– மகேஸ்வரி சற்குரு
”நான் எப்படியாவது பெரிய ஆளாக மாறிடணும்.” ”நான் மட்டும் மனசு வைச்சா?!”
ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றுகின்ற நினைப்பு இதுதான். அது சரிதான். எப்படியும் பெரிய ஆளாக மாறிடலாம். ‘எப்படி?’ என்பதில் இருக்கிறது வெற்றி!
மனதில் பளிச்சிடுகின்ற இலக்குகள்மீது நாம் பயணிக்கின்ற போது கிடைக்கின்ற சுகம் தனியான, தணியாத சுகம். ”அவதார்” ஆங்கிலப்படத்தின் கதாநாயகன், குதிரை போன்ற தோற்றமும் கழுகு போன்ற பறக்கும் தன்மையும் கொண்ட மிருகத்தின்மீது இலகுவாக ஏறிஅமர்கிறான். அதன் இறக்கைகள் இவனுக்கு பிடிமானம், அதன் பிரம்மாண்டம் அவனுக்கு குதூகலம்!!
முதலில் வானத்தைத் தொடுகிறான். பின் பூமியைத் தொட்டு, பின் மீண்டும் எம்பிப் பறக்கிறான். படம் பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் எல்லை தாண்டிய சந்தோஷம் கதாநாயகன் வென்றுவிட்டது தான் வென்ற பிரமையைத் தந்தது. இந்த உணர்வுதான் இலக்கினை எட்டுகின்ற நேரத்தில் நாம் அனுபவிக்கின்ற இனிமை!
வெற்றியின் உயரத்தையும், ஆழத்தையும் ஒரே சமயத்தில் எட்டுவதும் அதிசயமல்ல. நம்மாலும் முடியும். மரபின் மைந்தன் முத்தையாவின் வரிகளில் சொல்வதென்றால்,
வெற்றி என்பது பந்தயக்குதிரை!
பிடித்து இழுத்து ஏறி
அமரும்வரை போராட்டம்!
ஏறி அமர்ந்துவிட்டாலோ
கொண்டாட்டம்தான்!!
ஆர்னால்டு கிளாடுரா என்ற வெற்றி யாளனின் வரிகளில் சொல்வதென்றால், வெற்றி என்பது ஒரு வெடி! அது தானாக வெடிக்காது! நீ தான் பற்ற வைக்க வேண்டும்.
இலக்குகள் இனிமையாவதற்கு மூன்று விசா கார்டுகள் தேவை:
1. எது நமக்கு சரியான இலக்கு என்று தீர்மானித்தல்
2. தீர்மானத்தின் மீதான தீவிரத்தன்மை மற்றும் இரகசியத்தன்மை
3. நமக்கும் இலக்குக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என கணக்கிடல்.
தீர்மானித்தல் என்பதுதான் சற்றே சிரமமான வேலை என்று சொல்லலாம். இது செய்யலாமா? இல்லை இதுவா? அதுவோ? எதுவோ? என்று அடுக்கிக் கொண்டே போனால் நிறைவில் எல்லாமே அந்தரத்தில். ஒருவர் ரூ.10 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று எல்.கே.ஜி. குழந்தையாய் முழித்துக் கொண்டிருந்தார். இருக்கின்ற பழைய இடத்தில் கடைகள் கட்டினால் வாடகை வரும். கடைகள் கட்டலாமா? இல்லை. இடம் வாங்கிப் போடலாமா? இல்லை கார் வாங்கலாமா? நகை வாங்கலாமா? வெள்ளிக்கட்டிகள் வாங்கலாமா? இஷ்டத்துக்கு இறக்கை கட்டி அண்ணாமலை சைக்கிளாய் பறந்தது மனசு. சரி. நண்பர்களிடம் சொல்லலாமா? என சொல்லப்போக… பட்டி மன்றம் வழக்காடு மன்றமாய் மாறியது அவரின் பத்து லட்சம்.
ஒருவர் கடை கட்டுங்கள். வாடகை அள்ளலாம் என்றார். உடனே இன்னொருவர் வரி கட்டி வீணாய்ப்போவாய். இடம் வாங்கு. கோடி கோடியாய் கொட்டும் என்றார். மற்றொருவர் பேசாமல் தொழில் நடத்தப்பா… என்று கூப்பாடு போட, ஆறுமாதமாய் யோசித்ததில் செங்கல்லும் சிமெண்ட்டும் போட்டி போட்டுக்கொண்டு விலை ஏறிப்போனது. இரும்பின் விலை தங்கமாகிப் போனது. ஏழாவது மாதம் இவரின் இலக்கு குறைப் பிரசவம் ஆனது தெரிந்து, நொந்துபோன மனிதர், மந்தையிலிருந்து வெளியேறிய ஆடுமாதிரி விழித்தார்.
முடிந்தவரை தீர்மானிக்கப்பட்ட நம் முடிவுகளும் இலக்குகளும் சிதம்பர இரகசியமாக இருப்பதுதான் சரியான முடிவு. விளம்பரப் படுத்தப்படாத இலக்குதான் வெற்றியடையும். நம் இலட்சியத்தை இரகசியமாய் வைத்திருந்தால் அதன் பயணம் வெற்றியடையும்.
நம் மனதில் வைக்கப்பட்ட இலக்கினை தீவிரப்படுத்துதல். அதன் தன்மையை தீவிரப் படுத்துதல். 1) 24 மணிநேரத்தில் சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர பிற வினாடிகளில் நாம் எப்படி இதைச் செய்யப்போகிறோம் என நினைக்க வேண்டும். முயற்சிகள்மீது பயிற்சிகள் தொடர வேண்டும்.
2) எடுத்த முடிவுகளை மனதில் எழுதியதோடு மட்டுமல்லாது தாள்களில் எழுதி எழுதிப் பார்க்கவேண்டும். எழுதுதாள்களில் எழுதப்படுகிற இலக்குகள் 200% வெற்றியடையும்.
நிறைவாக, இடைவெளி எவ்வளவு எனக் கணக்கிடல்! இது ரொம்ப ரொம்ப சுலபம்! கவிப் பேரரசு வைரமுத்து ஒருமுறை குறிப்பிட்டார், ”எனக்கும் வெற்றிக்குமான இடைவெளி எது என ஆராய்ந்தேன், அந்த இடைவெளியை என் தமிழ் கொண்டு நிரப்பினேன்!” அவருக்கு இடை வெளியை நிரப்ப தமிழ் உதவியது. நமக்கான இடைவெளியை கணக்கிட நம்மால் மட்டுமே முடியும். இடைவெளியின்றி சுற்றுகின்ற அணுக்கள் ஆக்கத்தை தரும். ஆக்ஸிஜனும், ஹைட் ரஜனும் சரியான விகிதத்தில் கலந்தபின்தான் நீர் என்கிற (ஏ2ஞ) அதிசயம்.
1983ல் லார்ட்ஸ் மைதானம் எதிர்பார்த்தது மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றும் என! வென்றதோ இந்திய அணி. 183 ரன்கள் என்பது இடைவெளி! கபில்தேவ் என்கின்ற மனிதன் தன் இலக்கின் மீதிருந்த படுதீவிரத் தன்மையுடன் போராடி தன் தேசத்துக்கும் உலகக் கோப்பைக்கும் இருந்த இடைவெளியை தன் சுழல் பந்தால் சுருட்டி எடுத்தார். இலக்குக்கும் இலக்கை எட்டுவதற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புங்கள்.
Leave a Reply