– மகேஸ்வரி சத்குரு
பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும். அவ்வளவேதான்!
மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து, வென்றவன். சுற்றியிருக்கும் கூட்டம் 1ஆம் எண்ணை உற்சாகப்படுத்துகிறது.
சிறுவனோ சற்றே பயம் கலந்த முகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறான். உடன் தந்தை ஓடி வருகிறார். பார்வையாளர்களின் இடையில் புகுந்து ஓடிக்கொண்டே கத்துகிறார். ‘நீ ஓடு! வேகமாக ஓடு! உனக்குப் பிடித்ததை செய்கிறாய். பிடிவாதம் பிடி. உன் வெற்றியை நிச்சயமாக்கு!”
சிறுவன் தந்தையைப்பார்க்கிறான். வேகமாக ஓடுகிறான். சுற்றியிருப்பவர்களோ, தந்தையையும் மகனையும் வினோதமாகப் பார்க்கின்றனர். காமிரா ஓடுகளத்தை விட்டு ஒரு மருத்துவ மனைக்குத் திரும்புகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கின்ற ஒரு பெண்ணைக்காட்டுகிறது. அடுத்து காமிராவின் பார்வை ஒரு பள்ளியையும், அதில் உள்ள பிரார்த்தனைக்கூடத்தில் அழுது கொண்டிருக்கிற ஒரு சிறுமியையும் காட்டி விட்டு மீண்டும் ஓடுகளம் நோக்குகிறது. ஓடுகின்ற இருவரையும் காட்டுகிறது. வெற்றியின் எல்லைக்கோடு நெருங்குகிறது.
சுற்றியிருப்பவர்கள் ஒன்றாம் எண் இளைஞனை அதிகமாக உற்சாகப்படுத்துகின்றனர். அவர் எல்லைக்கோட்டை நெருங்குகிறார். சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஒரு சில அடி இடைவெளியே! திக்… திக்…. ஒன்றாம் எண் இளைஞன் வெற்றிக்கோட்டின் அருகில். பார்க்கிறான் சிறுவன்… பாய்கிறான். எல்லைக் கோட்டைத் தொடுகிறான். வெல்கிறான்.
காமிராவோ, சிறுவனின் சந்தோஷத்தை காட்டுவதற்கு முன்பு மருத்துவமனைக்குத் திரும்பி, தீவிர சிகிச்சைப்பிரிவில் படுத்திருந்த பெண்ணின் அமைதியான முகத்தில் வந்து மறைந்த சின்னஞ் சிறு புன்னகையை காட்டுகிறது. பின் அவன் சகோதரியான பள்ளிச்சிறுமியின் சந்தோஷத்தைக் காட்டுகிறது.
நம்மீதான நம்பிக்கை மலைகளைவிட உயர்ந்தது. ஏறுகின்ற போதெல்லாம் மலை நம் காலடியில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்போது நடப்பது? எடுத்து வைக்கின்ற முதல் அடியின் தீவிரத்தில்தான் எதுவும் நடக்கும்.
ஒருவன் ஒரு பெரியவரிடம் போய் சொன்னானாம், ‘எனக்கு வாழ்க்கையே கஷ்டமாக இருக்கு”. அந்தப் பெரியவர் கேட்டார், ”எதனுடன் ஒப்பிடுகையில்?” உண்மைதான். எதனுடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டம் என்று சொல்வது?
நம் எதிர்காலத்தை கண்களில் கனவுகளாக, வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அந்தக் கனவுகள் நம் உணர்வுகளில் கலந்து இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அது உயிர்பெறும். விஸ்வ ரூபமெடுக்கும். நம் குறிக்கோள்களை சென்றடையும்வரை நாம் செவிடர்களாக இருப்பது நல்லது. ஏன் தெரியுமா? 50கள்வரை மருத்துவர்கள் ஒரு கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாத காரியம்.
ஏனெனில், மனிதனின் உடல் ஒத்துழைக்காது. அப்படியே ஓடினாலும் இரத்தம் சூடேறிவிடும். மரணத்தையும்கூட சந்திக்க நேரிடும் என்றார்கள். எல்லோருமே அதை ஆமோதித்தார்கள். கேட்டுக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் இது எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. 1954ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம்தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம் 59.4 வினாடிகளில் கடந்தார். அவர் பெயர் ரோக் ரேனிஸ்டர்.
1957இல் மீண்டும் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார், 3.58 நிமிடங்களில். அதற்குப்பின் 4700 முறைஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே கடந்து பலரும் சாதித்தனர். சாதனையை துவக்கிவைத்து, கணிப்புக்களைப் பொய்யாக்கியவர், ரோக் ரேனிஸ்டர். சற்றேசிலிர்ப்புடன் அவர் சொன்ன வாசகம், ‘Dont listen to the voice of Doubts’. சந்தேகத்தின் குரல் நமக்கு பகைவன்தான்.
உடலும்கூட ஒத்துழைக்கும் நாம் உறுதியுடன் இருந்தால்! உலக சைக்கிள் சாம்பியன், இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். ஐந்து டூர் தி பிரான்ஸ் பட்டம் வென்றவர் லான்ஸ்! பதினாறு மணிநேரம் பயிற்சி! நான்கு மணி நேரம் மருத்துவ சிகிச்சை! நான்கு மணிநேரம் ஓய்வு! அவர் புற்று நோயிலிருந்து விடுபட்டவர். லட்சியத்தின் மீதான பிடிவாதத்தில் வென்றது அவர்! தோற்றது அவர் நோய்!
இலட்சியத்தின் மீது பிடிவாதமாக இருங்கள். வெற்றிகளை இறுகப் பற்றுங்கள்.
rasa.ganesan
நம் எதிர்காலத்தை கண்களில் கனவுகளாக, வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அந்தக் கனவுகள் நம் உணர்வுகளில் கலந்து இருக்கவேண்டும்.