தமிழக மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் அதே நேரத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்கள்.
தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை தேர்தலுக்குத் தயாராகும் தலைவர்களைப் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் வியப்பான உண்மை.
எந்த வட்டாரங்களில் தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதை தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்பே கணித்து விடும் கட்சிகள், அந்த வட்டாரங்களில் தங்கள் வாக்கு வங்கியை வலிமைப் படுத்திக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதுபோல் மாணவர்களும் தாங்கள் சற்றே பலவீனமாகவுள்ள பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
தங்கள் தொகுதிகளை ஒவ்வோர் இடமாகத் தொடர்ந்து வலம் வந்து, அங்குலம் அங்குலமாகத் தங்கள் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அதேபோல மறுவாசிப்பு எனப்படும் ரிவிஷன் மூலமாக, பாடத்தில் தங்கள் பரிச்சயத்தை மேம்படுத்தி, வெற்றியை உறுதி செய்து கொள்ளும் உத்தியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் மனங்களில் தாங்கள் பதிய வேண்டு மென்பதற்காக விதம்விதமான பிரச்சாரங்களைக் கட்சிகள் மேற்கொள்ளும். பாடங்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக பலவிதங்களில் மாணவர்கள் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரப் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவது போல தேர்வுக்குத் தயாராகும் கால அட்டவணையை மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
கட்சிகள் கூட்டணிகளை முடிவுசெய்வதில் அக்கறை காட்டும். தேவையான சக்திகள் கொண்டவர்களையே கூட்டணிக்குத் தேர்ந்தெடுக்கும். அதேபோல பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து அறுதிப் பெரும்பான்மையில் அனைத்து மாணவ மாணவியரும் வெற்றி பெற பிரார்த்தனைகளும், அன்பான வாழ்த்துக்களும்…
Leave a Reply