– ருக்மணி பன்னீர்செல்வம்
டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர் களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ”கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம். இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை செய்து பார்ப்பதென முடிவு செய்தனர்.
ஓர் இருட்டறையில் குறுக்கும் நெடுக்குமாக மிகவும் மெல்லிய கம்பிகளைக் கட்டி விட்டனர். பிறகு சில வௌவால்களை பிடித்து அந்த அறையிலே பறக்க விட்டனர். அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன. ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள் வௌவால்கள் எப்படி கம்பிகளின் மேல் மோதாமல் பறக்கின்றன என்று குழம்பிப் போயினர்.
பின்னர் அந்த வௌவால்களை பிடித்து அவற்றின் கண்களை மூடிவைத்து பறக்கவிட்டனர். இப்போதும் அவை கம்பிகளின் மேல் மோதாமல் பறந்தன.
வியப்பின் எல்லைக்கே போன அந்த ஆராய்ச்சியாளர்கள், வௌவால்கள் கண்களின் உதவியால் பறக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.
அதன்பின்னர் வௌவால்களின் வாய்களைக் கட்டிப் பறக்கவிட்டனர். அப்போது அவை கம்பிகளின் மேல் மோதிக் கொண்டன. அடுத்த தாய் அவற்றின் செவிகளை அடைத்து பறக்க விட்டபோதும் அவை கம்பிகளில் மோதிக் கொண்டன. அப்போதுதான் வௌவால்கள் தாம் வெளியிடும் ஒலியின் எதிரொலியைக் கேட்ட வாறே அதற்கேற்றாற்போல் பறக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர்.
இந்த உலகில் ஒவ்வொரு உயிரினமும் தத்தம் உருவம், உடலமைப்பு, வாழும் சூழலுக் கேற்றாற் போல் தம்மை தகவமைத்துக் கொள்கின்றது. பெரும்பாலான விலங்குகள், பறவைகளின் வாழ்க்கை பூஜ்யத்திலிருந்தே தொடங்குகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த வுடன் ”இதுதான் உன்னுடைய இரை என்றும், இப்படித்தான் கொத்தித் தின்ன வேண்டும் என்றும்” கோழிக் குஞ்சிற்கு யாரும் காண்பித்து கற்றுத் தருவதில்லை. அது, தாய்க் கோழியோ மற்றக் குஞ்சுகளோ இல்லை யென்றாலும் கூட தனியே வாழப் பழகிக் கொள்ளும்.
மரத்தின் மீது கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவைகள்கூட தம்முடைய குஞ்சுகளுக்கு இறக்கைகள் வலுவாகும்வரை தான் இரையைக் கொண்டு வந்து ஊட்டிவிடும். சிறிது காலத்திற்குப் பின் தன் குஞ்சுகள் மரக்கிளையில் தன்னுடன் பக்கத்தில் வந்து உட்காரும் வரை காத்திருக்கும் தாய்ப்பறவை அவ்வாறு உட்கார்ந்த வுடன் எதிர்பாராமல் தன் குஞ்சுப் பறவையை கீழே தள்ளிவிடும்.
தள்ளப்பட்டவுடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் குஞ்சுப்பறவை இறக்கையை படபடவென அடித்துக்கொண்டே பறக்கத் தொடங்கிவிடும். அதற்குப் பின்னர் தாய்ப் பறவையிடம் இரையையோ, பாதுகாப்பையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தன்னைத் தானே சார்ந்து வாழத் தொடங்கிவிடும். பறவைகள் கூட்டமாய் பறந்தாலும் கூடி வாழ்ந்தாலும் அதனதன் இரையை தானே தேடிக் கொள்பவையாகும்.
தம்மைத் தாமே சார்ந்து வாழ்வதில்தான் நமக்கும் சிறப்பு அடங்கியுள்ளது. நம்மிலிருந்து தான் நாம் உருவாக வேண்டும்.
நாம் என்னவாக ஆக வேண்டும் என்பது நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை விட மிக முக்கியமானது.
நாம் யாராக உருமாறவேண்டும் என்ற ஆசைதான் நம்மை உந்தித் தள்ளும் நெம்புகோல் ஆகும்.
ஒரு தனி மனிதனின் ஆசைதான் மாபெரும் இயக்கமாகவே மாறுகிறது. ஆசைகள் கனவுகள் தேவைகள் இலட்சியங்கள் இயக்கங்கள் செயல்கள் அனுபவங்கள் – விளைவுகள் என்று இது ஒரு சங்கிலித் தொடராகும்.
ஆசைப்படுதல் கூடாது என்பது ஒரு கால கட்டம்வரை கற்பிக்கப்பட்டது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் பெருமான் கூறினார். அதனால் நாம் ஆசைகளை தவிர்க்க வேண்டும் என்று கூறி வந்தார்கள்.
எல்லாக் கருத்துகளிலும் மாற்றத்தை கொண்டுவரும் சக்தியாக காலம் இருப்பதால் இன்றைக்கு ஆன்மீகவாதிகளும் கூறும் அழுத்த மான வாசகம், ”அனைத்திற்கும் ஆசைப்படு”.
ஆசைகள்தான் கனவுகளை உண்டாக்குகின்றன.
கனவுகள் தேவைகளாய் மாறுகின்றன.
தேவைகள் இலட்சியங்களாகி விடுகின்றன.
இலட்சியங்கள் செயல்களை புரிய வைக்கின்றன.
செயல்கள் இயக்கங்களாய் உருவாகின்றன.
இயக்கங்கள் அனுபவங்களை விதைக்கின்றன.
அனுபவங்கள் விளைவுகளாய் மலர்கின்றன.
இவைதான் சங்கிலித் தொடராக மாநிலமும் மானுடமும் வாழ்வதற்கு பயன்படுகின்றன. ஆக ஒரு தனிமனிதனின் ஆசை என்பது ஏதோ அவனோடு மட்டுமே முடிந்துவிடுவதில்லை. பரந்து விரிந்த புவியில் ஓர் அணுவாய், ஒரு துளியாய் துளிர்விடும் தனிமனிதனின் நேர்மையான நியாயமான ஆசைதான் பலரின் நல்வாழ்விற்கு அடித்தளமாய் மலர்ந்துவிடுகிறது.
‘ஆராரோ ஆரிவரோ’ என்பது அன்னை பாடும் தாலாட்டுப் பாடலின் தொடக்க வரி. இது மிகவும் பொருள் பொதிந்த வரியாகும். தான் பெற்ற குழந்தை யாராக வந்து பிறந்திருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டுமென தாய் விரும்புகிறாள். அதற்காகத்தான் குழந்தையிடமோ அல்லது இயற்கையிடமோ இந்தக் கேள்வியை வைத்து விட்டுப் பின்னர் தன் குழந்தை யாராக மாற்றம் பெற்று வாழ வேண்டும், யார் யாரை யெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்ற தன் உள்ளக்கிடக்கையை பாடலாக வெளிப் படுத்துகிறாள்.
ஆராரோ ஆர் ஆரோ? யார் யாரோ?
ஆரிவரோ ஆர் இவரோ? யார் இவரோ?
இதற்கு முன்னே இவர் யார் யாராய் பிறந்திருந்தாரோ? இன்று என் மடியில் பூத்திருக்கும் இவர் யாராக வரப்போகிறாரோ? என்று மழலைக்கும் மரியாதை விகுதியைப் போட்டு அழைத்துப் பாடுகிறாள்.
இவ்வரியைப் பாடிய பின்னர்தான் தன் ஏக்கத்தை, வேட்கையை, வறுமையை, வாழும் சூழலை, வருங்காலத்தை என்று எல்லாவற்றையும் பாடி நிறைவு செய்யும்போது தன் குழந்தை அரசாள வேண்டும் என்ற ஆசையை பதிவு செய்கிறாள்.
எல்லாத் தாயுமே ‘அரசாள வந்த என் அருமைச் செல்வமே’ என்றுதான் பாடுகிறார்கள். அரசாளுதல் என்பதும் ஆட்சிசெய்தல் என்பதும் நாட்டை ஆளுதல் என்று மட்டுமே கொள்ளுதல் கூடாது. பத்துபேர் தொடங்கி நூறுபேர்வரை அல்லது அதற்கும் மேலாய் நம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பணியாற்றும் நிலையில் நம்மை உயர்த்திக் கொள்ளுதலும் அரசாளுதல்தான்.
நீங்கள் அரசாளப் பிறந்தவர்தானே!
Leave a Reply