மக்களுக்கு மட்டுந்தானா?
ஒற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முகமென்று உலக அரங்கில் உள்ளம் மலரப் பேசுகிறோம்.
மொழி-இனம், வசிப்பிடம்-வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த நிலைப்பாடு மக்கள் மத்தியில் காலங்காலமாய் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தேசியக் கொண்டாட்டங்களின் போதும் விழாக் காலங்களிலும், இந்த ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் அளிக்கவும் அரசியல் தலைவர்கள் தவறுவதில்லை. விடுதலைப் போராட்ட காலங்களில் பெரும் தொலைநோக்குடன் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வாசகம், வேற்றுமையில் ஒற்றுமை. அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் தனித் தன்மை வாய்ந்த குணமாகவும் இது திகழ்கிறது.
ஆனால், கட்சியளவில் வேற்றுமை பாராட்டும் இயக்கங்கள், மக்கள் நலன் கருதி ஒன்றுபடுகின்றனவா என்கிற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். எதிரெதிராக நிற்கிற கட்சிகள் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி தனித்தனியே போராடுகின்றன. கூட்டணி என்று சொல்லி கைகோர்த்த கட்சிகளும் தங்களுக்குள் மோதல்கள் வளர்த்து ஒற்றுமையில் வேற்றுமை காண்கின்றன.
ஒன்றுக்கொன்று ஆதரவு தந்து ஆட்சியமைக்கும் கட்சிகளும் தங்களுக்கிடையே ஏற்படும் மோதல்களால் ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தி தேசிய அளவில் பெரும் பொருளாதார இழப்புக்கு வழிவகுக்கின்றன. மண வாழ்வில் இணைந்த தம்பதிகள்கூட நினைத்தால் உடனே பிரிய முடியாது. பங்குதாரர் முறையிலான நிறுவனம்கூட தங்கள் ஒப்பந்தங்களைக் கலைக்க எத்தனையோ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அரசு புரிய தங்களுக்குள் கூட்டணி ஏற்படுத்தும் கட்சிகளோ, தனிமனிதர்களோ தங்கள் விருப்பம்போல் பிரிந்து கொள்ளவும் அரசைக் கவிழ்க்கவும் முடிகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது மக்களுக்கு மட்டும்தானா?
தலைவர்களுக்கில்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கூட்டணிகளில் கைகோர்க்கும் கட்சிகள் நினைத்ததும் பிரிந்துவிடாத முறையில் சட்டங்கள் கொண்டுவரப்பட்டால் குடியரசின் மாண்பு காக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?
Leave a Reply