பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள்..

இந்த மாதம் கபிலன் வைரமுத்து

நம்பிக்கை நொடிகள் பக்கங்களில் இடம் பெறுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது பல காட்சிகள் விரிந்தன. சாதனை படைத்த ஒரு நபராக இல்லாமல், தன் வண்ணப் பந்தைத் தவறவிட்டு தவறவிட்டு துரத்திக் கொண்டோடும் குழந்தையைப்போல இலட்சியங்களை தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் ஒரு வெள்ளை இளைஞனாக இங்கே இடம் பெறுகிறேன்.

என் பள்ளியின் தமிழ் நாடகங்களை எப்பொழுதும் என் தமிழ் ஆசிரியர்தான் எழுதுவார். அது எங்கள் பள்ளியின் எழுதப்படாத சட்டம். நான் அவரை நேசித்த அளவுக்கு அவரது நாடகங்களை நேசித்ததில்லை. வேறு வழியின்றி அந்த நாடகங்களில் நானும் நடிக்க வேண்டி யிருந்தது. பாகற்காய் மெல்லுவது போல இருக்கும் அவரது வசனங்களை உச்சரிக்கும்போது, “அண்ணா செம டிராமா! உச்சி வெயில்லகூட தூங்க வைச்சிட்டீங்க போங்க” என்பது ஜூனியர் ஒருவனின் விமர்சனம்.

நம் பள்ளி நாடகங்களை ஆசிரியர்தான் எழுதவேண்டுமா? மாணவன் எழுதக்கூடாதா? என் நண்பர்களோடு கலந்தாலோசித்தேன். ஆசிரியர் தினத்திற்கு நாம் நாடகம் போடுகிறோம். நிறைய எதிர்ப்புகள். நாடகம் என்ற பெயரில் நாங்கள் இப்ஹள்ள் இன்ற் அடிப்பதாக சில ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார். நாடகப்பயிற்சி நடந்து கொண்டிருந்தபோது ஓரிரு ஆசிரியர்களும் உடன் சில ஜால்ரா மாணவர்களும் வந்து ஏளனமாய் சிரி சிரி என்று சிரித்தல். நாடகம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் போனால் மைக் இன்ற் செய்யப் படும் என்று எலக்டிரீசியன் மிரட்டல். முதல் முதலாய் சிந்தித்து நாடகம் போடுவதால் குழுவில் அனைவருக்கும் உள்ளூர ஒரு பயம். அந்தப்பயிற்சி மேடைதான் என் கற்பனையின் முதல் களம்.

ஆசிரியர் தினம். ஐநூறுபேர்தான் ஆடியன்ஸ். ஆனால் உலகமே எங்களைப்பார்க்கப் போவதாய் ஒரு திகில். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் நம் நாட்டின் இன்றைய நிலையைப் பற்றியும் நான் எழுதிய வசனத்தை என் நண்பர்கள் பேசும்போது படாரென எழுந்தது அந்த முதல் கை தட்டல். எதிர்காலத்தில் ஒருவேளை ஐ.நா.சபையில் என் கருத்தொன்றுக்கு கைதட்டல் கிடைத்தாலும் அந்த நிறைவு திரும்பி வராது. நானும் சில காட்சிகளில் நடித்தேன். சமூக அரசியல் வசனங்கள் பேசப்பட்டபோது எழுந்த ஆரவாரம், “இதுக்குத் தான் நாங்கள் காத்துக்கிட்டு இருந்தோம்” என்று எங்களுக்கு சொல்வதைப் போல இருந்தது. அந்த நாடகத்தை முதலில் பாராட்டியவர் எங்கள் தமிழ் ஆசிரியர். “தம்பி எங்கேயோ போய்டீங்க” என்றார். “எல்லாம் உங்கள பார்த்து கத்துக் கிட்டதுதான் சார்” என்று சொன்னபோது, “இந்த வசனம்தான் எல்லாத்தையும் விடவும் சூப்பர்” என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அன்றிரவு எனக்குள் அடிக்கடி வந்து போன வாசகம், “என் கருத்துக்களை எழுத்து என்ற வடிவத்தின் மூலம் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் என்னால் சொல்ல முடியும்.”

அந்த சம்பவம் நிகழாமல் போயிருந்தால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அடுத்த மாதத்தில் ஒரு கவிதைத்தொகுதியை என்னால் வெளியிட்டிருக்க முடியாது. என் எழுத்துக்கு சமூக மாற்றம் என்ற நோக்கத்தைக் கொடுத்ததும் அந்த நாடகம்தான். இல்லையேல் விற்பனைக்கு மிகவும் ஒத்துழைக்கும் காதல் கவிதைகளை மட்டுமே தொடர்ந்து எழுதியிருப்பேன்.

“உலகத்திற்கு எதிராய் போராடியபோது தீவிர வாதம் எங்களை பாதுகாத்தது. தீவிரவாதத்திற்கு எதிராய் போராடும்போது உலகம் எங்களைப் பாதுகாக்குமா?” என்று என் முதல் நாவலின் இறுதி அத்தியாயத்தில் ஒரு திருந்திய தீவிரவாதி கேட்கும் கேள்விக்குக்கூட அந்த முதல் நாடகம்தான் மூலம் என்பதை அறிவேன். தீவிரவாத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பூமரேங் பூமி என்ற நாவலை எழுதிய போது – அதில் வரும் சில கதாநாயகத்துவம் மிக்க கதாபாத்திரங்களை- ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நாடகத்தில் நடித்த என் நண்பர்களோடு ஒப்பிட்டுக் கொண்டுதான் எழுதினேன்.

கவிதைகளும் நாவல்களும் அவை சொல்லும் கருத்துக்களும் வெறும் காகிதத்தோடு முடிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். எனது கற்பனைகள் நிகழ்காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் உத்வேகம் தரவேண்டும் என்பதற் கான முயற்சிகளில் மகிழ்ச்சியாய் அடிக்கடி தடுக்கி விழுகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு செய்தியோடுதான் எழுகிறேன்.

2 Responses

  1. C.M.Lokesh

    Excellent!!! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்—–> “நான் எழுதிய வசனத்தை என் நண்பர்கள் பேசும்போது படாரென எழுந்தது அந்த முதல் கை தட்டல். எதிர்காலத்தில் ஒருவேளை ஐ.நா.சபையில் என் கருத்தொன்றுக்கு கைதட்டல் கிடைத்தாலும் அந்த நிறைவு திரும்பி வராது.”
    கடைசி வரியும் அற்புதம். வாழ்த்துகள்!!!

  2. rasa.ganesan

    “உலகத்திற்கு எதிராய் போராடியபோது தீவிர வாதம் எங்களை பாதுகாத்தது. தீவிரவாதத்திற்கு எதிராய் போராடும்போது உலகம் எங்களைப் பாதுகாக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *