படிக்கும் பெண்களிடம் ஜெயிக்கும் திட்டம்

– கனகலஷ்மி

ஆக்ஞா குழுவினருடன் நேர்காணல்

ஆக்ஞா பற்றி?

“ஆக்ஞா” என்பது படிக்கும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். 7 பேர் கொண்ட நிர்வாக குழுவும் மற்றும் 150க்கும் மேற்பட்ட படிக்கும் பெண்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். 6வது முதல் 9 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் “கவுன்சிலிங்” என்ற புதிய கருத்தாக்கத்தை முன் வைத்து

தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். எங்கள் நிறுவனத்தில் ஒரு குழந்தை சேர்ந்த நாள் துவங்கி அக்குழந்தையின் படிப்பு, அதன் விருப்பமான துறைகள், பிறரிடம் பழகுதல் என அனைத்திலும் அக்குழந்தையை சிறக்க செய்வது தான் எங்கள் நோக்கம். எங்களிடம் உறுப்பினராக இருக்கும் 150க்கும் மேற்பட்ட படிக்கும் பெண்கள் தான் ஓர் ஆசிரியராக, தோழியாக, வழி காட்டியாக அக்குழந்தைக்கு செயல்படுகின்றனர்.

இன்று பல டியூசன் வகுப்புகள் இயங்கி கொண்டிருக்கிற நிலையில் “ஆக்ஞா” என்பதன் தனிச்சிறப்பு என்ன?

இன்று பலரும் “ஆக்ஞா”வை டியூசன் வகுப்புகளாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் “ஆக்ஞா” ஒரு குழந்தைக்கு படிப்பை மாத்திரம் சொல்லிக் கொடுக்காமல் அவர்களுக்கு இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனைகளை கவனத்தில் கொள்கிறது. அவர்களை வருங்காலத்தின் பொறுப்புள்ள இந்திய பிரஜையாக மாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறோம். இதன் மற்றொரு தனிச்சிறப்பு எங்களிடம் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள், எங்களையும் சேர்த்து இங்கு இருக்கும் அனைவரும் 20 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள். நாங்கள் அனைவரும் மாணவர்களாக இருப்பதால் ஒரு மாணவனின் தேவையை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண்கிறோம்.

பெற்றோர்களால் எளிதாகப் பழக முடியாத குழந்தைகளிடம்கூட எங்களால் பழக முடிகிறது. அந்த குழந்தைகளையெல்லாம் எங்கள் சகோதரர் களாக பார்க்க முடிகிறது. அவர்கள் வயதை மிக சமீபத்தில் கடந்தவர்கள் என்பதால் எந்தத் தலைமுறை இடைவெளியும் இன்றி எங்கள் வழிகாட்டுதல்களை திட்டமிடுகிறோம்.

6வது முதல் 9வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகளும், மன அழுத்தங்களும் உள்ளன? அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

உதாரணமாக நான் கடந்த வாரம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை தொலை பேசியில் அழைத்தேன். முதல் நாள் என்னை அறிமுகம் மட்டுமே செய்து கொள்ள முடிந்தது. இரண்டாம் நாள் குழந்தையிடம் வீட்டில் இருப்பவர்களை பற்றி விசாரித்தேன். மூன்றாம் நாள் அக்குழந்தையின் படிப்பு விஷயமாக பேசினேன். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து பேசுவதாக சொன்னேன். ஆனால் அக் குழந்தையிடம் இரண்டு நாட்கள் கழித்து பேசாமல் நான்கு நாட்கள் கழித்து பேசினேன். அச்சிறுவன் என் பெயரை கேட்டவுடனே என்னை இரண்டு நாட்களுக்கு முன்பு அழைக்கவில்லை. உங்களிடம் சொல்வதற்கு நிறைய செய்திகள் வைத்திருந்தேன் என்று கூறினான். குழந்தைகளிடம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. இன்று வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு அதை கேட்க நேரம் இல்லை. எங்கள் “ஆக்ஞா” உறுப்பினர் ஒருவர் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை சந்திக்க அதன் இல்லத்திற்கு சென்றிருந்தார். அந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடம் மரியாதையாகவே நடந்து கொள்ளவில்லை. அப்பெண்ணிடம் மட்டு மல்ல, குடும்பத்தில் மற்ற எந்த உறுப்பினரிடமும் மரியாதையாக நடந்து கொள்வதில்லை. இதனால் பள்ளிகளில் அவனுக்கென்று நண்பர்கள் இல்லை. அதன் பாதிப்பாக படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அவனுடன் பேசவே மூன்று நாட்கள் ஆனது. எங்களுக்கு அவன் செய்கிற சின்னச்சின்ன செயல்களுக்குகூட பரிசுகள் தந்து ஊக்கப்படுத்தினோம். இப்பொழுது அனைவரிடமும் அன்பாகப் பழகுகிறான்.

நண்பர்களுடன் பழகுவது, கைகால் வீசி விளையாடுவது, பல விஷயங்களை பகிர்ந்து கொள்வது இவையெல்லாம்தான் ஒரு பத்து வயது குழந்தைக்கு முக்கியம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று அலட்சியப்படுத்துகிற பெற்றோர்கள், “இவை மட்டும்தான் அக் குழந்தையின் வயதிற்கு பிரச்சனையாகவும், அழுத்தமாகவும் மாறுகிறது” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“போன் கவுன்சிலிங்” என்ற கருத்தாக்கத்திற்கு பெற்றோர்களின் வரவேற்பு எப்படியிருந்தது?

சிறு பிள்ளைகளிடம் தொலைபேசியில் உரையாடுவது குறித்து எங்களுக்குப் பல விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளாததை எல்லாம் எங்களிடம் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு தந்தை என்னை அழைத்தார். அவர் விவாகரத்தானவராம். அவர் குழந்தை அதன் தாயுடன் இருப்பதாகவும் அக் குழந்தைக்கு கவுன்சிலிங் தேவையெனவும் தெரிவித்தார். இந்த கவுன்சிலிங் முறையில் அக் குழந்தையின் தாயிற்கு உடன்பாடு இல்லை. இருந்தும் அந்த குழந்தையுடன் பேசிப் பார்த்தோம். “உனக்கு அம்மாகூட இருக்கணுமா? இல்ல. அப்பாகூட இருக்கணுமா?” என்று கேட்டோம். அதற்கு அந்தக் குழந்தை சொன்னது, “அம்மா சொன்னாங்க. அவங்கதான் நல்லவங்கன்னு. அதனால அம்மாகூடதான் இருப்பேன்”. ஏழாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பள்ளியில் கேலி, கிண்டல் என்ற மனஅழுத்தம். இதற்கிடையில் நாங்கள் அவனோடு அவ்வப்போது பேசுவதை ஆறுதலாகவே நினைக்கிறான். அது மட்டுமில்லாமல் தலைமுறை மாறி வருகிறது. ஒரு மாணவன் பள்ளி, கல்லூரி முடிதது வெளியே வரும்போது 25 மில்லியன் போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தாண்டி உங்கள் குழந்தை வெற்றி பெற ஒரு தனித்தன்மை உடையவனாக காட்ட நாங்கள் உதவுகிறோம். மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் மிக இளைய வயதில் பணம் ஈட்டும் இளைஞர்கள் இந்தியாவில்தான் அதிகம். 25 வயது முதலே சம்பாதிக்க துவங்கி விடுகின்றனர்.

குழந்தைகள் 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கிற கால கட்டத்திலேயே தனக்கு என்ன வேண்டும் என முடிவு செய்து விடுகின்றனர். அதனை கண்டறிந்து நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

படிக்கும் பெண்களால் மட்டுமே “ஆக்ஞா” என்ற அமைப்பு நடத்தப்படுவதன் காரணம் என்ன?

இந்த கருத்தாக்கம் ஆன்மால் என்பவரால் உருவாக்கப்பட்டது. ரோட்ராக்ட் என்ற அமைப்பின் மூலம் எங்களுக்கு அறிமுகமானார். பெண்கள் மட்டுமே சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆன்மால் சொன்னபோது “ஏன் பெண்கள் மட்டும்” என்ற கேள்வியும் வந்தது. பெண்களுக்கு இயற்கையிலே பொறுமையும் பிறரை அனுசரித்து அன்பு செலுத்தும் பண்பும் அதிகம் என்பதால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெண்கள் சரியானவர்கள் என முடிவு செய்தும், “ஏன் குறிப்பாக படிக்கும் பெண்கள்” என்ற கேள்வி எழுந்தபோது 6வது முதல் 9வது வகுப்பு வரையிலான குழந்தைகளை படித்து முடித்து வேலைக்கு செல்லும் பெண்கள் பார்த்து கொள்வதற்கும் குழந்தைகளின் பெற்றோர் பார்த்து கொள்வதற்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை. அந்தத் தலைமுறை இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதற்காகவே படிக்கும் பெண்கள் என்று முடிவு செய்தோம். அதிலும் வெறும் பெண்கள் மட்டும் நடத்தும் நிறுவனம் என்கிறபோது எங்களால் முழு சுதந்திரத்தோடு இயங்க முடிகிறது. எங்கள் பெற்றோரும் எங்களுக்கு தடைகள் சொல்வதில்லை. அதிலும் சிலர் எதற்காக ஆறாவது முதல் ஒன்பதாவது படிக்கும் மாணவர்களிடம் மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். ஐந்தாம்வகுப்பு வரை இருக்கும் குழந்தைகள் விளையாட வேண்டியவர்கள். அதிலும் நாம் சொல்லும் எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகள் தான் அவர்கள் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். தான் என்னவாக வர வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு கிடைக்கிறது. எனவே குழந்தைகளின் கல்வி பயணத்தில் இது முக்கியமான காலம். அதில் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதே எங்கள் நோக்கம்.

பெரும்பாலான பெற்றோர்கள் படிப்பை மட்டுமே முக்கியம் என கருதுகிறார்கள். சில குழந்தைகளுக்கு படிப்பைக் காட்டிலும் ஆர்வமான அவர்கள் வளரத் துடிக்கிற துறைகள் பல உண்டு. அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். இன்று வேலைக்குச் செல்கிற பெற்றோர்கள்தான் அதிகம். அவர்களால் குழந்தைகளோடு நேரம் செலுத்த முடிவதில்லை. கிடைக்கும் நேரத்திலும் அவர்களைக் கற்றுக் கொள்கிற பொருளாக மட்டும் பார்க்காமல் அக் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். “ஆக்ஞா” குறித்து சில பெற்றோர்களிடம் தெரிவித்தபோது எங்கள் குழந்தைகளை எங்களைவிட உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? நான் பெற்ற குழந்தையை என்னை விட நீங்கள் சிறப்பாக பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டனர். அதற்கு எங்கள் பதில் பெற்றோர்களுக்கு சமமாக யாராலும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கென்று ஒப்பீடே கிடையாது. நாங்கள் அந்தப் பெற்றோர்களிடம் கேட்பது, நீங்கள் குழந்தைகளாக இருந்தபோது உங்கள் கஷ்டங் களையும் உங்கள் தேவைகளையும் முழுமையாக உங்கள் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறீர்களா? அல்லது நண்பர்களாக பழகுகிறவர்களோடு சொல்லி இருக்கிறீர்களா என்பதுதான். நாங்கள் அவர்களை நண்பர்களாக வழிநடத்துகிறோம். இது அவர்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதை முழுமையாக நம்புகிறோம்.

இந்த நிறுவனத்தில் இயங்கும் பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னென்ன வளர்ச்சிகள் உள்ளன?

நாங்கள் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்கிறபோது ஒரு நிறுவனத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற அனுபவம் கிடைக்கிறது. வெளியிடங்களில் பேசவும் எங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் தைரியம் வருகிறது. நாங்கள் பார்த்து பிரபலங்களோடு எல்லாம் இன்று எங்களால் சுலபமாகப் பழக முடிகிறது. வெறும் பெண்களை மட்டும் வைத்து இந்த நிறுவனம் இயங்க ஆரம்பித்தபோது பல தடைகள் வந்தன. அதையெல்லாம் சமாளித்து வெற்றி கண்ட போது இனி எந்தத் தடைகளையும் எதிர் கொள்ளும் உத்வேகம் வந்துள்ளது. இதில் எங்களுக்கு என்று பொருளாதார வழியும் இருப்பதால் இன்னும் உத்வேகத்தோடு செயல் படுகிறோம். அதோடு குழந்தைகளுக்கு பாடங்களைக் கற்றுத்தரும்போது நாங்களும் சேர்ந்து கற்றுக்கொள்கிறோம். எங்கள் கல்லூரி களிலும் நாங்கள் பழகும் சமூகத்திலும் எங்களை தனித்துவத்தோடு மதிக்கிறார்கள். எங்களை நம்பி பெரும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்கள். நாங்கள் படித்து முடித்து வெளியே வருகிற பொழுது இந்த உலகை எதிர்கொள்ளும் திடம் போட்டிகளில் தனித்து வெற்றிபெறும் தன்மை இவை அனைத்திற்கும் மேலாய் பொறுப்புணர்ச்சியும் மனநிறைவும் எங்களை மேலும் வளர்த்துகிறது. ஒரு குழந்தையை பொறுப்புணர்வோடு கவனிக்கிறபோது அவன் வளர்ச்சியைப் பார்த்து பெற்றோர் எங்களை பாராட்டுகிறார்கள். அந்த நிறைவுதான் எங்களை மேலும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது.

ஆக்ஞாவின் வருங்கால இலக்கு?

எங்களுடைய ரோல்மாடலாக நாங்கள் கருதுவது அப்துல்கலாம் அவர்களையும் அவருடைய லீட் இந்தியா 2020 என்ற திட்டத்தையும்தான். எங்கள் நோக்கம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தலை முறையை வருங்காலத்தில் பொறுப்புள்ள இந்திய பிரஜைகளாக உருவாக்குவது. அந்தக் குழந்தைகள் அவர்களின் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிச் செல்வதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பதுதான் எங்கள் இலக்கு. இன்று பல குழந்தைகள் சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்படும் சிங்கங்கள் போல் வளர்கிறார்கள். ஏன் எதற்கு என்ற கேள்வியேதும் கேட்காமல் ரிங் மாஸ்டரின் வார்த்தைக்கு கட்டுப்படுவதைப் போல ஒரு குறுகிய வட்டத்தில் வளர்கிறார்கள். இன்றைய குழந்தைகளை சில வார்த்தைகளில் இப்படிச் சொல்லலாம். “They are well trained not well educated“ இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது எங்கள் இலக்கு. தனிப்பட்ட முறையில் இந்தக் குழந்தைகளோடு சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். எங்கள் உழைப்பின் அடையாளமாய் “படிக்கும் பெண்களால் உருவாக்கப்பட்ட முதல் நிறுவனம்” என்ற சாதனையை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்ய முயன்று வருகிறோம். எங்கள் திறன்களைக் கொண்டு நிச்சயம் வெற்றி காண்போம் என உற்சாகமாய் சொல்லி முடித்தனர்.

ஆக்ஞாவின் செயற்குழுவில் இருந்து நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட செல்வி. வந்தனா (எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு, ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனம்), செல்வி. வைஷ்ணவி (எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு, IGNOU) மற்றும் செல்வி. ராஷி (பி.காம், இரண்டாம் ஆண்டு, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி) ஆகியோருக்கும் ஆக்ஞா குழுவினருக்கும் நம் பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *