பைவ்ஸ்டார் VS சூப்பர்ஸ்டார்

அத்வைத் சதானந்த்

ஸ்டார் என்றால் பெரும்பாலும் நமக்கு ஏனோ சினிமா நட்சத்திரங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தால் மட்டும்தான் ஸ்டார். இல்லை யென்றால் பளபளப்பு மங்கிவிடும்.

பைவ் ஸ்டார் என்ற வார்த்தையை ஹோட்டல் துறையில் மட்டும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

நிறுவனத்தின் செயல்பாடுகளை வைத்து வழங்கப்படும் இந்த நட்சத்திர அந்தஸ்து இராணுவம் உட்பட இன்னும் பலதுறைகளிலும் உண்டு.

இது எதைப்பற்றிய கட்டுரை என்று நீங்கள் குழம்புவதற்குள் நான் விஷயத்தை சொல்லி விடுகிறேன்.

ஹோட்டல்களைப்போல மனிதர்களுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் எப்படி இருக்கும்? ஐந்து நட்சத்திர ஹோட்டல், மூன்று நட்சத்திர ஹோட்டல் என்றெல்லாம் குறிப்பிடப்படுவதை இவர் பைவ் ஸ்டார், அவர் த்ரீ ஸ்டார் என்றெல்லாம் மதிப்பிடப்பட்டால் எப்படி இருக்கும்?

உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் எத்தனை நட்சத்திர அந்தஸ்து கொடுக்கலாம்? நீங்கள், எத்தனை ஸ்டார் தகுதி உள்ளவர்கள் என்பதை நீங்களே கண்டறியுங்கள். ஒரு சிறந்த மனிதனுக்கு தேவையான ஐந்து குணங்கள் என்ன என்பதை நீங்களே பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு நம்பிக்கை, விடாமுயற்சி, பழகும் திறன், தலைமைப்பண்பு இப்படி.

இந்த ஐந்தில் உங்களிடம் எத்தனை தகுதிகள் இருக்கிறதோ, அதை வைத்து உங்களுக்கு நீங்களே ஸ்டார் அந்தஸ்து கொடுத்துக்கொள்ளலாம்.

பழகும் திறன் என்றால், உங்கள் நெருங்கிய நண்பர்களோடு நன்றாகப் பழகுவதை வைத்து அல்ல, முன்பின் தெரியாதவர்களிடம்கூட சுலபமாக பழகி நட்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஆற்றல் இருந்தால் மட்டுமே, உங்களுக்கு நீங்கள் ஸ்டார் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, பழகும் திறனுக்கு உங்களைத்தான் எல்லோரும் உதாரணம் என்று சொல்ல வேண்டும் அப்போதுதான் நீங்கள் ஸ்டார்.

இப்படி எத்தனை தகுதிகள் இருக்கிறதோ, அதற்கேற்ற ஸ்டார்களை உங்களுக்கு நீங்கள் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒவ்வொரு தகுதிகளாக வளர்த்துக்கொண்டு ஒவ்வொரு ஸ்டாராக கூட்டிக்கொள்ளலாம்.

இப்படி எல்லாத்தகுதிகளையும் வளர்த்துக் கொண்டே வரும்போது ஒருநாள் நீங்கள் சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் உணரப்படுவீர்கள்.

வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் போல உங்கள் வாழ்க்கையும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *