நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்

– ருக்மணி பன்னீர்செல்வம்

அடிகுழாயில் ஊற்றப்படும் நீர்போல் நம்முடைய புலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும், உள்வாங்கும் அறிவை எல்லாம் அப்படியே உள்ளிருப்பாய் வைத்திருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. (சிலர் அறிந்து கொள்வதுமில்லை, வைத்திருப்பதும் இல்லை என்பது வேறு விஷயம்).

உள்ளே ஊற்றிய நீர் கீழிறங்கி விசையின் மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்று நீரை வெளியே கொண்டு வருவது போல் நமக்குள் சென்று சேர்ந்து நம் உணர்வில் கலந்த அறிவினை, மெருகேற்றுதல் என்னும் விசையினை செலுத்தி வெளிப்படுத்துதல் வேண்டும். அவரவர் சூழல் சார்ந்து வெளிப்படுத்தும் முறையும், வழியும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அறிவும் ஆற்றலும் வெளிப்படுதல்தான் முக்கியம்.

அந்தப் பெண்ணுக்கு பதின்மூன்று வயதாகும் போது புகழ்பெற்ற நாடகக் கலைஞர், பாடகர், நடிகர் என பன்முகம் வாய்ந்த அவளின் தந்தை தீனாநாத் இறந்து விடுகிறார். குடும்பம் நிலை கலங்கி நிற்கிறது. குடும்பச் சுமையைத் தாங்கும் பொறுப்பு அச்சிறுமியின் தோளில் விழுகிறது.

தன் தந்தை பாடுவதையும் நடிப்பதையும் அருகிலிருந்து பார்த்துவந்த அந்தச் சிறுமியும் தன்னுடைய பாதையாக நடிப்பையும், பாட்டையுமே தேர்ந்தெடுத்தாள். புல்லாங்குழலை விழுங்கி விட்டதுபோல் குரல்வளம் கொண்ட அப்பெண்ணுக்கு எட்டுப்படங்களில் நடித்து முடித்த பின்னர்தான் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தான் முதன்முதலில் பாடிய படம் வெற்றி பெறாமல் போகவும் மீண்டும் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது. ஆனால் அதற்குப்பின் அப்பெண் பாடிய அனைத்துப் பாடல்களுமே நேயர் விருப்பமாக மாறிப்போயின.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பாடகிக்கான பிலிம்ஃபேர் விருது அப்பெண்மணிக்கே வழங்கப் பட்டது. ”போதும். போதும். எனக்கு இனி பரிசுகள் வேண்டாம். இளம் பாடகிகளுக்கு கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தன்குரல் மிக இனிமையாய் இருக்கும்போதே பாடுவதையும் குறைத்துக் கொண்டார்.

மத்திய அரசின் ‘பத்ம பூஷண்’ விருது உள்ளிட்ட அரசின் பல்வேறு விருதுகளையும் வாழ்நாள் சேவைக்காக ‘தாதா சாஹேப் பால்கே’ விருதையும் பெற்ற அவர், ‘லதாமங்கேஷ்கர்’.

நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்து செயலாற்றினாலும் சில நேரங்களில் மற்றவர் களின் முட்டாள்தனங்களால் நமக்கு திடீரென சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உண்டாகிவிடும். திடீரென ஏற்படும் துன்பங்களால் நிலைகுலைந்து போய்விடாமல் அவற்றை எல்லாம் தாங்கி அனைத்தையும் தாண்டி வருபவர்கள் அதற்குப் பின்னர்தான் சிறந்த வெற்றியாளர்களாய் மாறுகிறார்கள்.

ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமான தோற்றமும், வயதைக் கண்டுபிடிக்க முடியாத வடிவமும் கொண்ட அந்த ஜனாதிபதி, மிகச் சிறப்பாக உரையாற்றிக் கொண்டிருந்தார். தன் பேச்சால் மக்களை மெய்மறக்கச் செய்துவிட்டு தன் காரில் ஏறிச் செல்லும்போது அவரை நோக்கி இருபத்தைந்து வயதுடைய ஹிங்லி எனும் இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் ஆறுமுறை சுடுகின்றான்.

மார்பிலே குண்டுதாங்கி சரிந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மிகத் தீவிரமாக போராடுகிறார்கள். இரண்டுமணி நேரம் நடைபெற்ற ஆபரேஷனின் இறுதியில் இடதுபுற நுரையீரலில் பாய்ந்திருந்த குண்டை அகற்றுகிறார்கள். மரணத்தின் நுனியை தொட்டுப் பார்த்து விட்டு மீண்டும் நெஞ்சக் கூட்டிற்குள் வந்து தங்குகிறது அந்த ஜனாதிபதியின் உயிர்.

இவர் ஏன் சுடப்பட்டார் என்பதை அறிந்தால் மிக அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த இளைஞன் ஹிங்லியை கைது செய்து விசாரித்தார்கள். ‘எதற்காக நீ ஜனாதிபதியை சுட்டாய்?’ என்று கேட்டபோது அவன் சொன்ன பதில் இதுதான்.
”நான் ஒரு நடிகையைக் காதலித்தேன். என் வீரத்தை அவள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஜனாதிபதியைச் சுட்டேன்” என்றான்.

”ஜனாதிபதியைச் சுடும்படி அவள் கூறினாளா?” என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இன்னும் வியப்பானது. ”இல்லை. அவளும் நானும் இதுவரை சந்தித்ததே இல்லை”.

இப்படிப்பட்ட முட்டாள்தனங்கள் எப்போதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. சரி, நாம் அந்த ஜனாதிபதிக்கு வருவோம்.

மாகாண கவர்னராக இருந்தபோதே மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்த அவர் நெஞ்சில் உரமிருந்ததால் குண்டு பாய்ந்து வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர் மேலும் சிறப்பாகப் பணியாற்றத் தொடங்கினார்.

திரைப்பட நடிகராய் மக்களிடம் அறிமுகமாகி இரண்டாம் உலகப் போரின் போது தன் நாட்டின் விமானப்படைக்கு கேப்டனாக விளங்கியவர். திரைப்படம், தொலைக்காட்சி மட்டுமல்லாது வானொலியில் வர்ணனையாள ராகவும் பணியாற்றியவர்.

கலிபோர்னியா மாகாண கவர்னராக இரண்டுமுறை மக்கள் போற்றும்படி நிர்வாகம் செய்தவர். ஜனாதிபதி பதவிக்கு முயற்சி செய்து சீட் கிடைக்காது போகவே நான்கு ஆண்டுகள் காத்திருந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனவர்.

‘ஆல் அமெரிக்கன்’ முதல் ‘தி கில்லர்’ எனும் படம் வரை மக்கள் மனதில் நிற்கும் படங்களில் நடித்தவர். அவர்தான் அமெரிக்காவின் ‘ரொனால்ட் ரீகன்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *