தரம் தான் தரும் நிரந்தரம்

– ருக்மணி பன்னீர்செல்வம்

அதிகமான இலாபத்தை எதிர்பார்த்து தொழிலைச் செய்யலாம். ஆனால் அதற்குரியதை நாம் தருகிறோமா என்கிற சுய ஆய்வு அதி முக்கியமானது.

வணிகம் என்பது எது? ஏதோ ஒரு பொருளையோ, பல பொருட்களையோ அல்லது சேவையையோ பிறருக்கு அளித்து அதன்மூலம் வருவாயைப் பெறுவதா?

வெறும் கொடுக்கல் வாங்கல் மட்டுமே வணிகமாகிவிடுமா?

யாருடன் வணிகம் செய்கிறோமோ, யாருக்காக வணிகம் நடத்தப்படுகிறதோ, நாம் செய்யும் வணிகம் யாரையெல்லாம் சென்றடை கிறதோ அவர்கள் எல்லோரையும் உண்மையாய் நேசிப்பதுதான் வணிகமாகும்.

முகம் தெரியாதவர்களை எப்படி நேசிப்பது? வணிகத்தில் நேசித்தல் என்பது நாம் உணவு உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் விரும்பி உண்ணக்கூடியதாய், தூய்மையானதாய், தரமுள்ளதாய் இருக்க வேண்டும் என்று நாம் எப்படி விரும்புகின் றோமோ அதே போல் நம்மால் வழங்கப்படும் பொருளோ, சேவையோ மற்றவரைச் சென்றடையும் போது அதனால் அவருக்கு எவ்வித தீங்கும் நேராமல், விரும்பி பயன்படுத்தும் வண்ணமாய் தரவேண்டும் என்பதுதான் நேசித்தலோடு தருவதாகும்.

யாரை நம்பி நாம் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோமோ அவர்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மதிப்பு வாய்ந்ததாய், தரமுள்ளதாய் அவர்களுக்கு அளிப்பதுதான் உண்மையான வணிகமாகும்.

இது பொருட்களுக்கு மட்டுமல்ல. சேவைகளுக்கும் உரியதாகும்.

ஒருவரின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் நாம் அதிகமாய் அளிக்கும்போது அவர் நிறைவடைகிறார். அந்த நிறைவானது அவரைப் போல் பலரை நம்பால் நம் வணிகத்தின்பால் ஈர்த்துவருகிறது.

முதலில் நாம் அதிகமாய் செலவழிப்பது போல் தோன்றினாலும் இறுதியில் நமக்குத்தான் அதிக இலாபம் வந்து சேரும் என்பது நடைமுறை உண்மையாகும்.

இதில் இலாபம் மட்டுமல்லாது நற்பெயர், புகழ், பெருமை, தொடர் வெற்றி ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளதையும் அறிதல் வேண்டும்.

நம்முடைய தரமான பொருட்களையோ, தரமான சேவையையோ பெறுகின்ற மக்கள் நமது விளம்பரதாரர்களாய் மாறிவிடுகிறார்கள். விளம்பரத்திற்கென்று தனியே அதிக செலவு செய்யாமல் நாம் அளிக்கும் தரமே நம்முடைய வணிகத்திற்கு பெரும் விளம்பரமாய் மாறும்.

சாதாரணமாய் ஒரு தேநீர் அருந்த வேண்டுமென்றால்கூட, ஒருமுறை அருந்திய இடத்தில் நன்றாய் இல்லையெனில் அடுத்தமுறை அங்கே போவதை நாம் தவிர்த்துவிடுகிறோம். தரமான தேநீர் எங்கே கிடைக்குமோ தொலைவாக இருந்தாலும் அவ்விடத்தை நாடிச்செல்கிறோம். இதே நிலைதானே அனைத்திற்கும்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதும், ஒருமுறை நம் பொருளை அல்லது சேவையை பயன்படுத்தியவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாய் மாற்றுவதும் நாம் வழங்கும் ‘தரம்’தான் என்பதில் எப்போதும் மாறுபாடு கொள்வது கூடாது.

தரம் என்பது தலைமுறைகளை தாண்டியும் செயல்புரியக் கூடியதாகும்.

நம் நாட்டிலும் சரி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சரி, நூறாண்டுக்கு முன் பாட்டனாரால் தொடங்கப் பட்ட சில நிறுவனங்கள் பேரப்பிள்ளைகள் காலத்திலும் பல நிறுவனங்களாய் காலத்திற் கேற்றாற் போல் வளர்ச்சி பெற்று வீறுநடை போட்டு நடப்பதற்கு காரணம், முதன்முதலில் தரத்தால் அவை பெற்ற பெயரும் அதனை தொடர்ந்து கடைப்பிடித்தலும்தான் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

ஆனால் இன்றைக்கு தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும் இலாபத்தைப் பெருக்குவதில்தான் பலரின் கவனமும் இருக்கின்றது என்பதை வருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப் படும் பொருட்களாகட்டும், சேவைகளாகட்டும் வழங்குகின்ற வாக்குறுதிகளுக்கும் வழங்கப்படும் தரத்திற்கும் தொடர்பின்மையும், செயற்கைத் தனமும், ஏமாற்றும் வழிகளும் பெருவாரியாய் நிறைந்துள்ளது என்பதுதான் இன்றைய வேதனை.

பதினைந்து நாளில் சிகப்பழகு என்று சுமார் நாற்பது வருடங்களாய் விளம்பரம் வருகிறது. எத்தனை ஆண்டும் பதினைந்து நாளும் என்பதுதான் தெரியவில்லை. இருக்கின்ற நிறம் மாறாமல் இருக்கவும் பொலிவாய்த் திகழவும் இதனை பயன்படுத்துங்கள் என்று கூறினால்கூட சற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்கும்.

விளம்பரங்களுக்கு செலுத்தப்படும் அதீத கவனத்தையும், செலவழிக்கப்படும் அதீத பணத்தையும் குறைத்து அவற்றை தரத்தை மேம்படுத்துவதற்கு திசைதிருப்பினாலே மக்களின் மனதில் நிலையான இடத்தையும், வணிகத்தின் நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தலாம்.

இன்றைக்கு ஒரு மருத்துவரை அணுகுவதிலும், அவர் எழுதித் தரும் மருந்துகளை (பெரும்பாலும் அவருடைய மருத்துவமனை யிலேயே) வாங்குவதிலும் தயக்கத்தோடும் பயத்தோடும்தான் செல்லவேண்டி உள்ளது.

நம்பிக்கையின்மையும் அச்சமும் நிறைந்த சூழலிலேயே கட்டாயத்திற்காக சில பொருட்களையும் சில சேவைகளையும் வாங்க நேரிடுகிறது.

சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்னால் ‘தசாவதாரம்’ என்கிற பக்திப்படம் ஒன்று வந்தது. திருமாலின் பத்து அவதாரங்களை விளக்குகின்ற படம் அது. அப்படத்தில் ‘கல்கி’ அவதாரம் பற்றி சொல்லப்படும்போது அதற்கான சூழல் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அநீதிகள் பெருகிவிட்ட நிலையில் அனைத்தையும் அழிப்பதற்கு கல்கி அவதாரம் எடுக்கப்படுவதாகவும் முழுக்கவே ஒரு பாடலில் ஒரு பிரளயம்போல் காட்சிகளை காண்பித்தார்கள்.

அப்பாடலில் என் நினைவில் நின்றவை,
“எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
என்னும் நிலைமை வரும் – அது
பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
பெரிதும் கலந்துவிடும்” எனும் வரிகள்.

இவ்வரிகளுக்கு, பால்பவுடர் வாங்கிச் சென்று குழந்தைக்குக் கொடுத்தால் அதைக் குடித்த குழந்தை இறந்துவிடுவதுபோல் காட்சி அமைத்திருந்ததை நினைவுபடுத்திப் பார்க்கின்றேன்.

இன்றைக்கு அந்த நிலைமையில்தான் நாம் இருக்கின்றோம். இங்கே கலப்படமில்லாதது ‘தாய்ப்பால்’ ஒன்றுதான் என்பதுதானே நாம் வாழும் சூழலாகியுள்ளது.

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

நாம் செய்கின்ற தொழிலை தெய்வமாக மதித்துப் போற்றவேண்டும் என்பது மட்டுமல்ல அதன் பொருள். நம்முடைய தொழிலின் வாயிலாக யாருக்கும் எவ்வித துரோகமோ, தீங்கோ, நட்டமோ விளைவிக்கக் கூடாதென்பதும் அப்பழமொழியில் அடங்கியுள்ளது.

உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டுமென்பதும் என் தொழிலால்தான் நான் வாழ்கிறேன் என்று காட்டிக் கொண்டு அதை வைத்தே பிறரைக் கொள்ளையடித்தல் கூடாதென்பதையும் அப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் யாருக்கும் பயப்படாதவர்கள் என்றே இருந்தாலும் குறைந்த பட்சம்தான் வணங்குகின்ற தெய்வத்திற்காவது சிறிது பயப்படுவார்கள் என்றுதான் ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்று சொல்லி வைத்தார்கள்.

அதிகமான இலாபத்தை எதிர்பார்த்து தொழிலைச் செய்யலாம். ஆனால் அதற்குரியதை நாம் தருகிறோமா என்கிற சுய ஆய்வு அதி முக்கியமானது.

சிறந்ததைப் பெற சிறந்ததைத் தருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *