-தி.க. சந்திரசேகரன்
விளம்பரங்களினால் நல்ல பயன்கள் விளையும் என்பது உண்மை. ஆனாலும் சில நேரங்களில் தவறான விளைவுகளும் ஏற்படுவது உண்டு. விளம்பரம் கொடுத்தவர் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்ட நிலையும் ஏற்படலாம். விளம்பர நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளாமல் தரும் விளம்பரங்கள் நிச்சயம் தொல்லையில் முடியும்.
விளம்பர ஆபத்துக்களைச் சற்று ஆராய்வோம்!1. விளம்பரங்களுக்கு ஆகும் செலவை சரியாகத் திட்டமிட முடியாமல் திணறுபவர்கள் உண்டு. விளம்பர செலவுகள் அவ்வப்போது மாறும். பத்திரிகைகள், பலவிதமான தொலைக்காட்சி நிறுவனங்கள், விளம்பரம் வெளியாகும் நேரம் ஆகியவற்றிற்கு ஏற்ப கட்டணங்கள் மாறுவதால் நிறுவனங்களால் செலவைத் திட்டமிட முடிவதில்லை.
2. போட்டியில்லாத வரையில் சிக்கலில்லை. நம்முடைய போட்டியாளர்களும் நமக்குப் போட்டியாக விளம்பரம் செய்ய ஆரம்பித்தால் போட்டி வெறி வளரும். வியாபரம் நடக்கிறதோ இல்லையோ, போட்டி விளம்பரங்கள் பெருகும் ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல விளம்பர ஊடகங்களின் உரிமையாளர்கள் சம்பாதிக்கத் தொடங்குவர்.
3. விளம்பரங்களின் வலிமைக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. நாம் செய்யும் விளம்பரங்களை உலகமே பார்த்து வியந்து, நம் பொருட்களை ஓடி வந்து வாங்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒரு செய்தித்தாளைப் புரட்டினால் நம்மில் எத்துணைபேர் ஒவ்வொரு வரியையும் படிக்கிறோம்? அப்படியே படித்தாலும் அப்பொருட்கள் தேவைப்பட்டாலும் கூட வாங்குகிறோமா என்ன?
விளம்பரம் செய்துவிட்டால் மட்டுமே வணிகம் நடந்து விடாது!பொருளின் தரம், விலை, விற்பனையாளர்களின் திறன், விற்பனையாளர்களின் ஆர்வம், அவர்களை நாம் நடத்தும் விதம், அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம், இவையெல்லாம் பல நேரங்களில் விளம்பரங்களை விட முக்கியமானவை.
4. விளம்பரம் செய்யுமுன் நம்முடைய பொருள் எளிதில் வாடிக்கையாளருக்குக் கிடைக்கிறதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கடைக்கு ஓடிப் போய் ‘பொருள் வேண்டும்’ என்று வாடிக்கையாளர் கேட்கும்போது, “அப்படியா? அப்படிப்பட்ட ஒரு பொருள் இருப்பதே தெரியாது!” என்று கடைக்காரர் கூறினால் நம் விளம்பரத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று பொருள். அது மட்டுமல்ல நம் நிறுவனத்தின் மீதுள்ள மதிப்பும் குறைந்து போய்விடும்.
5. எவ்வளவு இடைவெளி விட்டு விளம்பரம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானது. ஒருவேளை செலவு அதிகமாகிறது என்றோ அல்லது விளம்பரத்தால் அதிகப் பயனில்லை என்று நிறுத்தி விட்டாலோ ‘நிறுவனத்திற்கு என்ன ஆயிற்று? நின்று விட்டதா? நட்டத்தில் நடக்கிறதா?’ என்று பல ஐயங்கள் தோன்றும். எனவே விளம்பர இடைவெளிகளை திட்டமிடவேண்டும்.
6. பல நிறுவன உரிமையாளர்களுக்குத் தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு எவையெல்லாம் காரணம் என்று சரியாகத் தெரிவதில்லை. ‘விலையா? தரமா? விற்பனைத்திறனா? அல்லது இராசியா? இல்லை விளம்பரமா? ஒருவேளை இவை எல்லாமுமேயா, என்று குழம்பிக் கொள்பவர்கள் உண்டு. சிறந்த உரிமையாளர்கள் சரியாகக் கணக்கிடும் முறைகளை வைத்துக்கொண்டு, விளம்பரங்களால் வணிகம் எத்தனை சதவீதம் கூடியுள்ளது என்று கண்டுபிடிக்கிறார்கள். மற்றவர்கட்கு அது என்றும் சிக்கலே!
7) விளம்பரப் போட்டிகளால் ஏற்படும் விளைவுகளைக் காணும் போது வருத்தமும் வருவதுண்டு. தங்களுடைய பொருளின் பெருமையை விளம்பரப்படுத்துவதற்கு மாறாக போட்டி நிறுவனங்களின் பொருட்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் வருவதைக் காண்கிறோம். இதனால் தரம் தாழ்ந்த விளம்பரங்கள் உருவாகின்றன.
8) ஒரு பொருளை நன்றாக விளம்பரப்படுத்தி, சந்தைக்குக் கொண்டு வந்து விட்ட பிறகு, மிக மலிவான நிறுவனங்கள் போலியான பொருட்களை அதே பெயரில் வெளிவிட்டு மக்களை ஏமாற்றுவதைப் பார்க்கலாம்.’சக்தி மசாலா’ நிறுவனம் சிறப்பான விளம்பரங்கள்-தரம் இவற்றின் மூலமாக உயர்ந்த இடத்துக்கு வந்து விட்ட பிறகு, பல நிறுவனங்கள் சக்தி மசாலா’ என்ற பெயரில் மசாலாத்தூளை விற்கத் தொடங்கின. இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில்.தமிழில் அதே ‘கோபால் பல்பொடி’-ஆனால் ஆங்கிலத்தில் வேறு ஸ்பெல்லிங் போட்ட பற்பொடிகள் போட்டிக்கு வந்தன.
ஒரு காலத்தில் இதயம் நல்லெண்ணெய் பெரிய பாத்திரங்களில் விற்பனை செய்யப்பட்டன. சில்லறை வியாபாரிகளிடம் மக்கள் 1 கிலோ, 1ஞி2 கிலோ என்று கேட்டபோது, பெரிய பாத்திரங்களிலிருந்து அளக்கும் கருவிகளால் முகந்து எடுத்து, வாடிக்கையாளர்களின் பாத்திரங்களில் ஊற்றுவார்கள்.நாணயமற்ற சில வணிகர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது. இதயம் நல்லெண்ணெய் பெரிய பாத்திரத்தில் வேறு மலிவான எண்ணெயை ஊற்றி வைத்து, இதயம் நல்லெண்ணெய் பெயரைச் சொல்லி அதிக விலைக்கு விற்றவர்கள் இருந்தார்கள்.பின்னர்தான் இதயம் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளாக விற்றார்கள்.சிறந்த விளம்பரங்கள் மூலம் ஒரு பிராண்டை நாம் உருவாக்கினால், என்ன மோசமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் நாம் அறிந்து வைத்து, அதற்கு மாற்று வழிகளையும் கண்டு வைத்திருக்க வேண்டும்.
Explore hassle-free options for selling your house at https://www.webuyhouses-7.com/idaho/
(9) சில நேரங்களில் விளம்பரம் என்ற பெயரில் பல பொய்களைச் சொல்வதைக் காண்கிறோம்.’எம்முடைய இனிப்பு வகைகள் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல’ என்று ஒரு சிலர் உண்மையை சொன்னாலும் ‘அசல் நெய்யினால் செய்யப்பட்டவை’ என்று பொய் சொல்பவர்களும் உண்டு.’செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை’ என்று கூறி தங்க நகை விற்பவர்களுள் எத்தனை பேரால் அதே போல் விற்கமுடியும்.
பல்வேறு விளம்பரங்கள்-‘பற்பசைசோப்பு மருந்து வகைகள் சிகரெட், மதுவகைகள்-தொடர்பானவைகளில் நிறைய பொய்யான செய்திகள் இருப்பதைக் காணலாம்.வேடிக்கையாக ஒரு விளம்பரத்தைப் பற்றிக் கூறுவார்கள். ‘மொராக்கோ’ நாட்டு சுருட்டுகளுக்கு இப்படி ஒரு விளம்பரம் செய்தார்களாம்.
எங்கள் சுருட்டுக்களைப் பிடிப்பவர்கள் என்றும் இளமையாகவே இருப்பார்கள்!அவர்களிடம் கடன் கொடுத்தவர்கள் திரும்பக்கேட்டு வரமாட்டார்கள்!அவர்கள் வீட்டிற்குத் திருடர்கள் வரமாட்டார்கள்!அவர்கள் சாலையில் நடந்தால் அவர்களை தெரு நாய்கள் நெருங்கமுடியாது!விளம்பரங்கள் வந்த சில மாதங்களுக்குப் பிறகு ‘பொய்யான விளம்பரங்கள் கொடுத்து ஏமாற்றி விட்டதாக நுகர்வோர் வழக்கு மன்றத்தில் ஒருவர், சுருட்டுக் கம்பெனி மீது வழக்குத் தொடர்ந்தார்.சுருட்டுக் கம்பெனியின் வழக்கறிஞர் வாதாடினார், “யுவர் ஆனர், நாங்கள் ஒரு பொய் கூட சொல்லவில்லை!
நீங்கள் விளம்பரம் செய்ததெல்லாம் பொய் என்று வழக்கு இருக்கிறதே, எப்படி மறுக்கப் போகிறீர்கள்?யுவர் ஆனர், நான் சொல்லுவதைக் கொஞ்சம் கேளுங்கள். எங்கள் சுருட்டைப் புகைப்பவர்கள் என்றும் இளமையாகவே இருப்பார்கள் என்று கூறியிருந்தோம். அது உண்மை! முதுமை அடைவதற்குள் அவர்கள் செத்துப்போவதால் இளமையாகவே இறுதி வரை இருப்பார்கள்.எங்கள் சுருட்டைப் புகைப்பவர்கள் வாயிலிருந்து வீசும் நெடிக்கு அஞ்சி, கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்க வர மாட்டார்கள்.எங்கள் சுருட்டைப் பிடிப்பவர்கள் இரவு முழுக்க இருமிக்கொண்டே இருப்பார்கள். அதனால் எந்தத் திருடனும் திருடமாட்டான்.சுருட்டைப் பிடிப்பதால், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ஊன்று கோலோடு நடப்பவர்களை எந்த நாய் அணுகும்?விளம்பரம் மூலம் பொய்யைக் கூட எப்படிச் சொல்ல முடியும் பார்த்தீர்களா?
(வளரும்)
Meenatchi Sundaram.V
indaraya Ulagamae Poli ulagamaaka,,,innum sollapoanaal Naadaka Arangamaakavae ullanthu endrae Sollalaam….Ivarrukkellam Kaalam(Kadavul)thaan Pathil Solla vaendum……..