திறமை மட்டும் போதாது

– வினயா

எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் இருக்குமா என்ன? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமையாவது நிச்சயம் இருக்கும். இந்த உலகம் திறமைகளால் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் தீவிரமுள்ள திறமைதான் ஜொலிக்கிறது.

குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுப்பது பொதுவாக வீடுகள்தோறும் இருக்கிற விஷயம். பள்ளி ஆண்டு விழா, குடியிருப்புப் பகுதியின் புத்தாண்டுக் கொண்டாட்டம், இங்கெல்லாம் பிள்ளைகளைப் பாட வைப்பார்கள். அப்புறம் இருக்கவே இருக்கிறது, வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிற நேரம். சங்கீத வாசனையே இல்லாத சொந்தங்கள் முன்னால் பாடவிட்டு, அவர்களின் செயற்கையான புன்னகை’ பாராட்டுடன் சந்தோஷப்பட்டுக் கொள்பவர்கள் ஏராளம்.

ஆனால், குழந்தைகளின் இசைத் திறமையை தீவிரமாக எடுத்துக் கொள்பவர்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ஊடகங்கள் வழியே பிள்ளைகளை உலக அரங்குக்கு அறிமுகம் செய்கிறார்கள். தீவிரமான பயிற்சிகளிலும் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்கிறார்கள். இதன் விளைவு என்ன? விடுமுறையில் பிள்ளைகளை மற்றவர்கள் வெளியூர் கூட்டிச் செல்கிற போது, இந்த சாதனைப் பிள்ளைகள், நிகழ்ச்சிகளுக்காக தங்கள் பெற்றோர்களை வெளி நாடுகளுக்குக் கூட்டிப் போகிறார்கள்.

இது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும். தீப்பொறியை ஊதித் தீவிரமாக்கும்போதுதான் அது பெரு நெருப்பாய் பிரகாசிக்கிறது.

கடந்த மாதம் நமது நம்பிக்கை இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றில், பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பற்றிய குறிப்பு இருந்தது. அவருடைய பன்முகத் திறமைகள் பற்றிய விஷயம் அது. அவரைப் பற்றிய இன்னொரு விஷயம், ஒரியா, குஜராத்தி, மராட்டி உட்பட இந்திய மொழிகளில் எந்த மொழியில் பாடினாலும் தன் சொந்த மொழியில் பாடுவதுபோல் சரளமாகப் பாடுவாராம்!

பாடுவது திறமையென்றால், தனித்து நிற்கிற தீவிரம் அந்தத் திறமையை ஒளிவீசச் செய்கிறது. எத்தனையோ பேர், அடிப்படைப் பயிற்சிகளை மட்டுமே தங்கள் அடித்தளங்களாய் வைத்துக்கொண்டு, தொழிலில் ‘ கலையில் ‘ வேலையில் தீவிரமான அடுத்த கட்டம் நோக்கி நகராமல் தேங்கி நின்றுவிடுகிறார்கள். தொடர் பயிற்சியும் தீவிரமான பயிற்சியுமே நிபுணத்துவம் நோக்கி நகர்த்தும்.

மைக்கேல் ஏஞ்சலோ ஒருமுறை சொன்னார், ”என் இடைவிடாத பயிற்சிகளை ஒருவர் தொடர்ந்து கண்காணித்து வந்தால் சாதிப்பது எவ்வளவு சாதாரண விஷயம் என்று அவருக்கும் தெரியும்” என்று.

நிபுணர்கள் என்பவர்கள் முழுமனதுடன் ஈடுபடுபவர்கள். கவனம் சிதறாமல் செயல் படுபவர்கள். தங்கள் முழு சக்தியையும் கொடுத்து செயல்படுபவர்கள். ரிட்ஸ் காரிட்டன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹார்ஸ்ட்ங் கல்ஸ் இதையே இன்னும் கொஞ்சம் பகிரங்க மாகவும் ‘பளீர்’ என்றும் சொன்னார்.

‘உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து செய்ய வில்லையென்றால் நீங்கள் எதையுமே செய்ய வில்லை என்று அர்த்தம். செய்ய வேண்டியதை மட்டுமே செய்தால் நீங்கள் வெறும் இயந்திரம் என்று அர்த்தம். உணர்ச்சியுடனும் தீவிரத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படும்போதுதான் நீங்கள் நிபுணராகும் பாதையில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்!!’

திறமை இருப்பவர்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால் திறமை என்பது சராசரிக்கும் சற்றே மேலானது. அவ்வளவுதான். அவ்வளவேதான். திறமை தீப்பற்றும்போது, சிந்தனையிலும் செயலிலும் சூடுபறக்கும்போது, விருப்பங்களுக்காகவே வாழ்க்கை என்கிற வெறி பிறக்கும்போது, திசைகள் உங்களைத் திரும்பிப் பார்க்கும். வரலாறு உங்கள் பெயரைச் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *