உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்!

– மரபின் மைந்தன் ம. முத்தையா

அந்தப் பையனையே வரச் சொல்லீடுங்களேன்” இப்படித்தான் எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும். எனக்கு அழைப்பு வந்தது. உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்த போது பள்ளி உதவியாளர் வந்து ”தலைமையாசிரியர் அழைக்கிறார்” என்று சொன்னதாய் எண்ணினால் அது தவறு. நான் அப்போது பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.

ஏழாம் வகுப்புவரை ஏ.எல்.ஜி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும். அதன் பின் மணி மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படிக்கும்போது, கவிதை என்று கருதி நான் எழுதிய சில வரிகளை வகுப்பில் உரக்க வாசித்து, ”நல்லா எழுதியிருக்கான், பெரிய கவிஞனா வருவான்” என்று முதல் அட்சதை போட்ட தமிழாசிரியை லலிதா ஆண்ட்டி அந்தப் பள்ளியில் ஆசிரியை களை ஆண்ட்டி என்றுதான் கூப்பிடுவோம். வீட்டுக்கு வரும் உறவினர் களையும் குடும்ப நண்பர்கள் வீட்டுப் பெண்மணிகளையும் ”அத்தை” என்றே அழைத்ததால் ஆண்ட்டி என்ற சொல் ஆசிரியைகளையே குறிக்கும் என்று வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந் தேன். அந்த வயதில், ”நந்தவனத்தி லோர் ஆண்டி” பாடலைக் கேட்டிருந்தால்கூட எங்கள் பள்ளி ஆசிரியை யாரோ ஒருவரைப் பற்றிய பாட்டு என்று கூட நினைத்திருப்பேன்.

லலிதா ஆண்ட்டி கொடுத்த உற்சாகத்தில் கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் ”கவிதைகளாக” எழுதித்தள்ளிக் கொண்டிருந்தேன். ஏதே ஓர் இதழில் பாரதி வெள்ளையர்களுக்கு பயந்துதான் புதுவைக்குப் போனார் என்றொரு விவாதம் வந்திருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது ஏழாம் வகுப்பு… இந்த விஷயத்தில் தீர்ப்புச் சொல்ல, ”பயந்து ஓடினாரா?” என்று இரண்டு வரிகள் வேகமாக வந்தன. அதன்பிறகு நீண்டநேரம் யோசித்து, ”பயக்கவில்லை – பாரதி பயக்கவில்லை” என்று தீர்ப்பை எழுதிவிட்டேன்.

”ஆடல் காணீரோ” என்ற பாடலை அப்போது எங்கேயோ கேட்டேன். அந்த வாரத்தில் எங்கள் பள்ளியில் இன்ஸ்பெக்ஷனுக்கு வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு, ”கல்விச் சாலை காணீரோ – வந்து எங்கள் கல்விச்சாலை காணீரோ” என்றொரு பாடலை எழுதி எங்களுக்கு ஆங்கிலம் எடுத்துக் கொண்டிருந்த எய்த் ஸ்டாண்டர்ட் ஆண்ட்டி (அவர் தன்னை மிஸஸ் வரதராஜன் என்று அறிமுகம் செய்து கொண்டதாய் நினைவு)வசம் ஒப்படைத்தேன். அவர் அதனை ஸ்கெட்ச்சில் எழுதச் செய்து அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருந்தார்.

இத்தனை தூரம் ஆண்ட்டிக்கள் என்னைக் கெடுத்து வைத்திருந்தார்கள்.

மணிமேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு என் இலக்கிய ஆர்வம் அவ்வப்போது வெளிப்பட்டது. பள்ளித் தாளாளர் திரு.சின்னசாமி நாயுடு மறைவுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதை என்னை பள்ளியில் பிரபலமாக்கியது.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும். பள்ளித் தாளாளருமான திரு. சின்னசாமி நாயுடு இறந்திருந்தார். நான் அவருக்கு ஓர் இரங்கல் கவிதை எழுதியிருந்தேன்.

”விடிவெள்ளி விடைபெற்றுச் சென்றதோ – இனி
வாழுங்கள் என்வழியில் என்றதோ
அடிவேரும் அடியோடு சரிந்ததோ
அரியதொரு சரித்திரமே முடிந்ததோ”

என்று தொடங்கிய அந்தக் கவிதையை என் தமிழாசிரியர் க.மீ.வெங்கடேசனிடம் காட்ட, அவர் தலைமையாசிரியரிடம் காட்ட, ஓவிய ஆசிரியர் தண்டபாணியைக் கொண்டு அந்தக் கவிதையை ஒரு கறுப்பு சார்ட்டில் வெள்ளை வண்ணத்தில் தீட்டி, கூடவே சின்னசாமி நாயுடுவின் உருவத்தையும் வரைந்து பள்ளியில் பெரிதாக மாட்டி வைத்தார்கள். அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பள்ளி அறங்காவலர், திரு.ஜி.கே. சுந்தரம், தலைமையாசிரியர் பத்மநாபன் ஆகியோர் பேசிய பிறகு நான் அந்தக் கவிதையை வாசித்தேன்.

பத்மநாபன் நல்ல கல்வியாளர். சுவாரசியமான மனிதர். சிறந்த ஆசிரியர்களுக்கு தண்டிக்கத் தெரியாது என்பது அவர் விஷயத்திலும் உண்மையானது. ஆனால் தலைமையாசிரியராக இருந்ததால் அவர் தண்டிக்க வேண்டியிருந்த நேரங்கள், அவருக்குத் தரப்பட்ட தண்டனைகளாகவே இருந்தன. நல்ல உயரம். கண்ணாடிக்குள் தெரியும் போலீஸ் கண்கள். மழிக்கப்பட்ட முகம். தலைமையாசிரியர்களின் தலையாய இலக்கணமாகிய வழுக்கை.

சரளமாகப் பேச வரும். திட்டும்போது மட்டும் தடுமாறுவார். ஒரு வாக்கியத்தைத் தொடங்கும் போதும், வாக்கியத்தை முடிக்கும் போதும் வாக்கியத்தின் நடுவிலும் தோராயமாக ஐந்தாறு பழமொழிகள் சொல்வார்.

அந்தக் கூட்டம் முடிந்து கீழே வந்ததும் எல்லோரும் பாராட்ட, 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அம்பலவாணன் மட்டும் காதருகே வந்து. ”யார் எழுதிக் கொடுத்தாங்க” என்று ரகசியமாக விசாரித்தான். செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பது போல எனக்கு புகழையும் புது வாழ்க்கைக்கான திறவுகோலையும் செத்தும் கொடுத்தார் சின்னசாமி என்பது எனக்கு அப்போது தெரியாது.

இந்த சம்பவத்தால் பத்மநாபன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான மாணவனாக ஆகியிருந்தேன். ”விளையும் பயிர் முளையில் தெரியும்” என்ற பழ மொழியை அவர் அடிக்கடி என்மேல் பிரயோகித்து வந்தார்.

பி.வி.பத்மநாபன் அவர்கள் ஓய்வு பெறுவதை ஒட்டி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில். விழா தொகுப்புரைக்கு யாரை அழைக்கலாம் என்று விழாக்குழுவினர் விவாதித்துக் கொண்டிருந்த போது தலைமையாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய வாசகம்தான், ”அந்தப் பையனையே வர சொல்லீடுங்களேன்”.

முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்தவர், சசி அட்வர்டைசிங் உரிமையாளர் திரு.சசி சுவாமிநாதன் அப்போதெல்லாம் அவரை ஊர்வசி சுவாமிநாதன் என்றால் தான் தெரியும். ஊர்வசி என்ற பெயரில் சபா ஒன்றையும் நிகழ்த்தி வந்தார் அவர். கோவையில் நாடகங்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்த சபா அதுதான்.

வழியனுப்பு விழா முடிந்ததும் என்னை அழைத்தார் திரு.சுவாமிநாதன். வீட்டுத் தொலை பேசி எண்ணை வாங்கிக் கொண்டவர், தன் முகவரி அட்டையைக் கொடுத்தார். ”நம்ம கம்பெனி பேரு சசி அட்வர்டைசிங். தமிழிலே விளம்பரங்கள் எழுதற போஸ்ட்டுக்கு வேகன்ஸி இருக்குங்க! நாளைக்கு வந்து ஐôய்ன் பண்ணிக்குங்க!” – சொல்லி விட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கியவரிடம், ”சார்! நான் காலேஜில் படிச்சுக்கிட்டிருக்கேன் சார்!” என்று குய்யோ முறையோ என கூச்சல் போட்டேன் ”தெரியுங்க! தெனம் சாயங்காலம் நாலில் இருந்து ஆறுமணி வரை வந்தா போதும்” என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார்.

நாலு டூ ஆறா? நண்பர்களுடன் செலவிடும் பொன்மாலைப் பொழுதல்லவா? அந்த நேரத்தில் போய் வேலை பார்ப்பார்களாக்கும்! அப்போ திருந்த விளையாட்டுப் புத்தியில் அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் பொறுத்து சசி அட்வர் டைசிங்கில் இருந்து தொலைபேசி அழைப்பு. சில நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு சுவாமிநாதன் பேசினார். ”என்னங்க! ஆளையே காணோம் மொதல்ல எங்கள் ஆபீசுக்கு ஒரு தடவை வாங்க! அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்”.

அன்று மாலையே சசி விளம்பர நிறுவனத்துக்குள் காலெடுத்து வைத்தேன். அந்த விநாடியே நான் விளம்பர உலகத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டேன் என்கிற விபரம் எனக்கு அப்போது தெரியாது.

விளம்பர வாசகங்கள் எழுதித் தருபவர்கள் அந்தத் துறையில் ‘காப்பி ரைட்டர்’ என்பார்கள். காப்பி ரைட்டர் என்ற சொல் பொதுவில் பலருக்கு புரியாது. படியெடுத்து எழுதுகிற வேலை என்று நினைத்துக் கொண்டு, ”ஏன்! உங்க ஆபீஸிலே ஜெராக்ஸ் மெஷின் கிடையாதா?” என்று அனுதாபத்துடன் விசாரிப்பார்கள். விளம்பர எழுத்தாளர் என்றாலும் விளங்காது. சிலர், சுவரில் விளம்பரம் எழுதும் வேலை என்று நினைக்கத் தொடங்கினார்கள்.

இப்படியே விட்டால் சரிப்படாதென்று தோன்றியது. ஒரு தயாரிப்பை சிலாகித்து எழுதுகிற வேலைதான் காப்பிரைட்டர் வேலை என்பதை உணர்த்துவதற்காக, என் பதவியைக் குறிக்கும் விதமாய் சமஸ்கிருதத்தில் ஒரு பதத்தை உருவாக்கினேன்.

‘சிலாகித்ய வாக்ய சிருஷ்டி கர்த்தா’ என்று சொல்லத் தொடங்கினேன். இப்போதும் யாருக்கும் புரியவில்லை. ஆனால் மரியாதையாகப் பார்த்தார்கள்.

தினம் மாலை 4 – 6 வேலை நேரம். மாதம் 750 ரூபாய் சம்பளம் என்றதும் எனக்கு அதில் ஆர்வம் வந்தது. சசியில் காப்பிரைட்டிங் துறையில் என்னையும் சேர்த்து இருவர். இன்னொருவர், அந்தத்துறையின் தலைவர் சிராஜ் என்பது அவருடைய பெயர். ஆங்கிலக் கவிஞர். ள்வ்ன்ஹழ்ழ்ண்ய்ஞ் ற்ட்ங் ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்ள் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு வெளி யிட்டிருந்தார்.

விளம்பர உலகில் படைப்பாக்கப் பிரிவில் பல சலுகைகள் உண்டு. எந்த விதமாகவும் உடையணிந்து வரலாம் என்பது முதல் சலுகை. யாரையும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்பது இரண்டாவது சலுகை. படைப்பாக்கப் பிரிவில் வரைகலைக்கென்றொரு பகுதியும் எழுத்தாளர்களுக்கென்றொரு பகுதியும் இணைந்தே இருக்கும். வரைகலையாளர்கள் பிரிவு ஒரே புகை மண்டல மாக இருக்கும்.

சிராஜ் ஒரு ஜீன்ஸ் சந்நியாசி. எல்லா வற்றுக்கும் சிரித்துக்கொண்டு எதிலும் பட்டுக் கொள்ளாமல் விட்டேற்றியாக இருப்பார். காப்பி ரைட்டிங்கில் எழுதப்படாத விதிமுறைகள் சில உண்டு. மனிதனின் தலை, உடல், கால் போல ஹெட்லைன், பாடிகாபி, பேஸ்லைன் என்று அங்கங்கள் உண்டு. விளம்பர வடிமைப்புக்கென்று கணினிகள் பயன்பாட்டுக்கு வராத காலம் அது. விளம்பர வாசகங்கள் எழுதிக் கொடுத்தால் வெளியே கொண்டுபோய் டைப்செட்டிங் செய்து கொண்டு வருவார்கள்.

சசியில் நான் சேர்ந்த காலம் மிக அற்புதமாக காலம். விளம்பர நிறுவனம் என்பது தனிமனிதத் தொடர்புகளை அடித்தளமாகக் கொண்டுதான் கோவை போன்ற நகரங்களில் உருவானது. ஆனால் எண்பதுகளின் இறுதியில் விளம்பரவியல் சிறப்புப் படிப்பு, எம்.பி.ஏ, மார்க்கெட்டிங் படிப்பு போன்ற சிறப்பு தகுதி இளம் வல்லுநர்கள் படைப்புத் துறையிலும் மார்க்கெட்டிங் பிரிவிலும் தீயின் தீவிரத்தோடு செயல்படத் தொடங்கினார்கள்.

புதிய தலைமுறையின் கண்ணோட்டத்தை புன்னகையுடன் வரவேற்றதோடு அவர்கள் வேகத்துக்கும் ஈடு கொடுத்த சசி அட்வர்டைசிங் திரு.சுவாமிநாதன் குறித்து இங்கே சொல்ல வேண்டும்.

பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர் அவர். சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் எளிய ஊழியராக வாழ்வைத் தொடங்கியவர். அங்காடிக்கு வரும் பத்திரிகைக்காரர்களுடன் பழக்கத்தில் விளம்பரம் சேகரித்துத் தருவதில் கிடைக்கக்கூடிய வருமானம் பற்றி அறிந்து தொடர்புகளை பலப்படுத்தி பகுதிநேரமாய் அந்தப் பணியில் இறங்கி இந்தியாவின் பல பகுதிகள் கொண்ட நிறுவனமாய் சசி அட்வர்டைசிங்கை உருவாக்கியவர் அவர்.

திறமையாளர்களை அடையாளம் காண்பதுடன் அவர்களைத் திறம்பட வேலை வாங்குவதில் கைதேர்ந்தவர்.

சசி அட்வர்டைசிங்கில் பணிபுரிந்தபோது விளம்பரத்துறையின் நுணுக்கங்களை அதன் தொழில்நுட்பம் மற்றும் தொழில் தர்மம் சார்ந்து முறையாகக் கற்றுக் கொண்டேனா என்று கேள்வி யோசிக்கத் தூண்டுகிற ஒன்று.

ஆனால் விளம்பர உலகின் நடைமுறை யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் இடமாக சசி இருந்தது.

சர்வதேசப் புகழ்பெற்ற விளம்பர நிறுவனங் களாகிய லின்டாஸ், ஹெச்.டி.ஏ., ஒகில்வி & மேதர் (ஓ&எம்) போன்றவை குறித்த சுவாரசியமான தகவல்களும் துணுக்குகளும் சசியில் அன்றாட உரையாடல்களில் இடம் பெற்றன.

இன்னொருபுறம், உள்ளூர் யதார்த்தங்கள் செயல்முறைகளில் சமரசத்துக்குத் தூண்டின. ஸ்ட்ராடர்ஜி போன்ற மந்திரச் சொற்கள் புழங்கினவே தவிர மிகச்சில நிறுவனங்களே அத்தகைய அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களுக்கு இடம்கொடுத்தன. இப்படித் தான் தொடங்கியது விளம்பர உலகில் என் பிரவேசம்!

  1. Life Direction Network

    நமது நம்பிக்கை அழகான, அருமையான ஒரு தளம் ஒவ்வொரு பக்கமும் நம்பிக்கையூட்டும் நற்செய்திகளாக இருக்கிறது, அப்படியே நம் தளம் பக்கமாகவும் வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *