நம்பிக்கை மேல் நம்பிக்கை
ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’
மருத்துவரிடமிருந்து மருந்தை வாங்கிக்கொண்ட அரசர் சொன்னார், “இந்த மருந்தில் விஷம் கலந்திருப்பதாக ஒற்றன் சொல்கிறான். மருந்தைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் உங்கள் மேல் 100 சதம் நம்பிக்கை வைத்திருக்கிறேன் அதனால் தைரியமாக இந்த மருந்தை சாப்பிடுகிறேன்” என்றவாறே மருந்தை அருந்திவிட்டார். அதிலிருந்த விஷத்தால் உடனே மயக்கம் அடைந்தார்.
அடுத்த நிமிடம் மருத்துவர் அளித்த சிகிச்சையால் அரசர் பிழைத்துக் கொண்டார். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறிய மருத்துவர், “விஷமென்று தெரிந்தும் மருந்தை ஏன் அருந்தினீர்கள்?” என்றார்.
அரசர் சொன்னார், “நான் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை. நம்பிக்கை என்றகுணம் உள்ளவர்களை யாரும் கை விட மாட்டார்கள் என்றஎனது எண்ணத்தின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை”
இப்படித்தான் சிலர் எல்லோரையும் நம்புவார்கள்.
சிலர் யாரையும் நம்ப மாட்டார்கள். தங்கள் வாழ்வில் நடந்த ஒன்றிரண்டு ஏமாற்றங்களின் காரணமாக சந்திக்கும் எல்லோரையும் சந்தேகத்தோடு, அவ நம்பிக்கையோடே பார்ப்பார்கள். பழகுவார்கள்.
‘எல்லோரையும் நம்பினால் நாம் ஏமாற மாட்டோமா?’ என்றார் எல்லோரையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் ஒரு நிறுவனத்தலைவர்.
எல்லோரையும் நம்பினாலும் யாராவது ஓரிருவர் நம்மை ஏமாற்றவே செய்வார்கள். அதனால் நமக்கு இழப்பு ஏற்படலாம் என்பதும் நிஜம்தான். ஆனால் நம்பிக்கையால் நமக்கு பத்து சதவீத இழப்பு அல்லது ஏமாற்றம் என்றால் அவநம்பிக்கையால் நமக்கு 90 சதவீதம் இழப்பாகத்தான் இருக்கும்.
நிறுவனம் தன்னை முழுவதுமாக நம்பவில்லை என்ற எண்ணமே உயர் பொறுப்பில் இருக்கும் பணியாளர்களை செயலற்றவர்களாக மாற்றிவிடும். அவர்கள் உற்சாகமின்றி கடமைக்கு பணியாற்றுவதையும் நான் கண்டிருக்கிறேன்.
இதுவே நம்முடன் இருப்பவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தால், நாம் வைத்திருக்கும் நம்பிக்கையால் உந்தப்பட்டு சிறப்பாக செயல்படுவார்கள். செயல்வேகம் பெறுவார்கள்.
கதையில் வரும் அரசனைப்போல நம்பிக்கையின் மேல் சிலருக்கு இப்படி அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால்தான் நம்பிக்கையேகூட நம்பிக்கையோடு இருக்கிறது.
Leave a Reply