வெற்றி வாசல் 2010

மனநல மருத்துவர் டாக்டர் குமாரபாபு

இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துள்ள நிலையில் மூளையின் செயல்பாடு பற்றிய மர்மத்தை இன்றுவரை 5%வரைகூட அறிய முடியவில்லை. அமெரிக்காவில் டுவின் டவர் விபத்து நடந்த பின் அமெரிக்க அரசு கோடிக்கான பணத்தை மூளை பற்றி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களோடு கலந்து வெளிவராத பல ஆய்வு கருத்துக்களை பார்க்கும்போது மூளையின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் மிகவும் பிரம்மிப்பாகவும் பயங்கரமாகவும் உள்ளது.

1%க்கு குறைவான குழந்தைகள்தான் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கின்றன. 99% குழந்தைகள் சாதாரணமாகத்தான் பிறக்கின்றனர். ஆராய்ச்சியில் பார்த்தால் நமக்குத் தரப்பட்டுள்ள அபாரமான சக்தி மூளைதான். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் நமக்கு யாரும் கற்றுக் கொடுப்பதில்லை.

நாலெட்ஜ்தான் பவர் என்கின்றனர். எதையும் செயல்படுத்தினால் பவர். நாளைக்கு குறிப்பிட்ட ஷேர் விலை உயரப்போகிறது வாங்கிப் போடுங்கன்னு நம்மிடம் ஒருவர் சொன்னால் அது பவர் இல்லை. நாமே வாங்கினால்தான் பவர். செயல்படுத்த வேண்டும். நாலெட்ஜ் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அதை ஆராய வேண்டும். அதனால்தான்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று சொல்லிவைத்தார். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற 2ம் வகுப்பு வரை படித்தாலே போதும். ஆத்திச்சூடி தெரிந்தாலே போதும். வேறு எதுவும் தெரியவேண்டியதில்லை. ஆனால் அந்த அறிவுக்கும், செயல்பாட்டிற்கும் இடைப்பட்ட தூரம்தான் களையப்பட வேண்டியது.

நாங்கள் பயிற்சி தரும் நிறுவனத்தில் அவர்கள் நம்மிடம் சொல்வது என்னவெனில் நீங்கள் பயிற்சி கொடுப்பதால் எங்களுக்கு 6 மாதம் கழித்து எங்கள் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்குமாங்க? அப்படி அதிகரித்தால் அடுத்த முறை உங்ககிட்ட பயிற்சிக்கே வருவோம். உயர வில்லை யெனில் வரமாட்டோம் என்று சொல்லி விடுகின்றனர்.

நாம் ஒருவரை புல்லரிக்க வைக்கும் விதமாக பேசலாம். மெய்சிலிர்க்க வைக்கலாம். ஆனால் அந்த சின்ன இடைவெளியை அதைத் தாண்டாமல் ஒருவனால் எதையும் சாதிக்க முடியாது. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பிறரிடம் இனிமையாக பேச வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். நம்மில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் அதை செய்ய முன் வருவதில்லை. இதுதான் கேள்வி.
நமது மூளையில் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் சக்தி மற்றும் நம்மை நாமே மேம் படுத்திக் கொள்ளும் சக்தி இந்த இரண்டும் சரி விகித அளவில் கலந்துள்ளது.

நீங்கள் உங்களின் முழுத்திறமையை பயன்படுத்திக் கொள்ளாவிடில் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் சக்தி ஆக்கிரமித்துக் கொள்ளும். புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது. மது அருந்துவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று தெளிவாக பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். சரி, எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி வரும் என்றுதான் தீமையின் படத்தையும் போட்டு விளக்கியுள்ளனர். ஆனால் இரண்டிற்கும் விற்பனை உச்சத்தில் உள்ளது. இக்கடைக்கு மக்கள் தானாகவே தேடிப்போகின்றனர்.

நாளைக்கு காந்தி ஜெயந்தி என்றால் இன்றே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இந்தப் பரபரப்பு ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டி களுக்கோ வருவதில்லை. எனவேதான், தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சக்தி இயற்கை யிலேயே பெருகியுள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் தொலைக்காட்சியை நாமே அணைத்து விடலாம். சமீபத்தில் ஒருவர், மனைவி இல்லா விட்டால்கூட சமாளித்துவிடுவேன். தொலைக்காட்சி இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என்கிறார். அந்தளவுக்கு நம்மை ஆக்கிரமித்துள்ளது. டி.வி.யில் எவ்வளவோ நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன. அதற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். முழுவதும் அதற்காக செலவிடாதீர்கள்.

நமது மூளையில் லிம்பி சிஸ்டம் என்ற ஒன்றுதான் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. நம்மில் உள்ள உணர்வுகள் உறுதியானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் நல்லா பேசினார். நல்ல பாயிண்ட் எடுத்துச் சொன்னார் என்று இழுத்தோமேயானால் நம் உணர்வுகள் உறுதியானதாக இல்லை என்று அர்த்தம். நம்மில் அது ஆழப்பதிய வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும். அந்த உணர்வு நமக்காக ஏற்பட வேண்டும்.

சிலர் வாழ்க்கை அப்படியே போய்ட்டிருக்கு என்று சொல்கிறார்கள். வாழ்க்கை சூப்பரா போய்ட்டிருக்குது, ஜம்னு இருக்குனு சொல்வதில்லை. அவர்களுக்கு வெற்றி என்றால் என்னவென்றேதெரியவில்லை. அண்மையில் கல்லூரி மாணவ,மாணவியரிடம் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கு மகிழ்விற்கு என்ன தேவை என்று கேட்டேன். இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு, கார் அடிப்படைத் தேவைக்கான பணம் என்று சொன்னார்கள். இதுதான் அவர்கள் வெற்றி க்கான அடிப்படை என்கின்றனர்.

முத்தையா பேசும் போது நீங்களெல்லாம் வெற்றி வாசலில் நிற்பதாக குறிப்பிட்டார். வெற்றி என்பது என்ன? ஓர் உயர்வான இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் இலக்கை அடைகின்றோமா என்பது பேச்சல்ல. அந்த இலக்கை நோக்கி இன்று நாம் முன்னேறு கிறோமா என்பதுதான் பேச்சு. இன்று நான் இலக்கை அடைய என்ன செய்தேன். தினமும் முயற்சி செய்தோம் என்றால் நாம் வெற்றியாளன் தான். தொடர்ந்து அதே பாதையில் பயணித்தால் இலக்கை உறுதியாக அடையலாம்.
நிறைய பேர் முயல்வதே இல்லை. முயன்றால்தானே வெற்றி. மனிதனின் மூளையில் பிறப்பு முதல் இன்று வரை ஏற்பட்ட அனைத்து அனுபவங்கள் ஆடியோ, வீடியோ உணர்ச்சிகளாக உயர்தொழில் நுட்பத்தில் பதிவாகியிருக்கும்.

நமக்குத் தோன்றும் கேள்விக்கான விடையை தேவையெனில் அந்த கேள்வியை மிகத் தீவிரமாகவும் ஆழமாகவும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தால் நமது மூளை சரியான பதிலை பரிசளிக்கும். நமக்குள் தேடல் இருக்க வேண்டும். மூளை அலாவுதீன் அற்புத விளக்கு மாதிரி. தேய்க்க வேண்டும். சும்மா வைத்துப் பார்க்கக்கூடாது. மூளையும் அதே போல் தான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மூளையின் சக்தி அபாரமானது. ஒருவரிடம் பேசும் போதும், ஏன் கனவிலும் பதில் கிடைக்கலாம்.
வீடு வீடாய் சென்று பொருட்கள் விற்பவரை எடுத்துக் கொள்வோம். 200 வீடுகளுக்குப் போய் பொருட்களை விற்க முயற்சிப்பார். 198 பேர் வேண்டாம் என்பார்கள். அதற்காக அடுத்த 2 வீடுகளில் வாங்க மாட்டார்கள் என்று முடிவெடுப்பதில்லை. மீண்டும் முயற்சிக்கிறார். வெற்றி பெறுகிறார். நீங்கள் எதிர்பார்க்கின்ற எல்லாம் கிடைக்காது. ஆனால் எது கேட்டாலும் கிடைக்கும். அதற்கான வித்தியாசத்தை உணர வேண்டும்.

நீங்கள் ஒன்றை தேர்வுசெய்து உங்கள் கவனத்தை அதில் குவிக்க வேண்டும். அதற்கான வழி முறைகளை பின்பற்றினால் ஞாலம் கருதினும் கைகூடும். என்னிடம் ஒரு அம்மா கேட்டார்கள். நான் வறுமையில் இருக்கின்றேன். என்னால் சாதிக்க முடியுமா என்று.

ஓர் உண்மைச் சம்பவம். கேரள மலைப் பகுதியில் பிரிஜா ஸ்ரீதரன் என்ற பெண் இருந்தார். அவரது தந்தை மாரடைப்பால் இறந்துவிட, அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவர் தனது பணியிடத்தில் அவருக்குத் தரப்பட்ட இரண்டு பிஸ்கட்டுகளையும், ஒரு டீயையும் தனது 3 குழந்தைகளுக்கும் பங்கிட்டு இரவு உணவாகக் கொடுப்பாராம். பிரிஜா காலையில் பள்ளிக்கு காட்டுப்பாதையில்தான் செல்லவேண்டிய நிலை. வழிமறைத்து நிற்கும் யானைக்குப் பயந்து காலை, மாலை இருவேளைகளிலும் மூச்சிரைக்க ஓடி வருவாராம். அவர்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 5000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இப்போது அவர் குடியிருந்த வீதிக்கு பிரிஜா ஸ்ரீதரன் வீதி என்று பெயர் சூட்டி கௌரவப்படுத்தியிருக்கிறார்கள். இதைவிட வறுமை யாருக்கு இருக்க முடியும். ஒரு பாட்டில் இவர் வெற்றி பெறவில்லை. அது சினிமாவில் மட்டுமே. கடந்த முறை நடந்த ஆசியப் போட்டி களில் 25வது இடம்பெற்ற பிரிஜா இந்த முறை முதல் இடம் பெற்றார். இதுதான் வெற்றியாளனின் நோக்கம். 25வது இடம் வந்ததற்கு அவமானப் படவில்லை. அந்த முயற்சிதான் வெற்றி பெற வைத்திருக்கிறது. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.

வறுமையைக் கண்டு பயந்துவிடாதே. திறமையிருக்கு. மறந்துவிடாதே. எம்.ஜி.ஆர். பாடல்களில் இல்லாத கருத்து வேறு எங்கு இருக்கப் போகிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் வெளி வந்த கருத்துமிக்க பாடல்கள், படங்கள் இப்போது இல்லை. இப்போது திரைப்படங்கள் வன் முறையைத் தருகிறது. காரணம், உங்கள் விருப்பம் தான் இன்றைய திரைப்படங்கள்.

ஆங்கிலம் தெரியவில்லை என்று வெட்கப் படாதீர்கள். உங்களுக்குத் தெரிந்ததை பேசுங்கள். மொழியில் அர்த்தம் புரிந்தால் போதும். இலக்கணம் தேவையில்லை. அதைப் பார்த்து சிரித்தால் பரவாயில்லை. எப்படிச் சொல்ல வேண்டும் என்று கேள். முதலில் தயங்காமல் பேச வேண்டும். நான்கூட தமிழ்வழிக் கல்விதான் பயின்றேன். ஆனால் இன்று ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தில் பாடம் எடுக்கின்றேன். அவர்களுக்கும் புரிகிறது. காரணம், எனது குரு என்னைப் பேசவிட்டு பார்ப்பார்கள். பேச பேசத் தான் பயம் விலகும் என்பார். எனவே, பயத்தை அறவே விட்டொழியுங்கள். வெற்றி பெறலாம்.

உங்களின் இலக்குகள் மனக்கண்ணை விட்டு அகலக்கூடாது. உங்கள் இலக்குகளை பட்டிய லிடுங்கள். எழுதி வையுங்கள். இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது தினமும் அதற்கான வழி முறைகளை கண்டறியுங்கள். இடைவெளிகளை நோக்கி தினமும் மில்லிமீட்டர், இன்ச் பை இன்ச்சாக முன்னேறுங்கள்.
நாளை என்பது கனவு. இன்று என்பது நிஜம். எனவே, இன்றைய பணியை இன்றே முடியுங்கள். பரவலாக பரந்து விரிந்து கிடக்கும் ஒளிக்கற்றைக்கு பலன் கிடையாது. அதே ஒளியை ஒருங்கே குவித்து ஒரு புள்ளியில் குவித்தால் அது லேசராக மாறி பல அற்புதங்களைத் தருகிறது. அதுபோல்தான் மனிதனின் எண்ண அலைகள் பரவலாக கிடக்கும் போது சக்தி எழுகிறது. இந்த லேசரை தடுக்க யாராலும் முடியாது. உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை தொடர்ந்து பட்டியலிடுங்கள். ஒரு மாதம் கழித்து அதை எடிட் செய்யுங்கள். அதன் பின் தேவை எது என்பதை சரியாக முடிவெடுங்கள். நமக்குத் தேவை எது என்பதை அறிந்து அதற்கேற்ப நேரத்தை செலவிடுங்கள்.

என்னை ஒரு பிரபல நிறுவனத்தில் பயிற்சிக்கு அழைத்தார்கள். 4 மணி நேரப் பயணம். 2 மணி நேரம் பயிற்சி எங்களுக்கு ஒதுக்குங்கள் என்றார். என்ன தொகை தருவீர்கள் என்றேன். இலவசமாக பயிற்சி தாருங்கள் என்றார் அவர். உங்கள் நிறுவன டயர் இரண்டை இலவசமாக கொடுக்க முடியுமா? என்றேன். அதற்கான வாய்ப்பில்லாத போது நானும் தவிர்த்துவிட்டேன். நமது நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும். ஏழை பிள்ளைகளுக்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பேன். நம் நேரம் பொன் போன்றது. தேவையான வழியில் பயன்படுத்த வேண்டும்.

தினசரி டி.விக்காக 4 மணி நேரம் ஒதுக்குகிறீர்கள் என்றால் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் குறிக்கோளை அறிந்த பின் குறிக்கோளை அடைய அதற்கான நேரம் ஒதுக்குங்கள். யார் யாரிடம் பேசினால் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவெடுத்து நேரத்தையும் உங்கள் சக்தியையும் செலவிடுங்கள்.

நாம் அதிகம் பயன்படுத்தும் உறுப்பு வயிறு. நம்மில் பலர் பயன்படுத்தாத உறுப்பு மூளை. இதைப் பயன்படுத்த முன் வரவேண்டும். நம்மில் பலர் கோல் செட்டிங்கில் நானொரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளனர். இது தவறான கோல் செட்டிங். இதை சற்று மாற்றி என் மகளுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று இருக்க வேண்டும்.

நம் இலக்குகளை தீர்மானிக்கும்போது அவை அளவிடக்கூடியதாக இருக்க வேண்டும்.

செயல்வடிவமாகவும், யதார்த்தமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். நம் இலக்குகளுக்கு 5 வருடம் நிர்ணயிக்கிறோம் எனில் மூன்று வருடங்களில் இதை அடைய வேண்டும். இந்த மாதத்தில் இந்த வாரத்தில் இதை செய்திருக்க வேண்டுமென்றால் இன்று நான் இதை முடிந்திருக்க வேண்டும். இதுதான் பின்நோக்கிச் செல்லும் திட்டம். இந்த ரிவர்ஸ் பிளானில் இந்த வாரம் இதைச் செய்துள்ளேன். நான் முன்னேறியுள்ளேன் என்று அளவிட்டுக் கொள்ளலாம்.

இலக்குகளை அடைய நீங்கள் 4 வாரங்கள் யோசிக்க வேண்டும். குறிக்கோள் பணமாக இருக்கலாம். அன்பு, பதவி, மொழித்திறன் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஐந்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோளின் முக்கியமான ஐந்தாக அவை இருக்கட்டும்.

காலை எழுந்தவுடன் நீங்கள் டைரியில் எழுதியவற்றை தினமும் மூன்று முறை வாய்விட்டு படிக்க வேண்டும். நீங்கள் இரவில் படுக்கும்போது பார்க்கும் கடைசிக்காட்சி இதுவாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் மூளையின் எடிட் செய்யும் திறன் தினமும் காலை எழுந்தவுடனும், இரவு தூங்கப் போகும் போதுதான். நீங்கள் காலையில் எழுந்து படிக்கும்போது பிறர் உங்களை பைத்தியம் என்று நினைத்தால் கண்டு கொள்ளாதீர்கள். ஏன் பாத்ரூமில் போய்கூட படிக்கலாம். தவறில்லை. இதைப் படிக்கும்போது மனதிற்குள் படிக்கக் கூடாது. வாய்விட்டுப் படிக்க வேண்டும். அந்தக் காலத்தில் வாய்விட்டுப்படி என்று சொல்வார்கள். வாய் விட்டுப் படிப்பதால் கண் பார்க்கிறது. காது கேட்கிறது. வாயாலும் சொல்லுகின்றோம். எனவே, எளிதில் மனதில் பதியும்.

இந்தக் குறிக்கோளை அடைய நான் என்ன செய்ய வேண்டும் என்று இரவே முடிவெடுத்து காலையில் ஒன்றை மட்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அதற்குச் செய்த வேலையை ஒரு காகிதத்தில் எழுதி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் எதையெதை செய்தோம் என்று பின்பற்றி வாருங்கள். இதைப் பின்பற்றாமல் எதையும் செய்யாதீர்கள். வேறு வேலைகளைச் செய்து விட்டு இதைச் செய்யாதீர்கள். நாளொன்றுக்கு உங்களின் வேலைகள் தூக்கம். அன்றாடக் கடன் எனக் கொண்டால் 20 மணி நேரம் போக 4 மணி நேரம் உள்ளது. இந்த நேரத்தில் உங்களுக்கு நிர்ணயித்துள்ள குறிக்கோளுக்கான தேவைகளை செயல்படுத்துங்கள். வெற்றிகளை நோக்கி பயணியுங்கள்.

உங்கள் இலக்கை அடைய தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ள இலக்குக்குத் தேவையான பயிற்சி, அதில் வெற்றி பெற்றவர்கள், புத்தகங்கள் என தேடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி எளிதாகும்.

அரங்கிலிருந்து செ.பிரமநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *