நம்பிக்கை ஒளி
இரண்டாண்டுகளுக்கு முன்னால், எழுத்தாளர்கள் சங்க மாநாடு ஒன்றில் விற்பனையாளர்கள் இல்லாத புத்தகக்கடை ஒன்றைக் கண்டேன்.
புத்தகங்களுக்கு நடுவில், சிலேட்டில், வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஜோல்னா பையில் பணத்தை வைத்துவிடுமாறு வேண்டப்பட்டிருந்தது.
‘ஏமாற்றிவிட மாட்டார்களா? ஆள் இருக்கும்போதே அபேஸ் செய்யும் ஆசாமிகளில் காலமாயிற்றே’ என்று, எனக்கு பயமாக இருந்தது. ஆனால் நான் உட்பட எல்லோரும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு பணத்தை உள்ளே வைத்தோம். சில பேர் தாங்களாக மீதி சில்லறையை பையிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்.
ஒருவர் திடீரென்று வந்து அதிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு சென்றார். புத்தகம் வாங்கும்போது ஐந்து ரூபாய் இல்லாததால் தனக்குரிய மீதி சில்லரையை எடுக்காமல் போயிருக்கக்கூடும். இப்போது வந்து பார்த்து அதை எடுத்துக்கொண்டு போகிறார் என்று தோன்றியது. அவர்மேல் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
இன்றைக்கும்கூட அந்த விஷயம் எனக்கு மலைப்பாக இருக்கிறது.
ஒரு மனிதன் தன் சக மனிதர்கள்மீது கொண்ட நம்பிக்கை எல்லோரையும் நம்பிக்கை உள்ள நல்லவர்களாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கை என்பதுகூட சூரியன் போலத்தான். தான் இருக்கிற இடத்தில் எல்லாம் வெளிச்சம் பாய்ச்சும்.
உங்களுக்குள்ளும் நம்பிக்கைச்சூரியனை உருவாக்குங்கள். நீங்கள் இருக்கிற இடமும் அவநம்பிக்கை இருள் நீங்கி நல்ல நம்பிக்கை வெளிச்சம் உதயமாகட்டும்.
நம்பிக்கை என்பது சுடர்விடும் சூரியனாக அல்ல, ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சமாக இருந்தால்கூட போதும். அதை மற்றவர்களுக்கு மாற்றம் செய்ய முடியும்.
உலகம் முழுவதும் நம்பிக்கை ஒளி பரவட்டும்!
என்றென்றும் நம்பிக்கையுடன்
Leave a Reply