வெற்றியின் பன்முகங்கள்

– ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் திரு. K.R. நாகராஜ்

உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் தலைசிறந்தவராக இருப்பவர், பில் கேட்ஸ். அடுத்து நமது ஊரில் நல்ல வளர்ச்சியோடு இருப்பவர் ரிலையன்ஸ் அம்பானி. அடுத்து நல்ல கோட்பாடுகளைக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் ஒன்று அது டாடா. இன்றைக்கு இந்திய அளவில் ஆடவர்களுக்குக்கான ஆடைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்கள் லூயிஸ் பீப்பி. தையல் இல்லாமல், பொத்தான் இல்லாமல், சிப் இல்லாமல் பெல்ட் அணியாமல் அணியக் கூடிய ஆடைகளை இன்றைக்கு தயாரித்துக் கொண்டிருப்பவன் நான்தான்.

ஒரு விதையை மண்ணில் பத்து அடி ஆழத்தில் புதைத்தால் அது முளைத்து வெளியே வர எவ்வளவு சிரமப்படுமோ, அவ்வாறு வாழ்வில் முன்னேறியவர்கள் நாங்கள். இன்றைக்கு மிகப் பெரிய சொத்து என்று கருதக்கூடியது என்னவென்றால் நாம் ஏழையாகப் பிறப்பதுதான். அதை நான் உணர்ந்து கூறுகிறேன். என் தந்தை ஒரு சாதாரண விவசாயி. அவினாசி பஞ்சாயத்தில் ஒரு கடைநிலை ஊழியர். அவர் மாதச் சம்பளத்தைக் கொண்டுதான் குடும்பம் நடத்தவேண்டும். அவிநாசி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் எங்களது ஊர்.

பிறந்ததில் இருந்தே சுட்டித்தனமாக இருந்த காரணத்தால் என்னை அருகில் இருந்த ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தனர். படிக்கும் போதே குடும்ப சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அளவு எனக்கு பக்குவம் இருந்தது. அதன் காரணம் ”அம்புலி மாமா” என்ற புத்தகம் வெளியாகிக் கொண்டு இருந்தது. அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு கடிதம் எழுதினேன். ”ஐயா எனக்கு என் பள்ளி படிப்புக்கான கட்டணத்தை கட்ட சிரமமாக உள்ளது.

உங்கள் புத்தகத்தை எங்கள் பகுதியில் விற்றுத்தரும் பணியை தந்து எனக்கு உதவுங்கள். ஆனால் என்னால் எந்த முன்பணமும் செலுத்த இயலாது” என்று. உடனே அந்த ஆசிரியர் எனக்கொரு பதில் கடிதமும் 100 புத்தகங்களையும் அனுப்பி வைத்தார். அதில் கிடைத்த பணம் கொண்டு என் அண்ணனுக்கும் எனக்குமான பள்ளி கட்டணத்தை என்னால் கட்ட முடிந்தது. அதேபோல வேறு சில புத்தகங்களையும் விற்க ஆரம்பித்தேன்.

பள்ளி படிக்கும் காலத்தில் என் ஆசிரியர் நாராயணசாமியின் தூண்டுதலின் காரணமாக நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று வந்தேன். ஆனால் 10ஆம் வகுப்பில் எனக்குள் இருந்த கர்வம், ”நான் தோற்றால் அனைவரும் தோற்று விடுவார்கள்” என்ற எண்ணத்தின் விளைவு 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு முதல் வகுப்பில் தோல்வி அடைந்தேன். எல்லா பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால் இந்த தட்டச்சு பாடத்தில் 32 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்து விட்டேன். ஏனென்றால் அதற்கு தனியாக பயிற்சி எடுக்க வேண்டும். பள்ளியில் சொல்லித் தர மாட்டார்கள். அதற்கு பணம் கட்டமுடியாமல் தோற்றுப் போனேன். ஆனால் அடுத்த 6 மாதத்தில் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். இதை நான் சுட்டிக் காட்டக் காரணம் அந்தத் தோல்வி புரட்டிப் போட்டது.

படிக்கும் காலத்தில் இருந்தே நாம் ஒரு வியாபாரியாக இருந்தால் மட்டுமே நல்ல முறையில் சம்பாதித்து இந்த வறுமையின் பிடியில் இருந்து மீள முடியும் என்ற எனக்குள் இருந்தது. நான் பள்ளி சொல்லும்போது எங்கள் ஊருக்குள் வாராவாரம் ஒரு அம்பாசிடர் கார் வந்து போகும். அவர் யார் என்று எனது பெற்றோர்களிடம் கேட்டேன். அவர் திருப்பூரில் பெரிய நிறுவனம் வைத்திருக்கிறார். ஜவுளி வியாபாரம் செய்கிறார் என்றனர். அவர் எவ்வளவு படித்திருக்கிறார் என்று கேட்டேன். 4ஆம் வகுப்பு என்றனர். வாத்தியார் நன்றாக படித்துள்ளார். ஆனால் அவருக்கு 1000 தான் சம்பளம். இவரால் மட்டும் எப்படி நிறுவனம் வைக்க முடிந்தது என்ற கேள்வி என் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்தது.

அதிகமாக படித்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. நான் 10 ஆம் வகுப்பு முடித்ததும் எனது தந்தை என்னை அவர் அலுவலகத்திற்கு சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். அப்போது என்னிடம் நான் உனக்காக என் அலுவலகத்தில் பில் கலெக்டர் வேலை வாங்கியுள்ளேன். அந்த வேலைக்கு நிறைய போட்டி இருந்தாலும் தன்மேல் உள்ள மதிப்பால் அந்த வேலை உனக்கு தந்துள்ளனர் என்றும் கூறினார். உடனே நான் சைக்கிளை விட்டு கீழே குதித்து நான் ஏதாவது டீக்கடையில்கூட வேலை செய்கிறேன். நான் இந்த அரசாங்க உத்தியோகத்திற்கு வரவில்லை என்று கூறினேன். என் அப்பா கோபத்துடன் என்னை அங்கேயே விட்டு விட்டு சென்றார்.

திரும்பிப் பார்த்தபோது ஒரு கடை தென்பட்டது. அதில் சென்று நான் 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டேன். நான் 6 மாதம் படிக்க வேண்டும். எனக்கு ஒரு வேலை வேண்டும் என்றேன். அவர்களும் என்னை வேலைக்குச் சேர்த்துக் கொண்டனர். அது ஒரு சோப் கடை. என்ன வேலை செய்ய தெரியும் என்று கேட்டனர். எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் என்றேன். உடனே ஒரு அறையை சுத்தம் செய்யும் வேலை கொடுத்தனர். மாதம் 260 சம்பளம். பின் படிப்படியாக என் வாழ்க்கை நகர்ந்தது. எல்லா ஊர்களிலும் வியாபாரத் துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறு வயதில் வியாபாரத் துறையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன்.

1983இல் அப்பா பெயரையும் என் பெயரையும் இணைந்த ராம்ராஜ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். அதற்கான என் முதலீடு 1 லட்சத்திற்கு குறைவு. அன்றே ஆந்திராவில் உள்ள பெரிய பெரிய கடைகளில் சென்று ஆர்டர் வாங்கிக்கொண்டு வருவேன். அதை உற்பத்தி செய்து அந்த கடைகளுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் எனது வேலையை தொடர்வேன். என்னிடம் பெரிய படிப்பும் இல்லை. என்னுடைய பெற்றவர்கள் பணக்காரர் களும் இல்லை. எனக்காக உதவியவர்களும் இல்லை. புதியதாக எந்த யுக்தியையும் நான் படிக்கவில்லை. நான் வெல்ல கடின உழைப்பும், சமயோசித புத்தியும். நாளை தீபாவளி என்றால் இன்றைக்கு பட்டாசு வியாபாரம் செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு படித்திருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. அந்த படிப்பின் முலம் நீங்கள் பெற்ற அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமே மிக முக்கியம்.

இன்றைய இளைஞர்களுக்கு நான் இதைச் சொல்லக் காரணம் ஒரு பட்டம் பெற்று விட்டாலே வீட்டில் உள்ள சிறு வேலையை செய்வதைக்கூட கேவலமாக எண்ணுகிறார்கள். பெற்றோர்களும் அதற்கு ஒரு காரணம். ஆனால் வேலை கிடைப்பதில்லை. பட்டம் பெற்றவர் களுக்கு ஒரு வங்கியில் உள்ள படிவத்தைக்கூட பூர்த்தி செய்யும் அளவுக்கு திறமை இல்லை. ஏனென்றால் நம் கல்வி முறை அவ்வாறு உள்ளது. படிப்பு மட்டும் போதாது அனுபவக் கல்விதான் என்றுமே நம்மை வாழ்க்கையில் உயர்த்தும். நான் எனது சிறு வயதில் மார்க்கெட் பகுதிக்கு ஆர்டர்கள் வாங்கச் செல்வேன்.

ஒரு கடைக்காரர் நான் என்றைக்கு போனாலும் நாளை பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விடுவார். ஒரு நாள் அவர் கடை திறந்த அடுத்த சில நிமிடங்களில் நான் அவர் கடைக்குள் நுழைந்தேன். அவர் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக திட்டினார். பின் நான் கொஞ்சம்கூட தயங்காமல் சொன்னேன். ஐயா காலையில் கோயிலுக்கு சென்று பின் உங்களைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டு சென்றால் எனக்கு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும்.. நான் இன்று உங்களிடம் ஆர்டர் கேட்டு வரவில்லை. உங்களைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லத்தான் வந்தேன் என்றேன். உடனே அவர் என்னை உட்கார வைத்து உபசரித்து எனக்கு ஒரு ஆர்டரும் கொடுத்தார். சமயோசித புத்தி.

பில்கேட்சும் பின்லேடனும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தனர். ஆனால் அவர்கள் அறிவு எவ்வாறு வேலை செய்துள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ”சினத்தைத் தவிர்” இதுதான் வியாபாரத்திற்கு மிக மிக முக்கியம். அதை விட முக்கியமான விஷயம், எந்த விதமான கெட்ட பழக்கங்களிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது. அப்போதுதான் நாம் ஒருவருடைய முகத்தைப் பார்த்து நியாயமாக வியாபாரம் செய்ய முடியும்.

வேட்டி என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் அதை விற்கும் முறை வித்தியாசமாக இருந்ததால்தான் நான் இந்த நிலையில் இருக்க முடிகிறது. புதியதாக கண்டு பிடிக்க வேண்டியதில்லை. இருக்கும் விஷயத்தை வித்தியாசமான முறையில் மற்றவர்களுக்கு முன் காட்ட விரும்புங்கள். வாழ்க்கையில் வாய்ப்புகள் இல்லை என்று துவண்டு விடாதீர்கள். ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். தொழில்கள் பல செய்வதற்கான வாய்ப்பு நம்மைச் சுற்றியே உள்ளன. அதைக் கண்டறிந்துவிட்டால் மிகப்பெரிய வெற்றியை அடையலாம்.

எல்லோரும் கூறுவது போல் என் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறார். என் மனைவி, வியாபார விஷயத்தில் நான் 20 நாள் மாதத்திற்கு வெளியூர் போக வேண்டியதாக இருந்தது. அப்போது என் மனைவி சொன்னார். நமக்கென்று அழகான வீடு, வசதி, அதைவிட சிறந்த முத்தாய் நம் மகள் இருக்கிறாள். இவற்றை எல்லாம் விட்டு விட்டு ஏன் வெளியூருக்கு சென்று கஷ்டப் படுகிறீர்கள். மற்றவர்கள் போல் நமது ஊரிலேயே வியாபாரம் செய்யுங்கள் என்ற நியாயமான கோரிக்கையை என் முன்வைத்து எனது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர், என் மனைவி.

நான் கற்றுக் கொண்ட யுக்திகளை எனது தொழிலாளர் களுக்கும் சொல்லிக் கொடுத்தேன். அதனால்தான் நான் இவ்வளவு வளர்ச்சியை அடைந்துள்ளேன்.
வெற்றி அடைவது என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமே. வெற்றி அடைந்து, அடுத்தவர்களையும் வெற்றி அடையச் செய்வது மட்டுமே உண்மையான வெற்றி என்று வாணவராயர் அடிக்கடி கூறுவார். இதை அழகாக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூறுவார். ”ஒரு பாலை வனத்தில் ஒருவர் நடந்து போகிறார். தாகம். அப்போது ஒரு தண்ணீர் குழாயைப் பார்க்கிறார். அப்போது அங்கே ஒரு சொம்பு நிறைய தண்ணீர். அந்த சொம்பில் எழுதியுள்ளது. ”இதில் உள்ள நீரை இந்த குழாயில் ஊற்றி 100 முறைஅடித்தால் நீங்கள் நினைத்த அளவு தண்ணீர் வரும். அதை அனுபவித்து விட்டு பின் மறுபடியும் இந்த சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு உங்கள் வழிப்பயணத்தை தொடரலாம்” என்று.

இப்போது அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது. அவர் அவ்வாறு அந்தக் குழாயில் ஊற்றி முழு முயற்சியுடன் 100 முறை முயற்சி செய்து அடிக்க வேண்டும். அந்த முயற்சியின் பயனாய் வரும் நீரை அனுபவிக்க வேண்டும். அதை பின் வருபவருக்கும் விட்டு செல்ல வேண்டும்.

2 Responses

  1. கண்ணன்

    Thank to you giving this articAl
    Today onwards I fallow this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *