– பாவை வித்யாஷ்ரம் அறிமுக விழாவில் டாக்டர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.
அந்தப் பேராசிரியரின் பெயர் ராமசாமி. கல்லூரியின் என்.சி.சி அலுவலரும்கூட. “பாபு! என்னை அறையில் வந்து பார்!” என்றந்த மாணவனை அழைத்ததில் மாணவர் பதறிப் போனார். கல்லூரி மாணவர்களைக்கூட கை வைக்கும் அளவு கண்டிப்பான ஆசிரியர் அவர். அறையில் வைத்து அறை கொடுப்பாரோ என அஞ்சியபடியே சென்றார் அந்த மாணவர்.
அறையில் நுழைந்ததும், “அங்கே என்.சி.சி. சீருடை இருக்கிறது. அணிந்து கொண்டு வா” என்றார் பேராசிரியர். மாணவர் அணிந்து வந்தார். “அங்கிருக்கும் நிலைக்கண்ணாடியில் பார்” என்றார். தன்னுடைய தோற்றம் ஒரு கோமாளியைப் போல் இருப்பதாய் உணர்ந்தார் மாணவர். ஆனால், பேராசிரியரின் குரல் ஒலித்தது. “கம்பீரமாய் இருக்கிறாய்” கனகச்சிதமாய் பொருந்துகிறது” என்று.
உற்சாகமும் உத்வேகமும் பெற்றார் அந்த மாணவர். “அன்று அணிந்த காக்கிச் சீருடையை இன்றுவரை கழற்றவில்லை” என்று பலத்த கரவொலிக்கு நடுவே அறிவித்த அந்த மாணவர் தான் கோவை மாநகரக் காவல்துறை ஆணையர், டாக்டர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.
நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்களின் புதிய அங்கமான பாவை வித்யாஸ்ரம் எனும் சர்வ தேசத் தரமுள்ள பள்ளி அறிமுகவிழா கோவையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சைலேந்திரபாபு.
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றையும் சக்தி என்று கருதினார்கள். பணம்தான் சக்தியென்று நம்பப்பட்டது ஒரு காலம். உடல் பலம்தான் சக்தியென்று நம்பப் பட்டது ஒரு காலம். படைபலம்தான் சக்தியென்று நம்பப்பட்டது ஒரு காலம். ஆனால் அறிவுதான் சக்தி. கல்விதான் சக்தி. அறிவு மிக்கவன் ஒவ்வொருவரையும் பார்த்து தன்னுடைய ஆளுமையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். படித்துப் பெறுகிற பட்டம் என்பது மட்டும் ஆளுமையைத் தந்துவிடாது. ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்ற ஓர் இளைஞர் கூச்சமும் சங்கோஜமும் மிக்கவராகக் காணப்பட்டார்.
ஆளுமையை ஏற்படுத்தும் கல்விதான் முக்கியம். என் சின்னவயதில் என் அன்னையை கவனித்திருக்கிறேன். காலை நான்கு மணிக்கு எழுந்து கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்துவார். 10 பேர் கொண்ட குடும்பத்துக்கு உணவு தயாரிப்பார். கடின உழைப்பாளியாக விளங்கினார். அவரை ஒரு பங்களாவில் அமர்த்த வேண்டுமென்று விரும்பினேன்.
இன்று என்னிடம் பங்களா இல்லை. ஆனால் அரசாங்கம் கொடுத்த காவல்துறை ஆணையர் பங்களாவில் என் அன்னையை அமர்த்தி அழகு பார்க்கிறேன்” என்றதும் சபை நெகிழ்ந்தது.
தொடர்ந்து பேசிய டாக்டர் சைலேந்திர பாபு மனிதர்களை நான்கு வகைகளாகப் பிரித்துச் சொன்னார். தங்களுக்குத் தெரியாது என்று தெரியாதவர்கள், தங்களுக்குத் தெரியாது என்று தெரிந்தவர்கள், தங்களுக்குத் தெரியும் என்று தெரியாதவர்கள், தங்களுக்குத் தெரியும் என்று தெரிந்தவர்கள்.
தங்களுக்குத் தெரியும் என்று தெரிந்தவர்கள், உயரங்களைத் தொடுகிறார்கள் என்றார் அவர்.
பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் பாவை நடராஜன் வரவேற்றுப் பேசும் போது தன்னுடைய கல்விக் கனவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆளுமைகளை உருவாக்குகிற நோக்கத் துடன் இந்த வித்யாஷ்ரம் தொடங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சிறப்புரையாற்றினார் கல்வியாளர் திரு. சதீஷ். இவர், குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்ற நல்லாசிரியர். சிபிஎஸ்இ வழிக் கல்வியின் சிறப்பம் சங்களை விரித்துரைத்த இவர், சமச்சீர் கல்வியின் சிறப்புகளையும் பாராட்டத் தவறவில்லை. மாணவர்களின் மாண்பை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கிருக்கும் பங்கினை அவர் வலி யுறுத்தினார்.
கார்ப்பரேஷன் வங்கி துணைப்பொது மேலாளர் திரு. தங்கராஜ் பேசும்போது பாவை வித்யாஷ்ரத்தில் பள்ளிச் சிறுவராய் நுழையக்கூடிய மாணவனோ, மாணவியோ தொழில்நுட்பப் பட்டதாரியாக வெளியே வரும் அளவுக்கு பள்ளி-கல்லூரிகளின் சங்கம மாகப் பாவை வளாகம் திகழ்வதை சுட்டிக் காட்டினார்.
விழாவில் பேசிய டாக்டர் கேசவினோ அறம், நகர்ப்புறங்களில் சர்வதேசத் தரமிக்க கல்வியைத் தருவதில் பாவை நிறுவனங்களின் பங்கு பற்றிப் பெரு மிதத்துடன் குறிப் பிட்டார்.
தொழிலதிபர் இயகோகா சுப்பிர மணியம் பேசும்போது, நமது பண்பாட்டையும் பாரம்பரியச் சிறப்பையும் மாணவர்கள் மனதில் பதியச் செய்கிறகல்வி முறை அவசியம் என்று குறிப்பிட்டார்.
நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின்மைந்தன் முத்தையா தனது வாழ்த்துரையில், கல்வி சுமையாக இல்லாமல் சுகமான அனுபவமாய் அமைவதில் பாவை நிறுவனங்கள் மேற்கொள்ளும் அக்கறையைப் பாராட்டினார்.
ஆடிட்டர் நடராஜன் அவர்களின் முடிவெடுக்கும் திறனையும் சூழல்களைக் கையாளும் பாங்கையும் குறித்து விவரித்த அவர், மனச்சோர்வின் உச்சத்திலிருந்த மாணவனை தன் அன்பால் மீட்டெடுத்த ஆசிரியரின் புரிதல் குறித்த சம்பவத்தை விளக்கிப் பேசினார்.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கருணாகரன் தன் தலைமையுரையில் இன்றைய கல்விமுறை- மாணவர்கள் நிலை – ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி மங்கை நடராஜனின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.
புதிய தலைமுறைக்கேற்ற புத்துணர்வுக் கல்வி, புலர்கிற திசையாய் பாவை கல்வி நிறுவனங்கள் திகழ்வதைப் பறை சாற்றுகிற இந்த நிகழ்ச்சி, மனங்களில் எல்லாம் மலர்த்தியது மகிழ்ச்சி!!
sathya
ஏன் ஒருவரும் எவ் வளவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று பேச வில்லை .
என்ன சமுதாய அக்கறை ?