மன நல நிபுணர் டாக்டர் குமராபாபு நேர்காணல்

டாக்டர் குமாரபாபு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகால அனுபவமுள்ள பிரபல மனநல மருத்துவ நிபுணர். இளைஞர்களுக்குள் இருக்கும் ஆற்றலைத் தூண்டி அவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்குபவர். அறிவியல், ஆன்மீகம் இரண்டிலும் ஆழ்ந்த ஈடுபாடும், தெளிந்த பார்வையும் கொண்டவர். மனநலம் குறித்து மருத்துவர்களுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து வருபவர்.

உங்கள் இளமைக்காலம் பற்றி?

பள்ளிப் பருவத்திலேயே அற்புதமான ஆசிரியர்கள் அமைந்தனர். தன்னைத்தானே நம்புவதற்கான முக்கியத்துவத்தை போதித்து சுய நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியவர் என் வகுப்பாசிரியர் சுப்ரமணிய சாஸ்திரி.

பி.யூ.சி. படிக்கிறபோது, தாவரவியல் விரிவுரையாளர் திரு. புஷ்கரன், மருத்துவராகும்படி என்னை ஊக்குவித்தார். மருத்துவத்துறை பட்டப் படிப்பின்போது பேராசிரியர் செந்தில்நாதன் எனக்குப் பெரிதும் ஊக்கம் தந்தார். முதுநிலை மருத்துவப்படிப்பில் பேராசிரியர் லலிதா காமேஸ்வரன் எனக்கு வழிகாட்டியாய் விளங்கினார். உளவியல் துறையில் பேராசிரியர் சோமசுந்தரம் என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நல்ல கல்வியாளர்களின் கரம் பற்றி வளரும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.

இந்திய இளைஞர்கள் அனைவருக்குமே சிந்தனைப் போக்கில் ஒரு தத்துவப் பின்புலம் இருக்கிறது என்பது உண்மையா?

மனிதனிடத்தில் இறைத்தன்மை இருக்கிறது என்கிற ஒரே தத்துவப் பின்புலத்தை எந்த இந்திய இளைஞன் கண்டுகொள்கிறானோ, அன்றுதான் ஒரு விடிவெள்ளி நம் நாட்டில் முளைக்கும். கடவுளைப் புறத்தே பார்க்க வைக்கும் அத்தனை முயச்சிகளும் இந்த விடியலைத் தாமதப் படுத்தும். வேதங்களில் மகாவாக்கியங்கள் மனிதனின் இறைத்தன்மையையே உணர்த்து கின்றன. இந்த சித்தாந்தம்தான் ஆரோக்கியமான தத்துவப் பின்புலமாக அமைய வேண்டும்
.
ஆன்மீகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாடு பற்றி?

என் கொள்ளுத்தாத்தா, பகவத் கீதைக்கான விளக்கங்கள் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தக் கூடியவர். எனக்கு பன்னிரண்டு வயதானபோது என் உறவினர் ஒருவர் பகவத்கீதை புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். அன்றிலிருந்து தினந் தோறும் பகவத்கீதை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் 22வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாரிடம் சைவ சித்தாந்தம் பயின்றேன். பேரறிஞர் இரத்தின சபாபதிப்பிள்ளை அவர்கள் திருமந்திரம் போதித்தார். வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதலில் குண்டலினி பயிற்சி மேற் கொண்டேன்.
இமயமலை, காசி, தமிழகம் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான முனிவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். புத்த சமய குருமார்களாகிய லாமாக்களுடன் நெருங்கிப்பழகி புத்த தியான முறைகள் பழகினேன்.

கடந்த 18 ஆண்டுகளில் இருபதாயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்கள் என்னிடம் தியானம் பயின்றுள்ளனர்.

மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?
யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவை இப்போது அதிவேகமாகப் பரவுகின்றன. அதன் மூலம் ஆரோக்கியம் வளர்கிறது. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் அனைத்துமே வளர்கிறது. உடலில் உள்ள திசுக்களின் சக்தி நிலை கூடுகிறது.
மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்த முறைகள் பரவுகிறதே, என்ன காரணம். நேரடிப் பலன் கிடைக்கிறது. எந்தக் கடவுள் பெரியவர்? எந்த மதம் பெரியது என்கிற சர்ச்சைகளெல்லாம் தேவையில்லை. வாழ்க்கைக்குள் முதலில் வா என்கின்றன இத்தகைய முறைகள். இதிலும் போலிகள் வந்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், ஓர் ஆரோக்கியமான மாற்றாக இத்தகைய முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அப்படியிருந்தும் மனிதன் சோர்வடைவதற்கு என்ன காரணம்?

ஒரு மனிதனுடைய ஆற்றல், விருப்பம் ஒரு பக்கம். அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற யதார்த்தமான சிக்கல்கள் இன்னொரு பக்கம். இரண்டுக்கும் உள்ள இடைவெளி பற்றிய பக்குவம் இல்லாததால்தான் மனிதன் சோர்ந்து போகிறான். நாம் தோற்றுப் போய்விட்டோம் என்று உட்காரும்போது வருகிற தோல்விதான் நிஜமான தோல்வியே தவிர, தற்காலிகத் தோல்விகளை தோல்விகள் என்றே எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவரையில், அணுகு முறையில் என்ன தவறு என்று பார்த்து, அதை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். வெற்றி பெற்ற அத்தனை பேரும் இப்படி அடிபட்டு வந்தவர்கள் தான்.

இந்தப் பயிற்சியை இளைஞர்களுக்குப் எந்தப் புள்ளியில் இருந்து தொடங்க வேண்டும்?
இளைஞர்களை முதலில் மத தீவிரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். பிற மதங்களின் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சிதான் மதக் கலவரங்களாக வெடிக்கிறது. உதாரணத்திற்கு இளைஞன் எப்போது சாமி கும்பிடுகிறான்? பரீட்சை வரும்போது கும்பிடுகிறான். நல்லது. கடவுளிடம் எனக்கு பரீட்சையை நல்லபடியாக எழுதுகிற சக்தியை கொடுக்கும்படி கேள். தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும்படி கேள். வழிகாட்ட வேண்டுமென்று கேள். அதற்காக படிக்காமல் உட்கார்ந்துவிடாதே. கடவுளே! எனக்கு மதிப்பெண் வாங்கிக்கொடு என்று கேட்காதே. நீ எனக்கு அதைச் செய், நான் உனக்கு இதைச் செய்கிறேன் என்று பேரம் பேசாதே. பிரார்த்தனை என்பது நன்றி உணர்வு. பேரம் பேசுதல் அல்ல.

அப்படியானால் மதம் என்பதே தவறு என்று சொல்கிறீர்களா?

மதத்தின் மேல் தவறே கிடையாது. மதம் என்பது என்ன? ஒரு வாழ்க்கை முறை. ஓர் உதாரணம் சொல்கிறேன். யாரோ ஒருவருடைய 500 ரூபாய் நோட்டு கீழே கிடக்கிறது. யாராவது பார்த்துக் கொண்டிருந்தால், அதை எடுத்து உரியவர்கள் கையில் கொடுத்து விடுவார்கள். சுற்றிலும் யாரும் இல்லையென்றால் அவர்களே வைத்துக் கொள்வார்கள் இல்லையா? இதற்குத் தான் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற அர்த்தத்தில் மனசாட்சி என்ற விஷயத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாம் செய்கிற தவறுகளுக் கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும் என்றிருந்தால் மனிதன் பயப்படுவான் என்பதால் அப்படி வைத்தார்கள். இதை தவறாகப் புரிந்துகொண்டு நீ நரகத்துக்குப் போவாய், சிரமப்படுவாய், என்றெல்லாம் பயமுறுத்தினால் இன்றைய இளைஞன் அலட்சியப் படுத்துகிறான். அவனுக்கு அச்சமூட்டி உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. சொல்லப் போனால் ஆர்வத்தின் அடிப்படையில்தான் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.
இளைஞர்களுக்கு சாதித்தவர்கள் பற்றியெல்லாம் நிறைய சொல்கிறோம். ஆனால், அவர்களெல்லாம் சாதனையாளர்கள். நான் சாதாரணமானவன் என்றுதானே பலரும் கருதுகிறார்கள்?

சாதனையாளர்களாக அறியப்படும் வரையில் எல்லோருமே சிரமப்பட்டுத்தான் மேலே வந்திருக்கிறார்கள். பில்கேட்ஸ் பள்ளிப் படிப்பிலிருந்து பாதியில் வெளியே வந்தவர். மோடி ராபர்ட்ஸன் உலகத்தில் மிகப்பெரிய பணக்காரன். தன் முன்னேற்றச் சிந்தனையாளன். தற்கொலை வரைக்கும் போய் மீண்டு வந்தவன். அவனும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவன்தான். மிக எளிதாக வெற்றி பெற்றவர்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது. இன்று மனப்பாட சக்தி ஆற்றலை வைத்தே கல்விமுறை இயங்குகிறது. இது மிகப்பெரிய தவறு. நம்மால் அதை சரி செய்து கொண்டிருக்க முடியாது. நினைவாற்றலை பெருக்கிக் கொள்வது போன்ற விஷயங்களை ஒரு பக்கம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சூழலுக்கு ஏற்ப வாழ்வது என்பதுதான் அடிப்படையான விஷயம்.

பாரம்பரிய வாழ்க்கைமுறை பழகிப் போனதாலேயே பலர் புதிய விஷயங்களைப் பற்றிக்கொள்ள முடியாமல் திணறுகிறார்களே?

பாரம்பரியத்தைப் பாதுகாப்பதென்பது வேறு. புதுமைகளை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. இப்போது கம்ப்யூட்டர் வாங்குகிறீர்கள். முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது. இப்போது இருக்கிற கம்ப்யூட்டர் எப்படியிருக்கிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டி எப்படியிருந்தது. இன்று வருகிற தொலைக்காட்சிப் பெட்டி எப்படி இருக்கிறது. மாற்றங்களை உங்களால் தவிர்க்கவே முடியாது.

ஒருவன் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? முதலில் தன்னை நம்ப வேண்டும். தோல்விகள் சகஜம். தோல்விகளையும் தாண்டி ஜெயிப்பதற்குப் பெயர்தான் வெற்றி. தோல்வியே வராமல் இருக்க வேண்டுமென்றால் எந்தச் செயலையும் செய்ய முடியாது. நூற்றில் இரண்டு அறுவை சிகிச்சைகள் தோல்வியில் முடிகின்றன. அதற்காக சிகிச்சையே செய்யாமல் இருக்க முடியுமா?

இந்த உலகத்தை நீங்கள் பார்த்தால், இரண்டே விதமான படைப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று கடவுளால் உருவாக்கப்பட்ட படைப்புகள், இன்னொன்று மனிதனால் உருவாக்கப்பட்ட படைப்புகள். படைப்பாற்றல் எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கிறது. எனவே, தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை.

இன்றைய இளைஞனுக்கு எதிராக உள்ள விஷயங்கள் என்ன? இளைஞனின் குற்றவுணர்வைத் தூண்டிவிட்டு ஆதாயம் பார்க்க எத்தனையோ சக்திகள் கடை விரிக்கின்றன. இளைஞனின் பாலியல் உணர்வு சார்ந்து குற்றவுணர்வுகளைத் தூண்டி விட்டு தங்கள் மருந்துகளை விற்க சில வியாபாரிகள் முயன்று வருகின்றனர். இன்னொரு புறம் குடும்பச் சூழ்நிலை கட்டுக்குலைவதால் இளைஞன் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.

இதையெல்லாம் கணக்கில் வைத்துப் பார்க்கும் போது வாழ்க்கையை சுதந்திரமாக வாழத் தொடங்குகிற இளைஞன் பின்பற்ற வேண்டிய மதிப்பியல்புகள் என்னென்ன?
மதிப்பியல்புகள் ஒவ்வொரு மனிதனுக் கேற்ப மாறுபடும். மற்றவர்கள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை வைத்துக்கொண்டு, அதை உங்கள் தொழிலிலோ, வாழ்விலோ பயன்படுத்த நினைத்தால், அதனால் எந்தப் நலனும் விளையாது. மதிப்பியல்புகள் என்பவை உங்கள் மன இயல்புகளைப் பொறுத்தது. அதனால்தான் குற்றவுணர்வை வைத்துக்கொண்டு மனிதர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தக் குற்ற உணர்விலிருந்து வெளியே வர மதுவும், மற்ற போதைப் பழக்கங்களும் தேவைப்படுகின்றன. இவை தீமை பயக்கும்.

இந்த மாற்றங்கள் பொதுவாக எங்கிருந்து ஏற்பட வேண்டும்?

எல்லா மாற்றங்களுமே உங்களுக்குள் நிகழ வேண்டும். வெளியே ஏற்படுத்துகிற மாற்றங்களோ, வெளிச்சூழலிலிருந்து கொண்டுவருகிற மாற்றங்களோ, எந்தப் பலனையும் தராது. இன்று வணிக உலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சேவை, ஒரு முக்கியமான துறையாக வந்து விட்டது. சேவை என்றால் ஜெட் ஏர்வேஸ் செய்கிற சேவை போல்.

சேவை என்கிற சொல்லுக்கு இந்தப் புதிய உலகில் திறமை என்று பொருள். நான் ஒரு நல்ல மனிதனாக இருந்தால் மட்டும் போதாது. நான் ஒரு நல்ல மருத்துவரா என்பதுதான் முதல் முக்கியக் கேள்வி. சேவையில் தரம் என்பது முக்கியமாகி விட்டது. இதை அனுபவத்திலும் இளைஞர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

பள்ளிக் கல்வியில் முதலில் தியரி. பிறகு ப்ராக்டிகல். ஆனால் வாழ்க்கையில் அப்படியல்ல. முதலில் அனுபவம். அப்புறம்தான் தியரி. அடிவாங்கிய பிறகுதான் செய்த தவறு என்னவென்று தெரியும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை சீர்ப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தன்னிடம் என்ன குறைகிறது என்று பார்த்து சரி செய்யவேண்டும். நினைவாற்றல் குறைவாக இருக்கிறதா? பெருக்கிக்கொள்ள வேண்டும்.

இப்படி தன்னையே படிப்படியாக சரி செய்து கொண்டுதான், தவறுகளிலிருந்து திருத்திக் கொண்டுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

2 Responses

  1. SETHUPATHY

    PLEASE YOUR PHONE NUMBER AND ADDRESS SEND MY MAIL ID THANKS

  2. bharanidharan

    I have some problem in mental health and illness. please tell the doctors address with phone no.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *