– அனுராஜன்
உதாசீனம் – வெற்றிக்கு உத்தி
அது வெற்றியாளர்களுடனான சந்திப்பு.
தனக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய என் நண்பர், வருத்தத்துடன் சொன்னார், ”நான் வெற்றி பெற்றபிறகு இவ்வளவு பேரும் என்னை கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் வெற்றி பெறப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டு கொள்ளவில்லை. அன்று என்னை உதாசீனப் படுத்தினார்கள், இன்று பாராட்டுகிறார்கள். நியாயப்படி ஆரம்பகால கட்டத்தில்தானே எனக்கு அங்கீகாரம் தேவை.”
நான் மறுத்தேன், ”யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் முதல் பரிசு என்பதால்தான் கலந்து கொள்கிறவர்களுக்கு வேகமே வருகிறது. அதற்கு பதிலாக, எல்லோரும் உற்சாகமடையட்டும் என்று, ‘ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களுக்கெல்லாம் பரிசு’ என்று அறிவித்தால், என்ன ஆகும்? என்று யோசித்துப் பாருங்கள். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓட மாட்டார்கள்.”
அப்படியே ஓடினாலும், ஓடுகிறவரை எல்லோருமாக சேர்ந்து இழுத்துப்பிடித்து உட்கார வைத்துவிடுவார்கள். ‘அதான் பந்தயத்தில் கலந்து கொண்டாலே பரிசாமே! ஏன் இவ்வளவு வேகம்?’
ஓட எத்தனித்தவர் இப்போது வேகமாக நடக்க ஆரம்பிப்பார். அதற்கும் இரண்டு பேர் தடை சொல்வார்கள், ‘கலந்துகொண்டாலே பரிசு என்றாகிவிட்டது. பிறகு எதற்கு இவ்வளவு வேகம்?’. இப்போது அவர் மெதுவாக நடக்க ஆரம்பிப்பார்.
‘எதற்காக நடந்து கொண்டிருக்கிறீர்கள்? கலந்து கொண்டால் என்றால் டிராக்கில் நின்று கொண்டிருந்தாலே கூட போதுமானது’ என்று நடப்பதையும் நிறுத்திவிடுவார்கள்.
இன்னொரு சோம்பேறி சொல்வார், ‘கலந்து கொள்வது என்றால் டிராக்கில் இருந்தாலே போதும். பிறகு எதற்கு நிற்கிறீர்கள்?’ என்று சொல்லி உட்காரவும் வைத்துவிடுவார்கள்.
வெற்றி பெற்றால்தான் பரிசு என்பதனால் தான் நாம் ஓடவே செய்கிறோம். எனவே அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். ஆரம்ப அங்கீகாரத்திலேயே திருப்தி அடைந்துவிட்டால் ஓடுவதற்கான உத்வேகத்தை நீங்கள் பெறவே மாட்டீர்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் கிடைக்கும் உதாசீனம். உண்மையில் நமக்கு சீதனம்.
நண்பருக்குப் புரிந்தது. உங்களுக்குப் புரிந்ததா?
Leave a Reply