நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள்
எந்த ஒரு முயற்சியிலும் பணியிலும் சேரும் போது பயம் அதிகம் எழுகிறது. இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கின்றோமோ என்ற எண்ணம் எழுகிறது. என்ன செய்வது?
உங்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே! இருப்பதை விட்டு பறப்பதை நினைத்தால் என்று. அதையே சொல்லிவிட்டு அது தான் பிரச்சனை என்றால் என்ன அர்த்தம். இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு நான் என்னவெல்லாம் செய்கிறேன்.
அதற்கு என்ன முயற்சிகள் எடுக்கிறேன். அந்த முயற்சியில் எவ்வளவு சீரியஸாக இருக்கிறேன். ஊர் மெச்சுவதற்கு இந்த முயற்சியா? நிஜமாகவே மனப் பூர்வமான முயற்சியா? இதைப் பொறுத்துத்தான் அதிலிருந்து விடிவு வரும். இல்லையென்றால் நமக்கு நாமே ஆடிக்கொண்டிருக்கும் நாடகம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
திருமந்திரம் எழுதிய திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், பாபாஜி இமயமலைக் குகையில் ஆயிரம் ஆண்டுகளாய் தவக்கோலத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுவது பற்றி தங்கள் கருத்து?
யார் எதற்கு வேண்டுமானாலும் கதை எழுதலாமல்லவா?
வெறும் கையில் விபூதி, சாக்லேட், தங்க நாணயம் வரவழைக்க முடியுமா?
முடியும். பி.சி.சர்க்காரால்.
மிகுந்த ஒழுக்க சீலரும் தீவிர பிரம்மச்சாரியு மான சுவாமி விவேகானந்தர் இளம் வயதில் மரணம் அடையக் காரணமென்ன? அவர் தன் இந்திரியத்தை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்திருந்தாலேயே மரணமடைந்தாகவும் சொல்லப்படுகிறதே! அது குறித்து தங்கள் கருத்து என்ன?
இந்திரியத்தை அடக்குவது என்றெல்லாம் கிடையாது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. இறந்துவிட்டார். அந்தக்காலத்தில் சரியான மருந்து கிடையாது. ஆனால் நான் கடவுள் என்று அவர் சொல்லிவிட்டு சாகவில்லை. கடவுளைத்தேட முயற்சி செய்கிற மனிதன் இறக்கலாம். நான் கடவுள் என்று சொல்கிற மனிதன் இறக்கும் போது தான் காமெடியாகிவிடுகிறது.
நேர்மை, உழைப்பு, கடவுள் பக்தி கொண்ட எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த எனது உடன் பிறப்புகள் முயல்கின்றனர். இதை நான் எப்படி எதிர் கொள்வது? இதனால் என் தூக்கம் பாதிக்கின்றது.
நான் ரொம்பவும் சின்சியர், நேர்மை, கடவுள் பக்தி என்பதெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங். என் உறவினர் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்கின்றனர் என்ற காரணத்தினால் தூக்கம் வரவில்லை என்பது இயல்பு.
மனம் சோர்வடையும் போது, பயம் ஏற்படும்போது தூக்கம் குறைய ஆரம்பிக்கும். இது நார்மல். மனம் சோர்வாக இருக்கின்றபோது, பார்க்கின்ற விஷயமெல்லாம் வித்தியாசமாகத் தெரியும். அந்த குறிப்பிட்ட நபர் தெருவில் சென்றால்கூட வெடிகுண்டு எடுத்துப் போகிறாரோ என்ற நினைப்பு வரும்.
ஏனென்றால் நாம் அவ்வளவு பலவீனமாக இருக்கிறோம். இந்த உறவு தேவை. தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அவரிடம் வெளிப் படையாகப் போய் பேசலாம். ஏன் இப்படி யெல்லாம் செய்கின்றீர்கள்? அப்படி பேசக்கூடிய அளவு நெருக்கமில்லாத மனிதனுடைய உறவு தேவையில்லை என்று வெட்டி எறிந்துவிடலாம். பிரச்சனைகளே இப்படித்தான். கையிலிருப்பது போய்விடுமோ என்ற பயத்திலேயே நாம் முடிவெடுப்பதில்லை.
இதுதான் கலீல் ஜிப்ரான் சொன்ன விஷயம். நிஜமாகவே நம் கையில் ஏதாவது இருந்தால் அது போகவே போகாது. நம்மை விட்டுப் போய் விட்டால் எப்போதும் அது நம் கையில் எதுவும் இல்லை என்று அர்த்தம்.
உறவுகள் நம்மை தொல்லை செய்தால் அது தேவையே இல்லை. சொல்லப்போனால் அது உறவே கிடையாது. இதைப் புரிந்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டு மானாலும் விட்டு விட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம்.
Leave a Reply