இருப்பதை உணர்வோம்

வழக்கறிஞர் த, இராமலிங்கம்


தனக்குள்ளே ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனித படைப்பும் வீணான படைப்பு இல்லை. நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம்.

‘இழக்கும்வரை நம்மிடம் இருப்பதன் அருமை நமக்குத் தெரிவதில்லை’ என்று பொதுவாக நாம் அனைவருமே பேசிக் கொள்கிறோம். ஒன்றின் முக்கியத்துவத்தை உணராமல், இழப்பைச் சந்தித்த பின்னர்தான், அதன் ஆழத்தையே நாம் உணர்கிறோம். வீட்டின் நிகழ்வுகள் தொடங்கி, அலுவலகச்சூழல் உட்பட, நமது முன்னேற்றத்துக்கான முயற்சிகள் வரை, மூன்று நிலைகளில், ‘இருப்பதை உணர்தல்’ என்பது அவசியத் தேவையான ஒன்று.

ஒரு சில விதிவிலக்குகள் தவிர, பொதுவாக எல்லா வீடுகளிலுமே ஆண்கள் வீட்டில் தங்களுக்கான அனைத்துத் தேவைகளுக்கும், பெண்களைத்தான் எதிர் நோக்கியிருக்கிறார்கள். அவர் அம்மாவாக இருக்கலாம்; சகோதரியாக இருக்கலாம்; மனைவியாக இருக்கலாம் அல்லது மகளாகக்கூட இருக்கலாம். தான் அணியும் துணிகளைத் துவைத்து சலவை செய்து வைப்பதில் தொடங்கி, உணவுண்ட பாத்திரத்தைக் கழுவிக்காய வைப்பதுவரை அனைத்திற்கும் பெண்களைத்தான் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், இவற்றை ஒரு பொருட்டாகவே பெரும்பாலான ஆண்கள் எடுத்துக் கொள்வதில்லை. ‘இவையெல்லாம் தானாக நடக்கின்றன…’ என்பது போலத்தான் நடந்து கொள்வார்கள். இவர்கள் யாரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர், ஒரு வார காலம் எங்கேனும் ஊருக்குப் போய்விட்டால், அப்போது தெரியும் இவர்கள் நிலை. காலையில் படுக்கையில் இருந்து எழுந்து போது படுக்கை எப்படி இருந்ததோ, அப்படியேதான் இரவுவரை கிடக்கும். பெருக்காமல் கிடப்பதால், நடக்கும்போது வீட்டில் காலில் அழுக்கு ஒட்டும். குடித்து வைத்த தண்ணீர் குவளை வைத்த இடத்திலேயே இருக்கும். மூன்றாம் நாளில் ஓட்டல் சாப்பாடு தன் வேலையை வயிற்றில் காட்டும். ‘எப்போது வருவார்கள்…’ என்று மனம் ஏங்கத் தொடங்கும். இரண்டு நாட்களில் வீட்டில் மறுபடி பழைய கதைதான்!

அதனாலேயே எல்லாவீடுகளிலும் பெண்கள், ‘நான் ரெண்டு நாள் இல்லைன்னா தெரியும் உங்கள் லட்சணம்’ என்பார்கள். சில வீடுகளில் இது வேடிக்கைப் பேச்சாக இடம் பெறும். ஆனால், சில வீடுகளில் ஆழமான கருத்து வேறுபாடுகளுக்கும் இது இடம் தந்துவிடும்.

அதேபோல், குடும்பத்துக்கான பணம் தேடுதலில், கணவன் படும் சிரமங்களை உணராத பெண்களும் உண்டு.

கணவன் மனைவி இருவருமே, ஒருவரின் சுமையை மற்றவர் உணராத நிலையில்தான், சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் நிலை கொள்கின்றன. இதற்கு இடம் இல்லாதவாறு, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரால் பெறும் பயனை உணர்ந்து, அவ்வப்போது அதற்கு நன்றி பாராட்டியும், அன்பும் மரியாதையும் காட்டியும் நடந்து கொள்ளும் வீடுகளில் மகிழ்ச்சி நிலைக்கிறது.

அலுவலகங்களிலும் இந்த நிலையைக் காணலாம். இருப்பதிலேயே குறைவாக சம்பளம் பெறும் அலுவலக உதவியாளரை பொதுவாக எவரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ‘இதெல்லாம் ஒரு வேலையா?’ என்பது போலத்தான் கடைநிலை ஊழியர்களைக் எண்ணுவார்கள்.

ஒரு நாள் அவர் விடுமுறை எடுத்துவிட்டால், அலுவலகத்தின் முக்கியமான அல்லது பெரிய வேலைகள் நடப்பதில்கூட தடுமாற்றம் ஏற்பட்டு விடும். முக்கியமான ஆவணத்தை நகல் எடுக்க முடியாது;

அவசரமாக அஞ்சல்நிலையம் போக ஆளிருக்காது; கோப்பினை ஒரு மேசையிலிருந்து மற்றொன்றுக்குக் கொடுத்து அனுப்பமுடியாது. சரியான நேரத்தில் தேநீர் குடிக்கமுடியாது.

நம்மைவிட எவ்வளவு குறைந்த நிலையில் இருப்பவரின் அவசியத்தையும் உணரும் மனநிலை நமக்கு இருந்தால், அவர் இல்லாததால் வேலையில் ஏற்படும் தடுமாற்றங்கள் கோபத்தைத் தராது. இல்லாவிட்டால், மறுநாள் அவர் அலுவலகம் வந்ததும் அவர்மீது எரிந்து விழுவோம்.

வீடு, அலுவலகம் என்று மேலே சொன்ன இரண்டும் பிற மனிதர்கள் தொடர்பானவை. அடுத்தவரின் உழைப்பினை உணர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்திற்காகச் சொல்லப் பட்டவை.

நமது முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு யாருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவேண்டும்? அது பிறர் தொடர்பானதல்ல. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் நமது உணர்வு களை நாம் புரிந்து கொள்ளலே, வெற்றிக்கான ஆரம்பம்.

‘உனக்குள்ளே அனைத்து ஆற்றல்களும் புதைந்து கிடக்கின்றன’ என்று வீரத் துறவி விவேகானந்தரின் சொற்கள் மந்திர சக்தி கொண்டவை. ‘புதைந்து கிடக்கின்றன’ என்றால் என்ன பொருள்? நமக்குள்ளே இருக்கும் ஆற்றல் நமக்கே தெரியாதபடி, எவையெவையோ அதை மூடிக் கிடக்கின்றன. அதை முதலில் நாம் உணர வேண்டும்.

நமக்குள் நாமே பயணம்போய் ஆழமாகப் பள்ளம் தோண்டி, உள்ளே இருக்கும் ஆற்றலைக் கண்டு பிடிக்கவேண்டும். அயராத முயற்சி களினால், ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஆற்றலை அகழ்ந்து வெளியே கொண்டு வரவேண்டும்.

ஒவ்வொரு மனித மனத்துக்குள்ளும், அவனை அழிக்கும் பலவீனங்களும் உண்டு. ஆக்கும் ஆற்றல்களும் உண்டு.

பொதுவான நமது வளர்ப்பு முறையும் சரி அல்லது சமூகச்சூழலும் சரி, நமது பலவீனங்களையே வளர்த்தெடுக்கின்றன.

நீங்கள் பத்து பேரிடம் பேசிப் பாருங்கள். அதில் ஒன்பது பேர், அடுத்தவர்களைக் குறை சொல்வார்கள். அல்லது புறம் சொல்வார்கள். பல நேரங்களில், இந்த ஒன்பது பேரில் ஒருவராகவே நாமும் இருக்கிறோம். இது மிகப்பெரிய குற்றமில்லைதான்.

ஆனால், கிழப்பருவம் எய்தும்போதும் இந்தக்குறை நம்மை விட்டுப் போகவில்லை என்றால், நமது உணர்வுகளை நாம் ஆராய்ந்து பார்க்கவில்லை என்றுதானே பொருள்?

தனக்குள்ளே ஓர் ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனிதப் படைப்பும் வீணான படைப்பில்லை.

நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். அதனால் கால ஓட்டத்தில் நமது பலவீனங்கள் உறுதி பெறுகின்றன. இந்த உறுதி, நமது பலத்தினை மிகவும் பலவீனமாக்கி, இறுதியில் ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றன.

விதைத்த பின்னர், என் வேலை முடிந்தது என்று விவசாயி அமர்வதில்லை. காரணம், நிறைய களைகள் வளரும் என்பது அவனுக்குத் தெரியும். அவை வளர்ந்தால், தான் பயிரிட்ட விதைகள் பயனற்றுப்போகும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவற்றை உடனுக்குடன் பிடுங்கி எறிவான்.

தனது விதைகள் வளர்ந்து பயன் தரும் வரை அவன் ஓய்வதில்லை. தேவையானவற்றை நிலத்தில் இட்டுப் பாதுகாத்து வளர்க்கும் விவசாயிக்குத்தான் பயன் கிடைக்கிறது.

தனக்குள்ளே வளரும் களைகளைப் பிடுங்கி எறிந்து, ஆற்றல்களை அடையாளம் கண்டு வளர்க்காத எவருக்கும் வெற்றியில்லை.

விஜயதசமி சமயத்தில், ஒருநாள் வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு பூசை செய்வார்கள் அல்லவா? குடியிருப்பு ஒன்றில் அப்படி பூசை போட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த குடியிருப்பின் வயதான காவலாளி, கண்களை மூடியவாறு நீண்ட நேரம் சத்தமாக திருவாசகம் சொன்னார். எனக்கு வியப்பு தாளவில்லை.

காரணம், அவர் எந்தநேரமும் ‘தண்ணி’யில் இருப்பவர். ‘எப்படி இதெல்லாம் படித்தீர்கள்?’ என்று கேட்டேன். ‘அத்த வுடு சார். பாடுதுனக்கு துட்டு குடு’ என்றார். வாங்கிக்கொண்டு எங்கு போயிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.

‘தன்னை வென்றவனே உண்மையில் மிகப்பெரிய வீரன்’ என்று பெரியவர்கள் சொன்னதன் காரணம் இதுதான். நம்மை எதிர்த்து நாமே செய்யும் ஓர் இடை விடாத போர். அது. ‘என்னை எது வளர்க்கும்; என்னை எது அழிக்கும்’ என்பதை நமக்குள் தேடி, நம்மை அழிக்கும் குணத்தை நாமே அழித்தொழிக்கும் போர்.

இந்தப் போரைத் தொடங்கி விட்டாலே போதும்; நமது ஆற்றலை நாம் உணரத் தொடங்குவோம். முயற்சி இருந்தால், நமது ஆற்றல் பன்மடங்கு விரிந்து வெற்றிகளைக் குவிக்கும்.
மூச்சு நின்றால் மட்டுமா மரணம்? முயற்சி நின்றாலும்தான்.

2 Responses

  1. karthikeyan

    நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். unmai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *