சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புது வாசல்
அது ஒரு மலைப்பாதை. செங்குத்தான பாதை என்பதால் மலையேறுவதற்கு கடினமானது. எல்லோரும் கஷ்டப்பட்டு அதில் நடந்து கொண்டிருந்தார்கள்.
மலையேற்றமே தடுமாற்றமாக இருந்த அந்தப் பாதையில் எல்லோரும் மிகநீண்ட பலகை ஒன்றையும் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் மட்டும் சுமையை தாங்க முடியாமல் இறைவா என் சுமையை குறைத்துக்கொள்ள அனுமதி கொடு என்று வேண்டினான். ரம்பத்தை எடுத்து பலகையில் இரண்டடியை அறுத்தெடுத்தான்.
இப்போது அந்தப்பலகையை சுமப்பது சுலபமாக இருந்தது. உற்சாகமாக நடந்தான். சிறிது தூரத்திற்குத்தான் அந்த உற்சாகம் நீடித்தது. எடை குறைந்தாலும், பலகையை தொடர்ந்து சுமந்து சென்றதால் அவனுக்கு கை, கால் எல்லாம் வலி எடுத்தது.
மீண்டும் வேண்டினான். ரம்பத்தை எடுத்து பலகையில் இரண்டடியை குறைத்தான். மீண்டும் உற்சாகமாக நடந்தான்.
திடீரென்று ஓர் இடத்தில் மிகப்பெரிய பள்ளம் குறுக்கிட்டது. பள்ளத்தாக்கு என்று சொல்கிற அளவிற்கு அதன் ஆழம் இருந்தது. பள்ளத்தை தாண்டாமல் உயரத்திற்கு போகமுடியாது.
எல்லோரும் அவர்களிடமிருந்து நீண்ட பலகையைப் போட்டு அந்தப்பள்ளத்தை தாண்டிச் சென்றார்கள். சுமையை தவிர்க்க கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டு விட்டதால் இவனால் பலகையை போட்டு தாண்ட முடியவில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தான்.
அவனுக்குப் புரிந்தது. பிரச்சனைகள் அனுபவங்களை தருகிறது. அனுபவங்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைத்தருகிறது. பிரச்சனைகளை தவிர்ப்பவர்கள், அனுபவங்களையும் தவிர்க்கிறார்கள்.
இது நமக்கும் பொருந்தும். அதனால்தான் சொல்கிறேன். பிரச்சனை தேவை.
இதற்கு அர்த்தம் வடிவேலு போல தேடிப்போய் பிரச்சனையை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும் என்பதல்ல;
பொதுவாக பிரச்சனைகள் என்பது திசைகாட்டி. நமக்கு பொருளாதார பிரச்சனைகள் இருந்தால் அது நம் வளத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய திசையில் நாம் இன்னும் வேகமாக பயணிக்க வேண்டும் என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது.
பிரச்சனைகள் நமக்கு விடப்படும் சவால்கள். சவால்கள்தான் நமக்கு செயல்படும் சக்தியை தருகிறது. எனவே பிரச்சனைகள் தேவை.
Leave a Reply