நமக்குள்ளே..

கவிதாசன் காட்டும் திசைகளானது ஓசை இல்லாமல் பசையாக பவ்யமாக எங்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறது, விழும் போதெல்லாம் விஸ்வரூபம் எடு, நீ புண்படும்போதெல்லாம் புன்னகை செய்து கொண்டே முன்னேறு என்ற வரிகள் மிகவும் அருமை. ”சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை” என்பதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு நன்றி.

தே.கவியரசு, தருமபுரி.

கல்வியின் தரம் நாளுக்கு நாள் மேம்படுவதில் எல்லாத் தரப்பினரும் அக்கறை செலுத்தி அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக் கனவுகளும் வல்லரசுக் கனவுகளும் மலர வாய்ப்பளிக்க வேண்டும். கல்வியே நிலையான செல்வம் என்ற திருவள்ளுவரின் தீர்ப்பு திசைகளெங்கும் எதிரொலிக்கட்டும்” என்னும் வரிகளில் கல்வி குறித்த தீர்க்கமான சிந்தனையினை வலியுறுத்திய ”கல்வி கரையில” நமது பார்வை தலையங்கம் மிக அருமை.
த.சூரியதாஸ், சிலட்டூர்.

நமது நம்பிக்கை ஜுலை இதழில் வெளியான படம் சொல்லும் பாடம் என்ற தலைப்பில் பெங் என்ற மாற்றுத் திறனாளியின் நம்பிக்கையைப் பற்றிக் கூறியிருந்தீர்கள். உடலில் பாதியை இழந்தும் அவர் தனது நம்பிக்கையை இழக்காமல் நடக்கப் பழகிக் கொண்டிருக்கும் அவரது நம்பிக்கையை பாராட்டுகிறேன். இந்நம்பிக்கை என் நாடி நரம்புகளை துளிர்விடச் செய்திருக்கிறது. இதனை பிரசுரித்து நம்பிக்கை ஊட்டிய ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
அருண்குமார், தென்னிலை.

இந்த மாத இதழில் ”படம் சொல்லும் பாடம்” பார்த்ததும், படித்ததும் கலங்கிவிட்டேன். மிகவும் வியப்பாக இருந்தது. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் என்பதனை ”பெங் சுயிலின்” மிகவும் அற்புதமாக வாழ்ந்து காட்டியதோடு, ஒரு தொழிலதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு வழி காட்டியானவர். ஒவ்வொரு வீட்டிலும் இப்படம் அலங்கரிக்க வேண்டும். ஆசிரியர் அவர்களுக்கு கோடி நன்றி! நன்றி! நன்றி!!!

எல்.ஐ.சி.நீலகண்டன், கள்ளக்குறிச்சி

திரு. த.ராமலிங்கம் அவர்களின் ”உள்ளொன்று வைத்து….” என்னும் கட்டுரை மனிதனின் உண்மையான இயல்பை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. தன்னை உயர்த்திக் கொள்ள மனிதன் பிறரை துன்புறுத்தவும் அஞ்சுவதில்லை இதுதான் மனிதனின் உண்மையான குணம் – மிக இயல்பான கட்டுரை.

தங்கவேல், கோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *