உள்ளொன்று வைத்து..

வழக்கறிஞர் த. இராமலிங்கம்

எனக்கு நல்ல பழக்கம்தான் அவர்; அலுவலகத்தில் எல்லோருடனும் சிரித்துப் பேசுவார்; எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் ஏதாவது தீர்வு சொல்வார்… ஆனால் அலுவலக மேலாளரிடம் நான் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி, அவர் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார். எனக்குப் பெரிய சிக்கலாகி விட்டது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார் நண்பர் ஒருவர்.

‘இதெல்லாம் சகஜம்பா…! இருக்கும் இடத்தில் தனக்கு நல்ல பேரும் முக்கியத்துவமும் கிடைக்க இப்படியெல்லாம் செய்வானுங்கதான்… அடுத்த முறை நீயும் சிரித்துப் பேசிக்கொண்டே அவனைப் போட்டுக்கொடு! சரியாகிவிடும்!’ என்று அவருக்கு ஆறுதலும் அறிவுரையும் சேர்த்து வழங்கினார். அருகிலிருந்த நண்பர்.

இந்த உரையாடல், ஓர் ஆழமான சிந்தனைக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. ஒரு வேளை, ‘இதுதான் சரி’ என்று நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டு வாழத் தலைப்பட்டு விட்டோமா என்று அச்சமாக இருந்தது. பிறர் செய்யும்போது தவறு என்று நமக்குத் தோன்றும் ஒரு செயல், நாம் செய்யும்போது மட்டும் எப்படி சரியாகிவிடும்?

”நெஞ்சினில் நஞ்சு வைத்து, நாவினில் அன்பு வைத்து
நல்லவர் போல் நடிப்பார் ஞானத்தங்கமே… அவர்
நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே”
என்னும் திரைப்பாடல் கேட்டிருக்கின்றீர்களா..? ‘திருவருட்செல்வர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, கவிஞர் கண்ணதாசனின் பாடல் இது.

அனுபவங்களையே தனது படைப்புகளாகத் தந்த கவிஞர், எத்தனை பேரிடம் இந்த அனுபவத்தினைப் பெற்றிருப்பார்? அனுபவத்தில் பிறக்கும் பெரியவர் களின் இத்தகைய சொற்கள், படித்து ரசிக்க மட்டும் பயன்படுபவை அல்ல. இரண்டு பக்கங்களிலும் கூர்மையான ஆயுதங் களாக இவை நமக்குப் பயன்படுகின்றன.

பிறரிடம் நாம் கொள்ள வேண்டிய எச்சரிக் கையைக் கூறுகின்றன. நம்மைப் பற்றியும் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன. ‘உன்னிடம் முகத்துக்கு நேர் பேசுகின்ற அதே உண்மை உணர்வுடன் ஒருவர் இருக்கின்றாரா என்பதனை உணர்ந்துகொள்’ என்பது ஒன்று; ‘இந்த அழுக்கு உன்னிடம் இல்லாமல் பார்த்துக் கொள்’ என்பது மற்றொன்று.
‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்’ என்றார் வள்ளலார்.

நிறைய படிப்பும், அந்த படிப்புக்குத் தகுந்த அலுவலும், அந்த அலுவலுக்குத் தகுந்த பணமும், அந்தப் பணத்துக்குத் தகுந்த வாழ்க்கையும் கிடைக்கப்பெற்று, சமூக அங்கீகாரத்துடன் வாழ்பவர்களிடமும் இத்தீய குணம் இருப்பதுதான் வேதனை.

புறம் பேசுவதும், முன்னும் பின்னும் மாறிப் பேசுவதும் மிகப் பெரும்பிழை என்று வள்ளுவன் தொடங்கி வாழும் பெரியவர்கள் வரை அனைவரும் சொல்லி வைத்தாலும், நம்மைச் சுற்றி அது நிகழ்வதை நாம் பார்க்கவே செய்கின்றோம்.

எந்த ஒரு சமுதாயமும் நூற்றுக்கு நூறு பிழைகளற்றதாக இருக்க வாய்ப்பு இல்லைதான். எவ்வளவு வளர்ச்சி அடைந்த சமூகத்திலும் பிழைகளை மகிழ்வுடன் செய்து வாழ்பவர்கள் இருக்கவே செய்வார்கள்.

இது தவிர்க்க இயலாதது. பிறந்த சூழல்; குடும்பச் சூழல்; கல்விச் சூழல்; பொருளாதாரச் சூழல், இப்படிப் பல சூழல்களின் காரணங்களால், மனிதர்களின் சிந்தனைகளும் செயல்களும் மாறுபடவே செய்யும். ஆனாலும், தவற்றினைச் செய்து, அது சரியெனை வாதிடுபவர்கள் சமுதாயத்தில் எத்தனை விழுக்காடு இருக்கின்றார்கள் என்பதே, அந்தச் சமுதாயத்தின் தரத்தினை நிர்ணயிக்கின்றது.

வளரும் தலைமுறையினரான இளைஞர்கள், இந்த எண்ணிக்கையைக் கூட்டி விடக்கூடாது என்பதுதான் எப்போதுமே பெரியவர்களின் கவலையாக இருந்து வந்திருக்கின்றது.

இன்றைய நிலைமையோ, வேறு மாதிரியாக மாறிவிட்டது. பிழைகள், சமுதாயத்தாலேயே அங்கீகரிக்கப்படுகின்றன. ‘இப்படியெல்லாம் இருக்கும்தான்.. இப்படி இருந்தால்தான் வாழ முடியும்.. இப்படி இருப்பதில் என்ன தவறு?’ என்றெல்லாம் பிழைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. பிழைகளை நியாயப்படுத்தும் சமூகம், விரைவில் நோய்வாய்ப்படும். நாம் இன்று அந்த நிலையில் தான் இருக்கின்றோம்.

பிழைகளை நியாயப்படுத்தாத மன நிலையை நாம் கொள்ளவேண்டும். பிறர் செய்தாலும் சரி; நாம் செய்தாலும் சரி; பிழை, பிழைதான். மிக உயர்ந்த தியாகச் செயல்களை நாம் செய்ய வேண்டும் என்பதில்லை. ‘மனிதனுக்கு வாக்கு சுத்தம் இருந்தா போதும்’ என்று சாதாரண மனிதர்கள் சொல்வார்களே, அதனைக் காப்பாற்றினால் போதும்.

‘பிறரை வீழ்த்தித் தாம் வாழ்வது’ என்பது விலக்குகளுக்கான குணம். அந்த விலங்குகள் கூட, நேருக்கு நேர் நின்றுதான் தாக்கும். ஆனால் ஒரு புறம் நேரில் சிரித்துப் பேசிக்கொண்டே, மறுபுறம் வஞ்சகச் சொற்களை உதிர்த்து, எதிர் மறையான செயல்களைச் செய்வது, மனிதனின் குணமாகி விட்டது.

இத்தகைய குணம் கொண்டோரை அடையாளம் காணும் எச்சரிக்கை உணர்வு, நமக்கு வேண்டும். அதைவிட நம்மிடம் இத்தீய குணம் இருக்கின்றதா என்பதனை நாமே சுயமாக ஆய்ந்து அறிதல் வேண்டும். இந்த சுய ஆய்வு நேர்மை யானதாக இருப்பதுதான் முக்கியம். இதிலேயே போலித்தனம் இருந்தால் பயனில்லை.

நம்மிடம் இத்தகு குணம் இருப்பதை உணர்ந்தால், அதனை நீக்குவதுதான் நமது முதல் பணியாக இருக்க வேண்டும். ‘இக்குறையில் இருந்து நான் வெளியே வருவேன்’ என்னும் உறுதியுடன் முயன்றால், உறுதியாக நீக்கி விடலாம்.

நமது படிப்பும் அறிவும் நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் நமது பண்பு நலன்களே, அந்த உயரத்தில் இருந்து வீழ்ந்து விடாமல் நம்மைக் காக்கின்றன.

வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருந்து பின் கீழே வீழ்ந்தவர்கள் எவரையும் பாருங்கள்; அவர்களது போலித்தனங்களே அதற்குக் காரணங் களாக இருந்திருக்கின்றன.

‘ஒன்றைசொல்வார், ஒன்றேசெய்வார்.
உள்ளத்தில் உள்ளது அமைதி…’ என்னும் கவிஞரின் வரிகள், எவ்வளவு பொருள் வாய்ந்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *