– கிருஷ்ண வரதராஜன்
நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சி தொடர்
தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத் திலிருந்து திரும்பியதும் மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், “”இதோ பார்! இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா திருப்பிக் கொண்டு வந்திருக்கேன் பார்.”
மனைவி பல்லைக் கடித்தபடி கோபத்தோடு கத்தினாள், ”நீங்க காலையில ஆபிஸ்போகும் போது குடையே எடுத்துகிட்டுப் போகல.”
அது ஒரு முக்கியமான ஆப்ரேஷன். டாக்டரை சுற்றி நிற்கும் உதவியாளர்கள் டாக்டரின் தேவை புரிந்துகொண்டு மருத்துவக்கருவிகளை எடுத்து கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். திடீரென்று டாக்டர் ஆப்ரேஷனை நிறுத்திவிட்டு யோசிக்கிறார், ‘இதுக்கப்புறம் என்ன செய்யணும்.. அடடா.. மறந்து போச்சே..’
என்ன ஆகும்? என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதுக்கெல்லாம் சான்ஸே இல்லை என்கிறீர்களா.. ஆப்ரேஷன் செய்யும்போது சில மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டை மறதியாக உள்ளேயே வைத்து தையல் போட்டுவிடும் மறதி டாக்டர்களைப்பற்றி பேப்பரில் படித்திருக்கிறோம். இல்லையா..
கோர்டில் வக்கீல் வீராவேசமாக வாதாடிக் கொண்டிருக்கிறார். அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்கள். வக்கீல் சொல்கிறார், “இந்தியத் தண்டனைச் சட்டம்… ம்.. பிரிவுதான் நினைவில் இல்லை. அதன்படி இவருக்கு தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”
அதன் பிறகு அந்த வக்கீலை யாராவது நாடி வருவார்களா?
வீட்டில் சமையல் ஜருராக நடந்து கொண்டி ருக்கிறது. வாசனை மூக்கை துளைக்கிறது. பசியோடு போய் உட்காருகிறீர்கள். சாப்பாட்டை வாயில் வைக்க முடியவில்லை. அதிபயங்கர உப்பு. உப்பு போட்ட ஞாபகம் இல்லாமல், உங்கள் மறதி அம்மா இரண்டு முறை போட்டுவிட்டார். என்ன ஆகும்?
இப்போது புரிந்ததா.. எல்லாமே மெமரி தான். நீங்கள் எந்தத்துறையில் வெற்றி பெற வேண்டுமென்றாலும் நினைவாற்றல்தான் அடிப்படை. சிலபேர் எப்போதும் தங்கள் ஞாபக மறதியைப்பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், மூளையைப்பற்றி ஆய்வு செய்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள், ‘மறதி என்று ஒன்று கிடையவே கிடையாது. மூளையில் பதிந்த எந்த ஒரு செய்தியும் மறக்கவே மறக்காது.’
ஓர் எளிய உதாரணத்தின்மூலம் இதை புரிந்து கொள்வோம். உங்கள் பர்ஸிலிருந்து 200 ரூபாயை எடுக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பர்ஸில் 200 ரூபாயை வைத்திருக்க வேண்டும்.
வீட்டை விட்டுக்கிளம்பும்போது பர்ஸில் 200 ரூபாய் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்புகிறீர்கள். ஆபிஸில் வந்து பார்த்தால் அந்த 200 ரூபாய் இருக்குமா? இருக்காதா? வைத்திருந்தால் நிச்சயம் இருக்கும்.
அதுபோலத்தான் உங்கள் நினைவகத்தில் ஒரு தகவலை சரியான முறையில் பதிந்து வைத்திருந்தால் நிச்சயம் அது மறக்காது. ஆக மூளையில் முறையாக தகவல்களை பதிந்து வைப்பது எப்படி? மூளை எப்படி செயல் படுகிறது? நினைவாற்றல் எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் இந்தத்தொடரில் நாம் கற்கப் போகிறோம். அதுமட்டுமல்லாமல் சில பயிற்சிகளும் செய்து பார்க்கப்போகிறோம்.
அதற்கு முன்னால் நீங்கள் முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டியது, நினைவாற்றலை பொறுத்தவரை, எல்லோரும் சமம்தான். நினைவாற்றல் திறன் உள்ளவர்கள், நினைவாற்றல் திறன் இல்லாதவர்கள் என்றெல்லாம் யாரையும் பிரிக்க முடியாது. வேண்டுமானால் நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ளும் வழி முறைகளை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று பிரிக்கலாம். இதற்கும் ஓர் உதாரணம் பார்த்து விடுவோம்.
மாணவர்களுக்கிடையே சைக்கிள் ரேஸ் நடக்கிறது. ஒரே வகுப்பு மாணவர்கள், ஒரே கம்பெனி சைக்கிள் என்றாலும், எல்லோரும் ஒரே இடத்தை பிடிப்பதில்லை. ஒருவர் பர்ஸ்ட் பிரைஸ், ஒருவர் செகண்ட் பிரைஸ், ஒருவர் தேர்டு பிரைஸ் என்று ஆளுக்கொரு நிலையை பெறுகிறார்கள்.
வெற்றியில் உள்ள வித்தியாசத்திற்கு காரணம், சைக்கிளா? அல்லது அதைப் பயன் படுத்தியவர் பயன்படுத்திய விதமா?
புரிகிறதா? எப்படி ஒரே நிறுவனத்தின் சைக்கிள்தான் என்றாலும் வெற்றிபெறும் நிலைகள் மாறுபடுகிறதோ, அதேபோல சம திறன்கள் கொண்ட மூளைதான் என்றாலும் அதை பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து நம் வெற்றி நிலைகளும் மாறுபடுகிறது.
எனவே, இதை மீண்டும் ஒரு முறை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
நினைவாற்றலை பொறுத்தவரை இயற்கை நம் அனைவருக்கும் சம அளவில்தான் ஆற்றலை வழங்கியிருக்கிறது. அதை பயன்படுத்தும் இடத்தில்தான் நமக்குள் வித்தியாசம்.
இந்த வித்தியாசங்களை குறைத்து வெற்றி பெறுவது எப்படி?
முதலில் நினைவாற்றல் பயிற்சிக்கென்று தனியாக ஒரு நோட்டு போடுங்கள். இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவடையும் வரை, இல்லை, இல்லை, உங்கள் நினைவாற்றல் மேம்படும்வரை, அதில்தான் அனைத்து பயிற்சிகளையும் செய்து வர வேண்டும்.
நோட்டில், உங்களுக்கு அடிக்கடி மறக்கும் விஷயங்களை பட்டியலிடுங்கள்.
நீங்கள் குடும்பத்தலைவியாக இருந்தால் எந்தெந்த செயல்கள் மறந்து போகிறது? எது அடிக்கடி மறந்து போகிறது? என்று எழுதுங்கள். உதாரணத்திற்கு சாவியைத்தான் அடிக்கடி தொலைத்து விடுகிறீர்கள்? எங்கே வைத்தோம்? என்று தெரியாமல் தேடுகிறீர்கள் என்றால், அதை பயிற்சி நோட்டில் குறித்துவையுங்கள்.
நீங்கள் மறந்துவிட்டு தேடும் பொழுதெல்லம் தேதியிட்டு எழுதுங்கள். நீங்கள் மாணவராக இருந்தால் பாடங்கள் மறந்து போகிறது என்று பொதுவாக எழுதாமல் புரிந்த பாடங்கள் மறக்கிறதா? புரியாதா பாடங்கள் மறக்கிறதா?
ஒருமுறை படித்த பாடங்கள் மறக்கிறதா? இல்லை. நான்கு முறை படித்தும் மறக்கிறதா? எனத் தெளிவாக பட்டியலிடுங்கள்.
நீங்கள் வணிகத்தில் இருக்கிறீர்கள் என்றால் எதெல்லாம் மறந்து போகிறது என்ற பட்டியலோடு, நீங்கள் பரபரப்பாக இருக்கும்போது மறக்கிறதா? இல்லை, அமைதியான நிலையில் இருக்கும்போது கூட மறக்கிறதா? என்று உங்கள் மனநிலையையும் சேர்த்து குறித்துவையுங்கள்.
இதனால் என்ன பயன்?
ஒரு மாதம் இதை தொடர்ச்சியாகச் செய்து வாருங்கள். உங்கள் மறதி குறைந்து போயிருக்கும். ஏன் இல்லாமல்கூட போக வாய்ப்பிருக்கிறது.
அது எப்படி?
sahridhayan
அருமையாக இருக்கிறது.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !
மறதி என்பது பொய் (நமக்கு முக்கியம் இல்லாதவற்றை நாம் கவனித்து செய்வதே இல்லை, அதாவது முழு ஈடுபாடு தான் தேவை ) இதை நான் என்னை வைத்து பரிசோதித்துள்ளேன்!
சஹ்ரிதயன்