நமது பார்வை

உங்கள் வாழ்வில் உள்ளாட்சி

உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நேரமிது. ஊக்கத்துடன் வாழ்வை நிகழ்த்த விரும்பும் நமக்கும் உள்ளாட்சி குறித்த புதிய விழிப்புணர்வு தேவை. உள்ளாட்சி என்றால் ஊர்நிலையில் அல்ல. உள்நிலையில் நிகழும் உள்ளாட்சி. ஒரு மனிதர் தன் உடல் நலனை நிர்வகிப்பதும், உள்ள உணர்வுகளை ஒழுங்கு செய்வதும், மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி தியானம் மூலம் உள்நிலையில் மேம்பாடு கொண்டு வருவதும் உள்ளாட்சி மேம்பாடுதான்.

 வெளிவாழ்வில் வெற்றி பெற்ற அனை வருமே உள்நிலையை ஒழுங்கமைத்தவர்கள் என்பதே வரலாறு. தங்களுக்குள்ளே தடுமாற்றம் நேர்ந்தால் புறவாழ்வை நிர்வகிக்க இயலாது. இதற்கு நமது நம்பிக்கை நிகழ்ச்சிகளில் நாம் சமீபகாலமாய் வலியுறுத்தி வருகிற விஷயங்களில் ஒன்று, “ஒருநாளின் முதல் ஒருமணி நேரம் உங்களுக்காக” என்பதாகும்.

காலையில் எத்தனை மணிக்கு நீங்கள் எழுபவராயினும் முதல் ஒருமணி நேரத்தை உங்கள் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்து பயன்படுத்தப் பழகிவிட்டால் அந்த நாள் முழுவதையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் எதிர்கொள்ள இயலும்.

காலையிலேயே பரபரப்போடும் கவலைகள் குறித்த கவலைகளோடும் எழுபவர்கள், விடியலின்போதே தங்கள் பாரங் களைப் பெருக்கிக் கொள்கிறார்கள். அந்த நாளில் எவ்வளவு முக்கியமான பொறுப்புகள் இருப்பினும் நாளின் முதல் நேரத்தை நமக்கான நேரமாகத் தொடங்குவது, நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய வாகனத்தை பராமரிப்புக்கு உட்படுத்துவது போலத்தான்.

உள்ளாட்சி ஒழுங்கே வாழ்க்கையின் ஒழுங்கு என்னும் நினைவூட்டலே வாழ்வைக் கொண்டாடக் காரணமாகிறது. கொண்டாட்டத்துக் குரிய பண்டிகைக் காலங்களையொட்டி நவம்பர் மாத இதழ் அக்டோபரிலேயே உங்களை வந்தடைகிறது.

உங்கள் அனைவருக்கும் நமது நம்பிக்கை குடும்பத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *