– கிருஷ்ண வரதராஜன்
அன்பைச் சொல்லும் அழகான வழி..!
எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டது. இத்தனை வருடத்தில் இதை வாங்கிக் கொடுங்கள். அதை வாங்கிக்கொடுங்கள் என்று எதைக் கேட்டும் என் மனைவி அனத்தியதில்லை. அவர் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது பூ. தலையில் வைக்க மல்லிகைப்பூ.
நான் கேட்காமலே எல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவேன். ஆனால், நான் வாங்கித்தராத ஒன்றே ஒன்று அதே பூதான்.
வாங்கியே தரக்கூடாது என்றெல்லாம் எந்தக் குறிக்கோளும் எனக்கு இல்லை. வேலைப்பளுவில் பூ கேட்டதே மறந்துவிடும்.
இதற்காக என் மனைவி வருத்தப் படுவதில்லை என்றாலும் இதைச் சொல்லாமல் விடுவதுமில்லை. ஒவ்வொரு முறை கூட்டத்திற்கு கிளம்பும்போதும், ‘இன்றைக்காவது மறக்காமல் வாங்கித் தருகிறீர்களா? பார்ப்போம்’ என்பார். ‘இன்றைக்கு நான் ஞாபகப்படுத்த மாட்டேன். உங்களுக்காக ஞாபகம் வருகிறதா பார்ப்போம்’ என்பார்.
நான் மனதுக்குள் உறுதி எடுத்துக் கொள்வேன். இன்று மறக்காமல் வாங்கிவந்து விட வேண்டும் என்று. ஆனால், வழக்கம்போல வீட்டிற்கு வந்ததற்குப் பிறகுதான் நினைவிற்கு வரும்.
மன்னிப்பு கேட்பேன். பரவாயில்லை என்பார். ஆனாலும் அடுத்தமுறை மறக்காமல் நினைவூட்டுவார்.
நிறைய நகைகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். நிறைய உடைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஏன் நிறைய பணம்கூட கொடுத்து வைத்திருக்கிறேன். ‘ஏன் இந்த ஒத்த ரூபாய் பூவை நீயாக வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாதா? இதைப்போய் நான் வாங்கித் தரவில்லை என்பது ஒரு குறையா?’ இது என் வாதம்.
‘மனைவிக்கு இவ்வளவு செய்கிறவருக்கு இந்த ஒரு ரூபாய் பூ மட்டும் என்ன கஷ்டம். பிரியத்தோடு அதை நீங்கள் வாங்கிக் கொடுத்தால்தான் என்ன?’ என்பது அவர் தரப்புவாதம்.
இப்படியாக திருமணமாகி ஒரு வருடம் ஓடி விட்டது. ஒருமுறை நிகழ்ச்சிக்காக கரூர் சென்றிருந்தோம். ‘ஆனந்தம் இனி ஆரம்பம்’ என்ற தலைப்பில் கணவன் மனைவி உறவு பற்றி நான் பேசுகிறேன். ஹோட்டலில் தங்கியிருந்தோம்.
கூட்டத்திற்காக காலையில் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, வழக்கம்போல, சிரித்துக் கொண்டே என் மனைவி சொன்னார், ”பார்ப்போம்… கணவன் மனைவி அக்கறை பற்றி பேசப்போகிறவருக்கு, அவர் மனைவி மேல அக்கறை இருக்கிறதா என்று”
எனக்குப் புரிந்து விட்டது. இது பூ மேட்டர். உடனே அறையில் இருந்த இன்டர்காமை எடுத்து ரூம் சர்வீஸ்க்கு போன் செய்தேன். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்றார் என் மனைவி. குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.
‘ரூம் பாய்க்கு போன் போட்டு’ என்று நான் சொல்லத் தொடங்கும்போதே, ‘அப்புறம் என் வாயில் வந்துடும்’ என்றார்.
அப்புறம் என் வாயில் வந்துடும் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், ‘பூ கேட்டால் நீங்கள்தான் வாங்கித் தரவேண்டும். நீங்கள்தான் என் கணவர். ரூம் பாய் அல்ல.’
நான் போனை வைத்துவிட்டுக்கேட்டேன். ”சரி. நான்தான் உன் கணவன். அதற்காக நானே மல்லிகைத் தோட்டம் போட்டு, மல்லிகை பறித்து, நானே தொடுத்து, நானே தலையில் வைத்து விட வேண்டுமா? தேவையில்லை. யாரோ தோட்டம் போடுகிறான். அதை யாரோ பறிக்கிறான். யாரோ அதை சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கிறான். அதை யாரோ ஏலத்தில் எடுக்கிறான். அதை யாரோ ஒரு வியாபாரி வாங்கி தொடுக்கிறான். விற்கிறான்.
அதை யாரோ ஒரு ரூம் பாய் வாங்கி கொண்டு வந்து, ரூமில் தந்தால் அது மட்டும் குற்றமா? எப்படியிருந்தாலும் நான்தானே பணம் தரப்போகிறேன்” என்றேன்.
என் மனைவியால் எதுவும் பேச முடிய வில்லை. எப்படி சமாளித்தேன். பாருங்கள். இவ்வளவு டயலாக் பேசினேனே தவிர, கடைசியில் வழக்கம்போல பூ வாங்காமலே நிகழ்ச்சிக்கும் சென்று பேசிவிட்டும் வந்தாகிவிட்டது.
இது நடந்த ஆறு மாதத்திற்கு பிறகு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இன்டர்வியூ டெக்னிக்ஸ் பற்றிய பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தேன்.
முதல்நாள் வகுப்பிற்கான தயாரிப்பில் இருந்தபோது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
ஆண்ர்க்ஹற்ஹ, தங்ள்ன்ம்ங், இஹழ்ன்ஸ்ரீன்ப்ஹம் ஸ்ண்ற்ஹ இந்த மூன்றிற்கும் என்ன வித்தியாசம்? நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இதை அனுப்ப வேண்டும். மூன்றும் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் இருக்கிறது.
ஆனால் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. என்ன வேறுபாடு எனக்கு சட்டென்று பிடிபடவில்லை.
இந்த அளவுக்கு நெட் இல்லாத அந்த நாட்களில் வேறு வழியில்லாமல் என் மனைவியை தொடர்பு கொண்டு வித்தியாசம் கேட்டேன். அப்போது இரவு மணி பனிரெண்டிருக்கும் தூக்கக் கலக்கத்தோடு, ‘தெரியலியேங்க’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.
நல்ல வேளை! நமக்குத் தெரியாதது அவருக்கு தெரிந்திருந்து நான்தான் இவருக்கு பாயிண்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி விடக்கூடாதல்லவா!
நானும் படுத்துவிட்டேன். சரியாக இரண்டு மணிக்கு போன் செய்தார். மூன்றுக்கு உள்ள வித்தியாசத்தை விளக்கினார்.
மறுநாள் வகுப்பில் சொல்லிவைத்தது மாதிரி ஒரு மாணவன் சந்தேகம் கேட்டான். நான் விளக்கினேன். கைதட்டல்களோடு நிகழ்ச்சி முடிந்தது.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தேன். கல்லூரி வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு என் மனைவி நினைவு வந்தது. பூ வாங்கினேன்.
திருநெல்வேலியிலிருந்து சென்னை வருவதற்குள் பூ வாடிவிட்டது. ஆனால், என்ன நினைத்து வாங்கினேன் என்று சொல்லி, அதைக் கொடுத்தபோது என் மனைவியின் முகத்தில் சந்தோஷம் பூத்தது.
அப்போதுதான் புரிந்தது. என் மனைவிக்கு பூ பொருட்டல்ல. என் கணவரின் நினைவில் எப்போதும் நான் இருக்கிறேனா என்பதுதான் அவருக்கு முக்கியம். அதை சோதிக்கும் அன்பான வழிமுறை பூ.
பர்ஸில் பத்தாயிரம் ரூபாய் பணமே இருந்தாலும் அதை பர்ஸூக்குள்ளேயே வைத்து இருக்கும்வரை யாருக்கு தெரியப்போகிறது. அதில் ஒரு பத்து ரூபாயை எடுத்து ஒரு உடன் இருப்பவருக்கு ஒரு பிஸ்கட்டாவது வாங்கிக் கொடுத்தால்தானே பசியாறும்.
உள்ளுக்குள் எக்கச்சக்கமாய் அன்பை வைத்திருந்தாலும், அதை வெளிப்படுத்தினால் தானே வாழ்க்கை இனிக்கும்.
அன்று முதல் எந்த ஊருக்குச்சென்றாலும் அங்கிருந்து எதையாவது வீட்டிற்கு வாங்கி வருவேன்.
குற்றாலத்தில் இப்படித்தான் என் மனைவிக்கு ஹேர்பேண்ட் வாங்கிக் கொண்டிருந் தேன். உடன் இருந்தவர் ”சென்னையில் கிடைக்காததா, இங்கே போய் கூடுதல் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்களே!” என்றார்.
எனக்குத்தான் காரணம் தெரியும். இதை கொண்டு போய் கொடுக்கும் போது என் மனைவி நினைப்பார், ‘குற்றாலத்திற்கு போய்கூட, என் கணவர் குளிக்கிற வேலையை பார்க்காமல் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று.
இப்படி அன்பைச்சொல்ல ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஒன்றைச்செய்தால்கூட போதும் வாழ்க்கை எப்போதும் இனிக்கும்.
fathima
nice thank you
nicson
soo….nice