவித்துவிடும் என்றெல்லாம் பேசிக் கொண்டனர்.

ஸ்டீபன்சன் இவற்றையெல்லாம் காதிலே போட்டுக் கொள்ளவில்லை. அடுத்து, சிறந்த இரயில் வண்டி தயாரிப்போருக்கு 500 பவுன் பரிசு என்ற அறிவிப்பைக் கேட்டு அதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். போட்டியின்போது நிபந்தனைகளின்படி மற்றவர்கள் நீராவி இயந்திரங்களை இயக்கமுடியாத போது ஸ்டீபன்சன் மட்டுமே நிபந்தனைகளுக்கும் மேலாக தமது இரயில்வண்டியை முன்னும் பின்னுமாக பல முறைகள் ஓட்டிக் காண்பித்தார். அவரின் வண்டி அதன் பாரத்தைப் போன்று மூன்று மடங்கு பாரத்தை இழுத்தது.

“இதுவரை யாராலும் செய்ய இயலாத ஒன்றை எப்படி நீங்கள் செய்தீர்கள்?” என்று ஜார்ஜ் ஸ்டீபன்சனைப் பார்த்து கேள்வியைக் கேட்டனர். அதற்கு ஜார்ஜ் ஸ்டீபன்சன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“என்னை நான் மிகவும் நேசிக்கிறேன். என்னால் இம்மக்களுக்கு பயன்படக்கூடிய மிகப்பெரிய காரியங்களைச் செய்யமுடியும் என்று மிகத் திடமாக நம்புகிறேன். என்னுடைய ஆராய்ச்சிகளின்போது மற்றவர் வைக்கும் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. சொல்லப்போனால் அவற்றைக் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை.

நான் எனக்கே மிகவும் பயப்படுகிறேன். ஏனெனில் மற்றவர்களைக் காட்டிலும் என்னுடைய செயல்பாடுகளில் நான்தான் மிகத் தெளிவாக குறைகளைக் கண்டுபிடிக்கிறேன். இருப்பினும் என் தவறுகளை நானே உடனுக்குடன் சரிசெய்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த இயல்புகளால்தான் என்னால் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது. ஆனாலும் இது போதாது. இதில் சாதிப்பதற்கு இன்னும் நிறைய உள்ளது”.

ஸ்டீபன்சன் அன்றைக்கு விதைத்த விதை இன்று இராட்சச விழுதுகளாய் கிளைபரப்பி பாதாள இரயில் என்றும், கடலுக்கடியில் இரயில் ஓட்டமென்றும் மணிக்கு 500 கிலோ மீட்டர் ஓடக் கூடிய வண்டிகளில் உலகமெங்கும் மக்கள் மகிழ்ச்சியாய் பயணிக்கிறார்கள்.

உங்களை நேசிப்போர் பட்டியலிலும், உங்களால் நேசிக்கப்படுவோர் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கவேண்டியவர் நீங்கள்தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

தன்னை வெகுவாக நேசிப்பவர்களால்தான் சாதனைகள் படைக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!

  1. M.J. SYED ABDULRAHMAN

    “என்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.
    நான் எனக்கே மிகவும் பயப்படுகிறேன்.

    Super Well

    Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *