எல்லோரது மனதிலும் சாதாரணமாகவே ஒரு தொழிலதிபராக, எவரிடத்தும் பணிபுரியாமல் சுயமாகச் சம்பாதிப்பது தான் உண்மையான வெற்றி என்று ஒரு தவறான எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களைச் சாராமல், அடுத்தவர்களது துணை, உதவி இல்லாமல் யாராக இருந்தாலும் வெற்றி என்பது சாத்தியமல்ல. சொல்லப்போனால் உங்களது மனதில் நீங்கள் வெற்றியாளராக நினைத்து, ஓர் உந்துசக்தியாகக் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கூட. ஒரு கடைநிலை ஊழியர் அளவுக்கு யாரையும் சாராமல் சுயமான வெற்றி பெற்றவர் அல்லர். விரிவாகப் பார்ப்போம்.
கடைநிலை ஊழியர் பணிபுரியும் அலுவலகத்தில் அவரது பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அலுவலகத்திலுள்ள அனைவரும் அவரிடம் வேலை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஊழியராக சார்புநிலை அந்த அலுவலகத்தில் அவருக்கும் மேல் பணி புரிபவர்களோடு முடிந்து விடுகின்றது. அவரிடம் நிறுவனம் மிகப் பெரியதாக எதையும் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் அவர் இல்லாவிட்டால் சில பணிகள் பாதிக்கப்படும். அவரது இடத்தை வேறு எவரைக் கொண்டும் நிரப்பிவிடலாம். இப்படிப்பட்ட மனிதர்கூட வெற்றி பெற்றவர்தான். தனது பணி முடிந்து ஓய்வுக்காகச் செல்லும்போது, இவர் சார்ந்திருந்த அலுவலக அதிகாரிகள் பாராட்டி விடை கொடுக்கும்போது.
தொழிலதிபராக, தொழிலில் உயர்ந்த நிலைக்கு வந்த யாருமே, மற்றவர்களைச் சார்ந்து, அவர்களது ஆலோசனைகளில் தேர்ந்து, பிறகு ‘சுயமாகச்’ சீர்தூக்கிச் சிந்தித்து முடிவெடுத்த பின்னர்தான் வெற்றி பெற்ற அந்த வெளிச்ச வட்டத்துக்குள் நுழைய முடியும். வெற்றிக்கு ஒரு விளக்கமாக இவர் மக்கள் முன் நிற்கும்போது இவருக்குப் பின்னால் பல பேரது துணையும், உழைப்பும் உடன் நிற்கின்றது.
மூன்று வகையாக தொழில் முனைவோர்கள், வெற்றி பெற்ற தொழிலதிபர்களைப் பிரித்துப் பார்ப்போம்.
முதல்வகை, மூன்று அல்லது நான்காம் தலை முறையாகத் தொழில் செய்பவர்கள். இவர்களில் சில விதிவிலக்குகளை விட்டுவிட்டுப் பொதுவாக ஆராய்ந்தால் பாரம்பரியமாகப் பெற்ற வாரிசு அடிப்படை ஒன்றின் காரணமாகத்தான் இவர்கள் தொழிலில் தொடர்ந்து இருக்கின்றார்கள். நிறுவனம் இவரைச் சார்ந்து இருக்கிறது என்பதை விடவும், இவர் நிறுவனத்தையும், அங்கு பணி புரியும் முக்கிய மேலதிகாரிகளையும் சார்ந்து இருக்கின்றார். இப்படி உள்ளவர்களில் பெரும் பாலானோர் வாழ்வின் அடிமட்டத் தளத்தைக் கண்ணால்கூடப் பார்த்திருக்க முடியாது. வளம் ஒன்றைத் தவிர வேறெதுவும் தெரியாது.
மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகும்போது எது சரி, எது தவறு என்று உணர்ந்து அதை எதிர் கொள்ளும் முடிவுகளை இவர்களால் தனித்து எடுக்க முடியாது. திசை தெரியாத காட்டில் நள்ளிரவில் கைவிடப்பட்ட பயணியைப் போல் தடுமாறுவார்கள். ஆலோசனை கூற நல்ல அமைச்சர் போன்ற அதிகாரிகள், உள்ளவரை இவர்களது வெற்றிப் பயணம் தொடரும். இல்லா விட்டால் கடைசி வரை வெற்றுப் பயணம்தான்.
இதைத் தவறு என்றோ, அதற்காக இவர்கள் என்ன செய்ய முடியும் என்றோ, முடியாதென்றோ கருத்துக் கணிப்புக்காக அல்ல, இந்த உண்மை. இதுதான் நடைமுறை. இப்படிப்பட்ட நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உலகமெங்கும் உள்ளனர். இவர்களது வெற்றிப்பயணமோ வெற்றுப்பயணமோ அதன் திசையில் அது போய்க் கொண்டிருக்கின்றது. எந்த இலக்கும் இல்லாத ஒரு சாதாரணப் பயணம் இது.
***
இரண்டாவது வகையானது, இரண்டாம் தலைமுறைத் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் பற்றியது. இவர்களது நிலை மிகவும் தர்மசங்கடமானது. இவர்களது தந்தையோ, தாயோ ஆரம்பித்த தொழிலின் வெற்றியை இவர்கள் தொடர்ந்து பரிமளிக்க வைக்க வேண்டும். பெற்றோரது வழிகாட்டுதலும், குறுக்கீடும், அறிவுரைகளும், ஒப்பீடும் இருபத்து நான்கு மணிநேரமும் உதவியாகவும், பலசமயங் களில் உபத்திரபமாகவும் இருக்கும். இவர்களது சீரான தொடர்ச்சிக்கு பெற்றோர்களது நல்ல விதமான ஊக்குவிப்பும் புரிதலும் மிக முக்கியம்.
பதினாறு அடிபாய்ந்து வெற்றிபெற்ற குட்டிகள் உண்டு; எந்த முடிவும் எடுத்துச் செயல் பட முடியாமல் பெற்றோரைச் சார்ந்தே தொழில் செய்து ஒரு முத்திரை பதிக்க வாய்ப்பில்லாமல் முடங்கிப் போனவர்களும் உண்டு.
இவர்களுக்கு இரண்டு சவால்கள். பெற்றோரது பலத்தினால்தான் இவரது வெற்றி என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனால் அது சிறகாக அலங்கரிக்காமல் சிலுவையாகிச் சுமை யானால் மனம் சாய்ந்து போகும்.
தன்னை நிரூபிக்க இவர் முதல் தலைமுறை தொழில் முனைவோரைக் காட்டிலும், பெற்றோரைக் காட்டிலும் வேகமாக, விவேகமாகச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம்.
மாறிவரும் சூழ்நிலைகளில் எதைப் பழமையானது, தேவையற்றது என்று தூக்கி எறிவது, எதைப் புதுமை என்று ஏற்றுக்கொண்டு மாற்றுவது என்று பல குழப்பங்களுக்கிடையே சிக்கித் தவித்து முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை. அதே சமயத்தில் பண்பாடு மாறாமல் அனை வரையும் அனுசரித்து, சில சமயம் அவமானப் பட்டும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை.
நமது பாரத நாடு தனது எதிர்காலத்துக்காக நம்பியிருப்பது இந்த இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர்களைத்தான். ஏனெனில் இவர்களது பொருளாதாரப் பின்புலம் பலமாக உள்ளது. இவர்களது கல்வியறிவும், அனுபவமும் கிடைக்கும் வாய்ப்புகளும் நல்ல களம் அமைத்துக் கொடுத்துள்ளன. எதையாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி இவர்களிடம் குடி கொண்டுள்ளது. துணிந்து எதையும் செய்யலாம் என்ற தன்னம்பிக்கை, மூத்த தலைமுறையின் வெற்றியால் கிடைத்துள்ளது.
உலக மயமாக்க லினால் இவர்களது சந்தை பரந்து விரிந்து கிடக்கின்றது. பன்னாட்டுத் தொடர்புகளுக் குண்டான கல்வியறிவும், இன்றைய பாரதத்தின் எதிர்காலச் செழுமையும் இவர்களுக்கு அந்நிய நாடுகளில் அங்கீகாரம் கிடைக்க ஏதுவாக இருக்கின்றன. ஒரு சில விழுக்காடுகள் விழுந்து போனாலும், பெரும்பாலானவர்கள் வெற்றி வெளிச்சத்தின் பிறந்தவர்கள், வாழ்பவர்கள், நிச்சயம் சாதனையைத் தொடருவார்கள் என்பது திண்ணம்.
இவர்களுக்கு வெற்றி என்பது மலரின் தேனெடுப்பது போலவும், பட்டில் நூலெடுப்பது போலவும் எளிதாக அமைந்துவிட்ட ஒன்று. சம யோசிதம், சாமர்த்தியம், அனுசரித்துப் பழகும் விதம், பழமைக்கும், புதுமைக்கும் உள்ள நல்லது, கெட்டதுகளை எடைபோடும் உணர்வு இருந்தால் போதும். இவர்கள் எதிர்கால சிங்கங்கள். வழி காட்டிகள். தலைவர்கள். நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்கள். நமது நம்பிக்கை நட்சத்திரங்கள்.
***
மூன்றாவது வகை, முதல் தலைமுறைத் தொழில் முனைவோர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் தன்னை நம்பி, தன் திறமையை நம்பி, தன் துணிவை நம்பி, அயராமல் முன்னேறும் அற்புதப் பிறவிகள். அவமானம், வறுமை, ஏளனம், அலட்சியம் என மற்றவர்களால் ஒதுக்கப்பட்டாலும், இவர்கள் ஒருகாலத்தில் எனக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிப்பார்கள் என சற்றும் மனம் தளராமல் உழைத்து உழைத்து உள்ளத்தழும்புகளில் உறுதியான சரித்திரம் படைக்கும் உத்தமர்கள்.
இவ்வகைப்பட்டவர்கள் கல்லில் நார் உரிப்பார்கள். முள்ளில் தேன் எடுப்பார்கள். இவர்களால் மணலைக் கயிறாகத் திரிக்க முடியும். மலைகளைப் பிளந்து வெற்றிப்பாதைகள் அமைக்க, வரும் தடைகளை உடைக்கவும் முடியும். ஓர் உதாரணம் மட்டும் சொல்கின்றேன். ஒரு இலட்சம் உதாரணங்கள் எனது நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், நகரிலும் தினம் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு.
பெங்களூர் அருகில் உள்ள பிரபல ஜெர்மானியக் கூட்டு நிறுவனம் ஒன்று மோட்டார்கள் தயாரிப்பில் இருந்தது. அதனுடைய எலக்ட்ரிக் மோட்டார்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ‘மேட்டூர் பேர்ட்செல்’ நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வந்த எனது நண்பர் பின்னாளில் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு நிறுவனத்தைத் துவக்கி, அதிலும் பங்குதாரராக இணைந்து ‘மோட்டார்’களுக்கு முகவர்களாகச் செயல் பட்டனர்.
பணம் சேரும்போது, பங்குதாரர்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்தினால் மனம் ஒடிந்த நிலையில் விலகிவிட்டார்.
ஓரிரு ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் ‘பெல்ட்’ விற்பனை மேனேஜராகப் பணியாற்றினார். இவர் பி.எஸ்.சி. படித்திருந்தாலும் தன்னுடைய பணியின் காரணமாகவும், ஆர்வத் தாலும் செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும் எலக்ட்ரிக் மோட்டார்கள், பெல்ட்டுகள் போன்றவற்றின் வடிவமைப்பு, தொழில் நுட்பத்திறன் எப்படிப் பட்ட மோட்டார், பெல்ட்டுகளைத் தேர்வு செய்தால் ஆலைகளில் மின்சாரத்தைச் சேமிக்கலாம் என்ற கோணத்தில் தனது செயல்முறைகளை அமைத்துக் கொண்டு செவ்வனே பணிபுரிந்து வந்தார்.
ஒரு எலக்ட்ரிக் என்ஜினியருக்குள்ள தேவையான திறமையை சுயமாகக் கற்று ஒரு நிபுணராகவே தன்னை ஆக்கிக் கொண்டார்.
பின்னர் கோவையிலேயே தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பங்குதாரராக ஒரு விற்பனை நிறுவனத்தை நடத்திவந்தார். மீண்டும் கருத்து வேறுபாடுகளாலும், சில தவிர்க்கமுடியாத குடும்பச் சூழ்நிலை நிர்பந்தங்களாலும் அங்கிருந்தும் விலகிச் சென்னை சென்றார்.
இடையில் சிலகாலம் திசைதெரியாத ஒரு குழப்பத்தில், ‘மின்சார சேமிப்பு’ பற்றிய கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்தச் சமயங்களில் இவரைக் கூர்ந்து கவனித்து வந்த, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் ‘சீமென்ஸ்’ இவரை ஒரு குறிப்பிட்ட பணிகளுக்கு ஆலோசகராகவும், பின்னர் எலக்ட்ரிக் மோட்டார் ஏஜென்சியை சில பகுதிகளுக்கும் கொடுத்தது.
இந்தக் காலகட்டங்களில் எல்லாவிதமான ஆலைகளுக்கும் செல்லும்போதும், இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்லும்போதும் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ‘மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகள்’ – நிறுவனத்துக்கு ஆதாயம் அளிக்கும் விற்பனை உத்தி (ஆங்ய்ங்ச்ண்ற் நங்ப்ப்ண்ய்ஞ்) அடிப் படையில் அதற்குத் தேவையான பராமரிப்புச் சாதனங்கள், சரியான தேர்வு முறையில் எப்படி மின்சார மோட்டாரைத் தேர்ந்து எடுப்பது என்பனவற்றை எந்தவிதமான லாப நோக்கமும் இல்லாமல் தொடர்ந்து பல இன்னல்களுக் கிடையேயும் செய்து வந்தார்.
இன்று உலகளவில் சுமார் ஐந்து லட்சம் கோடி, இந்தியாவில் மட்டும் பதினாறு ஆயிரம் கோடி இதில் எலக்ட்ரிக் மோட்டார்கள் மட்டும் எண்ணூறு கோடி என்று விற்பனையில் சாதனை படைக்கும் ‘சீமென்ஸ்’ நிறுவனத்தில் இவர் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறார்.
ஒரு கால கட்டத்தில் இந்தியாவில் ‘சீமென்ஸ்’ நிறுவனம் உற்பத்தி செய்த ‘ஹை எஃபிசியன்ஸி’ மோட்டார்களில் இருபத்தைந்து விழுக்காடுகளை இவர் மட்டுமே விற்றிருக்கின்றார்.
இவரது ‘வெற்றிக் கதையை’ சீமென்ஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு அலுவலகங்களிலும் அனைவருக்கும் எடுத்துரைத்துப் பெருமைப் படுத்துகின்றது.
இந்தியாவிலேயே இப்படி ஒரு தனிவழியைத் தனக்காக அமைத்துக்கொண்டு, ‘சீமென்ஸ்’ கொடுத்த ஆதரவையும், காட்டிய வழிகளையும் சரியாகப் பின்பற்றி இன்று வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கும் நண்பர் சீனிவாசன் அவர்கள் ‘பவர் ஹவுஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர். முதல் தலைமுறைத் தொழில்முனை வோர்கள் பின்பற்றவேண்டிய இன்னுமொரு வெற்றிக்கதை, ‘பவர்ஹவுஸ்’ சீனிவாசன் அவர்களுடையது.
வாசகர்களே! வாய்ப்புகள் நம்மைச் சுற்றிக் கொட்டிக் கிடக்கின்றன. அதைச் சரியாகப் பற்றிப் பின்பற்றுபவனே ‘வெற்றி வெளிச்சத்தில்’ அமைதியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பான்.
Leave a Reply