திருச்சியில் 20.02.11 அன்று நடைபெற்ற சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் கேரள மாநிலம் தொடுபுழா காவல் உதவிக்கண்காணிப்பாளர் திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.
திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் திருச்சி அருகிலுள்ள மண்ணச்ச நல்லூர் என்ற ஊரில் பிறந்து அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து, பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியில் இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றவர்.
அவருடைய எழுச்சியுரை…
“ஒரு மனிதனை எவ்வாறு வகைப் படுத்தலாம்? அந்த வகைப்பட்டியலில் நான் எந்த வகைப்பிரிவில் வருவேன் என்று பார்ப்போம்.
நம்பிக்கையைப் பொறுத்தவரையில் மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
1. நம்மீது நமக்குள்ள நம்பிக்கை.
2. நம்மீது மற்றவர்களுக்குள்ள நம்பிக்கை.
3. நம்மீது நாம் வைக்கும் நம்பிக்கை பாதி; மற்றவர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கை பாதி.
4. நம் மீது நாம் வைக்கும் முழுநம்பிக்கை. மற்றவர்கள்மீது நம்மீது வைக்கும் முழு நம்பிக்கை.
என்னுடைய வகை மூன்றாவது வகையைச் சார்ந்தது. நான் என்னை நம்பினேன். மற்றவர்களும் அதாவது அம்மா, அப்பா, உடன்பிறந்தோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் இப்படி மற்றவர்கள் என்மீது வைக்கும் நம்பிக்கை. இது தான் வெற்றியைக் கொடுத்தது.
எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை லூர்துமேரி அடிக்கடி என்னிடம், “உனக்கிருக்கிற திறமைக்கு நீ நல்லா வருவே! நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு வருவே!” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எனக்கு அப்போது தெரியவே தெரியாது. எனக்கு திறமை இருக்கிறதா? இவர்கள் என்ன எப்போது பார்த்தாலும் இப்படியே சொல்கிறார்கள் என்று சலிப்பு வரும். அதேபோல என் தாயும், “என் மகள் நன்றாக படிப்பாள். என் மகள் நன்றாக வருவாள்; பெரிய ஆளாக வருவாள்” என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி இவர்கள் எல்லோரும் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் நான் இங்கு இப்படி நின்று பேசக் காரணம்.
நம் மீது எப்படி மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும்? நம் செயலைப் பார்த்துத்தானே வரும்? எடுத்தவுடனேயே நம்மை நம்பி விடுவார்களா? விளையும் பயிர் முளையிலேயே தெரியும். நம்முடைய செயல்கள்தான் நம்மை மற்றவர்களுக்கு முன்னிலைப்படுத்தி அறிமுகப் படுத்தும். நாம் புத்திசாலியா? இல்லையா? என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் தெரிந்து விடும். ஆக என்மீது நான் வைத்திருந்த 50% நம்பிக்கை; மற்றவர்கள் என்மீது வைத்த 50% நம்பிக்கை, இரண்டும் சேர்ந்த 100% நம்பிக்கைதான் நான் ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸர் ஆவதற்கு காரணமாக இருந்தது.
நான் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக்கல்விதான் படித்தேன். ஐந்தாம் வகுப்புவரை ஒரு ஆங்கிலப் பள்ளியில் படித்தாலும், ஆங்கில மீடியத்தில் உள்ள எனக்குள்ள நம்பிக்கை குறைந்ததால் ஆறாம் வகுப்பில் தமிழ் மீடியத்தில் சேர்க்கப்பட்டேன். ஆங்கிலம் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.
பள்ளியில் படிக்கும்போது நான் இரண்டாவது ரேங்க் வாங்கும் மாணவி. எப்பவுமே இரண்டாவது ரேங்க்தான். நான் மூன்று வயசு பிள்ளையாக இருக்கும்போது என்னவாக ஆவாய் என்று யாரும் கேட்டால், ஐ.ஏ.எஸ் படித்துவிட்டு கலெக்டர் ஆவேன் என்று சொல்வேனாம். ஆனால் +2 படிக்கும்போது டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்தது. +2 தேர்வு நெருங்கும்போது எனக்கு ஒரு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. ஆம் +2 தேர்வின்போது முக்கியமான 4 பேப்பர்களை எழுத வேண்டிய நாளில் நான் அம்மை நோயால் கடுமையாகத் தாக்கப்பட்டேன். எனக்கு பயமாகப் போய் விட்டது. பாஸ் பண்ணவே மாட்டோம் என்று முடிவெடுத்து விட்டேன். ஆனால் மற்றவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த இடத்தில் எனக்கு மிகவும் உறுதியாக உறுதுணையாக இருந்தது.
இந்த இடத்தில் என்மீது நான் வைத்திருந்த நம்பிக்கை பூஜ்யம்! அந்த சூழ்நிலையில் பள்ளி ஆசிரியைகள், என் அம்மா, அப்பா, எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். நீ கண்டிப்பா நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆயிடுவே! தைரியமாகப் பரீட்சை எழுதுன்னு உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், நான், “இந்த பரீட்சையில் பெயிலாயிட்டா தற்கொலை பண்ணிக்கு வேன்” என்று சொல்லி விட்டேன்.
உடல் முழுக்க, மனம் முழுக்க வலி… என்னை தேர்வு அறையில் தூக்கி கொண்டு போய் உட்கார வைப்பார்கள். தேர்வு முடிந்தவுடன் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போவார்கள். புத்தகங் களைத் தொடக்கூட முடியவில்லை. நான் பெயிலாடுவிடுவேன் என்றுதான் நான் நம்பினேன். ஆனால் மற்றவர்கள் நான் நன்றாக மார்க் வாங்கி பாஸாகி விடுவேன் என்று நம்பினார்கள்.
தேர்வு முடிவு வெளியாகும்போது நான் போய் ரிசல்ட் பார்க்கமாட்டேன்… பயமாக இருக்கிறது என்று வீட்டிலேயே இருந்து விட்டேன். ரிசல்ட் பார்த்துவிட்டு, பள்ளி தலைமை ஆசிரியை, “நீதான் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியா பாஸ் பண்ணியிருக்கே!” அம்மை வலிகளைத் தாங்கிக்கொண்டு நான் எழுதிய 4 பாடங்களில் வேதியியல் தவிர 3 பாடங்களில் நான் தான் பள்ளியிலேயே முதல் மார்க். எப்படி நடந்துச்சு? என் கடவுள் நம்பிக்கை, பெற்றோர் களின் ஆசீர்வாதம், மற்றவர்களின் வாழ்த்து இவை எல்லாம் சேர்ந்து எனக்கு வெற்றியைத் தந்தது.
இப்போது குழப்பம்… டாக்டருக்குப் படிப்பதா? இன்ஜினியருக்குப் படிப்பதா? மீண்டும் குழப்பம்… டாக்டருக்கு படிக்க மார்க் போதாது… இம்ப்ரூவ்மெண்ட் எழுதுவதா அல்லது இன்ஜினியரிங் சேருவதா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கம்மா என்னை திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்றும், எங்கப்பா ஆசிரியப் பயிற்சிக்கு அனுப்பி ஆசிரியை வேலை வாங்கிக் கொடுத்திடலாம் என்றும் முடிவெடுக்க இருந்த வேளையில் “நான் இன்ஜினியருக்குப் படிக்கிறேன்” என்று முடிவாகச் சொன்னேன்.
திருச்சி ஜே.ஜே. பொறியியற் கல்லூரியில் மெரிட் சீட் கிடைத்தது… முதல் நாள் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும்போது பயமாக இருந்தது. காரணம், எனக்கு ஆங்கிலம் தெரியாது!
மற்ற மாணவர்கள் எல்லாம் நல்ல ஆங்கில மீடியம் பள்ளியில் படித்துவிட்டு வந்தவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு என்னால் ஒருவார்த்தை கூட பதில் பேச முடியாது… தெரியாது! அவ மானமாக இருக்கும். அழுது கொண்டுதான் கல்லூரிக்கு செல்வேன். ஆங்கிலம் தெரிய வில்லையே என்கிற வெட்கம்… வேதனை… அவமானம்… எல்லாம் எனக்கு மன உளைச்சலைத் தந்தது. படிப்படியாக என் நண்பர்கள் என்னிடத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பதிலாக தமிழில் பேச ஆரம்பித்தார்கள். பிறகு நன்றாகப் பழக ஆரம்பித்தார்கள். நாலு வருடம் ஓடியே போய்விட்டது! நாலாவது வருஷம் இனி என்ன செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்து கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ளத் தயாரானபோது மீண்டும் திருமணப் பேச்செடுத்து வீட்டில் மிரட்ட ஆரம்பித்தார்கள். எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதே தவிர, பாடங்களை நன்றாக ஆங்கிலத்தில் படித்து விடுவேன். பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டு தேர்ந் தெடுக்கப்பட்டபோது வீட்டில் வேலைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்கள்.
ஒருவழியாக எட்டாவது செமஸ்டரும் முடித்தபிறகு வீட்டில்தானே இருக்கிறோம்; என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என் சிறு வயது கனவான ஐ.ஏ.எஸ் படிப்பது என்ற கனவு என் முன்னே வந்துநின்றது. பிறகு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வப் பயிலும் வட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அப்போது உதவி இயக்குனராக இருந்த திரு.பி.சுரேஷ்குமார் அவர்களை எந்த நாளிலும் மறக்கமுடியாது. அவ்வளவு உதவிகளை செய்திருக் கிறார். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு, ஆங்கிலத்திலே பதில் சொல்லச் சொல்லி என்னைப் பாடாய்ப்படுத்தி தெளிய வைத்தார். ஆங்கில நாளிதழ்களை வைத்துக் கொண்டு, டிக்ஷ்னரியும் வைத்துக் கொண்டு ஒரு நாளில் ஒரு பக்கத்தை 5 மணி நேரம் வாசிப்பேன். இப்படியே 3 மாதம் போயிற்று.
ஆங்கிலத்தின் மீதிருந்த பயம் விலகி ஆங்கிலம் புலப்படத் தொடங்கியது.
ஆங்கிலம் எனக்கு வராது என்று என் மீதிருந்த அவநம்பிக்கை அகன்று நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதே நேரத்தில் கிரியா ஊக்கியாகச் செயல்பட்ட திரு.பி.சுரேஷ்குமார் என்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருத்தார். ஐ.ஏ.எஸ். முதற்கட்டத் தேர்வை கடுமையான பயிற்சி எடுத்து எழுதினேன். இந்த இடத்தில் என் மீது எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தேன். ஆனால் முதல்நிலைத் தேர்வில் தோல்வி அடைந்தேன். கலங்கவில்லை. நாம் இன்னும் சரியாகப் படித்து வெற்றி பெறலாம் என்று டெல்லி சென்று சிறப்பு பயிற்சி பெறலாம் என்று முதன் முறையாக வீட்டைவிட்டு வெளியே சென்று டெல்லிக்குச் சென்றேன். டெல்லியில் பாஷை புரியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். முதல் தோல்வியில் நான் கலங்கவில்லை. காரணம் அதற்காக நான் சிரமப்படவில்லை.
சிரமப்பட்டு தோற்றால்தானே வலிக்கும்! இந்தத் தோல்வி எனக்கு வலியைத் தரவில்லை. மாறாக ஜெயிக்க வேண்டும் என்ற உற்சாகத்தைத் தந்தது.
இரண்டாவது முறையாக ஐ.ஏ.எஸ் எழுது வதற்கு கடுமையான முயற்சி மேற்கொண்டேன். மற்றவர்கள் என்னை நம்பினார்கள். ஆனால் நான் என்னை நம்பவில்லை. கடுமையாகப் படித்து எழுதினேன். மீண்டும் தோல்வி. ரொம்ப அவ மானமாகப் போய்விட்டது. ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல் கேலிக்கு ஆளானேன். “பொட்டப்புள்ளைக்கு சரிப்பட்டு வருமா? இதெல்லாம் நடக்குமா? காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறதை விட்டுட்டு புத்தி கெட்டதனமா போய் வெட்டியாப் படிக்க வைக்கிறீங்களே!” இப்படி என் பெற்றோர்கள் மீது நேரடியான, மறைமுகமான விமர்சனங்கள்… பலவீனங்கள்… “என் மகளை நான் என்றைக்கு மாலையும் கழுத்துமாகப் பார்க்கப் போகி றேனோ?” என்ற என் அம்மாவின் புலம்பல்கள். இதை எல்லாம் மீறி மூன்றாவது முறையாக ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வுக்கு தயாராகிவிட்டேன்.
இரண்டு முறை தோற்றுவிட்டதால் எல்லோருக்கும் இந்த இடத்தில் என்மீது இருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. ஆனால் என்மீது எனக்கிருந்த நம்பிக்கை அதிகரித்தது. கடுமையான பயிற்சி. முயற்சிக்கு பிறகு முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். திரும்பவும் எல்லோருக்கும் என்மீது நம்பிக்கை வந்துவிட்டது.
செய்தித்தாள்களில் புகைப்படத்தோடு செய்திகள் வந்தவுடன் பரபரப்பாகிவிட்டது எங்கள் வீடு! புது உத்வேகத்தோடு ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வு எழுதினேன். தோல்வி அடைந்தேன்.
மெயின் தேர்வில் தோல்வி அடைந்தால் திரும்பவும் முதல் நிலைத் தேர்வு எழுதித்தான் ஆகவேண்டும்.
திருமணம் செய்துகொண்டு செட்டிலாகும் படி வீட்டில் பெற்றோர், வெளியில் உறவினர்கள் வற்புறுத்த ஆரம்பித்தார்கள். பெற்றோரிடத்தில் வேண்டுகோள் வைத்தேன்… “எனக்கு கடைசி வாய்ப்பு கொடுங்கள். கண்டிப் பாக ஐ.ஏ.எஸ் ஆகிறேன்… இந்த முறை பாஸ் பண்ண வில்லை என்றால் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்” என்று கெஞ்ச ஆரம்பித் தேன். சம்மதம் பெற்றேன்.
வாழ்க்கையின் கடைசி ஓட்டமாக ஓட ஆரம்பித்தேன். ஜெயிக்கிறோமா அல்லது அங்கேயே விழுந்து சாகிறோமா? என்ற வாழ்வா? சாவா? போராட்டத் துக்கு தயார் படுத்தினேன். போர்க்களத்தில் இறங்கினேன்.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி… பாராட்டுக்கள் குவிந்தன… திரும்பவும் மெயின் தேர்வு எழுதினேன். அதிலும் வெற்றி…
கடைசி கட்டம் நேர்முகத் தேர்வு. சோதனை ஆரம்பம். காரணம் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெற்றது.
ஆங்கிலம் தெரியாமல் ஒன்றும் செய்ய முடியாது! வேறு வழி இல்லை. கடைசி நேரம்… யுத்தக்களம். வெற்றி அல்லது மரணம். விடாமல் ஆங்கிலம் பேசிப்பேசி பார்த்தேன். ஸ்கூட்டியில் போகும்போது, கண்ணாடி முன்பு நிற்கும்போது எப்போது பார்த்தாலும் ஏதாவது ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பேன். பார்ப்பவர்களுக்கு =இவளுக்கு என்னமோ ஆகிவிட்டது+ என்றுகூட பேசுவார்கள். நான் கவலைப்படவில்லை.
ரிசல்ட் தேதி அறிவித்து விட்டார்கள். வயிற்றில் பூச்சி பறந்தது. பரபரப்பானேன்.
வீட்டில் எல்லோருக்கும் சொல்லிவிட்டேன். “அடுத்த தேர்வு எழுத மாட்டேன். இந்த முறை எனக்கு தோல்வி என்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்தேன்.
ரிசல்ட்டும் வந்தது. அகில இந்திய அளவில் 180வது ரேங்க் வாங்கி இருந்தேன். பயங்கர சந்தோஷம்.
எவ்வளவு சிரமங்கள், எவ்வளவு வலிகள். இதைக் கடந்துதானே இந்த வெற்றி நமக்கு கிடைத்திருக்கிறது என்று ஒரு பெரிய மூச்சுக் காற்றை இழுத்துவிட்டேன். அதில் கிடைத்த சுகம் ஒரு போதும் கிடைக்காது.
ஆங்கிலத்தில் சற்று பின்தங்கியதால் நான் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து ஐ.பி.எஸ் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அடுத்த முசௌரியில் பயிற்சிக்களம். இங்கு இந்தி கற்க வேண்டிய கட்டாயம். சிரமப்பட்டு கற்றேன்.
கேரள மாநிலத்தில் காவல்துறை உதவி கண் காணிப்பாளராக பணி அமர்ந்தேன். மலையாளம் கற்க வேண்டிய சூழ்நிலை. படித்தேன். மொழிகளை கற்க வேண்டிய காலத்தில் கற்றால் யாருக்கும் சிரமம் கிடையாது. சிரமப்படாமல் எதுவும் கிடைக்காது… நீர்ப் பரப்பின் மேல் வாத்து மிதந்து கொண்டிருப்பது போல் தோன்றினாலும், தன்னை மிதக்க வைத்துக் கொள்வதற்கு அந்த வாத்து தன் கால்களை அசைத்துக் கொண்டே இருக்குமாம். அது யாருக்கும் தெரியாது. அதன் வலி யாருக்கும் தெரியாது.
வலிகளைக் கடந்து வேதனைகளை சுமந்து, தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் “நம்மீது வைக்கும் நம்பிக்கை” என்ற தாரக மந்திரம் மட்டுமே வெற்றியைத் தரும்.”
அரங்கலிருந்து க. சிவகுருநாதன்
karthi
சரியான முயற்சி… சரியன் இலக்கு…