உறவுகளின் உன்னதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம்

புது வண்டி வாங்கும்போது, முதல் சில மாதங்களுக்கு அல்லது குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓடும் வரை, அதற்கு இலவசச் சேவை உண்டு. வண்டி வாங்கும் எவரும், இந்த இலவசச் சேவைகளை இழப்பதில்லை. மிகச்சரியாக அதைப் பயன்படுத்தி, வண்டியின் பொறியினை யையும் மற்ற பாகங்களையும் சரி செய்து கொள்வார்கள்.

>மேலும்…” />

ஓரிரு ஆண்டுகள் ஆன பின்னர், இலவசச் சேவைகள் அனைத்தும் முடிந்ததும், வண்டியின் பராமரிப்பு சற்றுக் குறையும். அதன் பின்னர், வண்டியில் ஏதேனும் பழுது நேர்ந்தால் மட்டுமே, அதனைச் சரிசெய்வார்கள். மழைக்காலங்களில் சில வண்டிகளைப் பார்த்தால், மிகவும் புழுதியுடன் கேவலமாக இருக்கும்.

ஆனால் சிலர், சரியான கால இடைவெளியில் வண்டியினைப் பழுது பார்க்க அனுப்புவார்கள். தினமும் கழுவி, துடைத்து =பளபள+வென்று வைத்திருப்பார்கள். சில ஓட்டுநர்கள், வண்டியை நிறுத்தும் இடங்களிலெல்லாம் அந்த வண்டி யினைத் துடைத்துக்கொண்டே இருப்பார்கள். சிலரோ, தூங்கிக்கொண்டோ அல்லது பாட்டு கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.

இவற்றில் எந்த வண்டி நீண்டகாலம் சிக்கல்கள் இல்லாமல் ஓடும் என்று நினைக்கின்றீர்கள்? நன்றாகப் பராமரிக்கப்படும் வண்டிதான் என்று உடனே கூறிவிடுவீர்கள்.

அதேபோல் எழுவது, சாப்பிட்டுவிட்டு வேலைக்குப்போவது, வீட்டுக்குத் திரும்பி சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்த்துவிட்டு தூங்கப்போவது என்று இருப்பவர்களை விட, சரியான அளவு உண்பது, சரியான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது, அளவான நேரம் தூங்குவது என்று தம் உடலைப் பராமரிப்ப வர்களே ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள்.

உணவுப்பொருட்கள் முதல் வீட்டின் தூய்மை வரை பராமரிக்கப்படுவதன் அவசியத்தை, வீட்டைப் பேணிக்காக்கும் தாய்மார்கள் அறிவார்கள்.

சரியான முறையில் பராமரிக்கப்படும் போதுதான் எதுவுமே, கெட்டுப்போகாமல் இருக்கின்றது. உறவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

மிகவும் ஆழமான அன்பைக்கூட, அதன் உன்னதத்தைப் புரிந்துகொண்டு பராமரிக்கத் தவறுவதால் நாம் இழந்துவிடுகின்றோம். நம்மைப் பெற்றவர்களாகட்டும் அல்லது நாம் பெற்றவர் களாகட்டும், உடன் பிறந்தவர்கள் ஆகட்டும் அல்லது வந்த உறவான கணவன்/மனைவி ஆகட்டும் அல்லது நட்பு வட்டமாகட்டும், இழக்கி றோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே இழந்து விடுகின்றோம்.

அன்பைப் பராமரிப்பது என்றால் என்ன? நம் மனத்தில் இருக்கும் நேசத்தினை, நமது சொற்களாலும் செயல்களாலும் வெளிப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பொய்மை கலந்த செயற்கையாக அல்ல; இயல்பாக. =உன்மீது எனக்கு எவ்வளவு அன்பு தெரியுமா?+ என்று தினமும் சொல்லிக்கொண்டேயிருந்தால், கேட்பவர்களுக்கு எரிச்சல்தான் வளரும். சாதாரண உரையாடல்களில், அன்பைக் குழைத்துத் தருவது; இனிமையான சொற்களை சிரித்த முகத்துடன் அவர்களுடன் பேசுவது, சரியான நாட்களில் சிறுசிறு அன்பளிப்புகள் தந்து மகிழ்விப்பது போன்றவற்றால் அன்பு செழுமையுறும்.

=ஏதாவது கொடுத்தால்தான் அன்பா?+ என்று நாம் சாதாரணமாகக் கேட்கின்றோம். =உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். நீ என்மீது வைத்திருக்கும் அன்பினை நான் பெருமையுடன் மதிக்கின்றேன்+ என்றெல்லாம் சொல்வதன் செயல் வடிவம்தான், சிறுசிறு பரிசுப்பொருட்கள் கொடுப்பது. நமக்கு யாரேனும் ஏதாவது கொடுத்தால் மகிழ்கிறோம். இல்லையா? =நம்மை மதிக்கின்றார்கள். நேசிக்கின்றார்கள்+ என்று உணர்ந்ததால்தானே இந்த மகிழ்ச்சி?

=சிலர் என்ன கொடுத்தாலும், இதுதானா என்று சலித்துக்கொள்கின்றார்களே+ என்று தோன்றுகிறதா? பரிசுப்பொருட்களின் விலையைப் பார்ப்பவர்கள் அன்பு என்னும் வட்டத்திற்குள் அடங்காதவர்கள்.

எத்தனை வயதானாலும், பெற்றோரின் மடியில் படுக்கும் அருமையை இழக்காதவர்களாகக் குழந்தைகளும், அவர்களின் தலைகோதி நெற்றியில் முத்தமிடும் செயலில் மாறாதவர்களாகப் பெற்றோரும் இருந்தால், வீட்டில் கலகலப்பு எப்போதும் இருக்கும்; அந்தக் குழந்தைகளும் அன்புக்கு ஏங்காதவர்களாக இருப்பார்கள்.

சிறு வயதில் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கியேங்கி வளர்ந்த குழந்தைகளே, பெரியவர்களான பின்னரும் தடம் மாறிய பொய் வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

மடியில் தூங்கி, அருகில் தவழ்ந்து, விரல் பிடித்து நடந்து வளர்ந்த குழந்தைக்கும் பெற்றோர்க்கும் இடையில், அவன் அவள் பள்ளிப் படிப்பினை முடிப்பதற்குள் இடைவெளி விழுந்து விடுகின்றது. மனம் முழுக்க அன்பிருந்தாலும், வளர்கின்ற குழந்தைகளை அவர்கள் கோணத்தில் இருந்து பார்க்கத் தவறுவதால் இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல், பேச்சே குறைந்து விடுகின்றது.

குழந்தைகள் மீது அன்பில்லாத பெற்றோர்கள் இருப்பார்களா என்ன? ஓடியோடி உழைப்பதும், தேவையானவற்றைச் செய்வதுமாக நெஞ்சம் முழுவதும் பாசம்தான். ஆனால் அதை வெளிப்படுத்தும் முறை கூடத்தெரியாமல் முரண்பட்டு நிற்பார்கள்.

பல வீடுகளில், தாத்தா பாட்டி மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் பிள்ளைகள், பெற்றோர் மீது வெறுப்புடன் இருப்பார்கள். பெற்றோர்களாகப் பாசத்தைக்காட்டத் தெரியாதவர்கள், வயது தந்த பக்குவத்தால் பெயரன் பெயர்த்தியிடம் பாசத்தைக் பொழிவதே காரணம்!

திருவிழாவிற்கு அம்மாவின் இடுப்பில் அல்லது அப்பாவின் தோளில் அமர்ந்து செல்லும் எந்தக் குழந்தையும், பார்ப்பதையெல்லாம், =இது வேண்டும். இது வேண்டும்+ என்று கேட்டுக் கொண்டேதான் வரும். அப்படி வாங்கிக் கொடுக்காத நிலையில், ஓவென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். மேலே அமர்ந்து கொண்டே காலால் உதைக்கவும் செய்யும்.

அதே குழந்தை, சற்றே நடக்க இறக்கி விடப்பட்ட நிலையில், பெற்றோரின் கை நழுவி வழி தவறிவிடுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். திருவிழா அலுவலகத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு, இதுவரை எதையெல்லாம் அது கேட்டதோ, அதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு அம்மா அம்மா என்றுதான் தேடி அழும்.

அம்மாவின் மீது அமர்ந்து கொண்டே தனக்குத்தேவையானதைக் கேட்டு சண்டை பிடிப்பதும், அவள் இல்லாமல் போனதும் மனத்திலிருக்கும் பாசம் வெளிப்பட்டு அழுவதும், குழந்தைப்பருவத்தில் இயல்பு; ஆனால், வளர்ந்த நிலையில் பிழை.
வாழும்போது தாய் தந்தையரிடம் பாசத்தை வெளிப்படையாகச் சொல்லாகவும், செயலாகவும் பகிர்ந்து கொள்ளாதவர்களே, பெற்றோர் மறைந்த பின்னர் குற்ற உணர்வில் தவிக்கின்றார்கள்.

குடும்ப உறவுகள் மட்டுமல்ல. அனைத்து உறவுகளுமே பராமரிக்கப்படவேண்டும் என்று அவ்வையின் பாடல் ஒன்று சொல்கிறது.

நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்;
ஆசானை எவ்விடத்தும் அப்படியே- வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்.

நண்பன், ஆசிரியர், மனைவி, பிள்ளைகள், வேலையாள் என்று பட்டியலிட்டு, எவரை எப்போது பாராட்ட வேண்டும் என்று சொல்லும் பாடலின் உயிர், எல்லோரையும் சரியான நேரத்தில் பாராட்ட வேண்டும் என்பதுதான்.

நமது அன்பையும் அங்கீகாரத்தையும் சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும். பிறர் நம் மீது காட்டும் அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும்.

அன்பும், பாசமும் எந்த வலியையும் தீர்க்கும் மருந்தாகின்றன. ஆனால், இவற்றை இழப்பதனால் ஏற்படும் வலியைத் தீர்க்க மருந்தே இல்லை. =நண்பன் சாகலாம்; ஆனால் நட்பு சாகக்கூடாது+ என்பதனைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

உறவுகளைச் சரியாகப் பராமரிக்கப் பழக வேண்டும் நாம். வெளிப்படுத்தாத பாசம் விரயமாகி விடுகின்றது. மதிக்கப்படாத பாசம் மறைந்தே போகின்றது.

உறவுகளின் உன்னதத்தைப் புரிந்துகொண்டு பராமரிப்பவர்களே, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *