– கிருஷ்ண. வரதராஜன்
வியக்க வைக்கும் பல கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், அது என்னை திகைக்க வைத்த முதல் கேள்வி.
டிவியில் ‘லைவ்’ எனப்படும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவத்தால், எதிர்பாராததை எதிர்பார்த்தே ஒவ்வொரு கேள்வியையும் எதிர்கொள்வேன். அந்த அனுபவம் சுவாரஸ்யமானது.
என்னைப் பொறுத்தவரை, பயிற்சி வகுப்பு களிலேயேகூட மிகவும் சுவாரஸ்யமான பகுதி கேள்வி-பதில் நேரம்தான். சில கேள்விகள் நாம் சொல்ல மறந்த நல்ல ஒரு பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்கும். சில கேள்விகள் இதையெல்லாம் பற்றி கூட நாம் பேச வேண்டும் என்று அடுத்த கூட்டங்களுக்கு வழிகாட்டும்.
மீட்டிங்கில் பேசும்போது, என்ன சொல்லப் போகிறேன் என்று ஓரளவுக்காவது சில திட்டங்கள் இருக்கும் என்பதால் கேள்வி பதில் பகுதிதான் எனக்கு அதிக உற்சாகத்தைத் தரும். என்ன கேட்கப்போகிறார்கள் என்பதும் தெரியாது. என்ன சொல்லப் போகிறோம் என்றும் தெரியாது.
சமீபத்தில் ஜெயா ப்ளஸ் டிவியில் நேரலை நிகழ்ச்சியில் சாதாரணமான ஒரு கேள்வியை கொஞ்சம் அதிரடியாய் ஒரு பார்வையாளர் கேட்டார்.
கிருஷ்ண.வரதராஜன் உங்கள் நிகழ்ச்சியில் நான் என் குழந்தைகளுடன் வந்து பங்கேற்றேன். முதல் ஒரு மாதம் அதையெல்லாம் கடைப் பிடித்திருப்பார்கள் . அதன் பிறகு பழையபடி எந்த மாற்றமும் இல்லை. உங்களைப் போன்றவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்பால் என்ன பயன் ?
இந்தக்கேள்வி முதன் முதலாக என்னிடம் மட்டும் எழுப்பப்பட்ட கேள்வியல்ல. இதற்கு முன்னால் எத்தனையோ பேர், எத்தனையோ பயிற்சியாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.
இதே கேள்வி உலகப் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஸிக் ஸிக்லரிடம் கேட்கப்பட்டது. ‘எல்லாம் சரிதான். ஆனால் இந்த மோட்டி வேஷனல் பயிற்சிகள் எல்லாம் மிகச்சில காலத்திற்கு மட்டும்தானே பலன் தருகிறது?’
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். ‘ஆமாம். குளிப்பதுகூட குறைந்த காலத்திற்குத்தான் பயன் தருகிறது. அதனால்தான் தினமும் குளிக்கிறோம்.’
நிறுவனங்களை நடத்துபவர்கள் பலர் இந்தக் கேள்வியை கேட்பதுண்டு. ‘சார். எங்க ஸ்டாஃப்களுக்கு டிரைனிங் கொடுக்கிறோம். அந்த பதினைஞ்சு நாளைக்கு நல்லா செயல்படறாங்க. அப்புறம் அந்த சுவடே தெரியல. ஏன் இப்படி?’
நான் கேட்பேன். ‘உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு கொடுப்பீர்கள்?’.
குறைந்த பட்சம் மூன்று முறை.
காலையில் சாப்பிட்ட உங்கள் குழந்தை மதிய நேரத்தில் பசிக்கிறது என்றால், ‘காலைல தான் சாப்பாடு கொடுத்தேன். மதியம் பசிக்குதுன்னு கேக்கிறியே. இது நியாயமா?’ என்று கேட்பீர்களா?
காலையில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி சக்தியாக மாற்றப்பட்டு, அந்த சக்தியும் செலவழிக்கப்பட்டுவிட்டது. இப்போது மறு படியும் பசிக்கிறது. என்ன செய்கிறோம். மறுபடி உணவு கொடுக்கிறோம். பயிற்சியும் இப்படித்தான்.
தன்னம்பிக்கை பயிற்சிகளை மனதின் உணவென்று சொல்லலாம். தொடர்ந்து செயல்பட தொடர்ந்து உணவு தேவை.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு பார்த்து பார்த்து உணவு கொடுக்கிறோம். அதற்காக விதவிதமாக சமைக்கிறோம். கொஞ்சம் மாறுதலுக்காகவும், கூடுதல் சுவைக்காகவும் ஹோட்டலுக்கும் அழைத்துச்செல்கிறோம். கேட்டதையெல்லாம் வாங்கித்தருகிறோம்.
பல நேரங்களில் கேட்கவில்லை என்றால் கூட வற்புறுத்தி சாப்பிட வைக்கிறோம். அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதை எல்லாம் சௌகர்யமாக மறந்து செலவு செய்து கொண்டே இருக்கிறோம்.
உடல் ஆரோக்கியத்திற்காக இவ்வளவு மெனக்கெடும் நாம் அவர்களின் மன ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறோம்? உடலை இயக்குகிற மனம் வலுப்படாமல் வெறுமனே உடலை மட்டும் வளர்த்து என்ன பயன்?
நாங்கள் மூளைக்கு உணவு கொடுக்கிறோம்.
செல்போன் எப்படி செயல்படுகிறது. அதை எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிற நாம், நம் மனம் எப்படி செயல்படுகிறது என்றோ, அதை எப்படி எழுச்சியடையச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருப்பது என்பது எவ்வளவு வேதனை.
நமக்கே தெரியாத போது நம் குழந்தைகளின் நிலையை யோசித்து பாருங்கள்.
இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். யாரையும் யாரும் சிகரத்தில் கொண்டு போய் உட்கார வைக்க முடியாது. அதற்கான வழி காட்டுதல் தரலாம். அல்லது ஏறுவதற்கு உற்சாகம் தரலாம். ஏன் சில நேரங்களில் ஒரு படி ஏற்றிகூட விடலாம். ஆனால் சிகரத்தில் அவர்களாகத்தான் ஏறவேண்டும். அதற்கு பெயர்தான் வெற்றி.
கார் வாங்கினால் போதாது. ஓட்ட பயிற்சி தேவை. எல்லோரும் எல்லாமும் தெரிந்து கொண்டிருக்க முடியாது. தேவையானவற்றை தேவையான நேரத்தில் தெரிந்து கொள்ள பயிற்சிகள் உதவுகிறது.
திருப்பதிக்கு போயிருக்கிறீர்களா? அங்கே வெங்கடாஜலபதியை தரிசிக்கின்ற இடத்தில் ஜருகண்டி, ஜருகண்டி என்ற வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். உங்களை விரைவாக சன்னதியிலிருந்து நகரச்சொல்லி தெலுங்கில் சொல்லும் வார்த்தைகள் அவை. இப்படி நகரச் சொல்லாவிட்டால் பலர் சன்னதியிலேயே தேங்கி விடுவார்கள். பயிற்சி வகுப்புகள்கூட ஜருகண்டி என்ற வார்த்தை போலத்தான். உங்களைக் கொஞ்சம் நகர்த்துகிறது.
நமது நம்பிக்கை நடத்தும் பயிற்சி வகுப்புகளும் சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் பயிற்சி வகுப்புகளும் இந்த வேலையைத்தான் செய்கிறது. யோகா பயிற்சிகளில் கலந்து கொள்வதனால் யாரும் யோகா செய்வதனால் ஏற்படும் பலன்களைப்பெறமுடியாது. யோகா வகுப்புகளில் கற்றுக் கொண்டதை தினமும் வீட்டில் செய்து பார்க்க வேண்டும். சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் கேட்கும் போதல்ல, செய்து பார்க்கும் போதுதான் சந்தேகங்கள் வரும். ஆக குறிப்பிட்ட காலம் விடாமல் வீட்டில் பயிற்சி செய்த பிறகுதான் யோகாவின் பலன்களை பெறமுடியும். அதையும் சம்பந்தப்பட்டவர்தான் உணர முடியுமே தவிர மற்றவர்கள் அல்ல.
நான் என் பயிற்சி வகுப்புகளின் முடிவில் பெற்றோர்களிடம் கோரிக்கை ஒன்றை வைப்பதுண்டு. இப்போது உங்கள் குழந்தைகளை அரங்கிலிருந்து அழைத்துப் போகிறபோது வெளியே போய் அவர்கள் முகங்களைப் பாருங்கள். சூரியனைவிட கூடுதல் பிரகாசத்தை அவர்கள் முகத்தில் பார்க்க முடியும்.
எப்போதோ ஒருமுறை, இரண்டு மணி நேரம் மட்டும் பேசி, எங்களால் அவர்களுக்கு உற்சாகத்தையும் எழுச்சியையும் தர முடியுமென்றால் வாழ்நாள் முழுக்க அவர்களுடன் இருக்கும் உங்களால் ஏன் செய்ய முடியாது.
புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் செய்வதை பெற்றோர்களாகிய நீங்களும் செய்ய முடியும். நீங்கள்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்கிற போதுதான் பெற்றோர்களாக நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்.
balatamilselvan
dear sir
i am very happy for this article.
please send your mobile number sir…
balatamilselvan
sundarapuram
kovai