முதலடிக்கு ஏது முகூர்த்தம்
இசைக்கவி ரமணன்
முற்றத்தில் தவழ்ந்து முழங்கால் தேயும் குழந்தை, முதலடி எடுத்து வைக்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பிஞ்சுக் கரங்கள் இரண்டும் வெட்ட வெளியில் துடுப்புத் துழவ, முழங்கால் நிமிர்வதும் குழைவதுமாய்த் தயங்க, பஞ்சுப் பாதம் பதியாமல் தள்ளாட, சின்னவிழி இரண்டும் சிறுவானாய் விரிய, அதிர்ச்சியும் எக்களிப்புமாய் அது தட்டித் தடவித் துள்ளி விழும்போது, ‘அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே!’ என்று வாரியணைத்துக் கொள்கிறாள் தாய்.
ஊனமுற்ற குழந்தைகூட நடக்க உதவுபவள் தாய். ஆனால், எந்தத் தாயும் குழந்தைக்காக, தான் நடக்க முடியாது, அது எப்பேர்ப்பட்ட குழந்தையானாலும். அவனவன் அடியை அவனவன்தான் எடுத்துவைக்க வேண்டும். முயற்சி எடுக்கும் எவனையும் ஆதரிக்கக் காத்திருக்கும் தாய்தான் வாழ்க்கை. ‘மூணு எட்டு முன்ன வச்சு, ரெண்டு எட்டு பின்ன வெக்கும்’ காதல் கொண்ட மயில்கூட, அந்தக் கூத்தில் ஓரடி முன்னேறத்தான் செய்கிறது!.
வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்த்தே புரிந்துகொள்ளக் கூடியது. ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ போல, நடையில் ஆவல் உள்ளவனே வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறான். வாழ்க்கையைக் கடக்க முடியாது. சற்றும் நில்லாமல் சதா விரைந்துகொண்டே இருக்கும் சூழ்நிலைகளின் தொடரோட்டம்தான் வாழ்க்கை. அதற்கென்று ஒரு கதி இருக்கிறது. அந்தக் கதியோடு இயைந்து நடக்கும் வாய்ப்பு, ஆற்றல், வசதி எந்த மனிதனின் கால்களுக்கும் உண்டு. இதைப் புரிந்து கொள்பவன், வாழ்வின் சுருதியைக் கண்டுபிடித்து அதனோடு ஒத்துப்போகிறான். அப்படிப்பட்டவன், எந்தச் சூழலிலும் தன்னை இழந்துவிடாமல் தலைநிமிர்ந்தே நிற்கிறான். உற்சாகம் (உய்ற்ட்ன்ள்ண்ஹம்) வேறு, ஊக்கம் (ஐய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங்) என்பது வேறு. உற்சாகம் பொங்கும் மங்கும். ஊக்கம், உயிர்த்துடிப்பாய் ஒரே சீராய் விளங்கும்.
நான் கல்லூரியில் சேர்ந்தவுடன், என் தமக்கையின் கணவர், எனக்கொரு சைக்கிள் பரிசாய்த் தந்தார். நாங்கள் இருந்த நிலையில், எனக்கு அது மிகப்பெரிய பொருள். ஒவ்வொரு நாளும் காலையில், சைக்கிளுக்குத் தேங்காய் எண்ணெய் அபிஷேகம் என்னும்படி, அது பளபளக்கும்வரை தேய்ப்பேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தையார், ‘என்ன, புது மாடு குளிப்பாட்டுறாப் போல இருக்கு!. என்று கிண்டல் செய்வார். எனக்குக் கோபம் வரும். ‘எல்லாம் நாங்க நெதமும் செய்யறதுதான்’ என்பேன். ஆனால், இது நான்கைந்து நாட்களைத் தாண்டவில்லை! அப்பாவின் கிண்டல் மெய்யானது.
அவருடைய வேலைகளைச் சரிவரச் செய்வதில் அவர் ஒருநாளும் தவறியதில்லை. எதை எங்கே வைத்தோம் என்பதை, தனது 87வது வயதிலும் அவர் தேடியதில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அவரால் தாமதம் ஏற்பட்ட தில்லை. பெரிய குடும்பம்; கீழ் நடுத்தர வர்க்கம்; பெண்கள் அதிகம்; பிரச்சினைகளை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். சம்பாதிக்க வேண்டும். அவருடைய பூஜை, ஜபம் இவை நெடுநேரம் எடுக்கும். நிறையப் படிப்பார். எப்போதும் அவரோடு கலந்துரையாட ஆட்கள் வந்த வண்ணமிருப்பார்கள். வீட்டில் தங்கிச் செல்லும் விருந்தினர்களுக்கோ பஞ்சமில்லை. தன் துணியைத் தான் துவைத்து உலர்த்திக் கொள்வார். ஆனால், அத்தனைக்கும் அவருக்கு நேரமிருந்தது! அவர் செய்த அனைத்திலும் அவருக்கு மரியாதை கிடைத்தது.
நான் வளர்ந்தபோது, அவர் வளர்ந்து கொண்டே இருந்தபோது அவரிடம் இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டேன். ‘ஒண்ணுமில்லடா, இந்த ஆரம்ப சூரத்தனம்னு ஒரு வியாதி இருக்கு. அதை, ஆரோக்கியம்னு முட்டாத் தனமா நம்பாம, அதைப் போக்கற வழியைப் பாக்கணும். அப்பறம் எல்லாம் சரியாப்போகும் என்று விளக்கினார். அவரிடமிருந்து நான் புரிந்து கொண்டவற்றை இதோ மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
* துவக்கம் அட்டகாசமாக இருந்தால் தொடர முடியாமல் தொய்வு நேர்ந்துவிடும் ஆபத்து உண்டு. ஆரம்பம் அமைதியாக இருந்தால், முடிவும் ஆக்க பூர்வமாகவே அமையும். நதிமூலத்தில் கொக்கரிப் பொன்றும் கிடையாது. முதல் அடியை எடுத்து வைக்கும் முழுப் பொறுப்பும் நமது.
* கல்வியில் விருப்பமிருந்தால் புத்தகத்தைப் படிக்க நேரம் இருக்கும். விருப்பமே நேரம்.
* ஆதாயம் தேடாமல், நம்மை மேம்படுத்திக் கொள்ள எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியில்தான் முடியும்.
* உயர்வு என்பது, அலங்காரத்தில் இல்லை. எளிமையே ஏற்றம்.
இன்னும் பல!
இதில் ஒன்றை இன்றே பார்த்துவிடுவோம்!
சாவியைத் திருகாமல் வண்டி கிளம்பாது. திருகிக்கொண்டே இருந்தால் வண்டி நகரவே நகராது. இதுதான் ஐய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங் என்பதன் தத்துவம்! வானத்திலிருந்து யாரோ வந்திறங்கி நம் கையைப் பற்றி அழைத்துச் செல்லமாட்டார்கள். நம் நடையை நாம்தான் நடந்தாக வேண்டும்.
நம்மில் பலருக்கு ஒரு வினோதமான பிரச்சினை இருக்கிறது. எந்த வழியில் செல்வது? அது சரிதான் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
எல்லாவற்றையும் முன்கூட்டித் தெரிந்து கொண்டுதான் செய்கிறோமா?
விமர்சனங்களை யெல்லாம் படித்துவிட்டுத்தான் சினிமாவுக்குச் செல்கிறோமா? சிலர் அப்படித்தான் என்பீர்கள். சரி, சமைத்துப் பார்த்த பின்புதான் காய்கறியை வாங்குவேன், காசைக் கொடுப்பேன் என்பீர்களா? ஆ! மாட்டிக் கொண்டீர்களா!
பாதை என்பது காலில் இருக்கிறது. வழி என்பது வாயில் இருக்கிறது. காட்டில் நடந்த கால் தடங்களே பாதைகளாயின. அவற்றின் திருப்பங்களே வழிகளாயின. எனவே, எப்படித் துவங்குவது என்ற வேள்வியே எழக்கூடாது. துவங்குவதுதான் துவக்கம்!
சொட்டுச் சொட்டாய்த் துவங்கிய துளிகள் அகண்ட கோதாவரி ஆவதைப் பார்த்ததில்லையா? எந்த அறிஞனும் எழுத்தெழுத்தாய்ப் படித்தவன்தான். அதே போல், ஆரம்பப் பள்ளியானாலும் முனைவர் பட்டமானாலும், அரிச்சுவடி மாறுவ தில்லை, இரண்டுக்கும் ஒன்றேதான்!
நடக்க நடக்கப் பாதை
நம்பிக்கைதான் கீதை!
Leave a Reply