யுத்தம் செய்யாத தம்பதிகள்
– கிருஷ்ண வரதராஜன்
உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் எது?
ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என்று பட்டியலிட்டு விடாதீர்கள். ஏனெனில் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் வீடுதான்.
இங்கே வார்த்தைகள்தான் ஆயுதங்கள். சில பேர் காயப்படுத்துவதற்காக, வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்துவார்கள். சிலர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக வார்த்தை ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்.
எப்படி இருந்தாலும் வார்த்தைகள் போல கூரிய ஆயுதம் எதுவுமில்லை.
‘உன்னை திருமணம் செய்து கொண்டதி லிருந்து எனக்கு நிம்மதியே போச்சு.’ வார்த்தை களாலேயே மனிதர்களை குத்தி கிழித்துவிட முடியும்.
கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது ஒன்றும் ஆச்சரியமல்ல. சண்டை வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
கணவன் மனைவி உறவு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் எனக்கு முன்பு பேசியவர், கணவன் மனைவி சண்டையே போடக்கூடாது என்று பேசினார். நான் பேசும்போது சொன்னேன் சண்டை போடுங்கள் ஆனால், நிறுத்தி விடுங்கள். சில பேர் மெகா சீரியல் கணக்காக இரண்டு மூன்று வருடமெல்லாம் ஒரே விஷயத்திற்கு சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
இயந்திரத்தில் இரண்டு பேரிங்குகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து வேலை செய்யும் போது உராய்வு ஏற்படத்தான் செய்யும். உராய்வால் ஏற்படும் வெப்பத்தை தணிக்க க்ரீஸ் வைக்கிறார்கள் அல்லது ஏதேனும் ஆயிலை பயன் படுத்துகிறார்கள். இதே போல இரண்டு மனிதர்கள் ஒன்றாக இருக்கிற இடத்திலும் உராய்வு இருக்கும். வெப்பம் ஏற்படும். அதை தணிக்க அன்பு தேவை. கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் குணம் தேவை.
நாங்கள் மனிதவள மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் நிறுவனங்களில் எல்லாம் ஒன்னெஸ் மீட்டிங் அதாவது ஒன்றாகுதல் கூட்டம் நடத்துவோம்.
படிப்பால் பதவியால் வயதால் நிறத்தால் இப்படி பல காரணங்களால் எல்லோரும் வேறு வேறானவர்களே. ஆனால் ஒரே நிறுவனம் அல்லது ஒரே குடும்பம் என்கிற அடிப்படையில் தான் ஒன்றாக வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும்போது வேலை நேரத்தில் ஒருவருக்கொருவர் ஏற்படும் உராய்வுகளையும் சேர்த்து பல பேர் பிரிந்தே இருப்பார்கள்.
அவர்களை மனம் திறந்து பேசச்செய்வது தான் இந்தக்கூட்டத்தின் குறிக்கோள். காரணம், வருத்தங்களை சுமந்து கொண்டிருக்காமல் மனம் விட்டு சம்பந்தப்பட்டவரிடம் பேசினாலே போதும் பாதி பிரச்சனைகள் சரியாகிவிடும்.
கம்ப்யூட்டரில் கோரல்டிரா சாப்ட்வேரை பொறுத்தவரை நாம் திறக்கும் ஒவ்வொரு பைலுக்கும் அது ஒரு பேக்கப் பைலை உருவாக்கிக் கொள்ளும். ஆக கம்ப்யூட்டரில் 500 பைல்களை சேமித்து வைக்கலாம் என்றால் நாம் 250 பைல்களை உருவாக்கியவுடனே கம்ப்யூட்டர் உருவாக்கிய பேக்கப் பைல்களையும் சேர்த்து 500 பைல்களாகிவிடும்.
இதனால் 250 பைல்கள் உருவானவுடனேயே கம்ப்யூட்டர் ஸ்லோவாகிவிடும். சர்வீஸ் சென்டருக்கு போன் செய்தேன். சர்வீஸ் சென்டரில் இருந்து வந்தவர் இப்படி உருவான டெம்ப்ரவரி பைல்களை எல்லாம் அழித்தார்கள். கம்ப்யூட்டர் மறுபடி வேகம் பெற்றது.
அடுத்த முறை நானே அதை செய்து கொண்டேன். இதேதான் நமக்கும். உறவுகளுக்குள் ஏற்படும் வருத்தம் எனும் டெம்ரவரி பைல்களை வாரம் ஒரு முறை மனம் விட்டு பேசி அழித்து விடுங்கள்.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ஒரு வசனம். சம்பந்தியாகப் போகிற இருவரும் பேசிக் கொள்கிற இடம்… கோபமாக பேசிவிட்டு டெல்லி கணேஷ் சொல்வார், நா உங்கள கத்தியால குத்திட்டதா நினைச்சிடாதீங்க.. அதற்கு பதில் சொல்லிவிட்டு விசு சொல்வார்.. பதிலுக்கு நா உங்களை கத்தியால குத்தறதா நினைக்காதீங்க. நீங்க குத்தினா இடத்தில மருந்து போட்டிருக்கேன்.
எல்லோர் வீட்டிலும் நடப்பது இதுதான். கோபமாய் தன்னை நோக்கி வருகிற வார்த்தை அம்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அல்ல பதிலாய் பழிக்கு பழி என வார்த்தைகளை அம்புகளையே வீசிவிடுகிறோம்.
உறவில் வரும் சண்டைகளை எதிர்கொள்ள அஹிம்சைதான் சிறந்த ஆயுதம்.
அஹிம்சை ஆயுதத்தை கையிலெடுத்து போரிட்டு வெற்றியும் பெற்ற இந்திய சுதந்திரத்தைப் பற்றி சர்ச்சில் இப்படி குறிப்பிட்டார், “அவர்கள் மட்டும் துப்பாக்கியோடு வந்திருந்தால் நாங்கள் பீரங்கிகளோடு சென்று அவர்களை வென்றிருப்போம். அவர்கள் வெறும் கைகளோடு வந்ததால்தான் எங்களால் அவர்களை வெற்றி காண முடியவில்லை”
கத்தியோடு நம்மை நோக்கி ஓடி வருகிறவர்களை குத்திக்கிழிக்க யாருக்கும் தயக்கம் இருக்காது. ஆனால் நம்மை புன்னகையோடு எதிர் கொள்கிறவர்களை கோபித்துக்கொள்ள என்ன, முறைக்கக்கூட யாருக்கும் மனம் வராது.
எனவே அஹிம்சை பழகுங்கள். அன்பு பழகுங்கள்.
வார்த்தை யுத்தங்களை நிறுத்த சுலபமான ஒரு வழி உண்டு.
நாடாளுமன்றத்தில் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் அவர்கள் மொழியில் புரிந்து கொள்ள ஒரு கருவி வைத்திருக்கிறார்கள். அதுபோல ஒருவர் என்ன வார்த்தை சொல்கிறார் என்பதை விடுத்து என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அதன்பிறகு அர்த்தங்களை விட்டு விட்டு வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்க மாட்டீர்கள். இதை மட்டும் கடைப்பிடித்தால் எல்லா நாளும் திருமண நாள் போல தித்திக்கும்.
vijaykumar cbe
thanks, we may keep it up
k.ramesh
dear sir,
super sir, very very thank you so much sir,