அவரவர் கடமை

– வழக்கறிஞர் த. இராமலிங்கம்

வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.

ஒரு ஜென் குருவைப் பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். ”ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர்; அவரிடம் பாடம் கற்றால், மனம் தெளிவாகும்… வாழ்வு எளிதாகும்” என்றெல்லாம் சொன்னார்கள். மிக்க ஆவலுடன் அவரைத் தேடிப் போனார். அவர் காலில் வீழ்ந்து வணங்கி, ”ஐயா… ஜென் தத்துவத்தை எனக்கு விளக்க வேண்டும்…’ என்றார்.

‘ஜென் தத்துவம் என்றால்…’ என்று தொடங்கிய குரு, ‘நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா…’ என்றார். வந்தவருக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. எரிச்சலாகவும் இருந்தது. ‘என்ன மனிதர் இவர்…? இவரைப் போய் மிகப்பெரிய ஆள் என்கிறார்களே… அடிப்படை நாகரிகம் தெரியவில்லையே… எனக்குத் தேவை என்றால் நான் போய்க்கொள்ள மாட்டேனா… இவர் ஏன் இதைச் சொல்கிறார்… மிகப்பெரிய தத்துவ ஞானங்களைச் சொல்வார் என்று நம்பி வந்தால், படிப்பறிவு இல்லாதவரைப் போல் நடந்து கொள்கிறாரே…’ என்றெல்லாம் மனத்துக்குள் சலித்துக் கொண்டவர், வேறு வழியின்றி எழுந்து போய் விட்டு வந்தார்.

‘புரிந்ததா…?’ என்றார் குரு. ‘இதில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது…’ என்பதைப் போல அவரைப் பார்த்தார் வந்தவர். ‘அரசனோ, மிகப் பெரிய அறிஞனோ, அல்லது ஒன்றும் தெரியாத முட்டாளோ, ஊரையே விலைக்கு வாங்கும் அளவுக்குப் பணக்காரனோ, அல்லது அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவனோ, எவராக இருந்தாலும், இப்போது நீ போய் செய்துவிட்டு வந்த வேலையைச் செய்யாமல் இருக்க முடியுமா? எல்லோரும் மனிதர்கள். எல்லோரும் சமமானவர்கள்.

அப்படி இருக்கையில் மனிதர்களுக்குள் வேறுபாடு என்பது எப்படி இருக்க முடியும்?
‘அது மட்டுமல்ல… நான் உன்னைச் செய்யச் சொன்னது அற்பமானதுதான். ஆனால், அது எவ்வளவு முக்கியமானது…..? உனக்கு, நீதான் போய் அந்த வேலையைச் செய்ய வேண்டும்… எனக்கு நான்தான் போக வேண்டும். அதிகாரிக்காக, அவனுடைய வேலைக்காரனையோ, பணக் காரனுக்காக ஓர் ஏழையையோ அனுப்ப முடியுமா? எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும் அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும்.’ வந்தவர் வாயடைத்துப் போய்விட்டார்.

மிக ஆழமான கருத்துக்களை, இந்தக் கதை நமக்கு விளக்கிவிடுகிறது. மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை; அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். அதற்கு மற்றவர் தடையாக இருக்கக்கூடாது. இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருக்கும் சூழலைக் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது?

சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூறு, ஒரு பாடலில் ஒவ்வொருவரின் கடமையைப் பேசுகிறது. எல்லோருக்கும் அறிமுகமான பாடல்தான். ஒரு தாய் கூறுவதாக, பொன்முடியார் என்னும் புலவர் எழுதிய பாடல் இது.

‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே..
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே..
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே..
நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே..
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’

பெற்று, வளர்த்து உலகத்தை எதிர் கொள்ளத் தயாரானவனாக ஓர் இளைஞனை உருவாக்குதல் ஒரு தாயின் கடமை. அவனை உயர்ந்தோனாக பரிணமிக்கச் செய்தல் தந்தையின் கடமை. தாயும் தந்தையும் தத்தம் பணியினை ஒழுங்காகச் செய்தால், அவர்களுக்கான நல்ல மகன் அல்லது மகள் மட்டுமல்ல; சமுதாயத்துக்கு ஒரு நல்ல தலைமுறையும் கிடைக்கும்.

அப்பாவுக்கு ஒரு வீடு போதாமல் இரண்டும், ‘டாஸ்மாக்’ துணையும் இருந்து; அம்மா தொலைக்காட்சியில் வரும் குடும்பச் சண்டைகளுக்குக் கவலைப்படுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்து, வீட்டில் சண்டை சச்சரவுக்குக் குறையில்லாமல் இருந்தால், சூரிய வெளிச்சமும் தண்ணீரும் கிடைக்காத செடியாகத் தான் அடுத்த தலைமுறை உருவாகும்.

மூன்றாவதாகச் சமுதாயத்தின் கடமையைப் பேசுகிறது பாடல். வீரனுக்கு வேல் தவிர்க்க முடியாதது. அதைக் கொல்லன் செய்து கொடுக்கிறானல்லவா? அது போல, ஒவ்வொரு இளைஞனும் எந்தத் துறையில் வெற்றிகரமாக வர விரும்புகிறானோ, அந்தந்தத் துறையில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்பினை அவருக்கு உருவாக்கிக்கொடுக்க வேண்டும். கூர் மழுங்கிய, ஒரே தாக்குதலில் உடைந்து போகக்கூடிய, உறுதியான பொருளைத் தாக்கும்போது வளைந்து போவதாக வேல் இருக்கக் கூடாதல்லவா?

அதே போல், இளைஞர்க்கு ஒரு சமுதாயம் உருவாக்கித் தரும் வாய்ப்புக்கள் உண்மையானதாக, உறுதி மிக்கதாக இருக்க வேண்டும்.

களத்தில் வேல் வீரனுக்கு வெற்றியைத் தருவதுபோல, வாழ்க்கையில் இந்த வாய்ப்புக்கள் இளைஞர்க்கு வெற்றியைத் தர வேண்டும்.

நாட்டில் இளைஞர், பொறுப்பை உணர்ந்தவராக, விதிகளுக்குக் கட்டுப்படுபவராக இருப்பது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்துத் தான்.

தொடர் வண்டியின் பொறி (ங்ய்ஞ்ண்ய்ங்) தண்டவாளத் திலிருந்து இறங்கி விட்டு, பின்னால் வரும் பெட்டிகளைப் பார்த்து ‘நீங்கள் இப்படிக் கவிழலாமா?’ என்று கேட்பது, எவ் விதத்தில் நியாயம்? அனைத்து விதமான கள்ளத்தனங்களும் செய்து மேலே சென்றவர், ‘இளைஞர்களே! நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லும் அறிவுரை எடுபடுமா என்ன?

தாய், தந்தை, சமூகம், ஆட்சியாளர் என அனைவரும் பொறுப்புள்ள இளைஞரை இப்படி உருவாக்குவது ஏன் தெரியுமா? தன்னுயிர்க்கு அஞ்சாமல் போர்க்களத்தில் யானையை எதிர்த்து வீரன் நிற்பதுபோல, தன்னலம் ஒன்றையே நினைத்து வருமானத்துக்காக எதையும் செய்யத் துணியாமல், தன்னைக் காத்து வளர்த்தெடுத்த இந்த சமுதாயத்துக்குத் தான் செய்யவேண்டிய கடமையைச் செய்யவும்தான்.

மேலே பார்த்த ஜென் கதையைப் போல, அவரவர் கடமையை அவரவர் பூரணமாகச் செய்ய வேண்டும். இதில் பிசகு நடந்தால், விளைவு நிச்சயம் விபரீதமாகத்தான் இருக்கும்.

இந்தக் கருத்தினை மிக ஆழமாக உள் வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டிய கடமை நமக்கு நிறைய இருக்கிறது. ஏனெனில், நம் நாடு இப்போது இந்த விபரீதத்தைச் சந்திக்கத் தொடங்கி விட்டது.

நமது அரசியல் நிர்ணயச் சட்டம் சொல்லும் ஆட்சித்துறை, அதிகாரத் துறை, நீதித்துறை ஆகிய மூன்றைப் பற்றியும் நாம் அறியும் செய்திகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. கடமை தவறுதல் என்பது எல்லா இடங்களிலும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்னர், கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவர் கொல்லப்பட்டதும், அதில் சிறுமி கொல்லப்பட்ட முறையும் தமிழ் நாட்டையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தின. சில நாட்களில், குற்றவாளிகளில் ஒருவன் தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, காவலரால் கொல்லப்பட்டான். மரணம்தான் அவனைப் போன்றவர்களுக்கு உரிய தீர்ப்பு என்பதில், ஒரு சிலருக்கே கருத்து மாறுபாடு இருக்க முடியும்.

ஆனால், காவலரால் அவன் கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், மக்கள் மகிழ்ச்சியுடன் அதனைக் கொண்டாடிய விதம், நமது சட்டங்களின் தோல்வியைக் காட்டியது. அந்தந்தப் பொறுப்பில் இருப்பவர்கள். அவரவர் கடமையைச் செய்யத் தவறியதன் விளைவுகளே அவை.

நமக்குப் பொறுப்பு நிறைய இருக்கிறது, ‘எல்லோரும் கடமை தவறுகிறார்கள். நாமும் அப்படி இருந்தால்தான் உருப்பட முடியும்’ என்ற எண்ணம் நமது மனத்தில் தோன்றிவிடக்கூடாது. ‘இந்த நிலை மாறும். அதற்கான உயிர்த்துடிப்புடன் நாம் இருக்க வேண்டும். ஏனெனில், எது சரியோ, எப்போதுமே அதுதான் சரி’ என்கிற சிந்தனை நம் மனத்தில் இன்னும் உறுதிகொள்ள வேண்டும். இந்த உறுதிதான் நமது அடுத்த தலைமுறையைப் பண்பட்டதாக உருவாக்கும்.

அடுத்த தலை முறையை, கடமை தவறாத உயர்ந்த ஒன்றாக உருவாக்கும் பெரும்பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது.

  1. selvan

    ரொம்ப மகிழ்ச்சி உங்கள் கருத்துகள் அருமை மேலும் இது போன்ற உன்னத கருத்துகளை எதிர்நோக்குகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *