இந்த மாதம் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களே
எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இழப்பு தருணங்கள்தான் அதிகம். படிப்பு, வேலை தேடி போன காலங்கள் என அனைத்திலும் ஒரு இருண்மை சிந்தனை (டங்ள்ள்ண்ம்ண்ள்ற்ண்ஸ்ரீ ர்ன்ற்ப்ர்ர்ந்) தான் இருந்தது. ”நான் எல்லாம் எங்கே படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு” என்றெல்லாம் தோன்றும். ஆனால் எனக்கொரு தோல்வியோ, வருத்தமோ, ஏமாற்றமோ வருகிறபோது ஏற்படக்கூடிய வலி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீங்காமல் இருக்கும். ஆனால், அந்த வலிக்கு பிறகு ஏற்படுகிற புத்துணர்ச்சி எதையும் துணிந்து வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை தருவதை நான் எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.
உதாரணமாக, நான் சபரிமலைக்கு மூச்சிரைக்க ஏறிக்கொண்டிருந்த நேரம், ”நாமெல்லாம் எப்படி ஏறப்போகிறோம்” என்று நினைக்கும்போது என்னைத்தாண்டி ஒற்றைக் காலோடு ஒருவர் துள்ளி துள்ளி ஏறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தபோது ஒரு உத்வேகமும் மனஊக்கமும் எனக்கு கிடைத்தது. இதுபோல பல சம்பவங்கள் வாழ்வில் இருந்தாலும், என்னை ஓர் எழுத்தாளனாக என்னை எனக்கே அறிமுகம் செய்த அந்த நொடிதான் இன்றும் நான் நினைத்து பரவசடையும் நம்பிக்கையான தருணம்.
பள்ளிநாட்களில் நடக்கும் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொள்வேன். அதற்குத் தேவையான தகவல்களை ஆசிரியர்களிடம் காத்திருந்து எழுதி வாங்குவேன். பின்பு நானே நூலகம் சென்று தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். எனக்கு எளிமையாக இருக்கக்கூடிய பாரதி, பாரதிதாசன், கவிமணி போன்றவர்களை எல்லாம் படித்த காலமது. என் கல்லூரி நாட்களுக்குப்பின், நான் சொற்பொழிவு களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் என் ஊரில் இருக்கும் பள்ளிக்குழந்தைகள், என்னிடம் தயார் செய்து கொடுக்குமாறு கேட்டு வருவார்கள். அவர்களுக்காகவும் நூலகம் சென்று படித்து வருவேன்.
பின்பு எனக்கு பம்பாயில் வேலை. என்னோடு வேலை பார்த்தவர்களில் தமிழர் ஒருத்தர்கூட கிடையாது. எனக்கு நிறைய தனிமையும், நேரமும் இருந்தது. பம்பாய் தமிழ்ச்சங்கம் சென்று அங்குள்ள நூலகத்தில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, கு.ப.ரா., கி.ரா போன்றவர்களை தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். என் வாசிப்பு தீவிரமானது.
அப்பொழுது பம்பாய் தமிழ்ச் சங்கம் மூலம் ”ஏடு” என்ற சிற்றிதழ் வந்து கொண்டிருந்தது. அதற்கு கட்டுரை அனுப்புகிற அறிஞர்களெல்லாம் 20 முதல் 30 பக்கம் வரை அனுப்புவார்கள். ஆனால் புத்தகத்தின் மொத்த பக்கமே 32தான். எனவே, அந்தக் கட்டுரைகளை சுருக்கி வரையும் பொறுப்பு எனக்கு. அது போக இதழ்களின் சின்ன இடங்களை நிரப்ப சிறிய செய்திகள், சிறிய கவிதைகள் போன்ற வற்றை நான் எழுதி வந்தேன்.
தீவிர வாசிப்பிற்குப்பின், நாமே ஒருமுறை சிறுகதை எழுதினால் என்ன என்று தோன்றியது. என்னுடைய முதல் சிறுகதையை ”விரதம்” என்ற தலைப்பில் எழுதி தீபம் பத்திரிகைக்கு அனுப்பினேன். அது அந்த மாதமே வெளியானது. அந்தக்காலத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவரது அண்ணன் ப.இலட்சுமணன் இணைந்து, ”இலக்கியச் சிந்தனை” என்ற அமைப்பை நடத்தி வந்தார்கள்.
அம்மாதம், அனைத்து பத்திரிகைகளிலிருந்தும் வெளியான சிறுகதைகளில், அந்த மாதத்திற்கான சிறந்த சிறுகதையாக என்னுடைய சிறுகதையை தேர்வு செய்தது, இலக்கியச்சிந்தனை. அப்பொழுது என் முகவரி இ/ர். பம்பாய் தமிழ்ச்சங்கம்தான். வேலைநிமித்தமாக பம்பாய் வந்த ப.இலட்சுமணன், பம்பாய் தமிழ்ச்சங்கம் வந்து, சங்கத்தின் அன்றைய தலைவர் ஆதி லட்சுமணனிடம் என்னை விசாரித்தார்.
அப்பொழுது நாஞ்சில் நாடன் என்றால் யாருக்கும் தெரியாது. என் பெயரோடு, ”கா.சுப்ரமணியம்” என்று போட்டிருந்ததைப் பார்த்து, ”ஓ! இந்தப் பையனா.. ஆறு மணியானா இங்க லைப்ரரிக்கு படிக்க வருவான்” என்று சொன்னாராம். அதன் பின் என்னை நேரில் சந்தித்து எனக்கு சேரவேண்டிய பரிசுத் தொகையான ரூ.50 மற்றும் சான்றிதழையும் திரு.ப.இலட்சுமணன் அவர்கள் எனக்கு கொடுத்த தருணம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. அந்த நம்பிக்கையில் எனக்குள் ஓர் எழுத்தாளன் பிறந்தான்!!
Leave a Reply