உற்சாகமாக நடப்போம்

– இசைக்கவி ரமணன்

ஆறுமனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!

ஆறு என்றால் வழி, அறுத்துச் செல்வது என்று ஆறு என்று, ஆற்றுப்படை பற்றிப் பேசும்போது விளக்குவார்கள்.

1. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய குடியிருப்பு. எனில், நீங்கள் தேடும் முகவரி ஒரு நீண்ட கட்டுரை போலத்தான் இருக்கும். ஃப்ளாட் எண் 19 ஜி, நான்காவது மாடி, மேட் ஃபார் ஆல் மேன்ஷன், 3487/12 ஈ, நாற்பதாவது குறுக்குத் தெரு, ஏழாவது ஸ்டேஜ், புதிய அம்பேத்கார் நகர் விரிவு, மகளிர் மருத்துவமனை அருகில், இன்னும் தாலுகா, பின்கோட் என்று தொடரும் போட்டு எழுதும் அளவிற்கு ஒரு முகவரியை வைத்துக் கொண்டு நீங்கள் முழி பிதுங்க நின்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்குத் தோன்றுகிற முதல் எண்ணம், பேசாமல் வந்த ஆட்டோவிலேயே திரும்பிப் போய்விடலாம் என்பதுதான். பூதம் காத்த புதையலின் குறிப்பை வைத்துக்கொண்டு மயான பூஜைக்கு வந்தது போல்தான் மருள்கிறீர்கள். ஆனால், வீட்டைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும். அப்போது உங்களை வரவேற்கிறது ஒரு பெரிய கான்க்ரீட் வரைபடம். அதில் அந்தக் குடியிருப்பைப் பற்றிய எல்லா விவரங்களும் உள்ளன. ஆனால் காய்ச்சலில் வரும் கனவுகள்போல் ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் ஓர் அம்புக்குறி உங்கள் உதவிக்கு வருகிறது. அதைக் கண் பற்றித் தொடர்ந்தால் அது =நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்கிறது. ஆஹா! அந்தப் பிடிமானத்தை வைத்துக்கொண்டு நீங்கள் மழைக் காலத்தில் தண்ணீர் விரைவது போல் மிக இயல்பாக முகவரியைக் கண்டுபிடித்து விடுகிறீர்கள். இவ்வளவுதான் சாமி விஷயம்!

இருக்கும் இடம் புரியாமல் இம்மியும் நகர முடியாது. சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல், சுமை விலகாது, சுகம் வராது.

சரி, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், சென்னையா? கேரளக்காரர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக் கொள்வார்கள் என்றும் எந்த மொழியானாலும் அதை மலையாளத்திலேயே பேச வல்லவர்கள் என்றும் அறிவோம். அது போலத்தான் சென்னையில் புழுக்கமான கோடை, புழுக்கமான மழை, புழுக்கமான மார்கழி என்ற ஒரு சிறப்பு உண்டு. மனிதாபிமானம் உள்ளவர்கள் அங்கே இருமுறை குளிப்பார்கள், அரை வாளியை அண்டாவாக நினைத்துக் கொண்டாவது.

நீங்கள் இருப்பது ராஜஸ்தானில் ஒரு கிராமம் என்றால்? பேய் வெய்யில். ஆனால் குளிக்கத் தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். மதுரையில் அதிகாலையில் குளித்து விட்டு மீனாட்சி கோயிலுக்குச் செல்வார்கள். கேதார்நாத்தில் அது கின்னஸ் சாதனை. பூசாரி எப்போதாவது குளிப்பாரா என்ற கேள்வி நமக்கு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டில் இரவெல்லாம் தூங்காத நகரங்கள் உண்டு. காஷ்மீரில் பெரும் பாலான நாட்கள் 144 அல்லது 1440. கோவையில், நாளை திருமணம் என்றால் இன்று போய் எதையும் வாங்கலாம். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொள்ளலாம். கல்கத்தாவில் சேர்ந்தாற்போல் இரண்டு கடையடைப்பில்லாத நாட்களைக் காண்பது அரிது.

புத்தர் அகிம்சைதான் போதித்தார். ஆனால், புலால் உண்ணாமை திபெத்தில் ஒத்துவராது. அந்தப் பனிப்பாலைவனத்தில் நீங்கள் எந்தப் பயிரை வளர்த்துப் பொங்கல் கொண்டாடுவீர்கள்? அதனால்தான், =என் மக்களுக்கு எது கிடைக்கிறதோ அதையேனும் தின்னட்டும்+ என்று அகிம்சா வாதிகளை விரட்டிவிட்டார் விவேகானந்தர்.

வண்டிகள் செல்வது இங்கே இடதுபக்கம் என்றால் அமெரிக்காவில் வலது பக்கம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சூப்பர் கண்டக்டிவிடி ஆராய்ச்சி பண்ணித் தீருவேன் என்றால் நடக்குமா?

பிறந்த மண், குடும்பச் சூழல், வளர்க்கப்பட்ட முறை இவற்றைப்போல் நாம் புலம்பெயர்ந்து சென்ற இடத்தின் தாக்கமும் தவிர்க்கப்பட முடியாதது.
இதை, எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:

அம்மாவின் சமையல் அலுத்துப்போய், அவ்வப் போது நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு பிடித்துப் போய் பிறகு பிடிக்காமல் போய், வேலைக்காக வெளியூருக்குச் சென்று குடல் காயும்போது அம்மாவின் சமையல் அருமையாகத் தெரிகிறது. மனைவியின் மீது கொண்ட காதல் அவள் சமையல் மீதும் தொற்றிக் கொண்டு, சில காலம் கழித்து, தொய்வடைந்து அம்மாவின் வற்றல் குழம்புக்கு ஆஸ்திரேலியாவை எழுதி வைக்கலாம் என்று நண்பர்கள் நடுவே பேசி, மனைவியின் சமையலில் காரம் ஏறிவிடுகிறது.

இங்கே ஆங்கிலம் பேசத் திணறியவன்தான், அமெரிக்கா சென்று ஒரு வருடம் கழித்துத் திரும்பி வரும்போது அவன் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாமல் நாம் திணறுகிறோம்.

ஆனால், அடிப்படையில், பிறந்த மண்ணின் வாசம் ஒவ்வொருவனின் ஆன்மாவிலும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அது போகவே போகாது.

அதனால்தான், =நீங்கள் இந்தியனை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடலாம். ஆனால் ஓர் இந்தியனிடமிருந்து ஒருபோதும் இந்தியாவை வெளியேற்றிவிட முடியாது+ என்று ஒரு விளம்பரம் சொல்லும். வர்ன் ஸ்ரீஹய்’ற் த்ன்ம்ல் ர்ன்ற் ர்ச் ஹ்ர்ன்ழ் ள்ந்ண்ய் என்ற ஆங்கிலப்பழமொழியின் ஆழமான பொருள் இதுவே.

நாடு முழுவதும் ஒரே பண்பாடுதான் என்றாலும், அது வெளிப்படும் முறை மாநிலத்திற்கு மாநிலம், ஏன், வீட்டுக்கு வீடு மாறு படுகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் பிரத்யேகமாகச் சில பழக்கவழக்கங்கள் உண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும் அதுபோல் உண்டு.

ஆகவே, உணவில் ருசியிலிருந்து தொடங்கி, இலக்கிய ரசனை வரை, நமது அபிப்பிராயங்கள், தீர்மானங்கள், உணர்வு களின் போக்கு, இவையாவற்றையும் பெருமளவிற்கு நாம் இருக்கும் இடமும் நமது சூழ்நிலைகளும் நிச்சயிக்கின்றன.
எனவே, நாம் எங்கே இருக்கிறோம், நமது சூழ்நிலைகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது நமது மனநிலைக்கும் பொருந்தும்.

நமக்கு வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள் உண்டா, நமக்கு நம்மைப் பற்றியும், உலக வாழ்க்கை என்பது பற்றியும் தீவிரமான அடிப்படைக் கேள்விகள் உண்டா, இல்லை =தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ் சிறுகதைகள் பேசி+, வாழ்கிறோமா?

இவற்றை மனதில் கொண்டு இப்போது சொல்லுங்கள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இதை நீங்கள் முழுவதும் உணர்ந்துகொள்ள உங்களுக்கு ஒரு நிமிடம் போதும் என்பது எனக்குத் தெரியும். அதுவரை நானெதற்குச் சும்மா இருக்க வேண்டும்? ஒரு கவிதை சொல்லிப் பார்க்கட்டுமா?

அன்னையின் மடியில் ஆடிடும் போது
அகரமும் சிகரம்தான் மனம்
அண்டம் தாண்டித் தாவும் போது
சிகரமும் அகரம்தான்
அன்றைய நினைவில் நாளையில் வாழ்ந்தால்
வருவது பூஜ்ஜியம்தான் என்றும்
அடுத்த அடியில் கவனம் வைத்தால்
அமைவது ராஜ்ஜியம்தான்!

2. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?

எதுவும் வாழ்க்கைக்கு வெளியே கற்றுக் கொள்ளப்படுவதில்லை. எதையுமே வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில்தான் கற்றுக்கொள்ள முடியும். இதில், பன்முக ஆற்றல் என்பதும் அப்படிப் பட்டதுதான். நமது அன்றாட வாழ்க்கையே அதை அவசியமாக்கி, இயல்பாகவும் அமைத்துவிடுகிறது.

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒருவர் மாணவர் என்கிறார். இன்னொருவர் டாக்டர் என்கிறார். வேறொருவர் ஹோம் மேக்கர் என்கிறார். இன்னும் ஒருவரோ நான் ஓய்வு பெற்றுச் சும்மா இருக்கிறேன் என்கிறார். அவ்வளவுதானா? இவர்கள் அனைவருமே இன்னும் என்னென்னவாகவெல்லாம் இருக்கிறார்கள்? மகன், மகள், மனைவி, கணவன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, இன்னும் பெயரன், பெயர்த்தி, நண்பன், தோழி, காதலி, சக ஊழியர், மேலாளர் என்று எத்தனை எத்தனை பாத்திரங்களை நாம் ஒவ்வொருவரும் நிர்வகிக்கிறோம்! இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும், நமது பொறுப்புகள் நமக்கு நன்கு விளங்கும்.

வாழ்க்கை என்னும் நாடகத்தில் நமது பாத்திரம் என்ன என்று பார்த்தால் அது பல பாத்திரங்களாகவே இருக்கிறது, அல்லவா? மாணவனாக வகுப்பில் உட்கார்வதற்கும், மளிகைக் கடைக்குச் சென்று வருவதற்கும், தங்கைக்குப் பிறந்த நாள் பரிசு வாங்கித் தருவதற்கும், அண்ணனை அலுவலகத்தில் இறக்கிவிட்டு வருவதற்கும் ஒன்றுக் கொன்று கடுமையான முரண்பாடுகள் ஏதேனும் தெரிகிறதா, இல்லையே!

எவ்வளவு இயல்பாக, சரளமாக, இருக்கிறது, கண்ணதாசன் கவிதையைப் போலே!

வாழ்வில், நமக்கு விதிக்கப்பட்ட பாத்திரங்கள் தான் அவற்றுக்குத் தொடர்பான பொறுப்புகளை நிச்சயிக்கின்றன. ஆனால் அடையாளம் காட்டுவதோடு நின்றுவிடுகின்றன. அவற்றைக் கூர்ந்து கவனித்து அவற்றுக்கேற்பச் செயல் படுபவர்களே சாதனையாளர்களாகிறார்கள். விதிக்கப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாமல், நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட பாத்திரங்களும் இவ்விதமே! வந்ததை விரும்பினால், வருவது விரும்பத்தக்கதாகவே இருக்கும்!

அப்போது சிரமங்கள் தெரியாது. குறைப் பட்டுக் கொள்ளும் மனோபாவம் நம்மை நெருங்காது. கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் இருக்கிறாரல்லவா? ஒவ்வொரு பந்துக்கும் அவர் குனிந்து நிமிர வேண்டும்; கூவ வேண்டும்; தாவ வேண்டும்; ஃபீல்டர் எங்கிருந்து எறிந்தாலும் பந்தைச் சரியாகப் பிடிக்க வேண்டும்; ரன் அவுட் செய்ய வேண்டும். எல்லாம் நானே செய்யவேண்டி இருக்கிறதே என்று அவர் குறைப்பட்டுக் கொள்ள முடியுமா? ஒவ்வொரு வீட்டிலும் அம்மாதான் அந்த விக்கெட் கீப்பர்.

இதுவே, பன்முக ஆற்றலின் துவக்கம்.

பொறுப்புக்களை நாடகத்தின் வேடங்களாக ஏற்று அதன்படி நடப்பவர்களும் உண்டு. அது நடிப்பல்ல! அன்பிருக்கும், பற்றிருக்காது. சொந்தமிருக்கும், பந்தமிருக்காது, கடமை இருக்கும், கடன்படாது! இந்த வித்தையை வீட்டில் கற்றவர்கள், பின்னாளில் நிர்வாகத் துறையில் வித்தகர்களாகிறார்கள். இதை, அலுவலகத்தில் மட்டும் பழக நினைப்பவர்கள், வீட்டிலும் தோல்வி காண்கிறார்கள்.

நாடகத்தில் ஒரு நடிகனுக்கு, வசனங்கள் பேசுவது மட்டுமல்லாமல் எப்போது பேசாமல் இருக்கவேண்டும் என்பதும், எப்போது காட்சியில் நுழைய வேண்டும் என்பதும், எப்போது எப்படி விலகவேண்டும் என்பதும் துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும். முடிந்தது முடிந்ததுதான் என்பதும் புரிந்திருக்க வேண்டும். நாடகம் முடிந்தும் ஒருவன் அரசனாகவோ அல்லது பிச்சைக்காரனாகவோ இருக்க முடியாதே! இது தான், நிர்வாகத் துறையில் பெரிதும் பேசப் படுகிறது. இன்னொன்று, தேவைப்பட்டால் எந்தப் பாத்திரத்தையும் ஏற்கத் தயாராக இருப்பவர்களே வாழ்வில் வெற்றி பெறுபவர்கள். உதாரணமாக, விளையாட்டுத்தனமாக இருக்கும் ஒரு பிள்ளை, இவன் உதவாக்கரை என்ற விமர்சனத்துக்கு ஆளான ஒரு பிள்ளை, திடீரெனத் தந்தை இறந்ததும் அந்தக் குடும்பத்தின் அத்தனைப் பொறுப்புகளையும் கண்ணுங்கருத்துமாகக் கவனித்துக் கொள்வதைப் பார்க்கிறோமில்லையா? அவ்வளவுதான்!

எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே தியாகம் நேர்ந்தே தீரும், ராமனை சீதை நிழலாய்த் தொடர்ந்ததுபோல்,

எனவே, நாம் இருக்கும் இடம், வளர்ந்த சூழல், வகிக்கும் பங்கு, ஏற்றுக்கொண்ட பொறுப்பு இவற்றைப் பற்றிய நம் புரிதலும் தெளிவும் நம் வாழ்வின் வெற்றிக்கு அத்தியா வசியமாகின்றன. வாழ்வில் வெற்றி பெற்றோர் எல்லோருமே அடிமேல் அடி வைத்தவர்கள்தான்.

சினிமாவில் பல நாட்கள் கடந்ததைக் காலண்டரைக் கிழித்தோ, தலையில் நரை தடவியோ காட்டிவிடுவார்கள். நிஜ வாழ்வில் அந்த வசதிகள் கிடையாது. ஒவ்வொரு கணமும் வந்தே செல்லும்! அதை வாழ்ந்தே தீர வேண்டும்! எதிரே இருக்கும் கணமே எனது பொறுப்பு என்று வாழ்ந்தவர்களே சாதனையாளர்கள் ஆனார்கள். அவர்களுடைய சாதனை, வியக்கத்தக்கது அல்ல. பின்பற்றத்தக்கது.

அப்படி இருந்தோர் இப்படி ஆனது
செப்பிடு வித்தை இல்லை
அடிமேல் அடியை வைத்து நடந்தே
அருகில் வருவது எல்லை
எப்படி என்பது எதிரே தெரிவது
ஏறி நடந்தால் புரியும்
எந்தப் படியிலும் இலக்கின் தன்மை
ஏதோ விதத்தில் தெரியும்!

ஆறில் இரண்டைக் கண்டோம். ஆற்றின் இரு கரைகள் போல! நமது கைவிளக்கு மற்ற நான்கையும் காட்டாதா என்ன?

நாம்தான் தொடர்ந்து உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறோமே!
(ஒளிரும்)

  1. rajvaidya

    Deeply thought provoking, brilliant and very much in depth in analysis of who we are. what we are, and where are we heading to in our own lives.
    Elegantly worded and highly impressive.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *