இது குழந்தைகளுக்கான உலகம்
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான காப்பீடுகள், பாதுகாப்பு என்று எண்ணிலடங்காத திட்டங்கள் பெற்றோர் மனங்களில் எழுவதுண்டு. ஆனால் குழந்தைகளின் நிகழ்காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் உணர்வு ஒரு பேரிழப்பிற்குப் பிறகு தீவிரமாகியிருக்கிறது.
தாங்கள் பணயப்பொருளாய், போகப் பொருளாய் பார்க்கப்படுகிறோம் என்பதுகூட புரியாத வயதில் அயோக்கியர்களையும் அங்க்கிள் என்றே அழைக்கும் பிஞ்சுகளை அவர்களின் குழந்தைத்தன்மை மாறாமல் பாதுகாக்கப் போகிறோமா அல்லது யாரையும் நம்ப முடியாத சூழலை உணர்த்தப் போகிறோமோ?
வக்கிர உணர்வுகளுக்கு வடிகாலாய் இளம் பிள்ளைகளைக் காண்பவர்கள் வயது பேதம், பதவி பேதம், அந்தஸ்து பேதம் இல்லாமல் எங்கணும் பரவிக் கிடக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வருகிற செய்திகள் வழியறிந்து அதிர்கிறது சமூகம்.
அயல்நாடுகளில் பிள்ளைகளை தண்டிக்கும் பெற்றோர்களுக்கே தண்டனை உண்டு. மேலை நாடுகளில் இருந்து எதை எதையோ கற்றுக் கொள்கிற நாம், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கு அங்கிருக்கும் விதிமுறைகளில் பத்து சதமேனும் பின்பற்றினாலே போதும்.
குழந்தைகளை அளவுக்கதிகமாக ஏற்றிச் செல்லும் வாடகை வாகனங்களில் இடநெரிசல் காரணமாய் ஓட்டுநர் மடியில் அமர்த்தப்படும் குழந்தைகள் தொடங்கி, நெரிசல் மிக்க பேருந்துகளில் பயணம் செய்யும் குழந்தைகள் வரை எல்லோருமே கணிக்க முடியாத கீழ்மைகளுக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது.
இது குழந்தைகளுக்கான உலகம். ஒவ்வொரு வீடும் குழந்தைகளின் ராஜ்ஜியம். பூக்கள் பறவைகள், வண்ணங்கள், மலைகள் எல்லாமே குழந்தைகளுக்கான கடவுளின் ஏற்பாடுகள். அதுசரி. மனிதர்கள்?? கடவுளுக்குத்தான் தெரியும்.
Leave a Reply