தடம் பதியுங்கள்
எல்லாத்திறமைகளும் இருக்கும்போது, ஆனால் உரிய வாய்ப்புகள் இல்லாதபோது, ஏற்படும் மனத்தடையை என்ன செய்வது? இந்தக் கேள்வியை பலரும் பலவிதங்களில் எதிர் கொள்வதுண்டு. சாதாரணமாக வருகிற பதில், உரிய வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சாமர்த்தியசாலிகள் தருகிற பதில், உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
தன்னுடைய இடத்தைப் பிடிப்பதும், தன்னுடைய தடத்தைப் பதிப்பதும் முக்கியமென்று கருதிய மனிதர்கள் முண்டியடித்து, முயற்சி செய்து, முன்னேறியதன் விளைவுதான், ஏறமுடியாத சிகரங்களில் அவர்களை ஏற்றிவைத்து அழகு பார்த்தது.
தடைகள் தாமாக விலகும் என்று காத்திருப்பதைவிட, தடைகளை நகர்த்தியவர்களே தாண்டிச் சென்றிருக்கிறார்கள். சில தடைகள், வாழ்க்கைப் பாதையின் வேகத்தடைகள். அவை நம் வேகத்தை மட்டுப்படுத்துபவையே தவிர, நம் கால்களைக் கட்டுப்படுத்துபவை அல்ல. மட்டுப் பட்ட வேகம் ஆபத்துக்களைத் தவிர்க்கும். அதே நேரம், நம் இலக்கு நோக்கி நம் கவனத்தைக் குவிக்கும்.
சாதிக்கும் மோகம், செயல்வேகம், இரண்டும் இருப்பவர்கள், ஏதாவதொரு துறையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். பழைய காலத் திரைப்படங்களில் பக்கம் பக்கமாய் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அதன் காரணமாய் அன்றைய நடிகர்களுக்கு மனப்பாட சக்தி வளர்ந்து கொண்டேயிருந்தது.
அந்த ஆற்றலை, நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும் வரைக்கும் பயன்படுத்தி, அதன்பின் அப்படியே மங்கிப்போக விட்டவர்கள் பலர். ஆனால், தீவிர நடிப்பிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதே ஆற்றலைக் கொண்டு இலக்கியங்களை மனனம் செய்து, இன்று கம்பனிலும், பாரதியிலும் தங்குதடையின்றி பாடல்களைக் கொட்டுகிற பன்முகக் கலைஞராய் ஒளிர்பவர் திரு. சிவக்குமார்.
அடிப்படையில் தேர்ந்த ஓவியர் இவர். ஓவியம், பேச்சு, நடிப்பு என்று பன்முகத் திறமைகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் நிகழ்காலத்தின் நிமிஷமாய் இருக்கிறார் இவர். கலைப்பாதையில் குறுக்கிடக்கூடிய காலமாற்றம் என்னும் மலையை அனாயசமாய் நகர்த்திவைத்த பெருமைக்குரியவர் இவர்.
சமீபத்தில் வெளிவந்த ஓம்சக்தி தீபாவளி மலரில், பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் நேர்காணல் வெளிவந்துள்ளது. கலைவாணி என்ற பெயரில் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் குவிந்ததையும், சிறந்த ஓவியராய் வளர்ந்து வந்ததையும் நினைவு கூர்கிறார். ஒன்றோடு நின்று விடாமல், ஒவ்வொன்றிலும் முயன்று பார்க்கிற முனைப்பு, வாழ்க்கையை அர்த்த பூர்வமாய் ஆக்கி வைக்கும் என்பதற்கு இவர்கள் இருவருமே இணையில்லாத சாட்சிகள்.
உலகமெங்கும் கிரிக்கெட் விளையாட்டில் மக்களின் ஈடுபாடு பரபரவென்று பற்றிக் கொண்டிருக்கிறது. விளையாட்டு மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் வீரர்கள் பணம் குவிக்கிறார்கள். சூடு பறக்கும் ஆட்டம் தொடங்கி, சூதாட்டம் வரையில் கிரிக்கெட்டின் பெயரால் கலகலப்பாய் நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் அத்தனை பேரும் அள்ளிக் குவிக்கும் புகழ், பணம், பாராட்டு இவற்றுக்கு மத்தியில் கவனிக்கப்படாத சவலைப் பிள்ளையாய் இந்தியாவில் இருக்கிறது, இன்னொரு தேசிய கிரிக்கெட் அணி!!
ஆம்! இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி தான் அது! பேசிப்பார்த்த போது பலருக்கும் இந்த அணிபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
ஆண்கள் அணிக்கு நிகராக விளையாடக் கூடிய வீராங்கனைகள் கொண்டது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. ஆனால் இன்றளவும் இந்த அணி எதிர்கொள்ளும் தடைகளுக்கு எல்லையில்லை. அதே நேரம் அவர்களின் உறுதியும் உற்சாகமும் குறையவில்லை.
1700களில் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் கிரிக்கெட் விளையாட்டு. 1890களிலேயே பெண்கள் கிரிக்கெட் விளையாடினார்களாம். மகாராஷ்டிர முறைப்படி புடவை அணிந்த பெண்கள் களத்தில் இறங்கி மட்டை பிடித்துப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். 1930ல், கத்தியவாரில் நடந்த போட்டியில் ஆண்கள் அணியை பெண்கள் அணி ஜெயித்திருக்கிறது.
ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை முறையான ஆண்கள் அணி 1911லும், பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் சங்கம் 1973லும்தான் உருவாகியுள்ளன. ஆசியாவின் தலைசிறந்த பெண்கள் கிரிக்கெட் அணியாக இந்திய அணி இருந்தும், இதுவரை நான்கு முறை ஆசியக் கோப்பையை வென்றும், பொருளாதாரமோ புகழாதாரமோ இந்த அணிக்குப் பெருகவேயில்லை.
வங்காளத்தில் உள்ள சின்னஞ்சியறிய கிராமமாகிய சாக்டாவில் பிறந்த ஜீலான் கோஸ்வாமி என்ற 25 வயது இளம்பெண், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர். இதற்கு முன் தலைவராக இருந்தவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது மித்தாலி ராஜ். உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
இத்தனைக்கும், அஞ்சும் சோப்ரா என்ற வீராங்கனை தவிர மற்றவர்கள் அனைவரும் மிக எளிய குடும்பச் சூழலில் இருந்து வருபவர்கள். விளையாட்டு வீரர் களுக்கான ஒதுக்கீட்டில் தரப்படும் வேலை வாய்ப்பு களில்கூட அலுவலக எழுத்தர் பணியைத்தாண்டி இவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
இந்தச் சூழலில்தான், இந்தியாவிலுள்ள கிரிக்கெட் வீராங்கனைகளின் வாழ்வை சித்தரிக்கும் குறும்படம் ஒன்றை உருவாக்க அஞ்சும் சோப்ரா, ஜீலன் கோஸ்வாமி, மித்தாலிராஜ் ஆகியோர் கைகோர்த்தனர்.
சுனில் யஷ் கல்ரா என்ற இயக்குநர் ஐந்தாண்டுகள் முயன்று இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். வணிக நிறுவனங்கள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இவர்கள் மேல் விழுவதற்கான வாய்ப்பு இந்தப்படத்தின் மூலம அமையுமென்று நம்புகிறார்கள்.
ஆண் வீரர்களைக் காட்டிலும் அதிகமான மனவுறுதி, போர்க்குணம், நம்பிக்கை, தீவிரம் எல்லாம் தேவைப்படும் வாழ்க்கையை வாழ்ந் தாலும், போராட்டங்களே எங்களை மேலும் உறுதி உள்ளவர்களாக மாற்றுகிறது என்கிறார் ஜீலன் கோஸ்வாமி
.
பாலினப்பாகுபாடு, குறைவான வாய்ப்பு ஆகிய தடைகளைத் தாண்டி, தங்களுக்கும் பிடித்தமான துறையில் சாதிக்கும் வெறியோடும் வேகத்தோடும் இந்த வீராங்கனைகள் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவதற்கு, இரண்டு விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். முதலாவது, நாம் இறங்கியிருக்கிற களம். இரண்டாவது நம்முடைய பலம். களம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நம் பலம் அதற்குத் தகுந்தாற்போல் பெருகக்கூடியது என்ற நம்பிக்கை மலைகளை நகர்த்தும் மன உறுதியைத் தருகிறது.
ஆல்பர்ட்.ஈ.என்.கிரே என்ற வாழ்வியல் அறிஞர் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் சொன்ன வாசகம் ஒன்று, மேலைநாட்டு சுயமுன்னேற்ற நிபுணர்கள் பலராலும் மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. அந்த வாசகம் இதுதான்:
”வெற்றி பெறாதவர்கள் செய்ய விரும்பாத சில வேலைகளை வெற்றியாளர்கள் செய்கிறார்கள். அதன் மூலமே வெற்றி பெறு கிறார்கள். அவர்களுக்கும் அந்த வேலைகளைச் செய்ய விருப்பமில்லைதான். ஆனால் விருப்பு வெறுப்பைவிட தேவையின் தீவிரம் அவர்களை நகர்த்துகிறது.”
செயல்படுவதும் சாதனை புரிவதும் விருப்பு வெறுப்புகளைத் தாண்டிய வேகத்திலும் வெறியிலும் நிகழ்பவை. நகர்த்த முடியாததையும் நகர்த்துகிற சக்தி, அங்கே பிறக்கிறது.
Leave a Reply