– மரபின் மைந்தன் ம. முத்தையா
கனவுகளால் ஆனதுதான் அந்த மனிதனின் வாழ்க்கை. ஆனால் மிகுந்த தீவிரத்தோடும் தெளிவோடும் அந்தக் கனவுகளை அவர் எட்டிப் பிடித்ததால் அவை இலட்சியங் களாயின.” இப்படி வர்ணிக்கப்பட்டவர், வால்ட் டிஸ்னி. குழந்தைகள் உலகின் கற்பனைப் பாத்திரங்களை படைத்துக் கொடுத்த பிரம்மா. அவரே ஒரு முறை சொன்னார். “உண்மையான படைப்பாற்றல் கனவு மட்டும் காணாது, கனவுகளைக் கைப்பற்றவும் செய்யும்” என்று!!
சிகாகோவில், 1901 டிசம்பர் 5ல் பிறந்த வால்ட் டிஸ்னி, இலியாஸ் டிஸ்னி ஃப்ளோரா தம்பதியரின் நான்காவது மகன். அவருக்கொரு தங்கையும் உண்டு. இலியாஸ் ஒரு தச்சர் அவர் மனைவி ஓர் ஆசிரியை. இலியாஸைப் பொறுத்தவரை அவர் இறுக்கமான மனிதர். வளைந்தே கொடுக்காத சுபாவம் கொண்டவர். நகைச்சுவை உணர்ச்சி மருந்துக்கும் கிடையாது. குழந்தைகளைக் கடுமை யாக நடத்துவதுடன் கொடூரமான தண்டனைகளையும் கொடுப்பார்.
வால்ட் டிஸ்னி, பதின்பருவ இளைஞராய் இருந்தபோது வலிமை யான உடற்கட்டுடன் வளர்ந்தார். தன்னிடம் ஒரு கருவியை வால்ட் டிஸ்னி எடுத்துக் கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்ட இலியாஸ், தண்டனை தருவதற்காக மகனை, வீட்டின் கீழ்தளத்திற்கு அழைத்தார். வால்ட்டின் சகோதரர் ராய், பாரதியார் பாஷையில், “இது பொறுப்பதில்லை தம்பீ” என்றதும் வால்ட் டிஸ்னி சுதாரித்துக் கொண்டார். தந்தை சுத்தியலின் கைப்பிடியால் அடிக்க வந்த போது, சுத்தியலைப் பிடுங்கிக் கொண்டு, அவரின் இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டார். இலியாஸின் கண்கள் கலங்கின. அதன் பிறகு அவர் மகனை அடித்ததேயில்லை.
அம்மா ஃப்ளோரா புத்தகப் பிரியை. வால்ட் டிஸ்னியின் நகைச்சுவை உணர்வுகூட அம்மாவின் வழி வந்தது தான். குடும்ப நிர்வாகத்தில் கெட்டி. அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளைகள், அப்பாவை ஒரேயடியாக வெறுத்து விடவில்லை. தன்னினும் எட்டு வயது மூத்தவரான அண்ணன் ராய் ஆலிவர் டிஸ்னிக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் வால்ட் டிஸ்னி, மூத்த சகோதரர்கள் மூவரும் வாழ்ந்த கேன்ஸஸ் நகருக்கு இடம் பெயர்ந்தார் வால்ட். சாண்டா ஃபீ ரயில் நிலையத்தில் செய்தித்தாள்களும் சுருட்டும், கேன்ஸஸ் கமர்கட்டும் விற்பனை செய்கிற வேலை வாய்ப்பு, அண்ணன் ராய் மூலமாக அமைந்தது.
ரயில் ஓட்டுநர்களுக்கு சொந்தக் கணக்கில் சுருட்டும் புகையிலையும் தருவார் வால்ட் டிஸ்னி. அதற்குக் கைமாறாக ரயில் என்ஜினில் பயணம் செய்யவும் ரயில் நிற்கும் போதும் புறப்படும்போதும் விசிலை ஊதவும் வால்ட் டிஸ்னியை அவர்கள் அனுமதித்தார்கள்.
உள்ளூர் நாளிதழ்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்த இரண்டு ஓவியர்களிடம் பயிற்சி பெற்று கேலிச்சித்திரக்காரராய் வால்ட் டிஸ்னி வடிவெடுக்கத் தொடங்கியபோது அவருக்கு பருவம் பதினாறு!! முதலாம் உலக யுத்தம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த நேரமது. பதினேழு வயதுக்காரர்களை அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஓட்டுநர்களாக வேலைக்கு நியமனம் செய்கிற விஷயம் வால்ட்டுக்குத் தெரிய வந்தது. ஆவணங்களை மாற்றி, அப்பாவின் கையெழுத்தை தானே போட்டு, தன் வயதை பதினேழு என்று சொல்லி செஞ்சிலுவை சங்கத்தில் ஓட்டுநர் வேலைக்குச் சேர்ந்தார் வால்ட். அங்கே அவரைப் போலவே பொய் ஆவணங்களைக் காட்டி வேலைக்குச் சேர்ந்த 15 வயது விடலை ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்தப் பையனின் பெயர், ரே க்ராக். இவர்தான் பின்னாளில் உலகம் முழுவதும் மெக்டோனால்ட் உணவங்களை நிறுவியவர்.
அங்கங்கே விதம்விதமாய் வேலைகள் பார்த்து ஓவியக் கூடமொன்றில் ஓவியர் பணிக்கு மாதம் 50 டால்கள் சம்பளத்தில் சேர்ந்தார் வால்ட். அப்போது வால்ட்டின் வயது 18. அதே வயதில் உபே இவர்க்ஸ் என்ற டச்சு பெயர் கொண்ட நண்பர் ஒருவர் அமைந்தார். அவருக்கும் வயது 18. இரண்டு 18களும் இணைந்து, தனியாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இருவரும் ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஸ்டூடியோவின் வேலைகளை எடுத்துச் செய்தார்கள். அபாரமாக வேலை செய்தவர்களுக்கு ஒப்புக் கொண்டபடி ஊதியம் தர அந்த நிறுவனத்தால் இயலவில்லை. அந்த ஸ்டூடியோவின் உப கரணங்களைப் பயன்படுத்தி, சொந்த வேலைகளை ஓவியர்கள் பார்க்கத் தொடங் கினார். வால்ட் டிஸ்னியின் வாழ்க்கை இவ்விதமாய் நிலை கொண்டது.
அபாரமான கற்பனைத் திறனுடன் அசையாச் சித்திரங்களை அடுக்கடுக்காய் வரைந்து கொண்டிருந்த வால்ட் டிஸ்னிக்கு அசைவுகள் நிரம்பிய வாழ்வில் ஆசை வந்தது. தான் வாங்கி வைத்திருந்த பங்குகளை எல்லாம் விற்று, லாஃப் ஓ கிராம் ஸ்டூடியோவைத் தொடங்கினார். தன் காமராவை புதிய இருப்பிடத்திற்குக் கொண்டு வந்திருந்தார். அதற்கு முன் கேன்ஸஸில் குடியேறி யிருந்த வால்ட்டின் தந்தை தன்னுடைய வீட்டில் காமராவை வைக்க மாதம் 5 டாலர் வாடகை வாங்கிக் கொண்டிருந்தார்!! லாஃப் ஓ கிராம் ஸ்டூடியோ தொடங்கியபோது வால்ட் டிஸ்னிக்கு வயது இருபது. முதல் சில மாதங்களில் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. அதற்குள் பல் மருத்துவர் ஒருவர் சிறுவர்கள் மத்தியில் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிக்க வால்ட் டிஸ்னிக்கு வாய்ப்பு வழங்கியிருந்தார். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வால்ட் டிஸ்னியை அழைத்த போது அவர் வரத் தயங்கினார். காரணம் அவருடைய காலணி பழுதாகியிருந்தது. அதனை சீர் செய்தவருக்குத் தர 50 டாலர்கள் பணமில்லை. அந்தப் பல் மருத்துவரே நேரில் வந்து காலணியை மீட்டுத்தந்து வால்ட் டிஸ்னியை அழைத்துப் போனார்.
திறமையையும் நம்பிக்கையையுமே அடித் தளமாக கொண்டு, வாழ்வைத் தொடங்கிய வால்ட் டிஸ்னியின் விசுவரூபத்துக்கான விதை விழுந்தது. அங்கேதான். திரைப்பட இயக்குநராகும் ஆசையில், தன் மாமா ஒருவரின் வீட்டில் ஐந்து டாலர் வாடகையில் வசித்த வால்ட் டிஸ்னி ஆலிஸ் நாடகங்களுக்கு கார்ட்டூன் வரையும் ஒப்பந்தம் பெற்றது, அவருடைய வாழ்வின் திருப்புமுனை, தன்னிடம் பணிபுரிந்த வில்லியன் மீது காதல் அரும்பியது. அண்ணனிடம் சென்று, “கோட் சூட் வாங்க நாற்பது டாலர்கள் பணம் கொடுங்கள்” என்றார். கோட் சூட் எதற்காக என்று கேட்ட அண்ணன் ராயிடம் வால்ட் டிஸ்னி சொன்ன பதில், “நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். மனைவி வந்த நேரம் மளமளவென்று வாய்ப்புகளும் வரத் தொடங்கின. டிஸ்னி பிரதர்ஸ் ஸ்டூடியோ உருவானது.
மிக்கி மவுஸ் உருவாக்கம் வால்ட் டிஸ்னி யாரென்று காட்டியது. சார்லி சாப்ளினின் சாயலில் அந்தப் பாத்திரத்தை உருவாக்கியதாகப் பின்னால் சொன்னார் வால்ட் டிஸ்னி. அனிமேஷன் துறையில் ஆளுமைமிக்க படைப்பாளியாய் வென்ற வால்ட் டிஸ்னி, தன் கனவுலகத்தைக் கட்டமைத்த வெற்றிக் கதைதான் டிஸ்னி வேர்ல்ட். கற்பனைப் பாத்திரங்களின் நிஜமான உலகமது. தன்னில் இருந்த திறமையை சின்ன வயதிலேயே அடையாளம் கண்ட அண்ணன் ராய் தன் அருகிலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டார் வால்ட் டிஸ்னி.
ஒரு படைப்பாளியாகவும், நிர்வாகியாகவும் அசாத்தியமான ஆளுமைத்திறன் கொண்டவ ராகவும் வால்ட் டிஸ்னி விளங்கினார். அவர் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் வேலை நிறுத்தம் நடந்தது. வால்ட்டின் நிறுவனம், வியர்வையை உறிஞ்சும் இடம் என்று பேசப் பட்டது. தன்னை விரைந்து திருத்திக் கொண்டார் வால்ட் டிஸ்னி. பணிபுரிபவர்களின் சொர்க்கமாக அதனை மாற்றினார். வால்ட் டிஸ்னியுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர் ரே ப்ரேட்பரி ஒருமுறை சொன்னார், “விரும்பியதைச் செய்ய வால்ட் டிஸ்னி நமக்குக் கற்றுக் கொடுத்தார். செய்யும் வேலையை விரும்பவும், ஆழமாக நேசிக்கவும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் வாழ்க்கையின் செய்தி இதுதான்.
மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக சமரசங்கள் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்”.
உண்மைதான் கண்ட கனவுகளை கண்ணெதிரிலேயே ஒரு சாம்ராஜ்யமாய் கட்டமைக்கும் வல்லமையை வளர்த்துக் கொண்டு, முடியாததென்று எதுவுமில்லை என்ற நம்பிக்கையை நிஜமாக்கியவர் வால்ட் டிஸ்னி.
தொடர்ந்து புகை பிடித்ததால் நுரையீரலில் புற்றுநோய் வந்தது வால்ட் டிஸ்னிக்கு. தன் நோயின் தீவிரம் தெரியாமலேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டு உற்சாகமாய் வலம் வந்தார். புதிய புதிய திட்டங்களை உருவாக்கவும் அவற்றுக்கான ஆலோசனைகளில் ஈடுபடவும் அவருடைய உள்ளத்தில் இருந்த ஆற்றல் உடலுக்கில்லை. இன்னொரு டிஸ்னி வேர்ல்டை உருவாக்கும் கனவில் இருந்தார். மருத்துவ மனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவருடைய மனம் அதையே சிந்தித்துக் கொண்டிருந்தது. மருத்துவமனையில் உடனிருந்த அண்ணன் ராய் சொன்னார், “என் தம்பி மருத்துவமனையின் மேற் கூரையை வெறித்தபடி படுத்திருந்தான். உண்மையில் அந்த மேற் கூரையில் புதிய டிஸ்னி வேர்ல்டின் வரை படத்தை மானசீகமாய் வரைந்து கொண்டிருந் தான்”.
1966 டிசம்பர் 15 ஆம் தேதி காலை 935க்கு வால்ட் டிஸ்னி அசையாச் சித்திரம் ஆனார். அவர் இறந்து ஒரு மணிநேரத்துக்குப் பிறகும், கம்பளிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த அவரின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்த ராய் அழுது கொண்டே சொன்னார். “தம்பி! நீ நீண்ட தூரம் நடந்து விட்டாய்!”
delcon
good