வல்லமை தாராயோ : இனியொரு விதிசெய்வோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நமது நம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும், வல்லமை தாராயோ தொடர் நிகழ்வு 20.07.2008 அன்று திருச்சியில் நடைபெற்றது. மனவியல் நிபுணர், மலேசிய சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் திரு. ராம். ரகுநாதன் ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து …

ஒவ்வொரு ஜீவராசியும் தங்கள் வாழ்வை தாங்களே வடிவமைத்துக் கொள்கின்றன. இது ஏக்கத்தின் விளைவாக மட்டுமே அமைகின்றது. நல்ல ஏக்கங்கள் நல்ல வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. மோசமான ஏக்கங்கள் மோசமான வீழ்ச்சிக்கு காரணமாகின்றன. ஆராய்ச்சியாளர்கள் நம்முடைய இந்த தோற்றத்தின் வடிவமைப்பாளர்கள் நாமே என்று சொல்கிறார்கள்.

நமக்குள் இருக்கிற தனித்தன்மை, திறமைகள் வெளிப்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரு சூழ்நிலை, ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் உதவி செய்யும். ஏதேனும் சங்கடமான, ஆபத்தான காலங்களில் நம்மிடம் ஏதோ ஒரு சக்தி எழுந்து நம்மை அதிலிருந்து காப்பாற்றும்.

பிரச்சனைகளோ, சோதனைகளோ வரும்போது கவலைப் படாதீர்கள். அப்போதுதான் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். சோதனைகளை வரவேற்று அணைத்துக் கொள்ளுங்கள். சோதனைகளை சற்று உற்றுக் கவனித்தால் உங்களையும் அறியாமல் ஒரு சக்தி வெளிப்பட்டு சாதனைகளாக மலரும் என்கிறார்கள் மேதைகள்.

தவழ்ந்து கொண்டிருந்த மனிதன் நிமிர ஆரம்பித்தபோது மூளை செயல்படத் தொடங்கியது. மூளையின் செயல்பாடு சிந்தனை. சிந்தனையின் வளர்ச்சியே பகுத்தறிவு. சிந்தனை தோன்றியவுடன் கேள்விகள் பிறக்கும். சிந்தனையிருந்தால்தான் கேள்விகள் வரும்.

குழந்தைகள் எழுந்து நடக்கத் தொடங்குவது பெற்றோர்களுக்கு ஒரு சோதனைக்காலம். அவை கேட்கின்ற கேள்விகள் எங்கிருந்து வருகின்றன என்ற வியப்பைத் தோற்றுவிக்கும். குழந்தைக்குள்ளிருந்துதான் அந்தக் கேள்விகள் பிறக்கின்றன. அதுதான் அதிசயம். குழந்தைகள் கேள்விகள் கேட்க விடவேண்டும். இல்லையென்றால், அவற்றின் அறிவு வளர்ச்சி தடைபட்டுவிடும். குழந்தைகள் கேள்வி கேட்க கேட்க அதற்குள் இருக்கிற அறிவுநிலை ஒவ்வொன்றையும், பகுத்து, பகுத்துப் பார்த்து அதுவே முதிர்ச்சியடைந்து பகுத்தறிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே, பகுத்தறிவு என்பது, ஒரு தொடர்முயற்சி. இதனால் நாம் மனிதன், இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்ல முடிகிறது.

உங்களை வெல்ல யாராலும் முடியாது. ஏனென்றால் உங்கள் தனித்தன்மை வேறு எவரிடத்தும் கிடையாது. உங்களிடம் தான் இருக்கின்றது. அந்த தனித்தன்மையை பிடித்துக் கொண்டிருப்பவன்தான் “வல்லமை தாராயோ” என்று கேட்க வேண்டும். காரணம், தனித்தன்மையை அறிந்தவன் தான் கேட்கக்கூடிய பொருள் என்ன என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இல்லையென்றால், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டிருப்போம்.

மனிதன் பிறரை பார்த்து அவர்களைப் போல வாழவேண்டும் என்று எண்ணி தன்னுடைய வாழ்வை வாழாமல் போகிறான். இந்த ஏக்கம் வராமலிருக்கிறதா என்றால் இல்லை. வந்துவிடுகிறது. உயிர் பிரியும் தறுவாயில் என்னுடைய வாழ்வை வாழவே இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடுகிறது. இந்த நிறைவேறாத ஏக்கம் அவனை மீண்டும் மீண்டும் பிறக்கத்தூண்டுகிறது.

எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் தன்னுடைய மூன்றாவது நான்காவது தலைமுறை தன்னுடைய பேரை நினைவு வைத்திருக்கப் போவதில்லை என்று மனிதனுக்குத் தெரியாது. அவர்கள் தன் வீடு, தன் குடும்பம் என்று வாழ்ந்தவர்கள். ஆனால், தன்னுடைய தனித்தன்மையை அறிந்து கொண்டவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தாலும் இப்போதும் நிலைத்திருக்கிறார்கள். திருவள்ளுவர், இயேசு போன்றவர்கள் அப்படிப்பட்ட தனித் தன்மையானவர்கள். மற்றவர்கள் சராசரியானவர்கள்.

ஐம்புலன்கள் மூலமாகத்தான் பூமியில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். மனிதர்களுக்கு தேவையானவை ஏற்கனவே பூமியில் படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதனுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய தேவையான அளவு சந்தர்ப்பங்களும், சாத்தியக்கூறுகளும் பூமியில் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு இருக்கின்றன. ஆனால் அவை புறக்கண்களால் காண முடியாதவைகளாக இருக்கின்றன. இவையனைத்தும் அணுக்கள் மயமாக இருக்கின்றது.

பார்க்கிற ஒவ்வொரு பொருளும் அணுக்களுடைய சேர்க்கை என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. மேல்நிலை ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. மேல்நிலையிருந்து நாம் குறைந்த சக்தி நிலைக்குக் கொண்டுவந்தால் நம்முடைய பயனீட்டுக்கு, உருவத்திற்கு வரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நீராவிக்கு உருவமில்லை. மழைநீருக்கும் உருவமில்லை. ஆனால் ஒரு குளிர்சாதனைப் பெட்டிக்குள் வைத்தால் பனிக்கட்டியாக உருவம் பெற்று விடுகிறது.

உருவமில்லாத ஒன்றுக்கு நம்முடைய அறிவு உருவம் கொடுத்தது. ஆனால், மீண்டும் உருவமில்லாத நிலைக்குத்தான் அது சென்று சேரும்.

மேகத்தை காற்று உரசினால் மழை பொழிகிறது. கற்களை உரசினால் நெருப்புப் பொறி தெறிக்கிறது. பட்டை தீட்டினால்தான் வைரம்கூட ஜொலிக்கிறது. எனவே எந்தவொரு செயலுக்கும் ஒரு தூண்டுதல் தேவை. ஓர் அசைவு தேவை.

நான் இதை அடையவேண்டும். இது எனக்கு நிச்சயம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது ஓர் அசைவாக, ஓர் அதிர்வாக நாம் கேட்கும் விஷயங்களும் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. அங்கிருந்து ஓர் ஈர்ப்பு சக்தி உருவாகி பின்னாளில் நாம் கேட்டது கேட்டதுபோல நம் கைகளில் வந்து சேர்கிறது.

ஐம்புலன்கள்தான் வெளியில் இருக்கிற மேல்நிலை ஆற்றல்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தும். ஐம்புலன்கள் தூண்டியவுடன் புறமனம்தான் செயல்படும். சிந்தனை வருகிறது. சிந்தனை பயணிக்கக்கூடிய தன்மை உடையது. இங்கிருந்து கொண்டே தாஜ்மஹாலை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் ஆக்ராவிற்கு போய்விடுவீர்கள். உலகத்திலுள்ள அனைத்து இடங்களையும், சிந்தனையால் இங்கே அமர்ந்தபடியே தொட்டுவிட்டு வரலாம்.

பயணிக்கிற சிந்தனை பிரபஞ்சத்தில் தனக்குரிய அம்சங்களில் தூண்டுதலை ஏற்பாடு செய்துதரும். உங்கள் சிந்தனை எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, அவ்வளவு வீரியமாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப அங்கிருந்து ஈர்ப்பு வரும்.

நீங்கள் எதைக் கேட்டாலும் அதற்குரிய அம்சங்கள் வந்து சேரும். ஆனால் அது நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள், எந்த இடத்திலிருந்து கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. வருவதில் எந்தப் பாகுபாடும் கிடையாது. நல்லது கேட்டால் நல்லது வரும். கெட்டதைக் கேட்டால் கெட்டது வரும். எதை விரும்புகிறோம், எதனால் கவரப்படுகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது.

வெளி மனத்தில் ஏற்படும் ஏக்கங்கள் வரும்போகும். நிலைக்காது. அவை நிலைக்க வேண்டுமென்றால், ஈடேறவேண்டுமென்றால் அது உள் மனத்திற்கு வரவேண்டும். ஏனென்றால் உள் மனத்தில்தான் அவை பதிவாகும்.

கம்ப்யூட்டரைப் போலத்தான் மனித மனம். மானிட்டர் என்பது வெளிமனம், ஹார்ட் டிஸ்க் என்பது உள்மனம். நீங்கள் நிறைய கோப்புகளை இணையதளம் வழியே மானிட்டர் மூலம் காணலாம். ஆனால், அவற்றை சேமிக்கவில்லையென்றால் அவை போய்விடும். திரும்ப பார்க்க வேண்டுமென்றால் திரும்ப இணையதள தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் பார்த்தபோதே சேமித்தால் இந்தப் பிரச்சினை வராது.

நிறைய பேர் விஷயங்களைப் பார்க்க வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவற்றை சேமிப்பதில்லை.

படித்த பாடத்தை சொல் என்று குழந்தைகளிடம் கேட்டால் ஒருமுறை புத்தகத்தைப் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் புறமனம் கொண்டு படிக்கிறார்கள். எனவே நாங்கள் மாணவர்களுக்கான பயிற்சியில் உள் மனத்திலிருந்து படிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்போம். அதன் விளைவு நன்றாகவே இருக்கிறது.

வைரங்கள் எப்படி பிரகாசிக்கின்றனவோ அதைப்போல நம்முடைய உள்மனப் பதிவுகள் இருக்கின்றன. நாம் விரும்பும் லட்சியங்களை ஏக்கங்களை உள்ளுக்குள் கொண்டு வந்து சேர்த்துவிட்டால், கூடிய விரைவில் வெற்றி பெற்றுவிடும் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய உள்மனதில் குறைந்த பட்சம், பத்துகோடி கோப்புகள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் நாம் வெளியே கையேந்திக் கொண்டிருந்தால் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். வல்லமை தாராயோ என்று வெளியே கேட்க வேண்டாம். உள்ளுக்குள் கேளுங்கள்.

நம்முடைய ஆணையை ஏற்று வேலை செய்வதற்கு உள்மனம் காத்துக் கொண்டிருக்கிறது. உள்மனம் என்பது மிகவும் விசுவாசமான வேலைக்காரன். வேலைக்காரன்கூட அதிக வேலை கொடுத்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பளம் தாருங்கள் என்று கேட்பான். ஆனால், உள்மனம் அப்படி கிடையாது. என்ன வேலை சொன்னாலும் செய்யும். உறக்கத்திலிருந்து உள்மனம் உங்களை விழிக்கச் செய்யும். உள்மனத்தில் தேவையில்லாத குப்பைகளை பதிவு செய்து கொண்டு வெளியில் “வல்லமை தாராயோ” என்று பல மனிதர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“அகம் மலர்ந்தால் முகம் மலரும்”.

உள் மனத்தில் சாதாரணமாக ஏக்கத்தைப் பதிவு செய்ய முடியாது. அப்படிக் கொண்டு வந்துவிட்டால், நீங்கள் எந்த வழிகாட்டுதலும் கொடுக்கத் தேவையில்லை. எப்படி ஒரு கவளம் சோறு தொண்டைக்குள் இறங்கியவுடன் ஜீரண மண்டலம் எப்படி தானே செயல்படுகிறதோ அதைப்போல செயல்படும்.

உள் மனதில் ஒரு விதையை நட்டுவிட்டீர்கள். நீங்கள் எந்த விதையைப் போடுகிறீர்களோ அதுவே மரமாகும். குப்பைகள் இருந்தால் குப்பைகள் வளரும்.

விதை போட்டுவிட்டால் நீங்கள் கொடுக்கிற வீரியமான உரசலுக்கு ஏற்ப ஒரு வட்டம் உருவாகும். அவ்வளவுதான். நீங்கள் அடைகிற வரைக்கும் அது ஓயாது. அடைந்தே தீரவேண்டும் – ஏனென்றால் அது வீரிய மிக்கதாகிவிடும்.

மனோதத்துவத்தில், “ஒரு விஷயத்தை இருபத்தோரு முறை நீங்கள் நம்பிவிட்டால் அது விதியாக மாறிவிடும்” என்று சொல்கிறார்கள்.

இறைவழிபாடுகூட குறிப்பிட்ட நாட்கள் செய்ய வேண்டுமென்பதன் நோக்கமே உள்ளுக்குள் பதிவாக வேண்டும் என்பதற்காகத்தான்.

எதையும் ஒரு நாள் செய்தால் பலனில்லை. அதை எப்போதும் செய்யுங்கள். எப்பொழுதும் செய்யுங்கள் என்பதற்காக 48 நாட்கள் விரதம், பிரார்த்தனை என்று செய்ய வைத்தார்கள். இத்தனை நாள் செய்தால் எண்ணம், விதை உறுதியாகிவிடும். பின்னர் உருவாகிற வட்டத்திற்கு விதி என்று நாங்கள் சொல்கிறோம். மாமரத்தில் மாம்பழம் வருமென்பது மாமரத்தின் விதி.

விதி என்பது விதிக்கப்படுவதல்ல. விதைக்கப் படுவதுதான். ஒன்று சேர்ந்த எண்ணங்களின் தொகுப்புத்தான் விதி.

நாம்தான் விதியைச் செய்கிறோம் என்று மகாகவி பாரதி துல்லியமாக தெரிந்து வைத்திருந்தான். எனவேதான், “இனியொரு விதி செய்வோம்” என்றான்.

எனவே, நம்முடைய விதிப்பயன்கள் யாவும் நம்முடைய விதைகளால் உருவாக்கப் பட்டவை. மரபணு மூலமும் சேருகின்றன. சுற்றியிருக்கிற சூழல் மூலமும் நம் விதிப்பயன்கள் உருவாக்கப்படுகின்றன.

எனவே, நம்முடைய விதியை நாமே செய்வோம், வெற்றி பெறுவோம்.

தொகுப்பு : சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *